உடனடிச்செய்திகள்

Sunday, June 5, 2016

காவிரி உரிமையை மீட்க அ.தி.மு.க. – தி.மு.க. தனிநபர் ஆதாய – தனிநபர் பகை அரசியலைப் புறக்கணிப்பீர்! காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடக் களம் காண்போம் உழவர்களாக – தமிழர்களாக ஒருங்கிணைவோம்! தோழா பெ. மணியரசன் வேண்டுகோள்!


காவிரி உரிமையை மீட்க அ.தி.மு.க. தி.மு.க. 
தனிநபர் ஆதாய தனிநபர் பகை அரசியலைப் புறக்கணிப்பீர்!
காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடக் 
களம் காண்போம் உழவர்களாக தமிழர்களாக ஒருங்கிணைவோம்!

தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் 
தோழா பெ. மணியரசன் வேண்டுகோள்!


சூன் 12-ஆம் நாள் குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணை திறக்கப்படாது என்று முதலமைச்சர் செயலலிதா அறிவித்த செய்தியைக் கேட்டு, திடீரென்று அதிர்ச்சி அடைந்தது போல் பலர் அறிக்கை வெளியிடுகிறார்கள்.


கடந்த பல ஆண்டுகளாக வனவாசம் போய் இப்போதுதான் நாடு திரும்பியவர் போல் முன்னாள் முதல்வர் கருணாநிதி ஐயோ சூன் 12-இல் இந்தாண்டும் மேட்டூர் திறக்கப்படவில்லையாஎன்று பேரதிர்ச்சி அடைந்து”, எத்தனை ஆண்டுகளாக செயலலிதா ஆட்சியில் சூன் 12-இல் மேட்டூர் திறக்கப்படவில்லை என்ற பட்டியலையும் வெளியிட்டுள்ளார்.காவிரி நீர் உரிமையை மீட்காததற்கும் குறுவை சாகுபடிக்குத் தண்ணீர் திறக்க முடியாமல் போனதற்கும் செயலலிதாவும் கருணாநிதியும் சமமாகப் பொறுப்பேற்க வேண்டும் என்ற வரலாற்று உண்மையை மறைப்பதில் இருவரும் முந்திக் கொள்கிறார்கள்.


குறுவை சாகுபடிக்குத் தண்ணீர் திறக்க முடிந்தது கடந்த காலங்களில் எப்படி நடந்தது?

1924 ஆண்டு காவிரி ஒப்பந்தம் செயல்படுத்தப்பட்டபோது, தமிழ்நாட்டிற்கு மாத வாரியாக வர வேண்டிய காவிரி நீரைக் கர்நாடகம் திறந்து விட்டதால் குறுவை சாகுபடிக்குத் தண்ணீர் திறக்க முடிந்தது. 1974-க்குப் பிறகு அந்த ஒப்பந்தத்தை செயல்படுத்தக் கர்நாடகம் மறுத்த பிறகு முந்தைய சாகுபடி ஆண்டில் குறிப்பாக நவம்பர் டிசம்பரில் மேட்டூர் அணையில் தண்ணீரைச் சேமிக்க முடிந்த காலங்களில் சூன் அல்லது சூலையில் குறுவைக்கு மேட்டூரில் தண்ணீர் திறக்க முடிந்தது.


அவ்வாறு சேமிக்காத அல்லது சேமிக்க முடியாத ஆண்டுகளில் அடுத்துவரும் குறுவைக்கு போதிய தண்ணீர் மேட்டூரில் இருப்பதில்லை. அவ்வாறான ஆண்டுகளில் குறுவை சாகுபடி இல்லை என்ற நிலைதான் ஏற்பட்டு வருகிறது.


காவிரித் தீர்ப்பாய இறுதித் தீர்ப்பை இந்திய அரசின் அரசிதழில் வெளியிட்டுச் செயல்படுத்துமாறு உச்ச நீதிமன்றம் கெடுவிதித்துக் கட்டளையிட்டபின், அதன் ஒரு பகுதியாக இறுதித் தீர்ப்பை கெடுவின் கடைசி நாளான 19.02.2013 அன்று அரசிதழில் வெளியிட்டுவிட்டு, அதைச் செயல்படுத்தும் அமைப்புகளான காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்குமுறைக் குழு ஆகியவற்றை ஏற்படுத்தாமல் நயவஞ்சகமாக ஒதுங்கிக் கொண்டது சோனியா காந்தியின் மன்மோகன் சிங் அரசு!


உச்ச நீதிமன்றக் கட்டளையை ஒட்டி இறுதித் தீர்ப்பை இந்திய அரசு அரசிதழில் வெளியிட்டதையே தமது சாதனையாகச் சித்தரித்து, தஞ்சையில் தமக்கான பாராட்டு விழாவை நடத்திக் கொண்டார் செயலலிதா. காவிரித் தாய்என்று செயலலிதாவின் பெயருக்கு முன்னால் பட்டம்போட்டு, அவரின் ஆதாய விசுவாசிகள் இன்று வரை வர்ணித்து வருகிறார்கள்.

காவிரியை மீட்ட காவிரித்தாய் செயலலிதாவின் ஆட்சியில் 2013-லிருந்து 2016 வரை குறுவைக்குத் தண்ணீர் பெற முடியவில்லை! காவிரிப் பாசன குறுவை சாகுபடி 2013 – 2016 ஆண்டுகளில் இல்லை என்றானது.

ஆனாலும் கடந்த சட்டமன்றத் தேர்தலில் டெல்டா மாவட்டங்களில் காவிரியை மீட்ட காவிரித்தாய் என்று செயலலிதாவை அவரது ஆதாய விசுவாசிகள் போற்றிப் புகழ்ந்தனர். விவசாயிகளில் ஒரு சாரார் இதை இரசித்துக் கொண்டிருந்தனர்.

இப்பொழுது கருணாநிதி, செயலலிதா ஆட்சி காலத்தில் எந்தெந்த ஆண்டுகளில் குறுவை சாகுபடிக்குத் தண்ணீர் திறந்து விடவில்லை என்று பட்டியல் போட்டுள்ளார்.

கருணாநிதி முதலமைச்சராக இருந்த போதெல்லாம் காவிரியில் மாதாமாதம் கர்நாடகம் தர வேண்டிய தண்ணீரை வாங்கினாரா?

கருணாநிதி தில்லியில் வாஜ்பாயி அரசு இருந்த போது அதனுடன் கூட்டணி சேர்ந்திருந்தார். மன்மோகன் அரசு 10 ஆண்டுகள் இருந்தபோது, அதனுடன் கூட்டணி சேர்ந்திருந்தார். இந்த ஆண்டுகளில் கருணாநிதி காவிரி உரிமையை மீட்டாரா? குறுவை சாகுபடியை உறுதி செய்தாரா? இல்லை.

காவிரி மேலாண்மை வாரியம் ஒழுங்குமுறைக் குழு ஆகியவற்றை அமைத்திட இந்திய அரசை வலியுறுத்தி மன்மோகன் ஆட்சி காலத்தில் இவர் சாதித்திருக்கலாமே!

நவம்பர் டிசம்பரில் பருவமழை கூடுதலாகப் பெய்து மேட்டூர் அணையில் தண்ணீர் சேமிக்கப்பட்டிருந்தால் குறுவை சாகுபடி உண்டு; இல்லையென்றால் குறுவை இல்லையென்ற நிலை தி.மு.க. ஆட்சி அ.தி.மு.க. ஆட்சி இரண்டிலுமே பொதுவான நடைமுறை!

தமிழ்நாட்டின் காவிரி உரிமை, கச்சத்தீவு உரிமை, பாலாற்று உரிமை, முல்லைப் பெரியாறு அணை உரிமை ஆகியவற்றைப் பலியிட்டு தமிழர்களின் வாழ்க்கையை பாழ்படுத்தியதில் தி.மு.க. அ.தி.மு.க. இரண்டிற்கும் சமபங்கு உண்டு.


விழிப்புணர்வு பெற்ற உழவர்கள் விவரம் தெரிந்த தமிழர்கள் காவிரி உரிமைச் சிச்கலில் தி.மு.க.வையும் ஆதரிக்க மாட்டார்கள். அ.தி.மு.க.வையும் ஆதரிக்க மாட்டார்கள்.

காவிரியில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, தீர்ப்பாயத் தீர்ப்பு ஆகியவற்றை செயல்படுத்த வேண்டிய பொறுப்பு இந்திய அரசுக்கே இருக்கிறது. இதில் இந்திய அரசைச் செயல்பட வைத்திருக்க வேண்டிய பொறுப்பு தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கட்சிகளுக்கே இருக்கிறது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட இந்திய அரசை வலியுறுத்தி, பெருந்திரள் போராட்டம் எதையும் அ.தி.மு.க. தலைமையும் நடத்தவில்லை; தி.மு.க. தலைமையும் நடத்தவில்லை.

எமது தமிழ்த் தேசியப் பேரியக்கம் தனித்தும், உழவர் அமைப்புகள், தோழமை அரசியல் இயக்கங்கள் ஆகியவற்றுடன் கூட்டாகவும், காவிரி உரிமை மீட்பிற்காக காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காக இந்திய அரசை வலியுறுத்திப் பல போராட்டங்கள் நடத்தியுள்ளது.

காவிரி நீரைத் தடுக்கும் கர்நாடகத்திற்கு நெய்வேலி மின்சாரம் அனுப்பக் கூடாது என்று முதல்முதல் நெய்வேலி அனல் மின் நிலையத் தலைமை நிர்வாகியை முற்றுகையிட்டது எமது இயக்கம்!
காவிரி என்ற இயற்கை வளத்தைப் பாதுகாத்துத் தராத இந்திய அரசு காவிரிப் படுகையில் கிடைக்கும் பெட்ரோலியம் மற்றும் எரிவளியை எடுக்கக்கூடாது என்று முதலில் நரிமணத்தில் போராட்டம் நடத்தியது எமது அமைப்பு. பின்னர் கூட்டமைப்பான தமிழ்த் தேசிய முன்னணி சார்பிலும் அப்போராட்டத்தில் பங்கு கொண்டோம்.


கடந்த ஆண்டு உழவர் மற்றும் அரசியல் இயக்கங்களின் கூட்டமைப்பான காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில், நாகூர் பனங்குடி எண்ணெய் துப்புரவு ஆலை முற்றுகையை இரண்டாயிரம் உழவர்களுடன் நடத்தினோம்.
அதற்குமுன் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கர்நாடகம் காவிரியில் புதிய அணை கட்டாமல் தடுக்க மேகேதாட்டு முற்றுகைப் போராட்டத்திற்கு தேன்கனிக்கோட்டையிலிருந்து 5000 உழவர்கள் பேரிணாகச் சென்றபோது கைதானோம்!

காவிரி உரிமை மீட்பிற்காக இவ்வாறான ஒரு போராட்டத்தை தி.மு.க.வோ அல்லது அ.தி.மு.கவோ நடத்தியதுண்டா? இல்லை. தி.மு.க. கடந்த ஆண்டு அடையாள ஆர்ப்பாட்டங்களில் டெல்டா மாவட்டங்களில் கலந்து கொண்டது. அவ்வளவே!


தி.மு.க. தலைமையோ அல்லது அ.தி.மு.க. தலைமையோ முன்னெடுத்து, காவிரி உரிமை மீட்பிற்காக இந்தியாவே திரும்பிப் பார்க்கும் அளவிற்கு இலட்சம் பேர் கொண்ட பேரணி நடத்தியிருக்க முடியாதா? ஏன் நடத்தவில்லை?


தனிநபர் பகை அரசியலிலேயே தமிழ் மக்களை ஈடுபட வைத்து, தாங்கள் ஆதாயம் அடைய வேண்டும் என்பதுதான் கருணாநிதி செயலலிதா அரசியல் உத்தி!

தமிழர்களின் காவிரி உரிமையைப் பறித்ததில் பெருங்குற்றவாளி இந்திய அரசுதான்! அந்த இந்திய அரசை எதிர்த்துத் தமிழர்கள் திரும்பிவிடாமல், செயலலிதாவை எதிர்த்தும் கருணாநிதியை எதிர்த்தும் தமிழ் மக்கள் எப்போதும் சிந்தித்தால்தான், தங்களுக்கு அரசியல் ஆதாயம் என்று கருணாநிதியும் செயலலிதாவும் திட்டமிட்டுப் பகை அரசியல் நடத்திக் கொண்டுள்ளார்கள்.


இவ்விருவரின் தன்னலப் பகை அரசியலில் ஏதோ ஒரு பக்கம் சேராமல், காவிரி உரிமையை மீட்க இந்திய அரசு மேலாண்மை வாரியம், ஒழுங்குமுறைக் குழு ஆகியவற்றை அமைத்திட வலியுறுத்தி தமிழர்கள் போராட வேண்டும்.

மேலாண்மை வாரியமும் ஒழுங்குமுறைக்குழுவும் அமைக்கப்பட்டால் கர்நாடக அணைகளைத் திறந்து, மூடும் அதிகாரம் அந்த அமைப்புகளுக்கு வந்துவிடும். கர்நாடகத்தில் இருக்கின்ற தண்ணீரில் தமிழ்நாட்டிற்குரிய விகிதம் திறந்து விடப்படும்!

எனவே உழவர்களே, தமிழர்களே காவிரி உரிமையை மீட்க இந்திய அரசுக்கு நெருக்கடி தரும் போராட்டங்களைக் கட்டமைப்போம்!அ.தி.மு.க. தி.மு.க. தனிநபர் ஆதாய தனிநபர் பகை அரசியலைப் புறக்கணிப்போம்!
அண்டை அயல் இனங்கள் தமிழர்களின் உரிமைகளைப் பறித்திட மறைமுகமாகத் துணை நிற்கும் இந்திய அரசின் இனப்பகை அரசியலுக்குப் பாடம் கற்பிப்போம்!

காவிரி உரிமை மீட்கக் களம் காண்போம்!

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT