உடனடிச்செய்திகள்

Monday, June 13, 2016

ஏழு தமிழர் விடுதலை கோரி எழுச்சியூட்டிய சென்னைப் பேரணி!




ஏழு தமிழர் விடுதலை கோரி
எழுச்சியூட்டிய சென்னைப் பேரணி!


                                                             தமிழீழத்திற்கு இந்திய அமைதிப்படையை அனுப்பி, ஆயிரக்கணக்கானத் தமிழ் மக்கள் கொல்லப்படுவதற்குக் காரணமான முன்னாள் இந்தியப் பிரதமர் இராசீவ் காந்தி கொல்லப்பட்ட வழக்கில் தொடர்புபடுத்தப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, இராபர்ட் பயஸ், இரவிச்சந்திரன், செயக்குமார் உள்ளிட்ட ஏழு தமிழர்களை விடுதலை செய்யக் கோரி, 11.06.2016 அன்று, எழுவர் விடுதலைக் கூட்டியக்கம் சார்பில் சென்னையில் மாபெரும் பேரணி நடைபெற்றது.



பேரறிவாளன் கைது செய்யப்பட்டு 25 ஆண்டுகள் முடியும் சூன் 11 அன்று வேலூரிலிருந்து இரு சக்கர ஊர்திப் பயணமாக சென்னையை வந்தடைந்து, சென்னை தமிழ்நாடு அரசுத் தலைமைச் செயலகத்தில் எழுவர் விடுதலை கோரி மனு அளிக்கும் வகையில் இப்பேரணித் திட்டமிடப்பட்டது.

 இதற்கான ஊர்தி ஏற்பாடுகள், திருமண மண்டபங்களில் தங்குவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் நடைபெற்று வந்த நிலையில், சூன் 10 அன்று மாலை, வேலூரிலிருந்து ஊர்திப் பயணமாக வந்தால் சாலைப் போக்குவரத்து முடங்கும் எனக் காரணம்கூறி, ஊர்திப் பயணத்திற்கு தமிழ்நாடு காவல்துறை தடை விதித்தது. இதனையடுத்து, சென்னை எழும்பூர் இராசரத்தினம் விளையாட்டு அரங்கத்திலிருந்து பேரணியாகப் புறப்படும் வகையில், இந்நிகழ்வு மாற்றியமைக்கப்பட்டது.


சூன் 11, நண்பகல் 1 மணியளவில், இராசரத்தினம் விளையாட்டரங்கம் அருகிலிருந்து, பேரறிவாளன் தாயார் திருவாட்டி. அற்புதம் அம்மையார் தலைமையில் பேரணி புறப்பட்டது. “விடுதலை செய்! விடுதலை செய்! ஏழு தமிழர்களையும் விடுதலை செய்!”, “இந்திய அரசே! இந்திய அரசே! எழுவர் விடுதலையைத் தடுக்காதே!” என்பன உள்ளிட்ட முழக்கங்களை விண்ணதிர எதிரொலித்துக் கொண்டே, கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பெண்களும் குழந்தைகளும் ஆண்களும் சாரை சாரையாகப் பேரணியில் சென்றது புதிய எழுச்சியை ஊட்டியது.

பேரணியில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் திரு. த. வெள்ளையன், ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் திரு. மல்லை சத்யா, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் திரு. தி. வேல்முருகன், நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் இயக்குநர் சீமான், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் துணைப் பொதுச் செயலாளர் தோழர் வன்னியரசு, பா.ம.க. இளைஞரணித் தலைவர் திரு. அன்புமணி இராமதாசு, திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் தா.செ. மணி, தந்தை பெரியார் தி.க. தலைவர் தோழர் கோவை கு. இராமகிருட்டிணன், புரட்சிகர இளைஞர் முன்னணி ஒருங்கிணைப்பாளர் தோழர் சீராளன், தமிழ்த் தேச மக்கள் கட்சித் தலைவர் வழக்கறிஞர் பா. புகழேந்தி, தமிழர் தேசிய முன்னணி செய்தித் தொடர்பாளர் திரு. த. அய்யநாதன், தமிழக மக்கள் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் பொழிலன், பூவுலகின் நண்பர்கள் ஒருங்கிணைப்பாளர் பொறியாளர் சுந்தர்ராசன், பேராசிரியர் சரசுவதி உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்களும், தமிழின உணர்வாளர்களும் பேரணியில் திரளாகப் பங்கேற்றனர்.

தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் தலைமையில், துணைப் பொதுச் செயலாளர் தோழர் க. அருணபாரதி, தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர் மதுரை இரெ. இராசு, தஞ்சை நா. வைகறை, பொதுக்குழு உறுப்பினர்கள் தோழர் பழ.நல். ஆறுமுகம், ஈரோடு வெ. இளங்கோவன், சென்னை நடுவண் செயலாளர் தோழர் வி. கோவேந்தன், தென்சென்னை செயலாளர் தோழர் கவியரசன், வடசென்னை செயலாளர் தோழர் செந்தில், தமிழக இளைஞர் முன்னணி நடுவண் குழு உறுப்பினர் தோழர் குடந்தை ச. செந்தமிழன், மகளிர் ஆயம் தோழர்கள் சத்யா, சரண்யா, ஜூலி, தமிழக உழவர் முன்னணி செயற்குழு உறுப்பினர் தோழர் திருத்துறைப்பூண்டி தனபாலன் உள்ளிட்ட திரளான பேரியக்கத் தோழர்கள் பேரணியில் பங்கேற்றனர்.

தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் திரு. நாசர், தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தலைவர் இயக்குநர் விக்ரமன், நடிகர்கள் சத்யராஜ், பொன்வண்ணன், இயக்குநர்கள் அமீர், வெற்றிமாறன், ஜனநாதன், இராம், வ. கவுதமன், ரமேஷ் கண்ணா உள்ளிட்ட திரைத்துறையினர் பேரணியில் பங்கேற்றனர்.

பேரணியின் நிறைவில், அற்புதம் அம்மையார் தமிழ்நாடு அரசு முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு நேரில் சென்று, ஏழு தமிழர்களை விடுதலை செய்யக் கோரும் கோரிக்கை மனுவைக் கையளித்தார்.

தமிழ்நாடு அரசே! அரசமைப்பச் சட்ட விதி 161-இன்படி ஏழு தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்! 

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT