உடனடிச்செய்திகள்

Wednesday, June 8, 2016

ஏழு தமிழர் விடுதலை இருசக்கரப் பேரணியில் திரளாகக் கலந்து கொள்வீர்! தோழர் பெ. மணியரசன் வேண்டுகோள்!


ஏழு தமிழர் விடுதலை இருசக்கரப் பேரணியில்
திரளாகக் கலந்து கொள்வீர்!

தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் வேண்டுகோள்!
 
இருபத்தைந்தாண்டுகளுக்கு மேலாக தனிமைச் சிறையில் வாடும் ஏழு தமிழர் விடுதலை கோரி இருசக்கர ஊர்திப் பேரணி 11.06.2016 காலை 8 மணிக்கு, வேலூர் நடுவண் சிறை முன்பிருந்து புறப்பட்டு, வழிநெடுகக் கோரிக்கை ஞாயத்தை எடுத்துக்கூறி, பிற்பகல் சென்னைக் கோட்டையில் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு செயலலிதா அம்மையார் அவர்களிடம் விண்ணப்பம் அளிக்க உள்ளதாக அறத்தமிழ் அன்னை அற்புதம் அம்மாள் அவர்கள் அறிவித்துள்ளார்கள்.


தமிழ்த் தேசியப் பேரியக்கத் தோழர்கள் இவ்விரு சக்கரப் பேரணியில் வேலூரிலிருந்து கலந்து கொள்கிறார்கள். நான் பூவிருந்தவல்லியிலிருந்து இப்பேரணியில் பேரியக்கத் தோழர்களுடன் கலந்து கொள்கிறன்.

மனித உரிமையில் அக்கறையுள்ள அனைவரும் இப்பேரணியில் கலந்து கொள்வது கடமையாகும்.

தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றி ஏழு தமிழர் விடுதலையைக் கோரியுள்ளது. வாச்பாயி அவர்கள் தலைமை அமைச்சராக இருந்த போது 2004இல் இந்திய அரசு, வாழ்நாள் சிறையாளிகள் பொதுவாக 20 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்க வேண்டியதில்லை என்றும், எப்படிப்பட்ட கொடுங்குற்றம் புரிந்தவராக இருந்தாலும் 25 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கத் தேவையில்லை என்றும் உச்ச நீதிமன்றத்தில் உறுதிமொழி ஆவணம் (அஃபிடவிட்) தாக்கல் செய்துள்ளது.

அண்மையில் தமிழ்நாடு அரசு குற்றவியல் நடைமுறைச் சட்டம் 435-இன் கீழ் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, இராபர்ட் பயஸ், செயக்குமார், அருப்புக்கோட்டை இரவிச்சந்திரன் உள்ளிட்ட ஏழு தமிழர்களை விடுதலை செய்ய இந்திய அரசின் கருத்தைக் கேட்ட போது, எதிர்மறையாகச் செயல்பட்டது நரேந்திர மோடி அவர்களின் அரசு.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தீர்மானம், தமிழ்நாடு அரசின் கோரிக்கை, தமது கட்சி முந்தைய ஆட்சியில் நடுவண் அரசு அளித்த உறுதிமொழி ஆவணம் ஆகிய அனைத்திற்கும் மாறாக திரு. நரேந்திர மோடி அவர்களின் அரசு ஏழு தமிழர் விடுதலையில் எதிர்மறை அணுகுமுறை கொண்டிருப்பது சரியன்று. நடுவண் ஆட்சியாளர்கள் சட்டநெறி, மனித உரிமை, தமிழ் மக்களின் உணர்வு ஆகிய அனைத்தையும் கருத்தில் கொண்டு, தங்கள் அணுகுமுறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும். ஏழு தமிழர் விடுதலைக்குத் தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்க வேண்டும்.

தமிழ்நாடு அரசு குற்றவியல் நடைமுறைச் சட்டம் 435-ஐ மட்டும் சார்ந்திராமல், அரசமைப்புச் சட்ட உறுப்பு 161-இன் கீழ் ஏழு தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்யும் சட்ட நடவடிக்கையில் இறங்க வேண்டும் என்றும் தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

சட்டநெறி, மனித உரிமை, தமிழின உணர்வு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு 11.06.2016 இருசக்கரப் பேரணியில் வேலூரிலிருந்து சென்னை வரை தமிழ்நாட்டு இருபால் இளையோர்கள் திரளாகக் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.


போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT