வழக்குரைஞர்களுக்கு வாய்ப் பூட்டு
நீதிமன்ற நடுநிலைமைக்கு வேட்டு
தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர்
தோழர் கி. வெங்கட்ராமன் கண்டனம்!
வழக்குரைஞர்களை பழிவாங்குவதற்கும், மிரட்டிப் பணியவைப்பதற்கும் நீதிபதிகளுக்கு வரம்பற்ற அதிகாரம் அளிக்கும் ஒழுங்கு விதிகளை சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்து, அவை கடந்த 2016 மே 25 அன்று தமிழ்நாடு அரசு இதழிலும் வெளியிடப்பட்டது.
தமிழ்நாட்டில் அண்மைக்காலமாக நீதிமன்றங்களில் நிலவிவரும் கசப்பான சூழல்களை கவனத்தில் கொண்டால் இந்த ஒழுங்கு விதிகள் சட்டத்தின் ஆட்சியையே சீர்குலைத்துவிடும் என்பது விளங்கும்.
உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஊழல் பட்டியலை வெளியிட்டு பேரணி நடத்தியதாலும், உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்கு மொழியாக அறிவிக்க வலியுறுத்தி அமைதியாக போராடியதற்காகவும் மதுரை வழக்குரைஞர்கள் சிலர் தொழில் நடத்த தடை விதிக்கப்பட்டு, அந்த தடை இன்னும் தொடர்கிறது.
இந்த நிலையில் கடந்த மே 25 இல் வெளியிடப்பட்ட வழக்குரைஞர்கள் மீதான ஒழுங்குமுறை விதிகள்.
“நீதிபதியின் பெயரைப் பயன்படுத்தி கையூட்டு வாங்கினாலோ, நீதிமன்ற ஆவணங்களை சிதைத்தாலோ தவறான ஆவணங்கள் உருவாக்கினாலோ, நீதிபதியை மிரட்டினாலோ, அவதூறாகப் பேசினாலோ, கீழமை நீதிபதிகள் மீது மேல் நீதிமன்றத்தில் பொய்யான அல்லது ஆதாரம் இல்லாத அல்லது தேவையற்ற புகார் மனு அளித்தாலோ, மது குடித்து விட்டு நீதிமன்றத்தில் நேர் நின்றாலோ அவரை உயர்நீதிமன்றத்திலோ அல்லது கீழமை நீதிமன்றத்திலும் சேர்த்தோ வழக்காட வாழ்நாள் முழுவதுமோ அல்லது குறிப்பிட்ட காலத்திற்கோ உயர்நீதிமன்ற நீதிபதிகளோ அல்லது கீழமை நீதிபதிகளோ தடையாணை பிறப்பிக்கலாம்
என்று கூறுகின்றன.
உண்மையில் நீதிபதிகள் கையூட்டு பெறுவது அண்மைக்காலத்தில் அதிகரித்துள்ளதை அனைவரும் அறிவர். இவ்வாறு கையூட்டு பெற்று தருவதற்கென்றே தரகர்கள் நீதிமன்ற வளாகத்தில் நடமாடுவதும் சில வழக்குரைஞர்களே இவ்வாறு தரகர்களாக செயல்படுவதும் ஊர் அறிந்த உண்மையாகும். இந்த தரகு வழக்குரைஞர்கள் இப்போது பிறப்பிக்கப் பட்டுள்ள ஒழுங்கு விதிகளால் தண்டிக்கப் படபோவதில்லை.
வேண்டாதவர்களை பழிவாங்குவதற்கே இவ்விதி பெரிதும் பயன்படும். நீதிபதிகள் பெயரால் கையூட்டு வாங்குவதைத் தடுப்பதற்கும் தண்டனை அளிப்பதற்கும் ஏற்கெனவே போதுமான சட்ட விதிகள் இருக்கின்றன.
நீதிபதியை மிரட்டினார் என்றோ, அவதூறாகப் பேசினார் என்றோ குற்றம் சாட்டுவதற்கு நீதிபதிகளுக்கு அளிக்கப்படும் அதிகாரம் மிக விரிவானதாகும் நீதிபதிகளின் எதிர்நிலையான அல்லது தவறான புரிதலுக்கு எதிரான வலுவாக வாதம் செய்தாலே அதனை நீதிபதிக்கு எதிரான மிரட்டல் என்றோ அவதூறு என்றோ வரையறுத்துக் கொண்டு தண்டனை வழங்க விரிவான அதிகாரம் இதன் மூலம் நீதிபதிகளுக்கு வழங்கப்படுகிறது.
அதேபோல் கீழமை நீதிபதிகள் மீது புகார் அளிப்பதை முற்றிலும் தடைசெய்யவே மேற்கூறிய ஒழுங்குமுறை விதிபயன்படும் .
இவ்விதி வழங்கும் அதிகாரம் உரத்துப்பேசும் யாரையும் குடித்துவிட்டு பேசினார் என குற்றம் சாட்டுவதற்கும், தண்டனை அளிப்பதற்கும் பயன்படும் ஆபத்துண்டு.
மொத்ததில் வழக்குரைஞர்களுக்கு வாய்ப்பூட்டு போடும் கொடிய அடக்குமுறை விதிகளாகவே சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ள ஒழுங்குமுறை விதிகள் உள்ளன.
வழக்குரைஞர்களின் கருத்துரிமை, பேச்சுரிமை, கேள்வி கேட்கும் உரிமை ஆகிவை தடை செய்யப்படுவது வழக்குரைகளின் உரிமையை பறிக்கும் செயல் மட்டும் அல்ல. நீதிமன்றத்தின் நடுநிலைத் தன்மையையே குலைத்து, சட்டத்தின் ஆட்சியை நிலைகுலையச் செய்துவிடும் ஆபத்து இதில் உள்ளது.
இந்த ஒழுங்குமுறை விதி நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞர்களின் அனைத்து வகைப் போராட்டங்களையும் ஒட்டு மொத்தமாக தடை செய்வதும் விவாதத்திற்கு உரியது. எதற்கெடுத்தாலும் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடுவதையும், நீதிமன்ற வளாகத்தில் கண்ணியக் குறைவாக நடந்துக் கொள்வதையும் எதிர்த்து ஒழுங்குமுறை விதிகள் ஏற்படுத்துவது தேவை தான். அதற்கு நீதிபதிகளும் வழக்குரைஞர்களும் இணைந்து இணக்கமான முறையில் விதிவகுத்துக் கொள்ள வேண்டும்.
மாறாக நீதிமன்ற அரங்கில் அமைதியான முறையில் கோரிக்கை அட்டை பிடிப்பதையோ, கருப்பு பட்டை அணிவதையோ கூட தடை செய்யும் சர்வாதிகாரம் கூடாது.
ஏ.கே. ஆனந்த் – எதிர் – தில்லி உயர்நீதிமன்ற பதிவாளர் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை காட்டி, வழக்குரைஞர் சட்டப் பிரிவு 34(1) வழங்கும் அதிகாரத்தை சென்னை உயர்நீதிமன்றம் மிகத் தவறாக பயன்படுத்துகிறது.
இந்த ஒழுங்குமுறை விதிகள் பிறப்பிக்கப்பட்டமுறை குறித்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் 03.06.2016 அன்று வெளியிட்டுள்ள விளக்கம் ஏற்கக்கூடியதாக இல்லை மாறாக மெல்லிய மிரட்டலாக உள்ளது.
நீதிமன்றத்திற்குள் மயான அமைதியை நிலைநாட்டுவது நீதித்துறை தற்சார்பையே சீர்குலைத்துவிடும்.
எனவே உயர்நீதிமன்றம் கடந்த 2016 மே 25 நாளிட்ட வழக்குரைஞர் சட்ட விதிகளைத் திரும்ப பெற்று, வழக்குரைஞர் அமைப்புகளோடு பேச்சு வார்த்தை நட்த்தி இருத்தரப்பினரும் ஏற்கக் கூடிய ஒழுங்குவிதிகளை உருவாக்கிக் கொள்வதே இணக்கமான சூழல் நிலவவும், சட்டத்தின் ஆட்சி நிலை பெறவும் உதவும் என்பதை தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்புதிய ஒழுங்குமுறை விதிகளைத் திரும்பப் பெற வலியுறுத்தி 06.06.2016 அன்று வழக்குரைஞர்கள் சென்னையில் நடத்தும் பேரணிக்கு தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Post a Comment