உடனடிச்செய்திகள்

Friday, December 29, 2017

"தமிழ்நாட்டு வேலைகள் தமிழருக்கே! வெளி மாநிலத்தவருக்கு அல்ல!" பிப்ரவரி 3 அன்று சென்னையில் மாநாடு!

"தமிழ்நாட்டு வேலைகள் தமிழருக்கே! வெளி மாநிலத்தவருக்கு அல்ல!" பிப்ரவரி 3 அன்று சென்னையில் மாநாடு! சிதம்பரத்தில் நடந்த தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு முடிவு!
தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழுக் கூட்டம், நேற்று (28.12.2017) - சிதம்பரம் – வணிகர் சங்கக் கட்டடத்தில் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் தலைமையில் நடைபெற்றது. பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் முன்னிலை வகித்தார். பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர் பழ. இராசேந்திரன், நா. வைகறை, இரெ. இராசு, க. விடுதலைச்சுடர், க. முருகன், ம. இலட்சுமி அம்மாள், க. அருணபாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முன்னதாக, ஒக்கிப் புயலில் உயிரிழந்த மீனவர்களுக்கும், தமிழ்த்தேசியப் போராளியும் - புலவர் கலியபெருமாள் அவர்களின் மூத்த மகனுமான தோழர் வள்ளுவன் அவர்களின் மறைவுக்கும் இரங்கல் தெரிவித்து, அமைதி வணக்கம் செய்யப்பட்டது.

கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனமாக நிறைவேற்றப்பட்டன :

தீர்மானம் - 1

“தமிழ்நாட்டில் தமிழருக்கே வேலை – வெளி மாநிலத்தவருக்கு அல்ல!” - தமிழ்நாடு அரசு சட்டமியற்ற வலியுறுத்தி – பிப்ரவரி 3இல் சென்னையில் மாபெரும் மாநாடு
தமிழ்நாட்டில் மிகப்பெரும் அளவில் வெளி மாநிலத்தவர் குடியேறி வருகின்றனர். நிலங்களையும், மனைகளையும் கட்டடங்களையும் வாங்கிக் குவிக்கின்றனர். வணிகத்தையும், தொழிலையும் கைப்பற்றி இருக்கின்றனர். தொகைத் தொகையாக வந்து தமிழ்நாட்டில் குடியேறும் வடநாட்டவர் மற்றும் பிற மாநிலத்தவருக்கு “ஸ்மார்டு கார்டு” திட்டம், வரைமுறையற்று உள்ளே நுழைவதற்கும், தமிழ்நாட்டில் வழங்கல் (ரேசன்) அட்டை, வாக்காளர் அட்டைப் பெற்று நிலைபெறுவதற்கும் வாய்ப்பளிக்கிறது.

நேரடியாகவும், பல்வேறு முறைகேடுகள் – மோசடிகள் வழியாகவும், தமிழ்நாட்டிலுள்ள இந்திய அரசு நிறுவனங்களில் வெளி மாநிலத்தவர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டு வந்தார்கள். இதுபோதாதென்று, தற்போது தமிழ்நாடு அரசுப் பணிகளிலேயே வெளி மாநிலத்தவரைப் பணியமர்த்தும் அபாயகரமான புதியப் போக்கு தீவிரம் பெற்றுள்ளது.

கடந்த 07.11.2017 அன்று வெளியான, தமிழ்நாடு அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரி –விரிவுரையாளர் காலிப் பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகளில், வெளி மாநிலத்தவர்கள் பெருமளவில் இடம்பெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசுப் பணியிலேயே வெளி மாநிலத்தவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள விவரம் வெளியாகக் கூடாது என்பதற்காக, “ஆசிரியர் தேர்வு வாரியம்” திட்டமிட்டே அவர்களின் பெயர்களை மறைத்து, வழக்கத்திற்கு மாறாக பதிவு எண்களுடன் தேர்வுப் பட்டியலை வெளியிட்டது.

வெளி மாநிலத்தவர்கள் பலரும் பொதுப்பிரிவில் வந்து இடங்களைக் கைப்பற்றியதோடு மட்டுமின்றி, தமிழ்நாட்டின் அட்டவணைப் பிரிவினர் மற்றும் பழங்குடியினர் - பிற்படுத்தப்பட்ட - பிற்படுத்தப்பட்ட (முஸ்லிம்) - மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆகியோர்க்கு உரிய பிரிவுகளின் கீழும் பல வெளி மாநிலத்தவர்கள் தேர்வாகியிருந்தனர். அதன் காரணமாக, இப்பிரிவுகளைச் சேர்ந்த தமிழ் மாணவர்களுக்குரிய இடங்கள் அயலாரால் தட்டிப் பறிக்கப்பட்டன.

இவ்வாறு தேர்வாகியுள்ள வெளி மாநிலத்தவருக்கு 23.11.2017 அன்று சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தவிருந்த நிலையில், அதைத் தடுத்து நிறுத்தும் போராட்டத்தைத் தமிழ்த்தேசியப் பேரியக்கம் அறிவித்தது. இதனையடுத்து, சான்றிதழ் சரிபார்ப்பு இரத்து செய்யப்பட்டது. இப்போது, மோசடியாக மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறி, அத்தேர்வு முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியமே திரும்பப் பெற்றுள்ளது.

இந்நிலையில், 14.11.2017 அன்று தமிழ்நாடு அரசுப் பணித் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.), நான்காம் பணிப்பிரிவில் - 9,351 வேலைகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது. அந்த அறிவிப்பில், இப்பணிகளுக்கு தமிழ்நாட்டவர் மட்டுமின்றி – வெளி மாநிலத்தவரும், நேப்பாளம், பூட்டான் போன்ற வெளிநாட்டினரும், பாக்கித்தான், திபெத், மியான்மர் நாடுகளிலிருந்து வந்த அகதிகளும் மேற்கண்ட வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும், அவர்களுக்கு இப்பொழுது தமிழ் தெரியாவிட்டாலும் பரவாயில்லை, இரண்டாண்டுகளுக்குள் அவர்கள் தமிழ் கற்றுக் கொண்டால் போதும் என்றும் தமிழ்நாடு அரசு சலுகை அளித்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை அளித்தது.

இதற்கு முன்னர் 2013ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு அரசுப் பணிகளுக்குத் தேர்வு ஆவதற்கு தமிழ்நாட்டு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும் என்ற வரம்பாவது இருந்தது. கடந்த 2016 செப்டம்பர் 1 அன்று, செயலலிதா ஆட்சியில் தமிழ்நாடு சட்டப் பேரவையில் அன்றைய நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்து நிறைவேற்றிய “தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் (பணி நிபந்தனைகள்) சட்டம் - 2016” என்ற புதிய சட்டத்தின் அடிப்படையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் விதிகளில், தமிழ்நாட்டு அரசுப் பணிகளில் வெளி மாநிலத்தவர் பங்கேற்பதற்காக 07.11.2016 அன்று திருத்தங்கள் செய்யப்பட்டது.

இவற்றையெல்லாம் ஆதாரங்களுடன் கடந்த 16.11.2017 அன்று, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை வெளியிட்டு அம்பலப்படுத்தினார். இதனையடுத்து, பல கட்சிகளும் இது குறித்து அறிக்கை வெளியிட்டு தமிழ்நாடு அரசுக்குக் கண்டனம் தெரிவித்தனர். அவர்கள் அனைவருக்கும் நாம் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்!

மகாராட்டிரம், கர்நாடகம், குசராத், மேற்கு வங்கம், சத்தீஸ்கட் போன்ற பல மாநிலங்களில் மண்ணின் மக்களுக்கே வேலை உரிமை சட்டமாக்கப்பட்டுள்ளது. அம்மாநிலங்களின் அரசுப் பணியில், தமிழ்நாட்டில் நடப்பது போல் வெளி மாநிலத்தவர்களையும், வெளி நாட்டினரையும் பணிக்கு அமர்த்த முடியாது!

எனவே, தமிழ்நாடு அரசு – அரசுப் பணிகளில் 100 விழுக்காட்டு இடங்களையும், தனியார் மற்றும் இந்திய அரசு நிறுவனங்களில் 90 விழுக்காட்டு இடங்களையும் தமிழர்களுக்கே வழங்கிட சட்டமியற்றக் கோரி, வரும் பிப்ரவரி 3 – காரி(சனி)க் கிழமை அன்று, சென்னையில் - தோழமை அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப்படத்துறையினர், பல்துறை வல்லுநர்களைக் கொண்டு - காலை முதல் மாலை வரை முழுநாள் மாநாட்டை நடத்துவதென்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு முடிவு செய்கிறது!

இம்மாநாட்டில், மண்ணின் மக்கள் உரிமையில் அக்கறை கொண்டோரும், தமிழின உணர்வாளர்களும் திரளாகப் பங்கேற்க வேண்டுமென அன்புரிமையுடன் அழைக்கின்றோம்!

தீர்மானம் - 2

கடலூர் - நாகை கிராமங்களை அழித்துக் கொண்டு வரப்படும் பெட்ரோ கெமிக்கல் மண்டலத் திட்டத்தை இந்திய அரசு கைவிட வேண்டும்!
கதிர்வீச்சு அபாய அணு உலைகள், காற்று மண்டலத்தையும் உயிர் வாழும் சூழலையும் நாசப்படுத்தும் அனல் மின் நிலையங்கள், நிலத்தடி நீரை உறிஞ்சி பாலைவனமாக்கும் பெட்ரோல், எரிவளி (மீத்தேன்) எடுப்பு முயற்சிகள், நியூட்ரினோ ஆய்வகம், வேளாண் நிலங்களை அழிக்கும் கெயில் குழாய்த் திட்டம் என இந்திய அரசால் தமிழ்நாட்டின் மீது தொடர்ச்சியாகத் திணிக்கப்பட்டு வரும் அழிவுத் திட்டங்களில் ஒன்றாக, கடலூர் - நாகை மாவட்டத்தில் எரிமவேதிப் பொருட்கள் முதலீட்டு மண்டலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடலூர் - நாகை மாவட்டங்களின் 45 கிராமங்களில் சற்றொப்ப 57,345 ஏக்கர் நிலத்தில் அமைக்கப்படவுள்ள இந்த முதலீட்டு மண்டலத்தில், நச்சுக்காற்றையும், மனித உயிருக்குக் கேடு விளைவிக்கும் வேதிப் பொருட்களையும் உற்பத்தி செய்யும் பெரும் தொழிற்சாலைகளை உள்ளடக்கிய புதிய நகரியம் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இந்த எரிவேதி மண்டலத் திட்டம் கடலூர், புவனகிரி, சிதம்பரம், சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களில் உள்ள 45 கிராமங்களை தனியார் நிறுவன வளாகமாக மாற்றி, இலட்சக்கணக்கான குடும்பங்களை காலங்காலமாக வாழ்ந்த மண்ணிலிருந்து வெளியேற்றும்.

ஏற்கெனவே சிப்காட் தொழிற்சாலைகளால் கடும் மாசுபாடுகளாலும், நிலத்துக்குள் கடல் நீர் புகுவதும் அதிகரித்துள்ள கடலூர் - நாகை மாவட்டங்களில், இந்த புதிய முதலீட்டு மண்டலம் நிலைமையைத் தீவிரமாக்கி, மக்களை நிரந்தர நோயாளிகளாக்கி விடும்.

இந்த எரிவேதி மண்டலத் திட்டம் என்பது ஏற்கெனவே மேற்கு வங்கத்தாலும், கேரளாவாலும் தங்கள் மண்ணிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட திட்டமாகும். அதைத் தமிழ்நாட்டின் மீது திணிப்பது இந்திய அரசின் தமிழினப் பகைப் போக்கையே வெளிப்படுத்துகிறது.

எனவே உடனடியாக இத்திட்டத்தைக் கைவிட வேண்டுமென தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு இந்திய - தமிழ்நாடு அரசுகளைக் கோருகிறது! இத்திட்டத்தை எதிர்த்து, இக்கிராம மக்களைத் திரட்டி மண்ணுரிமை காக்கும் போராட்டத்தை முன்னெடுப்பது என்றும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் முடிவு செய்துள்ளது!

தீர்மானம் - 3

தேர்தலுக்கு வெளியே சனநாயக இயக்கம் தேவை என்பதை இரா.கி. நகர் இடைத்தேர்தல் காட்டுகிறது!
சென்னை இரா.கி. (இராதாகிருட்டிணன்) நகர் இடைத்தேர்தலில், பணம் வெற்றி பெற்றது என்று பலரும் சொல்கிறார்கள். தேர்தல் சனநாயகத்தை பணச் சூதாட்டமாகவும், பங்குச் சீரழிவாகவும் மாற்றப்பட்டிருப்பது இன்று வந்த நோயல்ல! இந்த நோயை உருவாக்கித் தொற்ற வைத்தவர்கள் தி.மு.க., அ.இஅ.தி.மு.க. தலைவர்கள்!

தன்மானம், சமூகநீதி, முற்போக்கு சிந்தனைகள் ஆகியவற்றைத் தமிழ்நாட்டில் தழைக்க வைத்தவர்கள் திராவிட இயக்கத்தார் என்று பெருமை பேசிக் கொள்கிறார்கள். இந்தியாவிலேயே மிக அதிக விலைக்கு வாக்குரிமையை விற்று வாங்கும் ஊழல் பண்டமாக மாற்றியது திராவிட அரசியல்தான்! அந்தச் சீரழிவின் அதலபாதாளம்தான் இரா.கி. நகர் தேர்தல் முடிவுகள்!

இப்பொழுது, அதை தினகரன் அறுவடை செய்திருக்கிறார். அடுத்தடுத்த தேர்தல்களில் இந்த ஊழல் பந்தையத்தில் யார் முந்தப்போகிறார்கள் என்பது இப்பொழுது சொல்ல முடியாது!

தமிழ்நாட்டில் ஒரு சட்டப்பேரவைத் தொகுதிக்கு பத்து கோடியிலிருந்து இருபது கோடி ரூபாய் வரை செலவு செய்தால்தான் போட்டியிட முடியும் என்ற நிலையை உருவாக்கிவிட்டார்கள். இந்த நிலையில், தேர்தலில் பங்கெடுப்பதன் மூலம் சமூக மாற்றத்தை, சமூக முன்னேற்றத்தைக் கொண்டு வரலாம் என்பதற்கு வாய்ப்பே இல்லை!

தமிழ்நாட்டில் பெரும் பெரும் தேர்தல் கட்சிகளுக்கு அப்பால்தான், மக்கள் தங்கள் வாழ்வுரிமைக்காகப் போராடிக் கொண்டுள்ளார்கள். கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு, நெடுவாசல் – கதிராமங்கலம் ஓ.என்.ஜி.சி. எதிர்ப்பு, மணல் கொள்ளைத் தடுப்பு, இனயம் துறைமுக எதிர்ப்பு உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி, அதில் மக்கள் முன்னேற்றமும் கண்டு வருகிறார்கள். தங்கள் வாழ்வுரிமையை சுற்றுச்சூழலை அவர்கள்தான் போராடிப் பாதுகாக்கிறார்கள் - கட்சிகள் அல்ல!

ஊழல் அரசியலை எதிர்க்கின்ற, தமிழ்நாட்டு மக்கள் உரிமைக்குக் குரல் கொடுக்கின்ற இளைஞர்களும் மக்களும் இந்தக் காலத்தில், தேர்தல் அரசியலுக்கு வெளியேதான் மக்கள் இயக்கங்களை நடத்தி – சரியான மாற்று அரசியலை வளர்க்க வேண்டிய தேவையுள்ளது. எனவே, உண்மையாகவே மக்கள் வாழ்வுரிமைக்காக செயல்பட விரும்புகின்ற இயக்கங்களும், மக்களும், தனி நபர்களும் தேர்தலுக்கு வெளியே உள்ள மாற்று சனநாயகப் பாதையில் பயணித்து செயல்படுவதுதான் இன்றைக்குள்ள வரலாற்றுத் தேவையாகும்!

தி.மு.க. – அ.தி.மு.க. கட்சிகளை புறக்கணித்து, மாற்றாக புதிய கதாநாயகர்களை திரைத் துறையிலிருந்தோ – வெளியிலிருந்தோ தேடுவது வேறு பெயரில் தி.மு.க. – அ.தி.மு.க. ஊழல் அரசியலை – பண்பாட்டுச் சீரழிவை வளர்ப்பதாகவே முடியும்!

இரா.கி. நகரில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதைத் தடுக்க தேர்தல் ஆணையம் தவறி விட்டது என்று விமர்சிப்பதுமட்டும் ஊழல் தடுப்பு நடவடிக்கையாக அமையாது. மக்களின் விழிப்புணர்ச்சியை சனநாயக உணர்வை – தன்மான உணர்வை வளர்ப்பதன் மூலம்தான் இந்த ஊழல் அரசியலை ஓரங்கட்ட முடியும்.

ஊழலும் சந்தர்ப்பவாத அரசியலும் திருவிழா கொண்டாடிய போதிலும், இரா.கி. நகர் தேர்தலில் பாரதிய சனதாக் கட்சி 1,400 வாக்குகள் மட்டும்தான் வாங்க முடிந்தது என்பது ஆறுதலாக உள்ளது. தமிழ்நாட்டில் தாங்கள் மட்டுமே கொட்டமடிக்க வேண்டுமென்று தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கும் ஆரியத்துவா அரசியல் அமைப்பான பா.ச.க.வை முற்றிலும் புறக்கணித்த, இரா.கி. நகர் தொகுதி மக்களைப் பாராட்டுவோம்!


எனவே, தேர்தல் அரசியலுக்கு வெளியே மக்கள் உரிமை - மக்கள் நலன் சார்ந்த சனநாயக அரசியல் இருக்கிறது என்பதை உணர்ந்து, அதை அமைப்பு வழியில் வளர்த்திட சமூக அக்கறையுள்ள அனைவரும் முன்வர வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுக் கேட்டுக் கொள்கிறது!

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com 
இணையம்: www.tamizhthesiyam.com

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT