“மீனவர் பிணங்கள் கடலில் மிதக்குது ஆணவ அரசு அசைய மறுக்குது!” இந்திய அரசே இதைவிடப் பேரிடர் எது? தமிழ்த்தேசியப் பேரியக்கம் போராட்டம்!
தமிழ்நாட்டைத் தாக்கிய ஒக்கிப் புயல், குமரி மாவட்டத்தை சுக்குநூறாக்கியுள்ளது. இந்திய அரசின் முறையான முன்னறிவிப்பு இல்லாததன் காரணமாக புயலில் சிக்கிக் கொண்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள், இன்னமும் வீடுவந்து சேராத அவல நிலையில், நம் மீனவ மக்கள் வீதிக்கு வந்து ஞாயம் கேட்கத் தொடங்கியுள்ளனர்.
அடுத்த நாட்டை மிரட்டும் ஏவுகணைகள் விட்டு அறிவியல் தொழில்நுட்பங்களில் சிறந்து விளங்குவதாகப் பிதற்றிக் கொள்ளும் இந்திய அரசு, 36 மணி நேரத்திற்கு முன்பாகவே புயல் சீற்றங்களைக் கணிக்கும் தொழில்நுட்பங்களை வைத்திருக்கும் இந்திய அரசு, மிகப்பெரும் புயல் தமிழ்நாட்டைத் தாக்கப்போகிறது என குறைந்தபட்ச முன்னறிவிப்பைகூட செய்யாதது ஏன்?
சிங்களக் கடற்படையும், இந்தியக் கடற்படையும் நேரடியாகவே நம் மீனவர்களைத் தாக்கி, மீன்பிடித் தொழிலைவிட்டே அவர்களை விரட்டியது போதாதென்று, புயலில் சிக்க வைத்து அவர்களை மீன்பிடித் தொழிலைவிட்டு விரட்டும் முயற்சி நடக்கிறதோ என்று ஐயப்படுகிறோம்!
இன்னமும் நடுக்கடலில் நம் மீனவர்களின் உடல்கள் ஆங்காங்கே மிதப்பதாக செய்திகள் வரும் நிலையில், அவர்களின் உடலைக் கூட மீட்டுத் தராமல் இந்திய – தமிழ்நாடு அரசுகள் வேடிக்கைப் பார்ப்பது ஏன்? தமிழ்நாட்டு மீனவர்களின் உயிர் அவ்வளவு அலட்சியமானதா?
இந்திய அரசே, இதைவிடப் பேரிடர் எது? உடனடியாக, ஒக்கிப் புயல் பாதிப்பை தேசியப் பேரிடராக அறிவித்திடு! காணாமல் போனோரை உடனடியாக மீட்க வேண்டும் – கணக்கு வேண்டும்!
தமிழ்நாட்டு ஆட்சியாளர்களே, மீனவ மக்களின் துயரில் பங்கெடுப்பதைவிட, இடைத்தேர்தல் முக்கியமாகிப் போய்விட்டதா? உடனடியாக, துயர் துடைப்புப் பணிகளைத் தீவிரப்படுத்து! கேரளாவைப் போல், உயிரிழந்த மீனவர் குடும்பங்களுக்கு 20 இலட்சம் ரூபாய் துயர் துடைப்பு நிதி வழங்கு!
இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் தமிழ்நாடெங்கும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன. நாளை (12.12.2017) மாலை 5 மணிக்கு தஞ்சை – தொடர்வண்டி நிலையம் அருகிலும், 13.12.2017 மாலை 4 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டத்திலும், மாலை 4 மணிக்கு மதுரை செல்லூர் அறுபதடிச் சாலையிலும் ஆர்ப்பாட்டங்கள் நடக்கின்றன.
இந்த ஆர்ப்பாட்டங்களில், தமிழின உணர்வாளர்களும், சனநாயக ஆற்றல்களும் திரளாகப் பங்கேற்கும்படி அன்புரிமையுடன் அழைக்கின்றோம்!
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com
Post a Comment