உடனடிச்செய்திகள்

Tuesday, December 12, 2017

பல்தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வில் மோசடி : தேர்வை இரத்து செய்! தேர்வாணைய அதிகாரிகளைக் கைது செய்! தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!

பல்தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வில் மோசடி : தேர்வை இரத்து செய்! தேர்வாணைய அதிகாரிகளைக் கைது செய்! தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!
தமிழ்நாட்டிலுள்ள அரசுப் பல்தொழில்நுட்பக் (பாலிடெக்னிக்) கல்லூரிகளில் காலியாகவுள்ள 1,058 விரிவுரையாளர் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு நடைபெற்று, அதன் முடிவுகள் 07.11.2017 அன்று வெளியிடப்பட்டன. அம்முடிவுகளில், வெளி மாநில மாணவர்கள் பெருமளவில் தேர்ச்சி பெற்றிருந்தது அம்பலமானது. இதனையடுத்து, 23.11.2017 அன்று சென்னையில் தேர்வானவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு முகாம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.
 
பல இலட்சம் தமிழ் இளைஞர்கள் தமிழ்நாட்டில் வேலை இன்றி தவிக்கும் சூழலில், தமிழ்நாட்டு அரசுக் கல்லூரிகளிலேயே வெளி மாநிலத்தவர்களை பணியமர்த்தக் கூடாது என்றும், வெளி மாநில மாணவர்களை பட்டியலிலிருந்து நீக்க வேண்டும் என்றும், அவ்வாறு நீக்காவிட்டால் சான்றிதழ் சரிபார்ப்பு முகாமை அறவழிப் போராட்டம் நடத்தித் தடுத்து நிறுத்துவோம் என்றும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் நாம் அறிவித்தோம்.
 
இதனையடுத்து, 21.11.2017 அன்று சான்றிதழ் சரிபார்ப்பு முகாமை தள்ளி வைப்பதாக ஆசிரியர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டது.
 
இது ஒருபுறமிருக்க, விரிவுரையாளர் தேர்வில் முறைகேடு நடந்திருக்கலாம் என சென்னை உயர் நீதிமன்றத்தில் மாணவர்கள் வழக்குகள் தொடுத்தனர். இந்நிலையில், 11.12.2017 அன்று தேர்வெழுதியோரின் விடைத்தாளை (ஒளி ஊடுருவல் செய்யப்பட்ட அசல் - OMR) ஆசிரியர் தேர்வாணையம் தங்கள் இணையதளத்தில் வெளியிட்டது.
 
அவற்றை ஆராய்ந்தபோது, ஏற்கெனவே 140 – 150 என அதிக மதிப்பெண் பெற்றதாக அறிவிக்கப்பட்டிருந்த பலர், மிக மிகக் குறைவான மதிப்பெண்களை பெற்றிருந்தது தெரிய வந்துள்ளது. எடுத்துக்காட்டாக, இயந்திரவியல் துறையில் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் தேர்வான 17PT12021858 என்ற வரிசை எண் கொண்ட தேர்வர், ஏற்கெனவே வெளியிடப்பட்டிருந்த தேர்வு முடிவில் 149 மதிப்பெண் பெற்றிருந்தார். அவர் தற்போது 60 மதிப்பெண்தான் பெற்றுள்ளார் என்பது வெளிப்பட்டுள்ளது.
 
அதுபோல், இதே துறையில், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் 17PT30020762 பதிவெண் கொண்ட தேர்வர், ஏற்கெனவே 146 மதிப்பெண் பெற்றவர் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அவர் பெற்றது 77 மதிப்பெண்தான் எனத் தெரியவந்துள்ளது. அதேபோல், 17PT06020413 பதிவெண் கொண்ட தேர்வர், ஏற்கெனவே 137 மதிப்பெண் பெற்றவராக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அவர் 65 மதிப்பெண்தான் பெற்றுள்ளார். இதுபோல் நூற்றுக் கணக்கானவர்கள் மோசடி மதிப்பெண்கள் பெற்றுள்ளது அம்பலமாகியுள்ளது. விரிவுரையாளர் தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளதையே இது அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது.
 
எனவே, தமிழ்நாடு அரசு உடனடியாக, மோசடியாக நடைபெற்றுள்ள விரிவுரையாளர் தேர்வை முழுவதுமாக இரத்து செய்ய வேண்டும். புதிதாகத் தேர்வு நடத்த வேண்டும். முறைகேட்டில் ஈடுபட்டுள்ளோரை கைது செய்து, அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசை தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
 
வருங்காலத்தில், தேர்வு முறை வெளிப்படையானதாகவும், தமிழ்நாட்டு இளையோருக்கே 100 விழுக்காட்டு வேலைகளை உறுதி செய்யும் வகையில் மாநில வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோரை மட்டுமே கொண்டு பணித்தேர்வுகளை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
 
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
 
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT