தொழிலாளர் சட்டங்களை நீக்க புதிய சட்டம்! தோழர் கி. வெங்கட்ராமன், பொதுச் செயலாளர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
நரேந்திர மோடி தலைமையிலான “சங்கக் குழு” (சங் பரிவார்) ஆட்சி, சங்கங்கள் அற்றவர்களாக தொழிலாளர்களை மாற்ற முயல்கிறது.
பிரித்தானிய ஆட்சி தொடங்கி, இன்று வரை இந்தியாவில் செயலில் உள்ள தொழிலாளர் தொடர்பான, ஏறத்தாழ 44 நடுவண் அரசு சட்டங்களை சுருக்கி 4 சட்டக் கோவையாக (Codes) முன் வைத்துள்ளது மோடி அரசு!
இது நடப்பிலுள்ள சட்டங்களின் எண்ணிக்கையைக் குறைத்து, தொகுப்பாக்குவது என்ற பெயரில் சட்டங்கள் இல்லாத தொழில் உறவை ஏற்படுத்தும் முயற்சியாகும்.
ஊதியம் தொடர்பாக நடப்பிலுள்ள ‘ஊதிய வழங்கல் சட்டம்’ (The Payment of Wages – 1936), ‘குறைந்தபட்ச ஊதியச் சட்டம்’ (The Minimum Wages Act – 1948), ‘போனஸ் வழங்கல் சட்டம்’ (The Payment of Bonus Act, 1965) ஆகியவற்றை ஒன்றாக்கி, ‘ஊதிய சட்டக் கோவை’ (The Code on Wages Bill 2017) என்ற சட்ட முன்வடிவை இந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் முன் வைத்திருக்கிறார்கள்.
அதேபோல், தொழிற்சங்க சட்டம் (The Trade Union Act, 1926), நிலையாணைச் சட்டம் (Industrial Employment (Standing Orders) Act, 1946), தொழிற்தகராறு சட்டம் (The Industrial Disputes Act, 1947) ஆகியவற்றை ஒருங்கிணைத்து “தொழிலுறவு சட்டக் கோவை” (Code of Industrial Relations Bill - 2017) என்ற முன்வடிவும், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிச் சட்டம் (Employees' Provident Funds & Miscellaneous Provisions Act, 1952), பணிக்கொடை சட்டம் (The Payment of Gratuity Act, 1972), ஈ.எஸ்.ஐ. சட்டம், பேறு கால உதவிச் சட்டம் (Maternity Benefits Act 1961), பீடித்தொழிலாளர்கள் – கட்டடத் தொழிலாளர்கள் போன்றோருக்கான தீர்வை சட்டம் போன்ற 16 சட்டங்களை ஒருங்கிணைத்து “தொழிலாளர் சமூகப் பாதுகாப்பு சட்டக் கோவை” (Labour Code on Social Security & Welfare Bill, 2017) என்ற சட்ட முன் வடிவும் வைக்கப்பட்டுள்ளன.
இதுதவிர, தொழிலகப் பாதுகாப்பு சட்டங்கள் பலவற்றைத் தொகுத்து “தொழிலகப் பாதுகாப்பு சட்டக்கோவை” (Code on Industrial Safety And Security Bill - 2017) என்ற முன் வடிவும் வைக்கப்பட்டுள்ளது.
நரேந்திர மோடி தலைமையில் பா.ச.க. ஆட்சி வந்தவுடனேயே, தொழிற்சாலை சட்டத்திலும் (The Factories Act – 1948), தொழில் பழகுநர் சட்டத்திலும் (அப்ரண்டிஸ் சட்டம்), பல்வேறு திருத்தங்கள் செய்யப்பட்டன.
இப்போது முன்வைக்கப்பட்டுள்ள சட்டக்கோவைகள், மேற்சொன்ன சட்டத் திருத்தங்கள் ஆகியவற்றைத் தொகுத்துப் பார்த்தால், மிகப்பெரும்பாலான தொழிலாளர்கள் சட்டப் பாதுகாப்பு அற்றவர்களாக மாற்றப்பட்டிருப்பது தெரியும்.
சங்கங்கள் அற்றவர்களாகத் தொழிலாளர்களை மாற்றுவது, கூட்டுபேரம் என்பதையே ஒழிப்பது, சமரசப் பேச்சுவார்த்தைப் பொறியமைவை தவிர்ப்பது (Avoid Adjudication), தீர்ப்பு அமைவைக் கட்டாயப்படுத்துவது (Force Arbitration) என்பதுதான் மோடி முன்வைத்துள்ள தொழிலுறவு வரைவுச் சட்டத்தின் நோக்கமாக இருக்கிறது.
தொழிலாளர் (Worker), வேலை வாங்குபவர் (Employer), ஊதியம் (Wage) ஆகிய தொழிலுறவின் அடிப்படையான கூறுகளுக்கு இச்சட்டத் தொகுப்புகள் முன்வைக்கும் வரையறுப்பை ஆய்ந்தால், சட்டத்தின் ஆட்சி அகற்றப்படுகிறது என்பது புரியும்.
ஒரு சட்டத்தில் சொல்லப்படும் வரையறுப்பு, இன்னொரு சட்டத்தில் வேறொன்றாக மாற்றப்படுகின்றது. வேலை வாங்குபவர் (Employer) என்ற வரையறுப்பு வேண்டுமென்றே குழப்பமாக முன்வைக்கப்படுகிறது. ஒப்பந்தத் தொழிலாளர்கள் தொடர்பாக முதன்மை நிர்வாகத்திற்கு உறவேதும் இல்லாத முறையில், வரையறுப்புகள் வைக்கப்படுகின்றன.
சிறுதொழில் - பெருந்தொழில், அரசுத்துறை – தனியார் துறை என்ற எந்த வேறுபாடும் இன்றி ஒப்பந்தத் தொழிலாளர் முறைதான் வளர்ந்து வரும் முறையாக இருக்கிறது. மிகப்பெரும் தொகையான தொழிலாளர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களாகவே இருக்கிறார்கள்.
இவர்கள் தொடர்பான எந்தப்பொறுப்பும் முதன்மை நிர்வாகத்திற்கு (Principle Employer) இல்லாமல் ஆக்கப்படுகிறது.
இதற்கு முன்னர் ஒப்பந்தத் தொழிலாளர் ஒழுங்குமுறைச் சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தத்தின் வாயிலாக ஐம்பது தொழிலாளர்களுக்கு கீழுள்ள ஒப்பந்ததாரர்கள் பெரும்பாலான சட்டங்களின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டு விட்டார்கள். அதாவது, ஐம்பது தொழிலாளர்களுக்குக் கீழ் உள்ள ஒப்பந்தங்களில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் (காண்டிராக்ட் தொழிலாளர்கள்) எந்தக் குறைந்தபட்ச சட்டப்பாதுகாப்பும் அற்றவர்களாக வெளியில் வீசப்படுகிறார்கள்.
இப்போது முன்வைக்கப்பட்டுள்ள தொழிலுறவு சட்டம், முதன்மை நிர்வாகத்திற்கும் சட்டக் கடமையிலிருந்து விலக்கு அளிக்கிறது.
“ஊதியம்” என்பது குறித்த வரையறுப்பில், முன்வைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு சட்டமும் வெவ்வேறு வகையாகப் பேசுகிறது. ஊதியம் வழங்குவதையும், அதனைக் குறிப்பிட்ட காலத்திற்குள் வழங்குவதையும் உறுதி செய்வதற்காகவே ஊதிய வழங்கல் சட்டம் பிரித்தானிய ஆட்சிக்காலத்திலேயே வந்தது.
ஊதியத்தில் எந்தெந்த வகை பிடித்தங்கள் அனுமதிக்கப்படும் என்ற வரையறுப்பு அச்சட்டத்தில் இருந்தது. இப்போதைய முன் மொழிவில் தொழிலக நிர்வாகம் ஒரு தொழிலாளியின் பணியில் குறை இருப்பதாகக் கருதினால், அக்குறையினால் ஏற்பட்ட இழப்பு இன்னது என்று தானே முடிவு செய்து, அதனை தொழிலாளர் ஊதியத்திலிருந்து பிடித்தம் செய்து கொள்ளலாம் என்ற வரம்பற்ற அனுமதி வழங்கப்படுகிறது.
தொழிலாளர்கள் எளிதில் சங்கம் அமைத்து செயல்படமுடியாதபடி, கெடுபிடியான மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஏழு தொழிலாளர்கள் முடிவு செய்தால், ஒரு தொழிலகத்தில் சங்கம் அமைத்துப் பதிவு செய்யலாம் என்ற நிலை படிப்படியாக ஏற்கெனவே மாற்றப்பட்டுவிட்டது. இப்போதைய முன்மொழிவுப்படி, ஒரு தொழிலகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களில் 10 விழுக்காட்டினர் அல்லது 100 தொழிலாளர்கள் இதில் எது குறைவோ அந்த எண்ணிக்கையிலானவர்கள் விண்ணப்பித்தால்தான் சங்கம் பதிவு செய்ய முடியும். அதுமட்டுமல்ல, நூறு தொழிலாளர்களுக்கு மேல் ஒரு தொழிலகத்தில் இருந்தால் குறைந்தது 100 தொழிலாளர்களாவது சங்கம் அமைக்க ஒப்புதல் தர வேண்டும்.
இந்த நிபந்தனைக்கு உட்பட்டு சங்கம் அமைக்க முயன்றால், பதிவுக்குப் பொறுப்பேற்று விண்ணப்பிக்கும் தொழிலாளர்களோ, சங்கம் அமைக்க ஒப்புதல் தெரிவிக்கும் தொழிலாளர்களோ மிரட்டப்பட்டு, சங்கம் அமைக்கும் முயற்சியே நிலைகுலையும்! இந்தத் தடைகளைத் தாண்டி, சங்கம் அமைப்பது அரிதிலும் அரிதாகவே நிகழ முடியும்.
ஒழுங்கமைக்கப்படாத தொழில் பிரிவுகளில் (Unorganized Sector) தொழிற்சங்கங்களுக்கு அதிகம் போனால், இரண்டு பேர் மட்டுமே தொழிலாளர் அல்லாதவர் நிர்வாகியாக இருக்க முடியும். ஒழுங்கமைக்கப்பட்ட தொழில்களில் அதுவும் இல்லை! இந்த நிபந்தனை இனி புதிதாக அமைக்கப்படும் சங்கங்களுக்குத்தான் என்று சொல்லப்பட்டாலும், அடுத்தடுத்து நடப்பிலுள்ள சங்கங்களுக்கும் இந்த நிபந்தனை விதிக்கப்படும் ஆபத்து உள்ளது.
தொழிற்சாலை சட்டத்தில் வந்துள்ள கொடிய திருத்தங்களை கருத்தில் கொண்டால், மேற்சொன்ன தொழிற்சங்க சட்டத்திருத்தம் சங்கம் அற்றவர்களாக தொழிலாளர்களை மாற்றும் என்பது புரியும்.
மோடி அரசு ஏற்கெனவே தொழிற்சாலை சட்டத்தில் செய்த திருத்தத்தின் வழியாக, நாற்பது தொழிலாளர்களுக்குக் கீழ் உள்ள தொழிலகங்களுக்கு – தொழிற்சாலை சட்டம் பொருந்தாது என்று கூறிவிட்டது.
இயல்பாக 10 மணி நேரமும், தேவையை ஒட்டி 12 மணி நேரம் வரையிலும் பணியாற்றக் கட்டாயப்படுத்துவதற்கு ஏற்ற வகையில் இச்சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டுவிட்டன.
இதன்படி, 10 மணி நேரத்திற்கு மேல் பணியாற்றும் தொழிலாளர்கள் களைப்படைந்த நிலையில் வேறு எதையும் சிந்திக்க முடியாமல், வீட்டிற்கு செல்லும் மனநிலையிலேயே இருப்பார்கள். இவ்வாறான தொழிலாளர்கள் ஒருவருக்கொருவர் சந்தித்து சங்கம் அமைக்கும் முயற்சியில் ஈடுபடுவதே கடினமான செயலாகும்.
அதிலும், வெளியிலிருந்து முழு நேரச் செயல்பாட்டாளர் துணையின்றி அவ்வாறு அமைப்பதே இன்னும் கடினம்! அதற்குப் பிறகு, தொடர்ந்து சங்கமாக இயங்குவதும், உரிமைகளுக்கு இயக்கம் நடத்துவதும் இயலாத ஒன்று! நடைமுறையில் சங்கங்கள் அற்றவர்களாக (De Unionised) தொழிலாளர்கள் மாற்றப்படுவார்கள்.
இதனை உறுதி செய்வதுபோல், புதிய நிலையாணைச் சட்டத்தில் தொழிற்சங்கம் என்ற சொல்லே இடம்பெறாமல் பார்த்துக் கொள்ளப்பட்டுள்ளது. இச்சட்டம் பேச்சுவார்த்தை முகவர் (Negotiating Agent) என்று மட்டுமே குறிப்பிடுகிறது.
நடப்பிலுள்ள தொழிற்தகராறுச் சட்டப்படி, நூறு தொழிலாளர்களுக்கு மேலுள்ள தொழிலகங்கள், தொழிலாளர்களை ஆட்குறைப்பு செய்தாலோ (Retrenchment), தொழிலகத்தைத் தற்காலிகமாக நிறுத்தினாலோ (லே ஆப்), கதவடைப்பு செய்தாலோ (லாக் அவுட்) தொழிலாளர் துறையின் இசைவு பெற வேண்டும். இவ்வாறு முயலும் தொழிலக நிர்வாகங்கள், தொழிலாளர் அலுவலருக்கு அல்லது சமரச அதிகாரிக்கு இசைவு கேட்டு கடிதம் அனுப்ப வேண்டும். அதன் மீது தொழிலாளர் தரப்பும் பங்கேற்பும் சமரசப் பேச்சுவார்த்தை நடைபெற்று அதன் முடிவிற்கு ஏற்பவே தொழிலக நிர்வாகம் செயல்பட முடியும்.
இப்போது முன்வைக்கப்பட்டுள்ள சட்டத்தின்படி முன்னூறு தொழிலாளர் பணியாற்றும் தொழிலகங்கள் வரை, தொழிலாளர் துறையின் இசைவு பெறாமலேயே ஒருதலைபட்சமாக ஆட்குறைப்பு செய்யலாம். லே ஆப் விடலாம். கதவடைப்பு செய்யலாம். எந்தக் கேள்வி முறையும் கிடையாது!
இன்றைய தொழில் உற்பத்தி முறையில், வெளி உற்பத்தி (அவுட்சோர்சிங்), ஒப்பந்தம் (காண்டிராக்ட்) ஆகியவை மேலோங்கியுள்ள சூழலில் மிகப்பெரும்பாலான தொழிலகங்களில் முன்னூறு தொழிலாளர்களுக்குக் குறைவான தொழிலாளர்களே பணியாற்றுகின்றனர். இங்கெல்லாம் இனி, எந்த சட்டதிட்டமும் கிடையாது என்றாகிறது.
போனஸ் சட்டத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றம் குறைந்தபட்ச போனசைத் தாண்டி, யாரும் எதுவும் பெற முடியாது என்ற நிலைக்கு இட்டுச் செல்கிறது.
போனஸ் குறித்து, பேச்சுவார்த்தையோ விசாரணையோ நடப்பதென்றால் அதில் நிர்வாகம் முன்வைக்கும் தணிக்கை செய்யப்பட்ட வரவு – செலவுக் கணக்கு முக்கியமானது. அந்த வரவு செலவுக் கணக்கை, நடப்பிலுள்ள சட்டப்படி தொழிலாளர் தரப்பினரும் விசாரணை அதிகாரிகளும் திறனாய்வு செய்ய முடியும். கிடைக்கும் உபரி (Available Surplus) குறித்து தமது திறனாய்வின் அடிப்படையில் கூடுதல் நிதி இருப்பதை சுட்டிக்காட்டி, கூடுதல் போனசுக்காக வாதம் செய்ய முடியும்.
ஆனால், இப்போது முன்வைக்கப்பட்டுள்ள சட்டப்படி நிர்வாகம் முன்வைக்கும் வரவு செலவுக் கணக்கை கேள்விகேட்க முடியாது. போனசை மறுப்பதற்கு இட்டுக்கட்டி, இழப்புக் கணக்குக் காட்டினாலோ இலாபத்தை மிகக்குறைவாகக் காட்டினாலோ யாரும் கேள்வி கேட்க முடியாது. கூடுதல் போனஸ் பெறுவதற்கு பேச முடியாது!
தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி, பீடி – கட்டடத் தொழிலாளர்களுக்கான தீர்வை உள்ளிட்ட தொழிலாளர் தொடர்பான அனைத்து நிதிகளையும் நிர்வாகம் செய்வதற்கு இந்தியத் தலைமையமைச்சர் தலைமையில் நிர்வாகக் குழு ஒன்று ஏற்படுத்தப்படும் என புதிய சமூகப் பாதுகாப்புச் சட்டம் கூறுகிறது.
இந்த நிர்வாகக் குழு, இந்த நிதியத்தைக் கையாள வெவ்வேறு தனியார் முகவர்களை அமர்த்தலாம். அதேபோல், அந்நிதியத்திலிருந்து தொழிலாளர்கள் பெற வேண்டிய பணப்பயன்களை வழங்குவதற்கு தனியே நிறுவனங்களை அமர்த்தலாம்!
மோடி அரசின் “டிஜிட்டல் இந்தியா” திட்டத்தோடு இணைத்து, இச்சட்டத்தைப் புரிந்து கொண்டால், தொழிலாளர் நிதியம் அனைத்தும் தனியார்மயமாக்கப்படும் என்பது புரியும். தொழிலாளர்கள் வருங்கால வைப்புத் தொகை, பணிக்கொடை, பேறு கால உதவித் தொகை, பீடி – கட்டடத் தொழிலாளர் போன்ற ஒழுங்கமைக்கப்படாத தொழிலாளர் நல நிதியம் போன்ற எதைப் பெறுவதாக இருந்தாலும், தனியார் நிறுவனங்களை அணுகி அவர்களுக்கு சேவைக் கட்டணம் (Service charge) செலுத்தியபிறகே தங்களுக்குரிய பணத்தைப் பெற முடியும்!
இப்போதைய நிலையில், மேற்சொன்ன சட்டங்களின்படி தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய நிதியம் ஏறத்தாழ 37 இலட்சம் கோடியாகும். இப்பெரு நிதியத்தை இப்போது அரசு கையாண்டு வருகிறது. இத்தொகை முழுவதையும் தனியாரிடம் கொடுத்தால், அவர்கள் அதனை பங்குச் சந்தை சூதாட்டத்தில் விட்டு நிதியைப் பெருக்குவதைத் தவிர வேறு வழியில்லை! அதில், இழப்பு ஏற்பட்டால், அதற்கேற்ப தொழிலாளர்களின் பணப்பயன்களிலும் வெட்டு விழும்!
ஏற்கெனவே ஓய்வூதியத் திட்டம் தனியார்மயமாகி இருப்பதைக் கவனத்தில் கொண்டால், தொழிலாளர்களின் உழைப்பு ஊதியம் முழுவதும் பாதுகாப்பற்றதாக மாற்றப்படுவதை உணர முடியும்.
இப்போது முன்வைக்கப்பட்டுள்ள சட்டங்கள்கூட செயல்படுமா என்பதற்கு உறுதியில்லை! ஏனென்றால், தொழிலாளர் தொடர்பான ஆய்வாளர்கள் (Inspectors) என்ற பதவியே துணை செய்வோர் (Facilitator) என்ற பெயர் மாற்றம் பெறுகிறது. இதன்படி, இதுவரை தொழிற்சாலை ஆய்வாளராக அல்லது தொழிலாளர் ஆய்வாளராக அல்லது தொழில் பாதுகாப்ப ஆய்வாளராக இருந்தவர்கள் துணை செய்வோராக மாற்றப்படுகின்றனர். இவர்கள் அதிகாரமற்றவர்களாக மாற்றப்படுகிறார்கள்.
சட்டப்படி ஒரு நிறுவனம் செயல்படுகிறதா என்று ஆய்வு செய்ய முன்னறிவிப்பின்றி எந்த நிறுவனத்திற்கும் இவர்கள் செல்ல முடியாது! முன்னறிவிப்புக் கொடுத்துவிட்டு, சென்று ஆய்வு செய்தாலும் அவர்கள் காணும் விதிமீறல்கள் குறித்து எந்த சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாது. தாங்கள் கண்டறியும் விதிமீறல்கள் குறித்து அதற்கென்று அமர்த்தப்பட்டுள்ள தீர்ப்பாயத்திற்கு அறிக்கை அனுப்பலாம் அவ்வளவே! சட்ட நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் தீர்ப்பாயத்திற்கு மட்டுமே உண்டு!
பெரும்பாலான சட்ட அமலாக்கத்தை தற்சான்றிதழ் (Self Certification) மூலம் அந்தந்தத் தொழிலக நிர்வாகமே செய்து கொள்ளலாம். இதற்கென்று இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இணையதளம் உருவாக்கப்படுகிறது. அதில், இவர்கள் அறிக்கையை பதிவேற்றம் செய்தால் போதும்!
ஏற்கெனவே, சில சட்ட மீறல்களுக்கு குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள முடியும் என்றிருந்தது. புதிய சட்டத்தின்படி நிறுவன முதலாளிகள் செய்யும் சட்டமீறல்கள் மீது குற்ற நடவடிக்கை ஏதும் மேற்கொள்ள முடியாது. குடிமையியல் (Civil) நடவடிக்கை மட்டுமே மேற்கொள்ள முடியும். சில ஆயிரம் தண்டத்தொகை செலுத்திவிட்டு, அவர்கள் விதிமீறல்களைத் தொடர முடியும்.
தொழிலுறவைப் பொறுத்து சட்டமே இல்லாத காலனிய ஆட்சிக்காலம் போல நிலைமை உருவாக்கப்படுகிறது. இக்கொடிய சட்டத்தை எதிர்த்து, தொழிலாளரிடையே போதிய விழிப்புணர்வும் இல்லை! சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி., ஏ.ஐ.சி.சி.டி.யூ. போன்ற நடுவண் தொழிற்சங்கங்கள் தில்லியில் மூன்று நாள் விழிப்புப் போராட்டம் நடத்தினார்கள் என்றாலும், அந்த அமைப்புகளின் செயல்பாட்டாளர்களிடையே கூட இதுகுறித்து போதிய விழிப்புணர்வு இல்லை!
இது பெரும் கவலை அளிக்கும் சூழல் ஆகும். குறைந்தது, மாவட்ட அளவுகளிலாவது அடித்தள செயல்பாட்டாளர்களிடம் இதுகுறித்த விழிப்புணர்வுக் கலந்துரையாடல்கள் நடைபெறுவது மிக அவசரத் தேவையாகும். இம்முயற்சியில் தொழிற்சங்கங்கள் மட்டுமின்றி, ஒழுங்கமைக்கப்படாத தொழில்களின் தொழிலாளர்களிடையே செயல்படும் தன்னார்வ அமைப்புகளும், ஒருங்கிணைந்து ஈடுபட வேண்டிய தேவை உள்ளது.
மிகவும் ஆபத்தான இச்சட்ட வரைவுகள், சட்டமாக நிறைவேறாமல் தடுப்பதற்கு அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்றத்தில் ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டும்!
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
Post a Comment