உடனடிச்செய்திகள்

Wednesday, May 10, 2017

காப்பியத்தலைவி கண்ணகிக்கு வீரவணக்கம்!

காப்பியத்தலைவி கண்ணகிக்கு வீரவணக்கம்!


“தமிழுரிமைக் கூட்டமைப்பு” சார்பில், சித்திரை முழுநிலவு நாளையொட்டி - சென்னை கடற்கரையிலுள்ள - சிலப்பதிகாரக் காப்பிய நாயகி கண்ணகி சிலைக்கு இன்று (10.05.2017) மாலை வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

நிகழ்வுக்கு தமிழுரிமைக் கூட்டமைப்புத் தலைவர் புலவர் கி.த. பச்சையப்பனார் தலைமை தாங்கினார். செயலாளர் தோழர் காஞ்சி அமுதன் முன்னிலை வகித்தார். 

கூட்டமைப்பின் பொருளாளர் புலவர் இரத்தினவேலவன், தமிழ்த்தேச மக்கள் கட்சிப் பொதுச் செயலாளர் தோழர் தமிழ்நேயன், திருவாளர்கள் இரா. பத்மநாபன், கலகம் வ. கீரா, அ. பத்மநாபன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்களும், தமிழறிஞர்களும் கலந்து கொண்டனர்.

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. அருணபாரதி, பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல். ஆறுமுகம், தமிழக இளைஞர் முன்னணி சென்னை செயலாளர் தோழர் க. வெற்றித்தமிழன், தோழர்கள் வி. கோவேந்தன், த. சத்தியா உள்ளிட்ட பேரியக்கத் தோழர்கள் பங்கேற்றனர்.

நிகழ்வில், தேனி மாவட்டம் கூடலூர் அருகில் மலை மீது - தமிழ்நாட்டு எல்லைக்குள் அமைந்துள்ள கண்ணகிக் கோயிலுக்கு தமிழ்நாடு அரசு சாலை வழிப் பாதை அமைக்க வேண்டும், சித்திரை முழுநிலவு அன்று மட்டுமே அக்கோயிலுக்குச் செல்ல அனுமதிக்கும் கேரள அரசின் அடாவடிச் செயலை மாற்றி - அக்கோயிலுக்கு எப்பொழுதும் சென்று வரும் வகையில் - கேரள அரசிடமிருந்து அக்கோயிலை முழுமையாக மீட்டெடுத்து அக்கோயிலை தமிழ்நாடு அரசே பராமரிக்க வேண்டும், கண்ணகிக் கோயிலில் எடுக்கப்பட்ட சிலையைப் பாதுகாத்து தமிழ்நாட்டிலேயே வைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன.

அரசனே தவறு செய்தாலும் தயங்காது தட்டிக் கேட்டு - அநீதிக்கு எதிரான ஆவேசம் கொள்ள வேண்டுமென்ற அறக்கருத்துகளை வலியுறுத்தி எழுதப்பட்ட சிலப்பதிகாரக் காப்பியத்தலைவி கண்ணகிக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் வீரவணக்கம்!

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com 
இணையம்: www.tamizhdesiyam.com 

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT