உடனடிச்செய்திகள்

Sunday, May 28, 2017

மாட்டிறைச்சிக்குத் தடை விதிக்கும் சட்டத்தை இந்திய அரசு திரும்பப் பெற வேண்டும்! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு தீர்மானம்!

மாட்டிறைச்சிக்குத் தடை விதிக்கும் சட்டத்தை இந்திய அரசு திரும்பப் பெற வேண்டும்! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு தீர்மானம்!
தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழுக் கூட்டம், சென்னையில் இன்று (28.05.2017) காலை முதல் மாலை வரை நடைபெற்றது.
கூட்டத்திற்கு, பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் முன்னிலை வகித்தார். பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர் குழ. பால்ராசு, பழ. இராசேந்திரன், நா. வைகறை, கோ. மாரிமுத்து, இரெ. இராசு, க. விடுதலைச்சுடர், க. முருகன், க. அருணபாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக, பாவலர் நா. காமராசன் அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனமாக நிறைவேற்றப்பட்டன :

தீர்மானம் : 1 
--------------------
மாட்டிறைச்சிக்குத் தடை விதிக்கும் சட்டத்தை இந்திய அரசு திரும்பப் பெற வேண்டும்!

இந்தியத் துணைக் கண்டத்திலுள்ள பல்வேறு தேசிய இன மக்களின் – பல்வேறு சமய மக்களின் தனித்தன்மையை அழித்து, ஒற்றை மொழி – ஒற்றைப் பண்பாடு என ஆரியமயப்படுத்தும் திட்டத்தில் நடுவண் பா.ச.க. அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றது. அதன் ஒருபகுதியாக, இந்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் சார்பில், பசு, காளை, எருமை, ஒட்டகம் உள்ளிட்ட கால்நடைகளை இறைச்சிக்காக விற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பா.ச.க. அரசின் இத்தடையை தமிழ்த்தேசியப் பேரியக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.

ஒவ்வொருவரையும் பிறப்பு அடிப்படையில் மேல் கீழாக வைத்து, ஒவ்வொருவருக்கும் ஒரு நீதி வழங்கும் வர்ணாசிரம அதர்மக் கொள்கையைப் போல், விலங்குகளிடமும் பேதம் காட்டும் முயற்சியே பா.ச.க. அரசின் இத்தடைச் சட்டமாகும்.

வள்ளுவர் முதல் வள்ளலார் வரை தமிழர் ஆன்மீக மரபில் புலால் மறுப்போர்கூட இறைச்சி உண்ணத் தடை கோரியதில்லை. ஆனால், ஆரிய ஆன்மீகம் ஒற்றைத் தன்மையைத் திணிக்கும் ஆக்கிரமிப்புத்தன்மை கொண்டது.

மேலும், இந்தியத் துணைக் கண்டத்தில் பரந்து விரிந்து வாழும் கிராமப்புற வேளாண் மக்களின் பொருளியலை இத்தடைச்சட்டம் கடுமையாக பாதிக்கும். பெருமளவில் வேளாண் பணிகளுக்கு உழுகருவி இயந்திரங்கள் பயன்பட்டு வரும் நிலையில், காளைகள் இனப்பெருக்கத்திற்கும், இறைச்சிக்காகவும் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இறைச்சிக்காக காளைகளை விற்கக் கூடாது என இந்திய அரசு தடை விதிப்பதன் மூலம், இறைச்சிக்காகவும் விற்கமுடியாத சுமை பொருளாகக் காளைகளை மாற்றி, அதன் வழியே காளைக் கன்றுகளை ஈன்று தராத பன்னாட்டு நிறுவனப் இறக்குமதி பசுக்களையும், சினை ஊசிகளையும் ஊக்குவிக்கப்படுகின்றன. இன்னொருபுறத்தில், பன்னாட்டு நிறுவனங்கள் மாட்டிறைச்சியை இறக்குமதி செய்து, கொள்ளை இலாபம் ஈட்டவும் வழிதிறந்துவிடப் படுகின்றது.

இந்தப் பொருளியல் காரணங்கள் மட்டுமின்றி, கால்நடைகளை தங்கள் கடவுள்களுக்கு பலியிட்டு வணங்கும் தெய்வ வழிபாடுகளை நசுக்குதல், இசுலாமியர் மற்றும் ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களின் சமயச் சடங்குகளில் தலையிடுதல் என ஆரியமயப்படுத்தும் வேலைத்திட்டத்தையும் முன்னெடுக்கிறது இந்திய அரசு!

எனவே, பல்வேறு சமய மக்களுக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த வேளாண் மக்களுக்கும் எதிரான இச்சட்டத்தை இந்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டுமென தமிழ்த்தேசியப் பேரியக்கம் கோருகிறது.

தீர்மானம் : 2
--------------------
சீரமைக்கப்படும் புதிய பாடத்திட்டத்தில், மொழிப் போர் வரலாற்றை தமிழ்நாடு அரசு சேர்க்க வேண்டும்!

பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகளில் மதிப்பெண் முறையை இரத்து செய்தும், பதினோறாம் வகுப்புக்கு பொதுத்தேர்வு முறை அறிவித்தும் தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளதை தமிழ்த்தேசியப் பேரியக்கம் வரவேற்கிறது.

மதிப்பெண் தரவரிசை முறையை வைத்து கல்வி வணிகத்தில் ஈடுபட்டு வந்த தனியார் தன்னல ஆதிக்க ஆற்றல்களுக்கு, இம்மாற்றங்கள் அதிர்ச்சியளித்துள்ளன. இலட்சக்கணக்கான மாணவர்களுக்கு மன அழுத்தத்திலிருந்து விடுதலை அளித்துள்ள இந்த மாற்றங்களை இத்தன்னல ஆற்றல்கள் எதிர்ப்பதை சுட்டிக்காட்டி, அவற்றைக் கைவிட வேண்டுமென்று சில அரசியல் கட்சிகள் கோரிக்கைகள் முன்வைப்பதை தமிழ்த்தேசியப் பேரியக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. தமிழ்நாடு அரசு, இம்மாற்றங்களை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

தற்போது சீரமைக்கப்பட்டு வரும் புதிய பாடத்திட்டத்தில், 1938லும் 1965லும் நடைபெற்ற தமிழர்களின் வீரஞ்செறிந்த தமிழ்மொழிக் காப்பு இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டங்களையும், மறைக்கப்பட்ட தமிழறிஞர்களின் வரலாறுகளையும் சேர்க்க வேண்டும். தமிழ்நாட்டில் புதிதாக எழுந்து வரும் சூழலியல் பாதுகாப்புணர்வை அங்கீகரிக்கும் வகையில், சூழலியல் பாதுகாப்பு – சட்ட விழிப்புணர்வு ஆகியவற்றையும் பாடத்திட்டங்களில் சேர்க்க வேண்டுமென தமிழ்த்தேசியப் பேரியக்கம் கோரிக்கை முன்வைக்கிறது.

தீர்மானம் : 3
--------------------
நடிகர் இரசினிகாந்த் அரசியலுக்கு வந்தால் தமிழ் மக்கள் அவரைப் புறக்கணிக்க வேண்டும்!

திரைப்பட நடிகர் இரசினிகாந்த், தமிழ்நாட்டு அரசியலில் ஈடுபட்டு முதல்வராகப் போவதாகவும், அதற்காக அரசியல் கட்சி தொடங்கப் போவதாகவும் தமது இரசிகர்களிடம் பூடகமாகத் தெரிவித்துள்ளார். அதற்கேற்ப பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களின் கருத்துகளைக் கேட்டும், ஊடகவியலாளர் கருத்துகளைக் கேட்டும் வருகிறார்.

நடிகர் இரசினிகாந்த் மராட்டியத்தில் பிறந்து, கன்னட இனப்பற்றுடன் கர்நாடகாவில் வளர்ந்தவர். நாற்பது ஆண்டுகளாகவே தமிழ்நாட்டில் வாழ்வதாக அவரே கூறுகிறார். எனினும், தன்னை “பச்சைத்தமிழன்” என்று வேடம் புனைந்து கொண்டு, தமிழ்நாட்டு அரசியலில் தடம் பதிக்க முயல்கிறார்.

மராட்டியத்திலோ, கர்நாடகாவிலோ மண்ணின் மைந்தனாக இல்லாத ஒருவர், அ்மாநிலத்தின் முதல்வர் பதவியைக் கைப்பற்ற, இவ்வளவு பகட்டாக திட்டங்கள் தீட்ட முடியாது. அம்மாநில மக்கள் தங்கள் சொந்தத் தாயகத்தைக் காக்க விழிப்புணர்வோடு செயலாற்றுகிறார்கள். 

அம்மாநிலங்களில், அதிகபட்சமாக சட்டப்பேரவை உறுப்பினராகவோ, அல்லது நகரசபை உறுப்பினராகவோ வேண்டுமெனில் அயல் இனத்தார் – சிறுபான்மை மொழியின மக்களின் பிரதிநிதியாக ஒன்றிரண்டு இடங்களைப் பெற்றாலே அது பெரும் சாதனையாகும்.

காவிரி உரிமை, கச்சத்தீவு உரிமை உள்ளிட்ட தமிழர் உரிமைகள் எதற்கும் குரல் கொடுக்காத இரசினிகாந்த், ஒட்டு மொத்தத் தமிழினத்தின் பிரிதியாகத் தன்னைக் காட்டிக் கொண்டு, தமிழ்நாட்டு அரசியலில் ஈடுபட நினைப்பது, தமிழினத்தில் போதிய அரசியல் விழிப்புணர்வு இல்லையோ என்ற கவலையை ஏற்படுத்துகிறது. எனவே, நடிகர் இரசினிகாந்த் அரசியலில் ஈடுபட்டால், அவரை அரசியல் விழிப்புணர்வு பெற்ற தமிழ் மக்கள் முற்றிலுமாகப் புறக்கணிக்க வேண்டுமென, தமிழ்த்தேசியப் பேரியக்கம் கேட்டுக் கொள்கிறது.

இன்னணம்,
பெ. மணியரசன்
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

இடம் : சென்னை -78.

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhdesiyam.com

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT