உடனடிச்செய்திகள்

Friday, May 19, 2017

'சிங்களன் பங்காளி – தமிழன் பகையாளி' இந்தியாவின் இந்த உளவியல்தான் முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குக் காரணம்! பெ. மணியரசன்.

'சிங்களன் பங்காளி – தமிழன் பகையாளி' இந்தியாவின் இந்த உளவியல்தான் முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குக் காரணம்! தோழர் பெ. மணியரசன், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்.
எட்டாண்டுகள் கடந்து விட்டதாக எண்ணத்தில் பதிவில்லை. நேற்று நடந்தது போல் நெஞ்செங்கும் காயங்கள்! முள்ளிவாய்க்கால் – தமிழினம் முழுமைக்குமான ஈகத்திருத்தலம்; வீரச் செங்களம்! 

தமிழீழ விடுதலைப்போரில் – முள்ளிவாய்க்கால் மண்ணில், சிங்கள எதிரியின் கொத்துக் குண்டுகளுக்கும் சுடுகலன்களுக்கும் பலியான இலட்சக்கணக்கான தமிழீழத் தமிழ் மக்களுக்கும், விடுதலைப் புலி வீரர்களுக்கும் தளபதிகளுக்கும் எட்டாமாண்டு நினைவு நாளில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் வீரவணக்கம் தெரிவித்துக் கொள்கிறது! 

எட்டுக்கோடித் தமிழர்கள் தமிழ்நாட்டில் வாழ்ந்தும், ஈழத்தில் நடந்த தமிழின அழிப்புப் போரைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. போர் நிறுத்தம் வலியுறுத்தி, தழல் ஈகி முத்துக்குமார் தொடங்கி பதினெட்டுப் பேர் அடுத்தடுத்து தழல் ஈகம் செய்து உயிரை மாய்த்துக் கொண்ட போதும், சிங்கள அரசு நடத்திய தமிழின அழிப்புப் போரை நிறுத்த முடியவில்லை.

காரணம், இன அழிப்புப் போர் எதிர்ப்புப் போராட்டங்கள் தமிழ்நாட்டில் இன்னும் முழு வீச்சில் நடந்திருக்க வேண்டும்; இன அழிப்புப் போரில் பல்வேறு வடிவங்களில் பங்கு கொண்ட இந்திய அரசின் அலுவலகங்கள், நிறுவனங்கள் தமிழ்நாட்டில் செயல்படாதவாறு பல நாட்கள் தடுத்திருக்க வேண்டும். இது ஏன் இயலாமற் போயிற்று?

இந்திய ஆளும் வர்க்கக் கட்சிகளான காங்கிரசு, பா.ச.க. ஆகியவற்றுடன் தோழமை உறவு கொண்டு, இந்திய அரசுக்குக் கங்காணி வேலை பார்க்கும் கழகங்கள்தான், தமிழ்நாட்டில் பெரும்பான்மை மக்களின் பிரதிநிதிகள்! அவை ஒப்புக்குப் போர் நிறுத்தக் கோரிக்கை எழுப்பி, பாசாங்கு நடவடிக்கைகள் சில எடுத்தன! உண்மையான வேகத்தில், உணர்ச்சியில் வெகுமக்களை அக்கழகங்கள் போர் நிறுத்தக் களத்தில் இறக்கவில்லை!

தமிழின அழிப்புப் போரில், சிங்கள அரசுக்குத் துணையாகப் பெரும் பங்காற்றிய இந்திய அரசு, போரின் முடிவுக்குப் பின் சிங்கள இனவெறி அரசையும், ஆட்சியாளர்களையும், படைகளையும் பன்னாட்டு விசாரணை வளையத்திலிருந்து தப்பிக்க வைக்கப் பன்னாட்டு அரங்கில் தனது எல்லா வகை ஆற்றல்களையும் பயன்படுத்துகிறது. 

தனி ஈழம் அமைந்திடவோ அல்லது இனப்படுகொலைக் குற்றவாளிகளான சிங்கள அரசுத் தரப்பினரைத் தண்டிக்கவோ, ஒருக்காலும் இந்தியா ஒப்புக் கொள்ளாது என்ற உண்மையை தமிழ்நாட்டுத் தமிழர்களும், தமிழீழத் தமிழர்களும் உள்ளதை உள்ளபடி புரிந்து கொள்ள வேண்டும். 

முள்ளிவாய்க்கால் ஈகியர்க்கு வீரவணக்கம் செலுத்தும் நேரத்தில் உள்ளதை உள்ளபடி புரிந்து கொள்ளும் நேர்மையும், கூர்மையும் மிகமிக முக்கியம்! பாசாங்குகள், பகட்டுகள், நேர்மையற்ற பக்கச் சார்புகள், அறியாமை ஆகியவை கூடாது! 

இந்திய அரசு, தமிழ்நாட்டில் தமிழினத்தை நடத்தும் பகைப் போக்கின் நீட்சிதான், இறையாண்மையுள்ள தமிழீழம் அமையாமல் தடுக்கும் சூழ்ச்சி! 

காவிரி உரிமை, முல்லைப் பெரியாறு அணை உரிமை போன்றவற்றில் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளைச் செயல்படுத்த மறுக்கும் இந்திய ஆட்சியாளர்களின் அதே உளவியல்தான், ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் சிங்கள அரசுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட மனித உரிமைக் குற்ற விசாரணையைச் செயல்படவிடாமல் தடுக்கிறது. அவர்களுக்குச் சிங்களன் - பங்காளி! தமிழன் – பகையாளி! 

காவிரி உரிமை, கடலில் தமிழ்நாட்டு மீனவர்களுக்குள்ள மீன்பிடி உரிமை போன்றவற்றிற்கும் தமிழ் ஈழத் தமிழர்கள் குரல் கொடுக்க வேண்டும்!

தமிழ்நாட்டுத் தமிழர்களும் தமிழீழத் தமிழர்களும் தங்களின் பொது எதிரிகளுக்கு எதிராக ஒருங்கிணைந்து போராட வேண்டும் என்ற உணர்வை முள்ளிவாய்க்கால் ஈகியர் நாளில் மேலும் வீறு பெறச் செய்வோம்! 

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam 
ஊடகம்: www.kannotam.com  
இணையம்: www.tamizhdesiyam.com  

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT