உடனடிச்செய்திகள்

Wednesday, May 10, 2017

கல்பாக்கம் மருத்துவர் புகழேந்தி மருத்துவமனையை இடித்தவர்களைக் கைது செய்க! கி. வெங்கட்ராமன் அறிக்கை!

கல்பாக்கம் மருத்துவர் புகழேந்தி மருத்துவமனையை இடித்தவர்களைக் கைது செய்க! தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!
கல்பாக்கத்தில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக மிகமிகக் குறைந்த கட்டணத்தில் எளிய மக்களுக்கு மருத்துவ சேவை ஆற்றி வருவதோடு, கல்பாக்கம் – கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு, மருத்துவ உலகில் நடைபெறும் மோசடிகள் எதிர்ப்பு என மக்களுக்கான போராட்டக் களங்களிலும் முன் நிற்பவர் மருத்துவர் வீ. புகழேந்தி அவர்கள்.

கல்பாக்கம் – சதுரங்கப்பட்டிணத்தில் வாடகைக் கட்டடத்தில் இயங்கி வந்த அவரது மருத்துவமனை, தற்போது இடித்து நொறுக்கப்பட்டுள்ளது கடும் அதிர்ச்சியளிக்கிறது.

அரசுக்கு எதிரான மக்கள் போராட்டங்களில் தொடர்ந்து செயலாற்றி வரும் மருத்துவர் புகழேந்தி அவர்களை முடக்க நினைக்கும் அரசு நிர்வாகம், அவரது மருத்துவமனை இயங்கி வந்த வீட்டின் உரிமையாளருக்குத் தொடர் நெருக்கடிகள் அளித்து வந்தது. அதன் விளைவாக, அவ்வீட்டின் உரிமையாளர் மருத்துவர் புகழேந்தியை அவ்விடத்தைவிட்டு காலி செய்யக் கூறியிருக்கிறார். இதற்கு மறுப்புத் தெரிவித்து, நீதிமன்றத்தில் புகழேந்தி வழக்குத் தொடுத்து, அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், திடீரென்று மருத்துவர் புகழேந்தியின் மருத்துவமனை எவ்வித அனுமதியுமின்றி – முன் அறிவிப்புமின்றி வீட்டின் உரிமையாளரால் இடித்து நொறுக்கப்பட்டுள்ளது கடும் கண்டனத்திற்குரியது. அவரது மருத்துவமனை இடிக்கப்பட்டதை காவல்துறையில் முறையிட்டும்கூட, காவல்துறையினர் அவசரப் புகாராக அதைப் பதிவு செய்யவோ, உதவிக்கு வரவோ இல்லாமல் நின்றது, இந்த செயலுக்கு அரசும் துணை நின்றிருக்குமோ என்ற நமது ஐயத்தை வலுவாக்குகிறது.

எனவே, தமிழ்நாடு அரசு உடனடியாகத் தலையிட்டு மருத்துவர் புகழேந்தியின் மருத்துவமனையை அனுமதியின்றி இடித்த உரிமையாளர் மீது காவல்துறை மூலம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அச்சுறுத்தல் ஏதுமின்றி அவருடைய மருத்துவமனை வழக்கம்போல் இயங்கும் வகையில், அம்மருத்துவமனையை சீரமைத்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

இன்னணம்,
கி. வெங்கட்ராமன்,
பொதுச் செயலாளர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com 
இணையம்: WWW.tamizhdesiyam.com 

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT