ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத் தீர்ப்புப் பின்பற்றி - இந்தியாவிலும் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும்! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை!
ஐரோப்பிய ஒன்றிய தலைமை நீதிமன்றம் (European Court of Justice - ECJ) தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடையை நீக்கி இன்று(26.07.2017) தீர்ப்பு வழங்கியிருப்பது, உலகெங்கும் வாழும் தமிழர்களின் உள்ளங்களையெல்லாம் ஆறுதல்படுத்தும், சனநாயகத் தீர்ப்பாகும்.
ஏற்கெனவே 2014 – அக்டோபரில் (16.10.2014), ஐரோப்பிய ஒன்றியத்தின் லக்சம்பர்க் நீதிமன்றம் இத்தீர்ப்பினை வழங்கியபோதிலும், தமிழினத்திற்கு எதிரான பகை உணர்ச்சியும் பழிவாங்கும் வெறியும் கொண்ட இலங்கை அரசு, அத்தடையை நீக்க வலியுறுத்தி ஐரோப்பிய ஒன்றிய தலைமை நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. அந்த மேல் முறையீட்டு வழக்கில் இன்று புலிகள் மீதான தடை நீக்க ஆணையை உறுதி செய்து, தலைமை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
அத்தீர்ப்பில் நீதிமன்றம் சொன்ன காரணம், மிகவும் உண்மையான இயல்பான காரணமாகும். 2009க்குப் பிறகு, தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு செயல்படவில்லை. அந்த அமைப்பின் சார்பில் உலகில் எங்கேயும் வன்முறை நடக்கவில்லை. குறிப்பாக, ஐரோப்பிய ஒன்றியத்தில் வன்முறை நடக்கவில்லை. எனவே, அந்த அமைப்பின் மீதான தடை தேவையற்றது என்ற சாரத்திலேயே இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இத்தீர்ப்பின் சாரத்தை இந்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் விடுதலைப்புலிகள் அமைப்பு பற்றி கூறியுள்ள உண்மை, இந்தியாவுக்கும் பொருந்தும். 2009க்குப் பிறகு இலங்கையில், குறிப்பாக தமிழீழத்தில் விடுதலைப்புலிகளின் செயல்பாடு இல்லை. இந்தியாவிலும் விடுதலைப்புலிகளின் செயல்பாடுகள் இல்லை. ஆனால், ஈழத்தமிழர்களுடன் இன உறவு கொண்ட 9 கோடித் தமிழர்கள் இந்தியாவில் வாழ்கிறோம். இந்த 9 கோடி தமிழர்களின் உணர்வையும், இந்திய அரசு கணக்கிலெடுக்க வேண்டும். விடுதலைப்புலிகள் மீதான தடையை இந்திய அரசு உடனடியாக நீக்க வேண்டும்.
ஐரோப்பிய ஒன்றிய தலைமை நீதிமன்றத்தின் இத்தீர்ப்பை சான்றுகாட்டி, தமிழ்நாடு அரசு இந்திய அரசை உரியவாறு அணுகி விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க முழுமூச்சில் செயல்பட வேண்டுமென்று தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 7667077075, 9840848594
Post a Comment