உடனடிச்செய்திகள்

Tuesday, July 18, 2017

பா.ச.க.வின் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளர் வெங்கையா நாயுடு: குடியரசுத் தலைவர் அலுவலகம் பா.ச.க.வின் கட்சி அலுவலகமாக மாறும்! பெ. மணியரசன் எச்சரிக்கை!

பா.ச.க.வின் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளர் வெங்கையா நாயுடு: குடியரசுத் தலைவர் அலுவலகம் பா.ச.க.வின் கட்சி அலுவலகமாக மாறும்! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் எச்சரிக்கை!
குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கு பா.ச.க.வின் வேட்பாளராக நடுவண் அமைச்சர் வெங்கையா நாயுடு அவர்களை பா.ச.க. நிறுத்துகிறது. வெங்கையா நாயுடு பா.ச.க.வில் இருந்தாலும், கட்சிக்கு அப்பாற்பட்டு மக்களிடமோ பிற கட்சிகளிடமோ செல்வாக்கு பெற்ற நபர் அல்லர். அவர் தீவிரமான ஆர்.எஸ்.எஸ்.காரராகவும் நரேந்திர மோடியின் கோயபல்சாகவும் செயல்பட்டு வருகிறார்.

பா.ச.க. தலைவர்களில் ஒருவர், குடியரசுத் தலைவராகவோ குடியரசுத் துணைத் தலைவராகவோ வரக்கூடாது என்பது நமது நிலையன்று! பா.ச.க.வில் இருந்தாலும் மற்ற கட்சிகளும் மதிக்கத்தக்க பொதுத்தன்மை கூடுதலாக உள்ளவரையே இப்பதவிகளுக்கு நிறுத்துவதுதான் சிறந்த மரபாகவும் சனநாயகத்தன்மையுள்ளதாகவும் இருக்கும்.

குடியரசுத் தலைவர் பதவிக்கு பா.ச.க. நிறுத்தியுள்ள இராம்நாத் கோவிந்த் அவர்களை கட்டுப்படுத்தக்கூடியவராக, அவருக்கு வழி சொல்லக் கூடியவராக செயல்படுவதற்காகவே வெங்கையா நாயுடு அவர்களை குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கு நிறுத்துகிறார்கள்.

வருங்காலத்தில், குடியரசுத் தலைவர் மாளிகை, பா.ச.க.வின் கட்சி அலுவலகமாக செயல்படும் என்பதை விழிப்புள்ள தமிழர்கள் புரிந்து கொண்டு, அதற்கேற்ப தங்கள் வியூகங்களை வகுத்துக் கொள்ள வேண்டுமென்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com 
இணையம்: www.tamizhthesiyam.com

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT