உடனடிச்செய்திகள்

Tuesday, July 4, 2017

தமிழ்நாடு காவல்துறையா? ஓ.என்.ஜி.சி. அடியாள் படையா? கதிராமங்கலம் போராட்டம் குறித்த சுவரொட்டிகளைக் கிழித்த காவல்துறையினர்!

தமிழ்நாடு காவல்துறையா? ஓ.என்.ஜி.சி. அடியாள் படையா? கதிராமங்கலம் போராட்டம் குறித்த சுவரொட்டிகளைக் கிழித்த காவல்துறையினர்!
கதிராமங்கலத்தில் மக்கள் மீது காட்டுமிராண்டித்தனமாகத் தாக்குதல் நடத்திய காவல்துறையினரைக் கண்டித்தும், காவல்துறையினரால் பொய் வழக்குப் போட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த. செயராமன், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. விடுதலைச்சுடர், கதிராமங்கலம் பிரமுகர் திரு. தர்மராசன் உள்ளிட்ட 10 தோழர்களை விடுதலை செய்யக் கோரியும், நேற்று (03.07.2017) இரவு கும்பகோணம் வட்டத்தில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. 

“தமிழ்நாடு காவல்துறையா? ஓ.என்.ஜி.சி. அடியாள் படையா? கதிராமங்கலம் காப்புப் போராளிகள் பேரா. த. செயராமன், க. விடுதலைச்சுடர், கா. தருமராசன் உள்ளிட்ட பத்து பேரை விடுதலைச் செய்! பொய் வழக்கைக் கைவிடு!” – இதுதான் அச்சுவரொட்டியிலிருந்த வாசகங்கள்! 

நேற்றிரவு ஒட்டப்பட்ட அச்சுவரொட்டிகளை காவல்துறையினர் தேடித்தேடி கிழித்துள்ளனர். காவல்துறையினர்தான் அவற்றைக் கழித்தார்கள் என்று அதை நேரில் பார்த்த பொது மக்கள் பலரும் தெரிவித்துள்ளனர். 

சுவரொட்டிகள் மூலம் தங்கள் கருத்தை வெளியிடுவது அவ்வளவு பெரிய குற்றமா? சட்ட விரோதச் செயலா? ஓ.என்.ஜி.சி.யின் அடியாள் படையாக தமிழ்நாடு காவல்துறையினர் செயல்படலாமா என்று நாம் சுவரொட்டியில் எழுப்பிய கேள்விக்கு, “ஆம்.. அப்படித்தான் செயல்படுவோம்” என்று பதில் கூறியுள்ளது, தமிழ்நாடு காவல்துறை! 

மக்களைப் பாதுகாக்கும் பணியைக் கைவிட்டு விட்டு, ஊரை அழிக்கும் ஓ.என்.ஜி.சி.க்கு அடியாள் வேலை பார்ப்பது, தீ வைப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வரும் காவல்துறையினர், தற்போது சுவரொட்டி கிழிக்கும் பணியிலும் ஈடுபட்டு வருவது, “அடியாள் படை” என்ற நம் கூற்றை உறுதிப்படுத்துவதாகவே உள்ளது! 

நூற்றுக்கணக்கான சுவரொட்டிகளைக் கிழித்தார்கள் அல்லவா? சுவர்களிலிருந்து கிழித்தெறியப்பட்ட சுவரொட்டியை, இதோ இப்பொழுது சமூக வலைத்தளங்கள் வழியாகப் பகிர்கிறோம். தற்போது அவை, நம் ஒவ்வொருவர் கணினியின் வழியாகவும், கைப்பேசி வழியாகவும் ஆயிரம் ஆயிரமாய் பரவப் போகிறது? என்ன செய்துவிட முடியும் உங்களால்? 

காவல்துறையினரின் சனநாயக விரோத அடக்குமுறைகளை மீறித் திமிறி எழுவோம்! பொய் வழக்கில் சிறைபட்ட போராளிகளை விடுதலை செய் என்று திசை எங்கும் முழங்குவோம்! 

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com 
இணையம்: www.tamizhdesiyam.com, www.tamizhthesiyam.com

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT