உடனடிச்செய்திகள்

Sunday, January 14, 2018

புதிய எதிர்பார்ப்புகளோடு புத்தாண்டை வரவேற்கிறோம்! தோழர் பெ. மணியரசன் வாழ்த்து!

புதிய எதிர்பார்ப்புகளோடு புத்தாண்டை வரவேற்கிறோம்! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் வாழ்த்து!
பொங்கலாய், தமிழர் திருநாளாய், உழவர் பெருநாளாய், புத்தாண்டுப் பிறப்பாய் புதிது புதிதாய் வளர்ந்து வரும் தையே, “தமிழன்டா” மகுடத்துடன் கடந்த ஆண்டு தைப்புரட்சி ஆனாய் நீ! ஏறுதழுவும் உரிமை மீட்டாய்!
 
இன்முகத்தோடு, புதிய எதிர்பார்ப்புகளோடு உன்னை வரவேற்கிறோம்!
 
வையத்தின் மூத்த இனமாய் உள்ள எங்களின் இளமைக்குக் காரணம் - தமிழ்! “தமிழ் எங்கள் இளமைக்குப் பால்” என்றார் பாவேந்தர்.
 
தமிழர் திருநாள் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொள்ளும்போது, நம் இளையோர் ஒவ்வொருவரும் இன உரிமை அரசியல், சமூக சமத்துவம், உளவியல் அறம் மூன்றையும் முன்னெடுக்க உறுதி ஏற்க வேண்டும்.
சாதிவெறியர்களால் வீதிகள் எரிக்கப்பட்டால், சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டோர் கொலை செய்யப்பட்டால் உளவியல் அறம் கொண்ட ஒவ்வொரு தமிழனும், தமிழச்சியும் வெட்கப்பட வேண்டும். வேதனைப்பட வேண்டும். இந்த அநீதிகளைத் தடுக்க தங்களால் ஆனவற்றைச் செய்ய வேண்டும்!
 
தமிழின உரிமைகள் பறிக்கும் ஆரியத்துவாவின் இந்திய ஆட்சியாளரிடம் அடங்கிப் போவோர் - தமிழ்நாட்டுக் கங்காணி ஆட்சியாளரிடம் தலை சொறிந்துபிழைப்போர் - நம்மில் சாதியால் பலவீனப்பட்டுள்ள மக்களிடம் ஆதிக்கம் செய்வதும், அவர்களைக் கொலை செய்வதும் என்ன வீரம்? உட்சூழ்ச்சி புரியாமல் அந்த ஆதிக்கவாதிகள் காட்டும் சாதிக் கவர்ச்சியில் இளைஞர்கள் சாய்ந்துவிடக் கூடாது!
 
இந்தத் தன்னலக்காரர்கள் தமிழின வீரத்தை மழுங்கடித்து, சாதி அடாவடித்தனத்தைத் தூண்டி விடுகிறார்கள்; தமிழ்ப்பற்றை மறக்கச் செய்து சாதிப்பற்றைத் தூண்டி விடுகிறார்கள்.
 
தமிழ்நாட்டில் அரசியல் பதவி வேட்டையாடிகள் சாதியை - தங்களுக்கான வாக்கு வங்கியாக மாற்றிக் கொண்டுள்ளார்கள். இவர்கள் சாதி உணர்வை அல்லும் பகலும் புதுப்பித்துக் கொண்டே இருக்கிறார்கள்.
தமிழர்கள் அனைவரும் ஒரே இன மக்கள்! இது வரலாற்றுண்மை! யாதும் ஊரே யாவரும் கேளீர் (உறவினர்) என்றல்லவா நம் பாட்டன்மார், பாட்டிமார் கூறிச் சென்றுள்ளார்கள். இதுவல்லவா நம் முன்னோர் நமக்கு வழங்கிய மனிதநேய மந்திரம்!
 
மனிதப் பிறப்பை உயர்வு தாழ்வாய் மாற்றிச் சொன்னது ஆரியம்! வர்ண - சாதிச் சூத்திரம் சொன்னது பிராமணியம்! நம் முன்னோர் நமக்கு வழங்கிச் சென்றது ஓரினக் கொள்கை!
 
இந்துத்துவா முகமூடி மாட்டிக் கொண்டு வரும் ஆரியத்துவா - இசுலாமியர், கிறித்துவர் எல்லாம் அயலார் என்கிறது. நம்மைப் பொறுத்தவரை தமிழர்கள் இந்துவாக, இசுலாமியராக, கிறித்தவராக இருக்கிறார்கள்; அவர்கள் இனம் ஒன்றே!
 
நம் பொங்கல் விழா அனைவருக்கும் பொதுவான விழா! அறுவடைத் திருவிழா! பொங்கலிட்டுப் படைத்து உண்போர் உண்ணலாம்! படைக்காமலே - பொங்கலிட்டும் உண்ணலாம்! மாட்டுப் பொங்கல் ஏறு தழுவுதல் - காணும் பொங்கல்.. பொங்கல் விழாவில் விளையாட்டுப் போட்டிகள், பாட்டரங்குகள், பட்டிமன்றங்கள், இசை நிகழ்ச்சிகள், நாட்டிய அரங்குகள்.. எத்தனையெத்தனை அரங்கேறுகின்றன!
 
அப்பப்பா மக்கள் வெள்ளம் ஒன்று கலக்கும் எத்தனை வடிவங்கள்! இதுபோல் பன்முக விழா வேறேது?
அனைவர்க்கும் இனிய பொங்கல் - புத்தாண்டு வாழ்த்துகள்!
 
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
 
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT