உடனடிச்செய்திகள்

Tuesday, January 9, 2018

"நீதிபதி இந்திரா பானர்சி வாயிலிருந்து நல்ல சொற்களே வராதா?" தோழர் பெ. மணியரசன்

"நீதிபதி இந்திரா பானர்சி வாயிலிருந்து நல்ல சொற்களே வராதா?" தோழர் பெ. மணியரசன், தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் தொழிலாளர்கள் தங்களுக்கு 2016 செப்டம்பரிலிருந்து தர வேண்டிய ஊதிய உயர்வைத் தர வலியுறுத்தியும், தங்களது வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட பணப்பலன்களில் 7 ஆயிரம் கோடி வரைத் தமிழ்நாடு அரசு எடுத்துக் கொண்டு, தொழிலாளர்களுக்குத் தர மறுப்பதைத் தந்திட வலியுறுத்தியும், பணி ஓய்வு பெற்றோர்க்கு ஓய்வூதியம் மற்றும் வைப்பு நிதி போன்றவற்றை தர வலியுறுத்தியும் வேலை நிறுத்தம் செய்து போராடி வருகிறார்கள்.

இப்போராட்டம் தொடர்பான வழக்கில் – சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திரா பானர்சி – நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் அமர்வு 05.01.2018 அன்று “சம்பளம் போதவில்லை என்றால் வேறு வேலைக்கு செல்லுங்கள்” என்று கூறியதுடன், தொழிலாளிகள் வேலை நிறுத்தத்தை உடனடியாகத் திரும்பப் பெற்றுக் கொண்டு வேலைக்குப் போக வேண்டும். வேலைக்குத் திரும்பவில்லை எனில் வேலை நீக்கம் செய்வோம் என்று ஆணையிட்டது.

நேற்று (08.01.2018) இவ்வழக்கு மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வந்தபோது, இந்திரா – பானர்சி, “தமிழ்நாடு அரசினால் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய பணப்பலன்களைத் தர முடியவில்லை என்றால் போக்குவரத்தைத் தனியார் மயமாக்க வேண்டியதுதானே” என்று கூறினார்.

தலைமை நீதிபதி இந்திரா பானர்சி கூற்றின்படி, போக்குவரத்துத் துறை தனியார் மயமானால் 80 ஆயிரம் போக்குவரத்துத் தொழிலாளர் குடும்பங்கள் சந்தியில் நிற்க வேண்டியதுதான்! தனியாரின் கட்டணக் கொள்ளையால் தமிழ்நாட்டு மக்கள் அல்லாட வேண்டியது தான்!

இந்திரா பானர்சி வாயில் நல்ல சொற்களே வராதா?

மக்கள் வழக்கில் ஒரு பழமொழித் தொடர் ஒன்று இருக்கிறது : “நாக்கில் சனி!”.
 
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
 
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT