இதழியல் மற்றும் நாடகத்துறையில் தனித்தடம் பதித்தவர் ஞாநி! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் இரங்கல்!
இதழியல் துறை, கலை இலக்கியம், சனநாயக அரசியல் ஆகிய அனைத்திலும் தனித்தன்மையுடன் கருத்துகளையும் படைப்புகளையும் வழங்கி வந்த நம்முடைய அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய தோழர் ஞாநி அவர்கள், இன்று (15.01.2018) விடியற்காலை காலமாகிவிட்டார் என்ற செய்தி, பேரதிர்ச்சியைத் தருகிறது!
சிறுநீரக நோய் காரணமாக அவர் துன்பப்பட்டிருந்த நிலையிலும், படுக்கையில் வீழ்ந்து விடாமல் மன உறுதியினாலும், உணவு ஒழுங்கினாலும் இயங்கி வந்தார். இரண்டு மாதங்களுக்கு முன்பாக, சிதம்பரத்தில் தோழர் பா. பழநி அவர்கள் இல்ல விழாவில், தோழர் ஞாநி அவர்களைச் சந்தித்தேன். அவருடைய உடல் நிலைமை குறித்து சொன்னார்.
வீதி நாடகம் என்ற புதிய வடிவத்தில், சமகால தமிழ்க் கலையை ஒரு போக்காக வளர்த்தவர் ஞாநி. இந்தித் திணிப்பு - இந்துத்துவா அரசியல் ஆகியவற்றை ஒளிவுமறைவின்றி எதிர்த்து வந்தவர் தோழர் ஞாநி. எல்லா நிகழ்வுகளிலும் உடனுக்குடன் கருத்துக் கூறுவார். அவருடைய எல்லா கருத்துகளிலும் நமக்கு உடன்பாடிருக்கிறது என்று சொல்ல முடியாது. எனினும், பெரும்பாலான கருத்துகள் முற்போக்கானவையாகவே இருக்கும்!
வெளியூரில் நான் இருந்தமையால், தோழர் ஞாநி அவர்களின் இறுதி வணக்க நிகழ்வில் பங்கேற்க முடியவில்லை. சென்னை க.க. நகர் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த தோழர் ஞாநி அவர்களது உடலுக்கு, தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில், புலவர் இரத்தினவேலவன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. அருணபாரதி, பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல். ஆறுமுகம், சென்னை கிளைச் செயலாளர் தோழர் ஏந்தல் உள்ளிட்டோர் மலர் மாலை அணிவித்து வணக்கம் செலுத்தினர். இன்று (15.01.2018) மாலை, தோழர் ஞாநி அவர்களின் விருப்பப்படி, அவரது உடல் சென்னை அரசுப் பொது மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு கொடையாக வழங்கப்படுகிறது!
தனித்து நின்று அரசியல் சனநாயகத்திற்கும், வர்ண சாதி ஆதிக்கமற்ற சமத்துவ சமூகத்திற்கும் குரல் கொடுத்து, கலை இலக்கியப் படைப்புகளையும் வழங்கிப் பணியாற்றிய தோழர் ஞாநி அவர்கள் மறைவுக்கு, தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய சிறந்த ஆளுமைகளையம், பண்புகளையும் இளம் தலைமுறையினர் கற்று முன்னேறுவது ஒன்றே, ஞாநி அவர்களுக்கு செய்யக் கூடிய சிறந்த புகழ் வணக்கமாக அமையும்!
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com
Post a Comment