கதவணை கட்ட வலியுறுத்தி தாமிரபரணி உழவர்கள் ஆர்ப்பாட்டம்! தமிழக உழவர் முன்னணி முடிவு!
தமிழக உழவர் முன்னணியின் திருச்செந்தூர் - ஏரல் வட்ட பேரவைக் கூட்டம், இன்று (26.02.2019) காலை - தூத்துக்குடி மாவட்டம் - குரும்பூரில் நடைபெற்றது.
தமிழக உழவர் முன்னணி தமிழகத் துணைத் தலைவரும், தூத்துக்குடி மாவட்ட அமைப்பாளருமான தோழர் மு. தமிழ்மணி தலைமையேற்றார். தூத்துக்குடி மாவட்ட உழவர்கள் சந்தித்து வரும் சிக்கல்கள் குறித்து திரு. விஜய நாராயண பெருமாள் விளக்கவுரையாற்றினார்.
தமிழக உழவர் முன்னணி ஆலோசகர் தோழர் கி. வெங்கட்ராமன், தமிழக உழவர் முன்னணியின் கொள்கைகளையும், உழவர் போராட்டங்களின் அவசியத்தையும் விளக்கி நிறைவுரையாற்றினார்.
புதிதாக தமிழக உழவர் முன்னணியில் இணைந்த ஆண் - பெண் உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டையை தோழர் கி.வெ. வழங்கினார்.
கூட்டத்தில், கீழ்வரும் கோரிக்கைகளை வலியுறுத்தி, 2019 மார்ச் 16 அன்று மாலை குரும்பூரில் உழவர்களின் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது.
கோரிக்கைகள்
1. ஆழ்வார் திருநகரியில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே கதவணை கட்ட வேண்டும்.
2. வேளாண் விளை பொருட்களுக்கு இலாப விலை தீர்மானிக்கப்பட வேண்டும். முதல் கட்டமாக, எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரைப்படி நெல், பருத்தி, வாழை, கரும்பு உள்ளிட்ட வேளாண் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச கொள்முதல் விலை வழங்க வேண்டும்.
3. தொடர்ந்து வறட்சியாலும், பூச்சி – பறவைகள் தாக்குதலாலும் விளைச்சல் இழந்துள்ள தூத்துக்குடி மாவட்ட உழவர்களின் வேளாண் கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.
கூட்டத்தின் நிறைவில் திரு. தியாகராசன் நன்றி கூறினார்.
செய்தித் தொடர்பகம்,
தமிழக உழவர் முன்னணி
முகநூல் : தமிழக உழவர் முன்னணி
Post a Comment