இலங்கையில் இசுலாமியப் பயங்கரவாதம் மதச்சார்பின்மை போதாது! மத மறுசீரமைப்பு தேவை! தமிழ்த்தேசியப்பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன்.
இலங்கையில் கிறித்துவத் தேவாலயங்களிலும் பெரிய விடுதிகளிலும் கடந்த 21.04.2019 காலை பயங்கரவாதிகள் குண்டு போட்டுக் கொன்ற அப்பாவி மக்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்! அவர்களின் உறவுகளுக்கு நெஞ்சம் கனத்த ஆறுதல்கள்!
வெடிகுண்டு போட்டு பொது மக்களைக் கொல்லும் இந்த “வீரச்” செயலுக்கு இசுலாமிய அரசு (ஐ.எஸ்.) என்ற முசுலிம் அமைப்பு உரிமை கொண்டாடியுள்ளது. இதில் இலங்கையில் செயல்படும் முசுலிம் தீவிரவாத அமைப்பான “தேசிய தவ்ஹீத் சமாத்”தொடர்பு கொண்டுள்ளது என்று இலங்கை அரசு கூறுகிறது.
கிறித்துவத் தேவாலயங்களில் தமிழர்கள், சிங்களர்கள் ஆகிய இரு தரப்பினரும் கொல்லப்பட்டனர். பெரிய விடுதிகளில் உள்நாட்டவர், வெளிநாட்டவர் எனப்பலரும் கொல்லப்பட்டனர். இதுவரை வந்த கணக்குப்படி 353 பேர் கொல்லப்பட்டனர். ஐநூறு பேர் படுகாயமுற்று சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறோம்.
உலக நாடுகளும் இந்தியாவும் இலங்கையில் பயங்கரவாத தாக்குதல் நடக்கும் அபாயம் உள்ளது என்று முன் கூட்டியே எச்சரித்திருக்கின்றன. இந்த எச்சரிக்கையை தலைமை அமைச்சர் இரணில் விக்கிரமசிங்கேவுக்கும், அவர் தலைமையிலான அமைச்சரவைக்கும் குடியரசுத் தலைவர் சிறீசேனா நிர்வாகம் அனுப்பவில்லை.
கடந்த ஆண்டில் சிறீசேனாவுக்கும் இரணிலுக்கும் இடையே வெடித்த அதிகாரச் சண்டை தொடர்கிறது. அந்நாட்டின் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளால் தற்காலிகமாக சிறீசேனா - இரணில் நிர்வாகம் ஒட்ட வைக்கப்பட்டுள்ளது. சிறீசேனாவுக்கும் உலக நாடுகளின் எச்சரிக்கை உண்மையிலேயே தெரிந்ததா என்பதும் வினாக்குறிதான்!
பேரினவாத வெறி, வஞ்சகம், சூழ்ச்சி, வன்முறை முதலியவற்றில் விளைந்ததுதான் சிங்கள அரசியல்! இலங்கை சுதந்திரக் கட்சியானாலும், ஐக்கிய தேசியக் கட்சியானாலும், சனதா விமுக்தி பெரமுனாவானாலும் அவற்றின் பொதுப் பண்பாட்டுக் குணங்கள் இவை!
தமிழினத்தை ஒடுக்க - அதன் உரிமைகளைப் பறிக்க - தமிழீழ விடுதலைப்புலிகளைக் குருதி வெள்ளத்தில் மூழ்கடிக்க - தமிழர்களை இலட்சக்கணக்கில் இனப்படுகொலை செய்ய சிங்களக் கட்சிகள் ஒற்றுமையாய் இருக்கும். ஆனால் தங்களுக்குள் ஒருவர் காலை இன் னொருவர் வாரிவிட சதித்திட்டம் தீட்டிக் கொண்டே இருப்பார்கள்.
இந்தச் சதித்திட்டத்தினால்தான் இவ்வளவு பெரிய பயங்கரவாதச் செயல்கள் தங்கு தடையின்றி அரங்கேறி இருக்கின்றன. இராசபட்சே, இரணில், சிறீசேனா மூவருமே இந்தியாவின் செல்லப் பிள்ளைகள்!
பிரபாகரனின் போர் அறம்
இந்தப் பயங்கரவாதக் குண்டு வெடிப்பிற்குப் பின் தலைமை அமைச்சர் இரணில் சொன்னார் : ”உள்நாட்டுப் போர் நடந்த காலத்தில்கூட இதுபோன்ற பயங்கரவாதச் செயல்கள் நடந்ததில்லை!”.
ஏன் நடந்ததில்லை இரணில்? உங்களுடைய வீரதீரப் படையாட்களின் கண்காணிப்பாலா? உங்கள் அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாலா? இல்லை! தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் கடைபிடித்த தமிழர் போர் அறத்தினால் சிங்களப் பொது மக்கள் தாக்கப்படவில்லை!
விடுதலைப் புலிகளிடம் விமானப்படை இருந்தது. சிங்களப் போர்க் கப்பல்களையும், டாங்கிகளையும் தூள் தூளாக்கிய வெடிகுண்டுகள் இருந்தன. ஆனால், சிங்களப் பொது மக்களைத் தாக்கக் கூடாது என்பது விடுதலைப் புலிகள் கடைபிடித்த போர் விதி! தமிழ்ப் பொது மக்களை ஆயிரக்கணக்கில் சிங்களப்படை கொன்று குவித்த காலத்தில்கூட, விரக்தியின் விளிம்புக்குப் போகவில்லை பிரபாகரன்; சிங்கள நகரங்களில் வானூர்தி மூலம் குண்டுபோடச் சொல்லவில்லை. புலிப்படையை சிங்களப் பொதுமக்கள் மீது ஏவிவிடவில்லை!
எத்தனையோ தமிழ்ப் பெண்களை பாலியல் வன்முறை செய்தனர் சிங்களப் படையாட்கள்; சுட்டுக் கொல்லப்பட்ட தமிழச்சியின் பிணத்தைக் கூட வல்லுறவு கொண்டனர் சிங்களர். ஒரு சிங்களப் பெண்ணைக்கூட மானங்கெடுத்ததில்லை தமிழ்ப்புலி வீரன்!
அறத்தினால் வீழ்ந்தனர் விடுதலைப்புலிகள்! முதல் உலகப் போரில் செர்மனி பெல்ஜியத்தை ஆக்கிரமித்த போது பெல்ஜியத்திற்கு வாழ்த்துக்கூறி பாரதியார் எழுதிய கவிதையின் முதல் வரி “அறத்தினால் வீழ்ந்து விட்டாய்” என்பதாகும்! மறத்தினால் வெல்லவில்லை சிங்களர்; இந்தியா, அமெரிக்கா, இரசியா, சீனா போன்ற நாடுகளின் துணையினால் சூழ்ச்சியால் வென்றனர் சிங்களர்.
தமிழீழத் தேசியத் தலைவர் கடைபிடித்த போர் அறம் தவறன்று. சரியானது; அதுவே தமிழர் மரபு!
இசுலாம் மதத்தில் தன் திறனாய்வு
ஈஸ்டர் திருநாளில் தேவாலயங்களில் வழிபட்டுக் கொண்டிருந்த ஆண்கள், பெண்கள், சிறுவர்களையும், விடுதிகளில் காலைச் சிற்றுண்டி சாப்பிட்டுக் கொண்டிருந்த அப்பாவிகளையும் இசுலாத்தின் பெயரால் வெடிகுண்டு போட்டுக் கொல்வது என்ன அறம்? என்ன ஆன்மிகம்?
இசுலாம் மதத்தை வழிகாட்டும் நெறியாக ஏற்றுக் கொண்டவர்கள் - உலகம் முழுவதையும் ஒரே இசுலாமிய அரசின்கீழ் கொண்டு வருவோம் என்று சொல்பவர்கள், யாரையோ பழிவாங்கும் வெறியோடு, வேறு யாரையோ வெடிகுண்டு போட்டுக் கொல்வது என்ன ஆன்மிக நெறி?
தமிழ்நாட்டில் முசுலிம் அமைப்புகள் அனைத்தும் இலங்கையில் ஐ.எஸ். நடத்தியுள்ள கொலை வெறியாட்டத்தைக் கண்டித்துள்ளன. பாராட்டுகள்! அது மட்டும் போதாது!
இசுலாத்தில் மதம் சார்ந்த சீர்திருத்த எழுச்சி தேவைப்படுகிறது. இசுலாத்திற்குள் ஷியா - சன்னி பிரிவினர் நடத்திக் கொள்ளும் ஆயுதப்போரினால் எவ்வளவு முசுலிம்கள் அன்றாடம் கொல்லப்படுகிறார்கள்! இலட்சக் கணக்கான முசுலிம்கள் ஏதிலிகளாக அயல் நாடுகளுக்கு ஓடுகிறார்கள். இசுலாத்தில் உள்ள இறுக்கமான மதக்கட்டுப்பாடுகளைப் பயன்படுத்தி, இசுலாமிய நாடுகள் சிலவற்றில் இன்னும் மன்னராட்சிகள் தொடர்கின்றன. பல நாடுகளில் அரசுக் கவிழ்ப்பு நடத்தி சர்வாதிகாரிகள் ஆட்சி செய்கிறார்கள். அங்கே சனநாயகத்திற்காக மக்கள் போராடுகிறார்கள்.
இலங்கைக் குண்டு வெடிப்புகளை ஒட்டி இலங்கையைச் சேர்ந்த இசுலாமியப் பெண்கள் பாத்திமா மாஜிதா, சர்மிலா செய்யித் ஆகியோரின் விமர்சனங்களை “இந்து தமிழ் திசை” வெளியிட்டிருந்தது (25.04.2019). முசுலிம்களிடம் தன் திறனாய்வு தேவை என்கிறார்கள்.
“தாக்குதல் நடத்தியவர்கள் (உண்மையான) முசுலிம்கள் அல்ல; அவர்கள் பயங்கரவாதிகள்; அவர்களுக்கும் இசுலாத்துக்கும் சம்பந்தமில்லை என்று சப்பைக் கட்டு கட்டுவதை நிறுத்துங்கள். இப்போதுகூட நம்மை நாமே சுய பரிசோதனை செய்து கொள்ளாவிட்டால் எங்கேயோ போய் முட்டி மோதி விடுவோம்” என்கிறார் பாத்திமா மாஜிதா.
உலகத்தில் இருவகை மனிதர்கள்தான் இருக்கிறார்கள். ஒரு வகையினர் முசுலிம்கள்; மற்றவர்கள் அனைவரும் காபிர்கள் என்று கருதும் போக்கினை முசுலிம்கள் கைவிட வேண்டும் என்கிறார். “சகிப்புத்தன்மையற்ற வஹாபியிசத்தின் கொடூரங்கள் எல்லாவற்றையும் நாங்கள் பார்த்தும் பார்க்காமலும் இருந்த இந்த நோய் முற்றிதான் பயங்கரவாதமாக இன்று மாறி உயிர்களைப் பலிகொள்கிறது” என்கிறார் மாஜிதா. இவர் இலங்கைத் தமிழ் எழுத்தாளர், வழக்கறிஞர்.
இன்னொரு இலங்கைத் தமிழ் எழுத்தாளர் “உம்மத்” நாவலாசிரியர் சர்மிளா செய்யித் கூறுகிறார்:
“இலங்கை முசுலிம்கள் அனைவரும் தீவிரவாதத்திற்கு எதிராக அழத் தொடங்கியிருக்கி(றோம்)றார்கள். ஆனால், “தீவிரவாதிகளுக்கு மதமில்லை; அவர்கள் யாராக இருந்தாலும் கொல்லப்பட வேண்டும்” என்பதோடு இனியும் தப்பிக்க முற்பட்டுவிட முடியாது. இத்தகைய மதத் தீவிரவாதக் கருத்துகளுக்கு எதிராகக் கடந்த காலங்களில் எதிர்வினையாற்றி இருக்கிறோமா என்று நீங்கள் ஒவ்வொருவரும் உங்களைக் கேளுங்கள். மௌனமாக இருந்தவர்கள்கூடத் தீவிரவாதத்தை ஆதரித்தவர்கள் என்பேன்”.
மேற்கண்ட இருவரின் திறனாய்வுகள் இசுலாம் மதத்திற்கு மட்டுமல்ல எல்லா மதத் தீவிரவாதத்திற்கும் பொருந்தும். இந்து மதத் தீவிரவாதத்தை இந்து மதத்தின் உள்ளே எதிர்கொள்வதற்கும் பொருந்தும்.
தமிழ்நாட்டில் மதவாதம்
தமிழ்நாட்டில் இந்து மதவாதமும், அதற்கு எதிர்வினை என்ற பெயரில் முசுலிம் - கிறித்துவ மதவாதமும் வளர்ந்து வருகிறது. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ச.க - ஆர்.எஸ்.எஸ். ஆரியத்துவா அமைப்புகள் இந்து மதவாதத்தை முன்வைத்தன. எதிர்வினையாக பள்ளி வாசலில், கிறித்தவ தேவாலயங்களிலும் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது மதபீட அறிவிப்புகளாக வெளியிடப்பட்டன. தற்காப்பு நிலையில் இருந்துதான் சிறுபான்மை மதத்தவர் இவ்வாறு கூறுகிறார்கள் என்று இதனை ஞாயப்படுத்திவிட முடியாது. தனிமைப்படவே அது வழி செய்யும். ஆதிபராசக்தி பங்காரு அடிகளார் பா.ச.க. அணிக்கு வாக்களிக்க சொல்லி வெளிப்படையாக வேண்டுகோள் விட்டார்.
மதம், சாதி இரண்டையும் தேர்தல் கட்சிகள் பயன்படுத்திகொள்வது வழக்கம் தான். ஆனால் இவ்விரண்டும் இப்போது தீவிரமடைகின்றன.
ஐம்பது, அறுபது ஆண்டுகளுக்கு முன் முசுலிம் மக்கள் பெருவாரியாக காங்கிரசு, தி.மு.க. போன்ற கட்சிகளில் இருந்தார்கள். இப்பொழுது அது மிகவும் சுருங்கி விட்டது. முசுலிம்கள் முசுலிம்களுக்காக முசுலிம்களால் தலைமை தாங்கப்படும் கட்சிகளில்தான் இருக்க வேண்டும் என்ற பெரும் போக்கு வளர்ந்துள்ளது. அம்மத இறுக்கமும் கட்டுப்பாடுகளும் கூடுதலாகி உள்ளன. தமிழ்நாட்டு முசுலிம் சமூகத்திலும் ஐ.எஸ். ஆதரவாளர்கள் உருவாகிறார்கள். இஸ்லாமியத் தவ்ஹித் அமைப்பினர் இந்துக்களின் சிலைவணக்கத்தை எதிர்த்துப் பரப்புரை செய்வது வளர்ந்துள்ளது. இதற்கு எதிர்வினையாக இந்து தீவிரவாதி களும் உருவாகி வருகிறார்கள். இந்தச் சூழ்நிலைதான் ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதம் வளர வாய்ப்பளிக்கிறது.
இப்போதெல்லாம் முசுலிம் செயல்பாட்டாளர்களில் கணிசமானோர் தங்கள் மதம் இசுலாம்; தங்கள் இனம் தமிழர் என்று கருதவில்லை. அவர்கள் தங்கள் மதம் இசுலாம்; தங்கள் இனம் முசுலிம் என்று கருதுகிறார்கள். இவ்வாறான சூழ்நிலை ஐ.எஸ். பயங்கரவாதிகள் உருவாக வாய்ப்பளிக்கும். முசுலிம் அரசியல் தலைவர்களும் அறிஞர்களும் நமது மதம் இசுலாம்; நமது இனம் தமிழர் என்ற கருத்தை வளர்க்க வேண்டும்.
கிறித்துவத்தில் பெந்தகொஸ்தே பிரிவினர் மதம் மாற்றுவதைத் தங்களின் முதன்மை வேலைத் திட்டங்களில் ஒன்றாகக் கொண்டுள்ளனர். கிறித்துவமதக் கருத்துகளைக் கேட்டு, தாமாக மதம் மாறுவோர் மாறட்டும். ஆனால், அதையே ஒரு வேலையாகக் கொண்டு - “அற்புதங்களைக்” கூறி மதம் மாற்றுவது சரியன்று. அது தான் தமிழ்நாட்டில் இந்து தீவிரவாதத்தைப் பரப்ப வாய்ப்பளிக்கிறது.
இதேபோல், ஓசைப்படாமல் புத்தமதத்திற்கு மாற்றும் வேலைகள் இப்போது தமிழ்நாட்டில் பரவலாக - தீவிரமாக நடக்கின்றன. சிங்கள நாட்டின் தலையீடு இதில் இருக்கிறது. பௌத்தத்தின் பயங்கரவாத வன்முறைகளைத் தமிழர்கள் இலங்கையில் அனுபவித்துக் கொண்டுள்ளார்கள். மியான்மரில் ரோகிங்கியா முசுலிம்கள், பௌத்த பயங்கரவாதத்தால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளார்கள். இங்கும், தாமாக முன்வந்து புத்த மதத்தைத் தழுவுவதை நாங்கள் தவறென்று கூறவில்லை. திட்டமிட்டு மாற்றுவதைத்தான் சுட்டிக் காட்டுகிறோம்.
இந்துத் தீவிரவாதம்
சைவம், வைணவம் இரண்டும் மரபு வழிப்பட்ட தமிழர் நெறிகள். இவை இரண்டும் இப்போது இந்து மதத்தின் உட்பிரிவுகளாக உள்ளன. இந்து மதத்தை - வேத மதமாக - பிராமண மதமாக சித்தரித்துக் காட்டுவது பிராமண பீடங்களின் வேலை. ஆரியத் தலைமையை ஏற்றுக் கொண்ட இரண்டாம் தர மக்களாகத் தமிழர்களை மாற்றுவது; முசுலிம்களை - கிறித்தவர்களை இந்துக்களின் முதன்மை எதிரிகளாகக் காட்டுவது முதலியவை ஆரியத்துவா பரிவாரங்களின் அன்றாட வேலைத்திட்டம்!
ஆரியத்துவாவாதிகளால் இந்து மத வெறியூட்டப்பட்டவர்கள்தாம் பாபர் மசூதியை இடித்துத் தரை மட்டமாக்கினார்கள்; குசராத்தில் 2,000 அப்பாவி முசுலிம்களைப் படுகொலை செய்தார்கள். சமத்துவம் பேசிய எத்தனையோ அறிஞர்களை, செயல்பாட்டாளர்களைப் படுகொலை செய்தார்கள். தமிழ்நாட்டில் இந்துத் தீவிரவாதம் வளர்ந்து வருகிறது. அங்கங்கே வன்முறைகள் நடக்கின்றன.
எனவே, எந்த மதத் தீவிரவாதத்தையும் அந்தந்த மதங்களில் உள்ள மக்கள் ஏற்கக் கூடாது; அச்செயல் பாடுகளைக் கண்டனம் செய்ய வேண்டும்; எதிர்த்துப் போராட வேண்டும்!
இந்து, இசுலாம், கிறித்துவம், பௌத்தம் உள்ளிட்ட எல்லா மதங்களில் உள்ளோரும் தங்கள் மதத்தை மறு சீரமைப்பு செய்யும் கடமைகளை நிறைவேற்றினால், இந்த மதங்களின் பெயரால் தூண்டப்படும் வன்முறைகளுக்கு ஆள் சேராது.
மத மறுப்புப் பரப்புரையும், மத ஒழிப்புப் போராட்டமும் மதத்திற்குப் புத்துயிரூட்டவும், மதத்தீவிரவாதத்தை வளர்க்கவுமே பயன்பட்டிருக்கின்றன.
மதவெறி தலைதூக்கும் போதெல்லாம், மதச்சார் பின்மை (செக்குலரிசம்) பேசப்படுகிறது. இது போதாது! மதங்களோடுதான் மனித வாழ்வு பின்னிப்பிணைந்துள்ளது. மத மறு சீரமைப்பு மிகமிகத் தேவை!
(தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் 2019 மே மாத இதழ்)
கண்ணோட்டம் இணைய இதழ்
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: tamizhdesiyam.com
Post a Comment