உடனடிச்செய்திகள்

Wednesday, May 22, 2019

ஸ்டெர்லைட் போராட்ட தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்த அனுமதி மறுப்பது அநாகரிகம்! தோழர் பெ. மணியரசன் கண்டனம்!

ஸ்டெர்லைட் போராட்ட தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்த அனுமதி மறுப்பது அநாகரிகம்! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கண்டனம்!
உயிர்க்கொல்லி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, அவ்வாலையினால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி சுற்றுவட்டார மக்கள் கடந்த ஆண்டு (22.05.2018) பேரணியாகச் சென்றபோது, தமிழ்நாடு அரசின் காவல்துறை திட்டமிட்டு வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டது. முன்கூட்டியே தீர்மானித்தபடி துப்பாக்கிச் சூடு நடத்தி, 15 பேரைக் கொன்றது. நூற்றுக்கணக்கான பேர்களை படுகாயப்படுத்தியது. இந்தப் படுகொலை நடந்த மறுநாளே தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் நாங்கள் தூத்துக்குடி மருத்துவமனைக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் சொன்னோம். அத்துடன் உயிரிழந்தோர் இல்லத்திற்கும் சென்று ஆறுதல் கூறினோம்.

இன்று (22.05.2019), ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டியக்கம் சார்பில் முதலாமாண்டு இரங்கல் நிகழ்ச்சி நடத்துவதற்கு தூத்துக்குடியில் காவல்துறை அனுமதி மறுத்துவிட்டது. இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளைக்குச் சென்று கூட்டம் நடத்த அனுமதி பெற்றுள்ளனர். உயர் நீதிமன்றமும் 500 பேர் மட்டுமே கலந்து கொள்ளலாம் என வரம்பு விதித்துள்ளது.

முள்ளிவாய்க்காலில் சிங்கள இனவெறி அரசால் படுகொலை செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களுக்கு இரங்கல் தெரிவிக்க அனுமதி மறுத்த இராசபக்சேவின் ஈவிரக்கமற்ற கொடுங்கோன்மையைத்தான் தமிழ்நாடு அரசின் இச்செயல் நினைவூட்டுகிறது. தூத்துக்குடி இரங்கல் கூட்டத்தில் பங்கேற்கவிருந்த அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் சுப. உதயகுமார் அவர்களை நாகர்கோவிலிலுள்ள அவரது வீட்டுக்குச் சென்று காவல்துறையினர் கைது செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.

மனித உயிரிழப்புகளுக்கு துக்கம் கடைபிடிக்கக்கூட அனுமதி மறுக்கும் தமிழ்நாடு அரசின் மனிதநேயமற்றச் செயலையும், அநாகரிகத்தையும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

தங்கள் மக்களின் வாழ்வுரிமையைக் காக்க அறப்போராட்டம் நடத்தி உயிரீகம் செய்த வீரர்களுக்கும் – வீராங்கனைகளுக்கும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் வீரவணக்கம் செலுத்திக் கொள்கிறது!

#WeRememberTuticorinMassacre

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT