மத்திய அரசு நிறுவனங்களில் தமிழர்கள் புறக்கணிக்கப்படவில்லையா? பொன். இராதாகிருட்டிணன் நேருக்குநேர் விவாதிக்கத் தயாரா? தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் சவால்!
நடுவண் அரசின் இணை அமைச்சர் பொன். இராதாகிருட்டிணன் 07.05.2019 அன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசும் போது, “மத்திய அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்களில் அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு வேலை கொடுக்கப்படுகிறது. என்றும் தமிழ்நாட்டில் சிலர் வேண்டுமென்றே வட மாநிலத்தவர்களுக்கு மட்டும் கொடுக்கப்படுவதாக வதந்திகளைப் பரப்புகிறார்கள்” என்றும் குற்றம் சாட்டி உள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக வருமான வரித்துறை, வங்கிகள், அஞ்சல் துறை, ரெயில்வே துறை, பிஎச்இஎல், நெய்வேலி சுரங்கம் மற்றும் அனல் மின் நிலையம், ஆவடி, திருச்சி அரவங்காடு ஆகிய இடங்களில் உள்ள படைக்கலத் தொழிற்சாலைகள், பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலைகள், வானூர்தி நிலையங்கள், துறை முகங்கள் உள்ளிட்ட 18 துறை சார்ந்த நடுவண் அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களில் தமிழ்நாட்டு மாணவர்களைப் புறக்கணித்து வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களையே வேலைக்கு எடுத்துள்ளார்கள்.
தமிழ்நாட்டில் உள்ள இவ்வேலைகளுக்காக நடத்தப்பட்ட அனைத்திந்தியத் தேர்வுகளில் இந்தி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தில்லு முல்லு செய்துள்ளார்கள். ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதுவது, வினாவும் விடையும் முன்கூட்டியே “விற்பனை செய்வது” போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்ட இந்திக்காரர்கள் ஆவடி, திருச்சி படைக்கலத் தொழிற்சாலைகளில் வேலை பார்த்து கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் தமிழக அஞ்சல் துறைப் பணிகளுக்காக நடத்தப்பட்ட தேர்வில் தமிழ்ப்பாடத்தில், அரியானாவைச் சேர்ந்தவர்கள் மொத்த மதிப்பெண் 25க்கு 23 வாங்கிய அதிசயம் நடந்தது. தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்டோர் வழக்குப் போட்டனர் உயர்நீதிமன்ற ஆணையின் பேரில் விசாரித்த சி.பி.ஐ காவல் துறையினர் மோசடியாகத் தேர்வு எழுதிய அரியானாக்காரர்களைக் கைது செய்தார்கள். அந்தத் தேர்வுமுடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டன.
அண்மையில் தமிழ்நாட்டில் இரயில்வேத் துறையில் பழகுநர் பணிகளுக்கு நடந்த நேர்காணலிலும் அதன்பிறகு வேலைக்கு அமர்த்தப்பட்டோரிலும் 90 விழுக்காட்டிற்கு மேல் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். தமிழ்நாட்டு மாணவர்கள் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டனர்.
இந்தத் 90 விழுக்காட்டு வெளிமாநிலத்தவர்களில் பத்து இந்தி மாநிலங்களைச் சேர்ந்தவர்களே மிகவும் அதிகம்.
எனவே தமிழ்நாட்டில் செயல்படும் இந்திய அரசு அலுவலகங்களில் மற்றும் நிறுவனங்களில் தமிழர்களைப் புறக்கணித்து மிகுதியாக வட இந்தியர்களையே வேலைக்குச் சேர்க்கிறார்கள் என்றும், இச்செயல் தமிழர்களுக்கு எதிரான இன ஒதுக்கல் கொள்கை ஆகும் என்றும் நாங்கள் கூறும் குற்றச்சாட்டு வெறும் வதந்தி அல்ல; உண்மை நடப்பின் அடிப்படையில் கூறப்பட்டது.
இதுபற்றி நடுவண் அமைச்சர் பொன். இராதாகிருட்டிணனுடன் பொது மேடையில் நேருக்கு நேர் நான் விவாதிக்கத் தயார்? பொன்னார் அவர்களே நீங்கள் தயாரா?
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
Post a Comment