உடனடிச்செய்திகள்

Tuesday, May 7, 2019

“முதலில் இந்திக்காரர்கள் வெளியேறட்டும்!” குமுதம் ரிப்போர்ட்டர் வார ஏட்டில் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் அவர்கள் பேட்டி!

“முதலில் இந்திக்காரர்கள் வெளியேறட்டும்!” குமுதம் ரிப்போர்ட்டர் வார ஏட்டில் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் அவர்கள் பேட்டி!
“முதலில் இந்திக்காரர்கள் வெளியேறட்டும்!” என 10.05.2019 நாளிட்டு வெளிவந்துள்ள “குமுதம் ரிப்போர்ட்டர்” வார ஏட்டில் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் அவர்கள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவ்விதழில் வெளி வந்துள்ள பேட்டியின் முழு வடிவம் :

தமிழகத்தில் கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதாரத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமித்து வரும் வடமாநிலத்தவர்களுக்கு எதிராக தமிழ்த்தேசிய அமைப்புகள் களம் இறங்கி உள்ளன. திருச்சி பொன்மலையில் உள்ள இரயில்வே பணிமனையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கும் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசனிடம் பேசினோம்.

கேள்வி : தமிழகத்தில் இயங்கிவரும் இரயில்வே அலுவலகப் பணிகளுக்கு வடமாநிலத்தவர்கள் அதிக அளவில் தேர்வு செய்யப்படுவதாக சொல்லப்படுவது உண்மைதானா?

பெ.ம. : தமிழகத்தில் சாதாரணமாக நுழைந்த வடமாநிலத்தவர்கள் இன்று தமிழர்களுக்கான வேலை வாய்ப்புகளில் கைவைக்கத் தொடங்கி இருக்கிறார்கள். அதாவது இவர்கள் நேர்மையான வழியில் நுழைவதில்லை. இரயில்வே வாரியம் நடத்தும் தேர்வில் ஆளு மாறாட்டம் செய்து பணிக்குத் தேர்வாகிறார்கள். அதேநேரத்தில், அப்ரண்டீஸ்களுக்கு தேர்வு எதுவும் வைக்கப்படுவதில்லை. சான்றிதழ் சரி பார்த்தலுக்குப் பிறகு நடக்கும் நேர்முகத் தேர்வில், வடமாநிலத்தவர்கள் எளிதாக தேர்வு செய்யப்படுகிறார்கள். அண்மையில் சென்னை, திருச்சி, கோவையில் மட்டும் சுமார் 7 ஆயிரம் பேர் அப்ரண்டீஸ்களாக தேர்வு செய்யப்பட்டிருக்கிற 1725 பேரில் 1600 பேர் வடஇந்தியர்கள் தான்.

கேள்வி : இரயில்வே துறையில் மட்டும்தான் வட இந்தியர்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள்?

பெ.ம. : சென்னையில் இயங்கி வரும் வருமானவரித் துறை அலுவலகத்தில் 100 சதவிகித வட இந்தியர்கள் வேலை செய்து வருகிறார்கள். இதை எதிர்த்து அந்த அலுவலகத்திலேயே புத்தகம் வெளியிடப்பட்டிருக்கிறது. இப்போது வங்கிப் பணிகளிலும் வட மாநிலத்தவர்கள்தாக் அதிகம் தேர்வு செய்யப்படுகிறார்கள் இதைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம்.

கேள்வி : மத்திய அரசு நடத்தும் தேர்வுகளில் பங்கேற்று தகுதி அடிப்படையில் பணியிடங்களைக் கைப்பற்றுவது தவறா?

பெ.ம. : வட இந்தியர்கள் நியாயமான, நேர்மையான வழியில் நுழையாமல், குறுக்கு வழியைக் கடைப்பிடிப்பார்கள். வடமாநிலங்களில் கோச்சிங் சென்டர் என்ற பெயரில் தில்லுமுல்லு சென்டர்கள் இயங்கி வருகின்றன. அந்த சென்டர்களில் மத்திய அரசு பணிகளுக்கான எழுத்துத் தேர்வில் இடம்பெறும் கேள்விகளையும் விடைகளையும் முன்கூட்டியே கொடுத்து பயிற்சி வகுப்பு நடத்துகிறார்கள். இதுதவிர வட இந்தியர்கள் காப்பி அடிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். தேர்வில் ஆள் மாறாட்டத்தையும் கடைபிடிப்பார்கள்.

கேள்வி : நீங்கள் இப்படி சொல்வதற்கு ஏதுனும் ஆதாரம் இருக்கிறதா?

பெ.ம. : இரண்டு வருடங்களுக்கு முன்பு தமிழக அஞ்சல் இந்திய அளவிலான தேர்வு நடத்தப்பட்டது. இதில் தமிழை ஒரு பாடமாக்கி அதற்கு 25 மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்டிருந்தது. இதில் 23 மதிப்பெண்களை ஹரியானாவைச் சேர்ந்த ஒருவர் எடுத்தார். தமிழை தாய்மொழியாகக் கொண்டவரே அதிகபட்சமாக 18 மதிப்பெண்கள் எடுக்கும் நிலையில், பிற மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் எப்படி 23 மதிப்பெண் எடுக்க முடியும்? இது அம்பலமாகி சம்பந்தப்பட்ட அரியானா மாநிலத்தவரை விசாரித்தால் அவருக்கு தமிழ் பேசவும் எழுதவும் தெரியவில்லை. இந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இதை விட வேறு என்ன ஆதாரம் வேண்டும்?

அதே போன்று சமீபத்தில் தமிழக அஞ்சல் துறையில் காலியாக இருந்த 4,460 பணியிடங்களுக்கு விளம்பரம் செய்யப்பட்டு விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள் ஏப்ரல் 15 என நிர்ணயிக்கப்பட்டியிருந்தது. ஆனால், இதே விளம்பரம் வட இந்தியாவில் மார்ச் 15 ஆம் தேதியே வெளியிடப்பட்டது. ஆன்லைனில் தமிழர்கள் விண்ணப்பித்தபோது சர்வர் வேலை செய்யவில்லை. இதுவெல்லாம் தமிழர்களுக்கு முட்டுக்கட்டை போடும் செயல்தானே!

கேள்வி : திராவிடக் கட்சிகள் இந்த பிரச்சனையாகக் கண்டுகொள்வதில்லையா?

பெ.ம. : தமிழகத்தில், மத்திய அரசுப் பணிகளில் வட இந்தியர்கள் ஆதிக்கம் வட இந்தியர்கள் ஆதிக்கம் செலுத்துவது குறித்து இப்போது ஸ்டாலின் பேசி வருகிறார். தேர்தலுக்குப் பிறகு இதே விவகாரத்தில் அவர் ஆர்வம் காட்டுவாரா என்பது சந்தேகம் தான்.

கேள்வி : வட இந்தியர்களுக்கு தமிழகத்தில் மட்டும் எதிர்ப்பு கிளம்புவது ஏன்?

பெ.ம. : தமிழகத்தைத் தவிர பிற மாநிலங்களில் வட இந்தியர்கள் ஆக்கிரமிப்பு சட்டரீதியாகதடை விதிக்கப்பட்டியிருக்கிறது. குறிப்பாக, கர்நாடகத்தில் மண்ணின் மைந்தர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் 1986 ஆம் ஆண்டு ஒரு சட்டம் அமுல்படுத்தப்பட்டது. அதன்படி மத்திய, மாநில அரசு துறைகள், தனியார் துறை என மூன்றிலும் கன்னடர்களுக்குத்தான் 90 சதவிகித வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் எனச் சொல்லப்பட்டியிருக்கிறது. இதே போல் குசராத், மகாராசுடிரா, சத்தீசுகர், ஆகிய மாநிலஙகளிலும் சட்டம் இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் தான் மாநில அரசின் பணிகளிலும் வட இந்தியர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் சட்டத் திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது.

கேள்வி : உங்கள் போராட்டத்துக்கு தமிழகத்தில் வரவேற்பு இருக்கிறதா?

பெ.ம. : வேலை வாய்ப்புகள் பறிக்கப்படுவது குறித்து நாங்கள் சரியான முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறோம். அதனால் இளைஞர்கள் மட்டுமல்ல நாம் தமிழர், தமிழக வாழ்வுரிமை கட்சி உட்பட தமிழ்த்தேசிய அமைப்புகளைச் சேர்ந்த இளைஞர்கள் கூட்டம் கூட்டமாக நாங்கள் நடத்தும் போராட்டத்தில் பங்கேற்கிறார்கள். எதிர்காலத்தில் போராட்டங்கள் தீவிரம் அடையும்போது கண்டிப்பாக வட இந்தியர்களின் ஆக்கிரமிப்பு தடுக்கப்படும்.

கேள்வி : தமிழர்களிடம் சோம்பல் அதிகமாகிவிட்டதால், வேலை வாய்ப்புகளில் வட இந்தியர்கள் முந்துவதாக சொல்லப்படுவது உண்மையா?

பெ.ம. : அப்படிச் சொல்ல முடியாது நூறு நாள் வேலை வாய்ப்புத் திட்டம் இலவச அரிசி உட்பட பல இலவசங்கள் வழங்கப்படுவதால் சிலர் சோம்பலாகி இருக்கலாம் அது தவறுதான் இது தொடர்பாகவும் நாங்கள் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி வருகிறோம். இது வெறும் 10 சதவிகித அளவுதான் ஒட்டுமொத்த தமிழர்களும் சேர்ந்து இருக்கிறார்கள் என்று அர்த்தம் கொள்ளக்கூடாது. ஆனாலும் இதை ஒரு காரணமாக வைத்து வேலை வாய்ப்பில் வட இந்தியர்களுக்கு முன்னுரிமை வழங்குவது தவறு.

கேள்வி : டெல்லி பல்கலைக்கழங்கத்தில் தமிழர்களால் டெல்லிவாசிகள் பாதிக்கப்படுவதாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கூறி இருக்கிறாரே?

பெ.ம. : தமிழகத்தில் உள்ள இந்திக்கரார்களை முதலில் அவர் வெளியேறச் சொல்லட்டும் அதற்குப் பிறகு தமிழர்களை கெஜ்ரிவால் வைத்துக்கொள்வதும் வெளியேற்றுவதும் அவர் விருப்பம் தமிழகத்தை விட்டு இந்திக்காரர்கள் வெளியேறினால் காலியாகும் பணியிடங்களை டெல்லியில் இருந்து அனுப்பப்படும் தமிழர்களுக்கு உடனடியாக வழங்கிவிடலாம். இதனால் கெஜ்ரிவாலின் ஆதங்கத்தைத் தீர்க்க முடியும்".

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT