உடனடிச்செய்திகள்

Thursday, June 3, 2021

உழவர் முன்னணி பொதுச்செயலாளர் தூருவாசனைக் கொள்ளைநோய் கொண்டு சென்றுவிட்டது! - தோழர் கி. வெங்கட்ராமன் இரங்கல்!



உழவர் முன்னணி பொதுச்செயலாளர் தூருவாசனைக் கொள்ளைநோய் கொண்டு சென்றுவிட்டது!

தமிழ்த்தேசியப் பேரியக்கப்  பொதுச்செயலாளர்
 தோழர் கி. வெங்கட்ராமன் இரங்கல்!


துயரம், பெருந்துயரம்! தமிழக உழவர் முன்னணியின் பொதுச்செயலாளர் – தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் தூருவாசனை கொரோனா கொள்ளை நோய் கொண்டுபோய்விட்டது! 

கோவிட் – 19 பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட தோழர் தூருவாசன், முதலில் கிருஷ்ணகிரியில் ஒரு தனியார் மருத்துவமனையிலும், பின்னர் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சைப் பெற்றார். கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக, பெருந் தொற்றோடு போராடினார். கடைசியில் இன்று (03.06.2021) காலை அந்தக் கொள்ளை நோய் அவரை மாய்த்துவிட்டது! 

தோழர் தூருவாசனுக்கு அகவை 39. அவருக்கு வள்ளியம்மாள் என்ற மனைவியும், பிரவீன் – கீதா என்ற இரண்டு பிள்ளைகளும் இருக்கிறார்கள். 

கிருஷ்ணகிரி மாவட்டம் – இராயக்கோட்டை வட்டம் பிள்ளாரி அக்ரகாரம் என்ற சிற்றூரைச் சேர்ந்த தோழர் தூருவாசன், பழகுவதற்கு இனிமையான தோழர். அதேநேரம், அநீதிக்கு எதிராக வெகுண்டெழுந்து போராடும் போர்க்குணத்தை இயல்பிலேயே பெற்றவர். அழுத்தமான அமைப்பாளர். இவரைப்போல், பன்முக ஆற்றல் பெற்ற மக்கள் செயல்பாட்டாளர் கிடைப்பது அரிது! 

தமிழக உழவர் முன்னணியை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வலுவாக அமைத்து, தருமபுரி மாவட்டத்திலும் அதை விரிவாக்கியதில் முதன்மைப் பங்காற்றியவர் தோழர் தூருவாசன். அம்மாவட்டங்களில் முக்கியச் சிக்கலான கெயில் குழாய்ப் பதிப்பை எதிர்த்து, பெருந்திரள் உழவர்களைத் திரட்டி பலமுறை போராட்டங்களுக்குத் தலைமை தாங்கி நடத்தியவர். களத்திற்கு நேரடியாகச் சென்று எந்தக் கிராமத்தில் கெயில் குழாய் விளைநிலத்தில் பதிக்க முன்வந்தாலோ – முயன்றாலோ அதை அங்கேயே தடுத்து நிறுத்தி, வரும் அதிகாரிகளை முற்றுகையிட்டு உழவர்களின் நிலத்தைப் பாதுகாத்துத் தருவதில் முக்கியமான வழிகாட்டியாகத் திகழ்ந்தார். 

அவ்வாறான போராட்டக் களங்களில்கூட உயர் அதிகாரிகளிடம் வாதாடும்போது அமைதியான – ஆழமான ஞாயங்களை முன்வைத்து உழவர்களின் வாழ்வுரிமையின் அடிப்படைத் தேவையை அவர்களே உணருமாறுச் செய்தவர். 
பல நூறு ஏக்கர் நிலத்திற்குப் பாசன வசதியையும், பல கிராமங்களுக்குக் குடி தண்ணீர் தேவையையும் நிறைவு செய்யும் தென்பெண்ணைக் கிளைவாய்க்கால் திட்டத்தை வலியுறுத்தி கிராமம் கிராமமாக உழவர்களைத் திரட்டி, இடைவிடாத போராட்டங்களை தமிழக உழவர் முன்னணி நடத்தியது. அப்போராட்டங்கள் அனைத்திலும் முதன்மைத் தளபதியாக தூருவாசன் திகழ்ந்தார். அந்த உழவர் போராட்டத்தின் அழுத்தம் காரணமாக முந்தைய அண்ணா தி.மு.க. அரசு, வேறு வழியின்றி தென்பெண்ணைக் கிளைவாய்க்கால் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்து, அத்திட்டச் செயல்பாடுகள் தொடங்கிவிட்டன. 

கார்நாடக அரசின் மேக்கேத்தாட்டு அணைத் திட்டத்தை எதிர்த்து காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் 2015இல் தேன்கனிக்கோட்டையில் நடைபெற்ற பெருந்திரள் முற்றுகைப் போராட்டத்தில், களப்பணிகளை ஒருங்கிணைத்து நடத்தியதில் தூருவாசன் முகாமையானப் பணியாற்றினார். கிருஷ்ணகிரி மாவட்ட தமிழக உழவர் முன்னணி சார்பில் வந்திருந்த உழவர்கள் அனைவரையும் வரவேற்று உபசரித்ததில் ஓசூர் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்களோடு இணைந்து சிறப்பான பணியாற்றினார். 

தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தழுவிய போராட்டங்கள் அனைத்திலும் தோழர் தூருவாசனின் பங்களிப்பு சிறப்பானது! இராயக்கோட்டை பகுதியிலிருந்து கடும் பொருளியல் நெருக்கடிகளுக்கிடையில் உழவர்களையும், மக்களையும் திரட்டி, அவர்களிடத்திலேயே நிதியையும் திரட்டி பெரும் எண்ணிக்கையில் ஊர்திகளில் அழைத்து வந்து, அப்போராட்டங்களில் தனது பங்களிப்பைச் செய்ய தூருவாசன் தவறியதில்லை! 

“பிரவீன் கீதா” என்ற தனது முகநூல் பக்கத்தின் வழியாக, உழவர் சிக்கல்கள் குறித்து கருத்துத் தெரிவிப்பதிலும், தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் கொள்கைப் பரப்புரையை முன்னெடுத்துச் செல்வதிலும் சிறப்பான பங்காற்றினார் தோழர் தூருவாசன். 

இயற்கையில் சிறுசிறு மாறுபாடுகள் கூட மலர் சாகுபடி செய்பவர்களுக்கு மிகப்பெரிய சேதத்தை உண்டாக்கிவிடும். மலர் சாகுபடி உழவரான தோழர் தூருவாசன், இந்த சிக்கலான நிலைமையில் கூட தன்னலம் துறந்து மக்கள் பணியாற்றியது பெரிய – அரிய செயலாகும்! அவரது இறப்பு – தமிழ்த்தேசியப் பேரியக்கத்திற்கும், தமிழக உழவர் இயக்கத்திற்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்! 

மறைந்த தோழர் தூருவாசனுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பிலும், தமிழக உழவர் முன்னணி சார்பிலும் வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  

அவரை இழந்து வாடும் அவரது மனைவி வள்ளியம்மாள், குழந்தைகள் பிரவீன் மற்றும் கீதா உள்ளிட்ட அவர்தம் குடும்பத்தாருக்கு ஆறுதல் சொல்ல சொற்களே இல்லை! அவர்கள் குடும்பத்தாருக்கு நமது ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். 


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT