உடனடிச்செய்திகள்

Sunday, September 26, 2021

மோடி அரசுக்கு எதிராக நாளை நடைபெறும் அனைந்திந்திய முழு அடைப்பில் பங்கேற்போம்! ஐயா பெ. மணியரசன் அறிக்கை!



மோடி அரசுக்கு எதிராக நாளை நடைபெறும்  அனைந்திந்திய முழு அடைப்பில் பங்கேற்போம்!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் 
பெ. மணியரசன் அறிக்கை!


உழவர்களுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த மக்களுக்கும் பெரும் தீங்கிழைக்கும் வேளாண் சட்டங்களை இந்திய அரசு திரும்பப் பெற வேண்டுமெனக் கோரி, கடந்த 2020 ஆகத்து மாதம் தொடங்கி ஓராண்டைக் கடந்த நிலையிலும், புதுதில்லியில் பஞ்சாப் – அரியானா உழவர்கள் பெருந்திரளாக முற்றுகைப் போராட்டத்தை தற்போது வரை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். கடும் பனி – வெயில் – மழை எனப் பொருட்படுத்தாமல் தற்காலிகக் கூடாரங்களை அமைத்து, இரவு பகலாக அங்கேயே தங்கி உழவர்கள் நடத்திவரும் போராட்டத்தை உலகமே உற்று நோக்கி வருகின்றது. 

இந்நிலையில், மோடி அரசு புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும், உழவர்களுக்கான இலவச மின்சாரத்தை பறிக்கும் மின்சார திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும், 44 தொழிலாளர் நலச் சட்டங்களை 4 தொழிலாளர் சட்டத் தொகுப்பாக மாற்றித் தொழிலாளர் உரிமைப் பறிக்கும் சட்டங்களை இரத்து செய்ய வேண்டும், தனியார்மயம் – தாராளமயம் என்ற பெயரில் மக்களின் பொதுச் சொத்துகளை – இயற்கை வளங்களை பெருங்குழும நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கக் கூடாது, பெட்ரோல் டீசல் மற்றும் எரிவளி உருளை விலை ஏற்றத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, நாளை (27.09.2021) அனைத்திந்திய அளவில் முழு அடைப்புப் போராட்டத்தை நடத்த “அனைத்திந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு” அழைப்பு விடுத்துள்ளது. 

காங்கிரசு, தி.மு.க., கம்யூனிஸ்ட்டுக் கட்சிகள், ஆம் ஆத்மி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் இப்போராட்டத்தில் பங்கெடுக்கின்றன. தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப், ஆந்திரா போன்ற மாநில அரசுகளும் இப்போராட்டத்தை ஆதரிக்கின்றன.  

தமிழ்த்தேசியப் பேரியக்கம் தொடர்ந்து காவிரி உரிமை மீட்புக் குழுவில் இணைந்து வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடி வருகின்றது. அத்துடன் எதிர்க்கட்சிகளின் மேற்கண்ட கோரிக்கைகள் அனைத்தும் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் கோரிக்கைகளும் ஆகும். எனவே,  நாளை (27.09.2021) நடைபெறும் முழு அடைப்பில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் பங்கெடுக்கிறது! தமிழ்த்தேசியர்களும், தமிழின உணர்வாளர்களும் இதில் பங்கெடுக்க வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறது! 


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT