உடனடிச்செய்திகள்

Sunday, March 30, 2025

*இன வரையறுப்பில் லெனினுக்கு மாறாக* *இடதுசாரிகள் “இந்தியத் தேசியம்” ஏற்கலாமா?* பெ. மணியரசன்

 



*இன வரையறுப்பில் லெனினுக்கு மாறாக*
*இடதுசாரிகள் “இந்தியத் தேசியம்” ஏற்கலாமா?*

பெ. மணியரசன்


தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்
========================
இடதுசாரித் தோழர்களே,
உங்கள் கட்சிகள், உங்களின் இந்திய மற்றும் தமிழ்நாட்டுத் தலைவர்கள் - மார்க்சியத்தின் அடிப்படையில் இந்தியாவின் தனித்தன்மை என்று எதையாவது அல்லது எவற்றையாவது அடையாளம் காட்டியுள்ளார்களா?
இந்தியக் கம்யூனிஸ்ட்டுக் கட்சி (சிபிஐ), ‘இந்திய ஆளும் முதலாளி வர்க்கத்தில் தேசிய முதலாளிகள் பிரிவு உள்ளது. அது முற்போக்கானது; அதை ஆதரித்து ஊக்கப்படுத்த வேண்டும்‘ என்றது. அதற்காக ஆளும் காங்கிரசுக் கட்சியை - பின்னர் இந்திரா காங்கிரசை - ஆதரித்தது சி.பி.ஐ! சி.பி.எம் கட்சியோ, இந்திய ஆளும் வர்க்கம் பெருமுதலாளி வர்க்கம்! அதில் முற்போக்குக் கூறுகள் எதுவும் இல்லை.
இந்தப் பெருமுதலாளிய இந்திய அரசை வீழ்த்தி வெல்வதுதான் இந்தியப் புரட்சியின் சாரம் என்றது. இப்போது மேற்படி காங்கிரசுக் கட்சியின் வர்க்கத் தன்மை குறித்து சி.பி.எம் கட்சியிடம் மாற்றம் வந்துள்ளதா, இல்லையா என்பது தெரியவில்லை. ஆனால், காங்கிரசுடன் அக்கட்சி கூட்டணி வைத்துள்ளது.
மார்க்சிய - லெனினிய (நக்சல்பாரி) கம்யூனிஸ்ட்டுக் கட்சி இந்திய அரசை ஆளும் முதலாளி வர்க்கத்தினர் தேசிய முதலாளிகளும் அல்லர்; பெரு முதலாளிகளும் அல்லர்; அவர்கள் வெளிநாட்டு ஏகாதிபத்திய முதலாளிகளுக்கான தரகு முதலாளிகள் என்றனர்.
இந்த மூன்று பிரிவு கம்யூனிஸ்ட்டுக் கட்சிகளும் முதன்மையாகத் தீர்க்கப்பட வேண்டிய உண்மையான, இந்தியாவின் தனித்தன்மையாய் உள்ள சமூக முரண்பாடுகளைக் கண்டறியவில்லை; அவற்றை முதன்மைப்படுத்தவில்லை. இந்தியாவில் இரண்டு தனித்தன்மைகள் இருக்கின்றன. அவற்றின் ஊடாகத்தான் வர்க்கம் செயல்படுகிறது.
1. பல இனங்கள் 2. வர்ணசாதிப் பிரிவினைகள்.
வளர்ச்சியடைந்த வரலாறும், வளர்ச்சியடைந்த தாய்மொழியும், வரலாற்று வழியில் அமைந்த தாயகமும் கொண்டுள்ள பல இனங்கள் இந்தியாவில் இருக்கின்றன. இவை தனித்தனி தேசங்களாக - நாடுகளாகச் செயல்படத் தகுதி படைத்தவை! தமிழ்நாடு, வங்காளம், மகாராட்டிரம் போன்ற வளர்ச்சியடைந்த பல தேசங்களும் தமிழர், வங்காளி, மராட்டியர் போன்ற வளர்ந்த பல தேசிய இனங்களும் இந்தியாவில் இருக்கின்றன. இவை வரலாற்று வழியில், உலகின் மற்ற இனங்களைப்போல் தங்கள் தேசங்களை அமைத்துக் கொள்ள முடியாதவாறு தடுத்து, ஐரோப்பிய வணிக வேட்டை நவீனக் காட்டுமிராண்டிகள் புதிதாக ஒரு நாட்டை உருவாக்கி இந்த இனங்களை அதற்குள் அடைத்தனர்.
வெள்ளைக்காரர்களின் பீரங்கிகள், துப்பாக்கிகள், தூக்குக் கயிறுகள், சிறைச்சாலைகள்தாம் இந்தியாவை உருவாக்கின. “இந்தியா” என்று புதிய பெயரில் ஒரு நிர்வாகக் கட்டமைப்பை “நாடு” என்ற பெயரில் உருவாக்கியவர்கள் அந்த வணிக வேட்டையாடிகளே!
பிரித்தானியப் பீரங்கிகளின் வல்லுறவுக்குப் பிறந்ததே இந்தியா! இந்தியாவின் உண்மையான தந்தைமார் ஆங்கிலேயப் படைத்தளபதியான இராபர்ட் கிளைவும் முதல் கவர்னர் ஜெனரலான வாரன் ஹேஸ்டிங்கும்தான்!
ஐரோப்பிய ஆதிக்கவாதிகள் தங்கள் வணிக வேட்டைக்காக - பொருளியல் சுரண்டலுக்காக, செயற்கையாகப் புனைந்துகொண்ட ஒரு நிர்வாகக் கட்டமைப்புதான் இந்தியா! இதில் இயற்கையான பல தேசங்கள் இருக்கி்ன்றன. இந்த உண்மையைக் கம்யூனிஸ்ட்டுக் கட்சிகளும், கம்யூனிச சிந்தனையாளர்களும் வெளிப்படையாகப் பேசுவதில்லையே ஏன்? ஒற்றைத் தேசிய இனத்தாயகத்தில் நடைபெற வேண்டிய புரட்சி போலவே, இந்தியப் புரட்சிபற்றி பல்வேறு பிரிவு கம்யூனிஸ்ட்டுகளும் பேசுவது ஏன்? இனங்களின் இயற்கைக்கு முரணாக இந்தியாவை ஒரு “தேசம்” என்று சொல்லுவது தவறாயிற்றே என்று நினைத்தீர்களா தோழர்களே?
*இந்தியா ஒரு தேசமா ?*
====================
இந்திய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள் - ஒற்றை இந்தியவாதச் சிந்தனையாளர்களே! ஆனால் அவர்கள் கூட இந்தியாவைத் “தேசம்” என்று வர்ணிக்க அப்போது கூச்சப்பட்டார்கள். அதனால்தான் 1950 சனவரி 26-இல் செயலுக்கு வந்த இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முதல் உறுப்பில் (Article - 1) “இந்தியா அதாவது பாரதம் அரசுகளின் ஒன்றியம்” என்றார்கள். (India, that is, Bharat shall be a Union of States).
ஆனால் அதே இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையில், (Preamble) இந்தியாவை “தேசம்” (Nation) என்று போகிற போக்கில் வர்ணித்துக் கொண்டார்கள். இன்றும் மேற்படி 1-ஆம் உறுப்பி்ல் உள்ள “ஒன்றிய” என்ற வரையறையைத் “தேசம்” என்று மாற்றவில்லை. ஆனால், ஆரியத்துவா புராணங்களில் கூறப்படும் “பாரத்” என்ற பெயரை அப்போதே இந்தியாவுக்குச் சூட்டினர். இப்போது பெரும்பாலும் காங்கிரசு மற்றும் பா.ச.க. கட்சியினர் ஆரிய இந்திய ஏகாதிபத்திய அடையாளமாகப் “பாரத்” என்ற பெயரையே பயன்படுத்துகின்றனர். தமிழ்நாட்டில் உள்ள காங்கிரசு பா.ச.க. உள்ளிட்ட மற்றவர்களும், சூதறியாத் தமிழர்களும் இந்தியாவைப் “பாரத்” என்றே பயன்படுத்துகின்றனர்.
2001 வாக்கில் புதுதில்லி சென்றிருந்தபோது, அங்கு இந்திய கம்யூனிஸ்ட்டுக் கட்சி அலுவலகத்தில் இருந்த பெயர்ப்பலகையில் “பாரதீய கம்யூனிஸ்ட் பார்ட்டி என்று இந்தியில் எழுதப்பட்டிருந்ததைப் பார்த்தேன்.
*தமிழ்நாடா? தமிழ் மாநிலமா?*
==========. ================
தமிழ்நாட்டில் சி.பி.எம் கட்சி, தனது தமிழ்நாடு மாநிலக் குழுவை - தமிழ் மாநிலக் குழு என்றே அண்மைக்காலம் வரை அழைத்து வந்தது; எழுதிவந்தது. கட்சி அலுவலகப் பெயர்ப்பலகையிலும் முன்னர் அப்படியே எழுதிவந்தது. இப்போதுள்ள தமிழ்நாடு ஆளுநர் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்த இரவி தமிழ்நாடு என்பதை மாற்றி “தமிழகம்” என அழைக்க வேண்டும் என்று கூறினார் அல்லவா! அவரையும் விஞ்சக் கூடிய ஆரியத்துவா ஏக பாரதக் கண்ணோட்டத்தில் சி.பி.எம் கட்சி தமிழ்மாநிலம் என்றே நீண்டகாலமாக எழுதி வந்தது; பேசிவந்தது. எனவே, அவர்கட்குப் பாரதம் இனிக்கும்.
நடந்த உண்மைகளைச் சுட்டிக்காட்டினால், “சென்னை மாகாணத்தைத் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்ய நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தவர்கள் கம்யூனிஸ்ட்டுகள் என்பார்கள். அது சரி! ஆனால், பாரதியக் கம்யூனிஸ்ட்டுக் கட்சி என்பது ஆரியச் சார்பு இல்லையா? இந்திய அரசமைப்புச் சட்டம் இயற்றும் பணியில் அரசமைப்புப் பேரவை ஈடுபட்டிருந்தபோது, இந்து மகா சபையும், ஆர்.எஸ்எஸ் சும் இந்தியா என்று பெயர் சூட்டக் கூடாது, பாரத் என்றே பெயர் சூட்ட வேண்டும் என்று போராடினார்கள்! அதன்பிறகுதான் “இந்தியா அதாவது பாரதம்” என்று இரு பெயர் இந்திய நாட்டுக்கு வைக்கப்பட்டது. அந்த பாரதத்தை ஏன் கம்யூனிஸ்ட்டுகள் பயன்படுத்த வேண்டும்? தமிழ்மாநிலம் என்று தமிழ்நாட்டை அண்மைக்காலம் வரை சிபிஎம் அழைத்து வந்தது ஏன்?
*இந்தியன் என்ற இனம் உண்டா ?*
=================================
இடது சாரித் தோழர்களே! பல்தேசிய இன இந்தியாவை, ஒற்றை-இனத் தேசிய இந்தியாவாக காங்கிரசு, பா.ச.க. ஆரியத்துவாவாதிகள் மாற்றிக் கொண்டிருப்பதை உணர்கிறீர்களா? இந்த ஆரிய மயமாக்கலைத் தடுக்க உங்கள் கட்சிக்குள்ளாவது குரல் கொடுக்கிறீர்களா?
அடுத்து, இந்திய அரசமைப்புச் சட்டம் “இந்தியன்” என்று ஓர் இனம் இருப்பதாகக் கூறவில்லை. “இந்தியாவின் குடிமக்கள்” (Citizen of India) என்று மட்டுமே கூறுகிறது. அதைச் சட்டை செய்யாமல், இந்திய ஆட்சியாளர்கள் “இந்தியன்” என்பதை எல்லா வடிவங்களிலும், படிவங்களிலும் திணிக்கிறார்கள். கம்யூனிஸ்ட்டுக் கட்சிகள் இதை ஏன் எதிர்க்கவில்லை? தமிழர், தெலுங்கர், கன்னடர், மராத்தி, வங்காளி என்ற இயற்கையான தேசிய இனங்களைப் புறக்கணித்து, மறைத்து, இல்லாத “இந்தியனை” த் திணிக்கிறார்கள் இந்திய ஏகாதிபத்தியவாதிகள்! ஏகாதிபத்திய எதிர்ப்பும் லெனினியமும் பேசும் கம்யூனிஸ்ட்டுகள் “இந்தியன்” ஆக்கிரமிப்பை எதிர்க்கவில்லையே ஏன்? படிவங்களில் “இந்தியக் குடி” என்று போட்டால் போதும் என்று ஏன் கூறவில்லை?
இப்போது “இந்தியன்” என்ற சொல்லும் அக்ரகாரத்தில் நாறிப்போன சொல்லாகிவிட்டதாம்! “பாரத்தீயன்” என்றுதான் சொல்ல வேண்டும் என்று ஆரியத்துவாவாதிகள் கூறுகிறார்கள்!
தமிழன் என்று சொன்னால் பிரிவினைவாதி என்கிறார்கள்!
இதெல்லாம் மார்க்சிய - லெனினியத்திற்கு சரியா தோழர்களே?
இந்தியா ஒரு தேசமல்ல, இந்தியன் என்று ஒரு தேசிய இனமில்லை என்ற சமூக அறிவியல் உண்மையை மார்க்சிய-லெனினிய வெளிச்சத்தில் நீங்கள் எல்லாம் சொல்லக்கூடாதா தோழர்களே?
*தேசிய இன சிக்கலுக்கு
*தீர்வு கண்டார் லெனின்!*
====================
இரசியாவில் நடந்து வெற்றிபெற்ற கம்யூனிஸ்ட்டுப் புரட்சிக்கு தத்துவத் தலைவராக - களத்தலைவராக விளங்கியவர் வி.ஐ. லெனின். இரசியாவை ஆண்ட ஜார் மன்னர்கள் ஆக்கிரமிப்புப் போர் நடத்தி அண்டை அயல் நாடுகளை - வெவ்வேறு தேசிய இனங்களை, இரசியாவுடன் இணைத்து வைத்திருந்தார்கள்.
இரசியப் புரட்சி வெற்றிபெற்று, ஜார் மன்னரைப் பதவி நீக்கம் செய்தபின், “தேசிய இனங்களின் கூட்டரசாக இரசியாவை மாற்றி அமைப்போம். ஒவ்வொரு மொழி - இன மண்டலமும் அந்தந்த மொழி - இனத் தேசமாக ஏற்கப்படும். அப்படிப்பட்ட தேசங்களின் கூட்டரசு அமைப்போம். ஒட்டு மொத்த நாட்டிற்கும் இப்போதுள்ள இரசியா என்ற பெயர் இரசியக் குடியரசின் பெயராக மட்டும் இருக்கும். ஒட்டு மொத்த நாட்டிற்கும் - எந்த இன - மொழி அடையாளமும் இன்றி, சோவியத் சோஷலிசக் குடியரசுகளின் ஒன்றியம் (Union of Soviet Socialist Republics - USSR) என்று பெயர் மாற்றுவோம் இவ்வாறு இணைந்துள்ள குடியரசுகளில் ஒன்று பிரிந்து தனிநாடு அமைத்துக்கொள்ள அந்த இன நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேறிறினால், பிரிந்துபோக அனுமதி உண்டு” என்று லெனினும் இரசியக் கம்யூனிஸ்ட்டுக் கட்சித் தலைவர்களும் உறுதி கொடுத்தனர்.
சோவியத் ஒன்றியத்தில் இணைந்துள்ள தேசிய இனங்கள் பிரிந்துபோக விரும்பினால் பிரிந்து போகும் உரிமை உண்டு என்று அரசமைப்புச் சட்டத்தில் எழுதினார்கள். பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமை (Right to Self Determination with the right to secede) என்ற தேசிய இனங்களுக்கான அடிப்படை உரிமையை சோவியத் ஒன்றிய அரசமைப்புச் சட்டத்தில் சேர்த்தார்கள். அஜர்பைஜான், பைலோ ரஷ்யா, உக்ரைன், எஸ்தோனியா, லாட்வியா என 15 தேசிய இனங்களின் கூட்டமைப்புதான் சோவியத் ஒன்றியம்.
*உங்களுக்கு வழிகாட்டி லெனினா? நேருவா?*
==============
அந்த சோவியத் ஒன்றியத்திற்கு ஒற்றை ஆட்சி மொழி - அலுவல்மொழி இல்லை! பதினைந்து தேசிய இனங்களின் தாய்மொழிகளும் ஆட்சி மொழிகளே! சுப்ரீம் சோவியத் நாடாளுமன்றத்தில் இந்த 15 மொழிகளிலும் பேசலாம். இத்தனைக்கும் இரசிய மொழி பேசுவோர் சோவியத் நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 44 விழுக்காட்டினர்! ஆனாலும் அது இணைப்பு மொழியாகவோ, ஒற்றை ஆட்சி மொழியாகவோ ஆகக் கூடாது என்று இனச் சமநிலை காத்தார் இரசிய இனத்தில் பிறந்த லெனின்! ஆனால் இங்கு, இந்திய தேசிய காங்கிரசில் அப்படி ஒரு சமநிலை - சனநாயகத் தலைவர் இல்லை. இந்திய தேசியக் காங்கிரசு அனைத்திந்திய அளவில் பரவி வளர்ந்த தொடக்க காலத்திலேயே அதன் தலைமையை ஆரிய பிராமண- ஆரிய வைசிய - இந்தி ஏகாதிபத்தியவாதிகள் கைப்பற்றிக் கொண்டனர்.
காங்கிரசில் லெனின் இல்லையே என்று நான் கவலைப்படவில்லை. இந்திய கம்யூனிஸ்ட்டுக் கட்சியில், சி.பி.எம், எம்.எல் கட்சிகளில் லெனின் இல்லையே என்ற வருத்தம் இருக்கிறது. லெனின் அளவுக்கு கம்யூனிசக் கருத்தியல் வளர்ச்சி கொண்ட அறிஞர் இந்தியக் கம்யூனிஸ்ட்டு கட்சிகளில் உருவாகாவிட்டாலும், பல்தேசிய இன இந்தியாவில் லெனினது கூட்டரசுக் கொள்கையை - மொழிக் கொள்கையை - இனத் தன்னுரிமைக் கொள்கையை முன்வைக்கக் கூடிய ஒரு தலைவர் கூட உருவாகவில்லையே!
“அனைத்திந்தியம்” பேசும் கம்யூனிஸ்ட்டுக் கட்சிகளின் தலைவர்கள், காங்கிரசு, பா.ச.க. கட்சிகளின் தலைவர்களுடன் இந்திய தேசிய - பாரத தேசிய ஒருமை வாதத்தில் போட்டி போடுகின்றனர். “நாங்கள்தான் உண்மையான இந்தியத் தேசியவாதி” என்கின்றனர். சாரத்தில் இது ஆரிய - பிராமண பாரத தேசியவாதம்தானே!
மொழி - இன – தாயகங்களுக்கு, பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமை லெனின் வழங்கியதால்தான் சோவியத் ஒன்றியம் 15 நாடுகளாகப் பிரிந்து போய்விட்டது என்று தோழர்கள் கூறக்கூடும். சோவியத் ஒன்றியம் 1917 முதல் 1991 வரை, 72 ஆண்டுகள் நீடித்ததற்குக் காரணமே லெனின் ”மாநிலங்களுக்கு” வழங்கிய தன்னுரிமையே!
“இரசிய இனத்திற்கு எப்போதுமே “மகாருஷயர்” என்ற இன ஆணவம் உண்டு. அது கூடாது” என்றார் “மகா ருஷிய” இனத்தில் பிறந்த லெனின். ஆனால் ஜார்ஜிய இனத்தில் பிறந்த ஸ்டாலின் தமது ஆட்சியில், இரசிய மொழி மேலாதிக்கம், இரசிய இனப் பெருமிதங்களை வளர்த்து தன்னை மகா ருஷியராகவே காட்டிக் கொண்டார். அவருக்குப் பிறகு வந்த குருசேவ், பிரஷ்னேவ் ஆட்சிக் காலங்களில், இரசிய இன - மொழி ஆதிக்கம் மேலோங்கியது. ஜார்ஜிய குடியரசின் கம்யூனிஸ்ட்டுக் கட்சிச் செயலாளராக (மாநிலச் செயலாளராக) - இரசிய குடியரசைச் சேர்ந்த ரசிய மொழிக்காரரை அமர்த்தினார்கள். இப்படி எத்தனையோ வடிவங்களில் இரசிய ஆதிக்கம்! கோர்பச்சேவ் ஆட்சிக் காலத்தில் தங்குதடையற்ற கருத்துரிமை வழங்கப்பட்டபோது, அடக்குமுறைக்கு அஞ்சி அடக்கிவைத்திருந்த விடுதலை உணர்ச்சி எல்லாக் குடியரசுகளிலும் வெடித்தது; 15 நாடுகளும் பிரிந்தன. அது தவறல்லவே!
இந்தியாவையும் பாக்கித்தானையும் எடுத்துக் கொள்ளுங்கள். இவ்விரு நாட்டிலும் பல்வேறு தேசிய இனங்கள் ஆயுதந்தாங்கிய விடுதலைப்போர் நடத்திக் கொண்டுள்ளன. இந்த ஆயுதப் போராளிகளை ஒடுக்கவே இவ்விரு நாடுகளின் இராணுவமும் முதன்மை கொடுக்க வேண்டியதுள்ளது.
பாக்கித்தானிலிருந்து பிரிந்து 1971-இல் போர்க்களத்தில் கிழக்குப் பாக்கித்தான் உருவானது; வங்காள தேசம் ஆனது!
இவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டுமானால், இந்தியாவில் தேசிய இனங்களுக்குத் தன்னுரிமை வழங்க வேண்டும் தோழர்களே!
1946-வாக்கில் காந்தியடிகளை நேர்காணல் எடுத்த வெளிநாட்டுச் செய்தியாளர் “பல நாடுகளாக இருக்க வேண்டிய பல மொழி – இனங்களை, விடுதலை பெற்ற இந்தியாவில் சனநாயக வழியில் எப்படி ஒற்றுமையாக வைத்திருக்க முடியும் என்று கேட்டார். அதற்கு விடையளித்த காந்தியடிகள், “இவையெல்லாம் தனிநாடுகளாக இருந்தால் என்னென்ன உரிமைகளை அனுபவிக்குமோ அவ்வளவு உரிமைகளையும் இந்தியாவுக்குள் அனுபவிக்க உரிமை வழங்கப்படும். ஆனால், பிரிந்து மட்டும் போகக் கூடாது என்ற நிபந்தனை இருக்கும்” என்றார்.
இவற்றை யெல்லாம் எண்ணிப்பாருங்கள் தோழர்களே!
*"ஆர்.எஸ்.எஸ்" பா.ச.க பாசிசத்தின் இனம் எது ?*
==========================
இடதுசாரித் தோழர்களே, எனது இந்த வினாவிற்கு அல்லது ஐயத்திற்கு விடை சொல்லுங்கள்! ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாசக வை பாசிச அமைப்பு - நவபாசிச அமைப்பு என்று வரையறை செய்துள்ளீர்கள். இதில் எனக்கு மறுப்பில்லை.
பாசிசம் என்பது எப்போதும் குருதி உறவுள்ள ஓர் இனத்தின் அடித்தளத்தில் நின்று கொண்டு மற்ற அண்டை அயல் இனங்களை ஆதிக்கம் செய்யும்! இட்லர் செர்மானிய ஆரிய இன வெறியை வெளிப்படையாகப் பேசினார். ஆரிய இனம் உலகை ஆளப்பிறந்த இனம் என்றார். ஆரிய இனம் என்பது உண்டா என்ற ஆராய்ச்சியில் இறங்க வேண்டாம். அவர்கள் குருதிவழிப்பட்ட ஒரு தனி இனத்தை அப்பெயரால் அழைத்துக் கொள்கிறார்கள். மற்ற இனங்கள் அடிமைப்படுத்தப்பட வேண்டிய அயல் இனங்கள் என்று கருதுகின்றார்கள். அதுதான் இங்கு தர்க்கத்தின் சாரம்.
அதேபோல் இத்தாலியின் முசோலினி “ஸ்பாகியோ விட்டேல் (வாழும் இடம்)” என்ற தலைப்பில் இத்தாலி இன வாதத்தை முன்வைத்து “இத்தாலி பாசிசம்” என்ற பெயரிலேயே கொள்கைப் பிரகடனம் செய்தார். “யூகோஸ்லாவியாவின் காட்டுமிராண்டித் தனமான, தாழ்ந்த மக்களைக் கீழ்ப்படுத்தி ஆதிக்கம் செய்வதற்கு, வளர்ச்சியும் வலிமையும் கொண்ட இத்தாலி இனத்திற்கு உரிமை உண்டு. இது “இயற்கைச் சட்டம்” என்றார் முசோலினி!
ஆர்.எஸ்.எஸ்., பா.ச.க. அமைப்புகளின் பாசிசத்தின் ,"இன அரசியல்" என்ன என்று இதுவரை இடதுசாரிக் கட்சிகள் வெளிப்படையாகச் சொல்லாதது ஏன்?
“ஆரிய இனம்” என்ற மரபினம் வரலாற்றில் உண்டா, சமூக அறிவியல் வழிப்பட்ட இன இயல் ஆய்வுப்படி உண்டா என்று சிலர் எதிர்க்கேள்வி கேட்கக் கூடும். கைபர், போலன் கணவாய் வழியாக சிந்து சமவெளிக்குள் புகுந்தவர்கள் தங்களை ஆரியர்கள் என்று சொல்லிக் கொண்டார்கள். எந்த அடிப்படையில் சொல்லிக் கொண்டார்கள் என்ற ஆராய்ச்சி நமக்கு முக்கியமில்லை. அவர்கள் தங்களை உயர் இனம் என்றும் மற்றவர்களை இழிவுபடுத்தியும் செயல்பட்டனர். இன்றும் அந்த மனநிலையிலேயே 100 க்கு 90 விழுக்காடு பிராமணர்கள் வாழ்கிறார்கள்.
அந்த ஆரியர்களின் புனித மொழி சமற்கிருதம்! அந்த விளங்காத மொழியோ யாருக்கும் தாய்மொழியாய் இல்லை. புலம் பெயர்ந்த இந்தியாவில் ஆரியர்களின் தாயகமாக - தலைமையக இருப்பது வட இந்தியாவே; கங்கை, யமுனை பகுதிகளே! அவர்கள் உருவாக்கியதே வர்ணாசிரமப் பிரிவினைகள்் அதன்வழி உயர்வு தாழ்வுகள்; தீண்டாமை முதலியவை!
அவர்களின் வர்ணாசிரம தர்மத்தின்படி பிராமணர் - சத்திரியர் - வைசியர் என்ற மூன்று பிரிவுகள் ஆரியரில் உண்டு!
சூத்திரர் என்பவர்கள் அயலார்; கலப்பினத்தார்; இவர்களுக்குள் உள்ள ஓர் அடித்தட்டு பஞ்சமர்!
இந்த ஆரியத்தின் தத்துவத் தலைவராக விளங்கியவர் விநாயக தாமோதர சாவர்க்கர். ஆங்கிலேய ஆட்சியாளர்கள் முசுலிம், கிறித்தவர், பௌத்தர், சமணர் போன்ற மதங்கள் அல்லாத - , பலதெய்வ வழிபாடு கொண்ட மக்களைக் குறிக்க “இந்து” என்ற ஒரு மதப் பெயரை 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் அறிமுகப்படுத்தினார் .
இவர்களே இந்து பொது பெயரில் அழைக்கபட்ட மக்களே மிக பெரும்பான்மைனர் .சாவர்கர் அதை சுவீகரித்துக் கொண்டு அதன் தலைமை பிராமணர்களுக்குரியது என்ற தோரணையில் பரப்புரை செய்தார். அவர் 1922-இல் எழுதிய நூலில் "இந்துத்துவா " என்ற மத அரசியல் சொல்லை பயன்படுத்தினார்.
அடித்தது யோகம் என்று ஆனந்தக் கூத்தாடி, இந்து என்ற மதப்பெயரை ஏற்றுக் கொண்டு - அதன் தலைவர்களாக ஆரிய பிராமணர்கள் தங்களை அறிவித்துக் கொண்டார்கள். பல தெய்வ வழிபாட்டை வழக்கமாகக் கொண்டிருந்த பல ஆன்மிகப் பிரிவினரை ஒரே இந்து மதமாக ஆங்கிலேய அரசு அறிவித்ததால் நாம் பிழைத்துக் கொண்டோம் என்று கொண்டாடினார் காஞ்சி சங்கராச்சாரி யார் சந்திர சேகரேந்திரர். ("தெய்வத்தின் குரல்" முதல்பாகம்).
1922-இல் “இந்துத்துவா” என்று இந்துமத சித்தாந்தத்திற்குப் பெயர் சூட்டிய சாவர்க்கர் மராட்டிய உயர்வகுப்பு சித்பவன பிராமணர்!
எனவே, “இந்துத்துவா” என்ற சொல்லைப் பயன்படுத்தினால் அந்தந்த தலைப்பின் கீழ் வரக்கூடிய பெருந்திரளான பிராமணரல்லாத பட்டியல் வகுப்பினர், பிற்படுத்தப்பட்டோர், பிராமணரல்லாத முன்னேறிய வகுப்பினர் உள்ளிட்ட எல்லோரையும் தன் தலைமையின் கீழ் கொண்டுவர முடியும் என்று தந்திரம் செய்தது அக்ரகாரம்!
இப்போது இடதுசாரிகள் “இந்துத்துவா எதிர்ப்பு” என்ற சொற்கோவையைப் பயன்படுத்தினால், அவர்கள் நேசிக்கும் உழைக்கும் வர்க்கத் தமிழர்களையும் ஒருவகையில் பகைத்துக் கொள்வதாகும்; அது பாசகவிற்கும், ஆர்.எஸ்.எஸ் சுக்கும் பலனளிக்கும். இந்து மதத்தில் உள்ள உழைக்கும் மக்கள் இந்துத்துவா எதிர்ப்பை தங்கள் மத எதிர்ப்பாக கருத வாய்ப்பு உண்டு.
எனவேதான், அசலான பொருளிலும், ஆரிய - பிராமணியத்தை அடையாளப்படுத்தும் வகையிலும் ஆர்.எஸ்.எஸ். - பா.ச.க. கூறும் இந்துத்துவா என்பது ஆரிய-பிராமணியத்தின் முகமூடி என்கிறோம்!
தமிழ்நாட்டில் சொந்த இனத்தேசியமும் அதற்கான மொழியும் இல்லாத திராவிட வாதிகள் இந்துமத எதிர்ப்பு பேசுவார்கள் - இந்துத்துவா மிதவாதக் கட்சியான காங்கிரசுடனும் அதன் தீவிர வாதக் கட்சியான பாசகவுடனும் கூட்டணி சேர்வார்கள்! இதில் இடதுசாரிகளின் தனித்தன்மை என்ன?
தமிழ்த்தேசியப் பேரியக்கம் ஆர்.எஸ்.எஸ். பாசக அமைப்புகளை ஆரியத்துவா அமைப்புகள் என்றும் அவர்கள் முன்வைப்பது ஆரியத்துவா ஆதிக்க ஆன்மிகம் என்றும் உண்மையான பொருளில் அழைக்கிறது.
எனவே பாசக பாசிசம்
ஆரியத்துவா பாசிசம் ஆகும். அரசியலின் தாயகம் - தலைமை பீடம் இரண்டுமே வட இந்தியா! அதன் இதய பாகம் இந்தி மாநிலங்கள்! இம்மாநிலங்களில் உள்ள உழைக்கும் மக்கள், பட்டியல் வகுப்பு மக்கள் அனைவரும் இந்தி ஆதிக்க வெறியர்களே! தமிழ்நாடு உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியைத் திணிப்போரே! அவர்களுக்கான அரசே இந்திய அரசு!
தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட்டுக் கட்சிகளில் உள்ள - கம்யூனிஸ்ட்டுக் கட்சிகளை ஆதரிக்கின்ற, இடதுசாரித் தோழர்களே,
‘தேசிய இனங்களின் தன்னுரிமையை ஏற்காதவர்கள் - ஆதரிக்காதவர்கள் கம்யூனிஸ்ட்டுகளாக இருக்க முடியாது என்பது மட்டுமல்ல, சனநாயகவாதிகளாகக் கூட இருக்க முடியாது‘ என்று லெனின் கூறியதையும் எண்ணிப் பாருங்கள்!
.............
===============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
==============================

Thursday, March 27, 2025

இடதுசாரித் தோழர்களே என்ன செய்யப் போகிறீர்கள்? பெ. மணியரசன்




இடதுசாரித் தோழர்களே
என்ன செய்யப் போகிறீர்கள்?

பெ. மணியரசன்




பெ. மணியரசன்
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்
==============≠=============
இந்தியக் கம்யூனிஸ்ட்டுக் கட்சி (மார்க்சிஸ்ட்டு), இந்தியக் கம்யூனிஸ்ட்டுக் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) போன்ற இடதுசாரிக் கட்சிகளில், சமூக மாற்றத்தை - நிகரமை (சோஷலிச) சமூகம் நிறுவுதலை இலட்சியமாகக் கொண்டு இணைந்திருக்கும், இயங்கிக் கொண்டிருக்கும் தோழர்களுக்காக இந்தக் கட்டுரையை எழுதுகிறேன்.
1960 - 70 களில் இந்தக் கட்சிகளுக்கு தேசிய சனநாயகப் புரட்சி, மக்கள் சனநாயகப் புரட்சி, புதிய சனநாயகப் புரட்சி நடத்தி - இந்தியாவுக்கேற்ற வகையில் நிகரமை (சோஷலிச) சமூகத்தை அமைப்பது என்ற இலட்சியம் இருந்தது. புரட்சியின் மூலம் இந்தியப் பெருமுதலாளிகளை, தரகு முதலாளிகளை, நிலக்கிழார்களை வீழ்த்துவது, அதிகாரத்தில் இருந்து வெளியேற்றுவது என்ற இலட்சியம் இருந்தது. இதன் பொருள் அவ்வகை வர்க்கங்களின் கட்சிகளை வீழ்த்தி வெல்வது - அதாவது புரட்சி செய்வது!
இந்த இலட்சியங்களை - இதற்கான நடைமுறை உத்திகளை - இறுதிப் போராட்ட வடிவங்களை இக்கட்சிகள் தங்களின் கட்சித் திட்டம் (Party Programme) மற்றும் கொள்கை அறிக்கை முதலிய நூல்களில் அச்சிட்டு வெளியிட்டன.
இப்போது உங்களின் இறுதி இலக்கு என்ன?
இப்போதும் அவையெல்லாம் உங்கள் கட்சிகளின் வேலைத் திட்டங்களாக - புரட்சித் திட்டங்களாக நீடிக்கின்றனவா தோழர்களே?
இந்தியாவில் இப்போது செயல்பட்டுக் கொண்டிருக்கும் சி.பி.எம், சி.பி.ஐ, எம்.எல் உள்ளிட்ட எந்த மார்க்சிய கட்சியாலும் அனைத்திந்தியப் புரட்சியை முன்னெடுக்க முடியாது என்ற உண்மையையாவது ஏற்றுக் கொண்டுள்ளீர்களா தோழர்களே? மாவோயிஸ்ட்டுக் கட்சிகள் சில இடங்களில் மலைவாழ் பழங்குடிகளிடையே வேரூன்றி, அப்பகுதியில் மட்டும் ஒருவகை நிர்வாகம் நடத்துவதை உத்தியாகக் கொண்டு ஆயுதப் போர் நடத்துகின்றன. அதுபற்றி இங்கு நான் பேசவில்லை. அது நம்முடைய செயல்பாட்டில் இல்லை!
பெருமுதலாளிய - நிலப்பிரபுத்துவ இந்திய அரசையும், அதன் பாளையப்பட்டுகளாக உள்ள மாநில அரசுகளையும் புரட்சி நடத்தி வீழ்த்தி, வெளியேற்றி, கம்யூனிஸ்ட்டுக் கட்சிகள் - பாட்டாளி வர்க்க மக்கள் சனநாயக ஆட்சியை இன்றில்லாவிட்டாலும், என்றாவது நிறுவ முடியும் என்று நினைக்கிறீர்களா, அல்லது தேர்தல் மூலமாகவே அப்படிப்பட்ட அனைத்திந்தியப் பாட்டாளி வர்க்க - சனநாயகப் புரட்சி அரசை இந்தியாவில் நிறுவிட முடியும் என்று நம்புகிறீர்களா தோழர்களே?
பாசகவுடன் பக்கச்சேர்மானம்,
காங்கிரசுடன் கைகோப்பு:
இப்போது கேரளாவைத் தவிர வேறெங்கும் தேர்தல் கூட்டணி மூலம் மாநில ஆட்சியைப் பிடிக்கும் நிலையில் கம்யூனிஸ்ட்டுகள் இல்லை. அவ்வளவு ஏன்? ஏற்பிசைவு பெற்ற எதிர்க்கடக்சியாக வரும் வலிமை கூட மேற்கு வங்கம் உட்பட எங்கும் இல்லை! சற்றொப்ப 85 ஆண்டுகளாக தொடர்ந்து இங்கு கம்யூனிஸ்ட்டு கட்சி செயல்படுகிறது.
அடுத்து, இந்தியப் பெருமுதலாளிகள் - பெருநிலக்கிழார்களின் எதேச்சாதிகார கட்சியாகவும், தேசிய இன மாநிலங்களின் உரிமை பறிப்புக் கட்சியாகவும் ஊழலின் உறைவிடமாகவும் விளங்கும் காங்கிரசுடன் இப்போது கூட்டணி வைத்துக்கொண்டு, பாசிச பாசக எதிர்ப்பை முன்வைக்கின்றன கம்யூனிஸ்ட்டுக் கட்சிகளும் இயக்கங்களும்.
இதற்குமுன் சிபிஐ, சிபிஎம் கட்சிகள் பா.சக கூட்டணியை ஆதரித்தன. அந்த அணியில் இருந்தன. இதனால், வி.பி.சிங் தலைமை அமைச்சரானார்.
இப்போது தமிழ்நாட்டில் சிபிஐ சிபிஎம், மா.லெ அமைப்புகள் பாசக பாசிசத்தை எதிர்ப்பதற்காக காங்கிரசு - திமுக கூட்டணியை ஆதரிக்கின்றன; “இண்டியா” கூட்டணியில் உறுப்பு வகிக்கின்றன.
மாமூல் நிலையைப் பாதுகாக்க - இடதுசாரி கட்சிகள் தி.மு.க. வுடன் அல்லது அ.தி.மு.க. வுடன் கூட்டணி சேர்கின்றன. ஆனால், அக்கழகங்கள் மாறிமாறி காங்கிரசு அல்லது பாசகவுடன் கூட்டணி சேர்கின்றன.
ஆளும் வர்க்க கட்சிகளான காங்கிரசும், பா.ச.க. வும் – தங்கள் தங்கள் ஆட்சியில் மேலும் பிற்போக்காக அரசை மாற்றி மாற்றி – புதிய மாமூல் நிலையைத் திணிக்கின்றன. அந்தப் புதிய “மாமூலை“ப் பாதுகாக்கவே, கம்யூனிஸ்ட்டுக் கட்சிகள் முழக்கம் கொடுக்கின்றன. பாசிச எதிர்ப்பு பேசுகின்றன! உண்மையான பொருளில், எந்த மாமூல் நிலையையும் கம்யூனிஸ்ட்டுகளால் பாதுகாக்க முடியவில்லை. மேலும்மேலும் ஏற்படும் சீரழிவுகளைத் தடுக்க முடியவில்லை.
பொதுவுடைமைத் தோழர்களே, இப்போது உங்களின் புரட்சி முழக்கம் என்ன? நிரந்தரமாக சனநாயகக் காப்பு முழக்கம்தானா? நிரந்தரமாகப் பாட்டாளிவர்க்கப் புரட்சியின் பகைக் கட்சிகளின் தலைமையில் கூட்டணி சேர்வதுதானா?
புரட்சிக்கான முன்தயாரிப்பு தற்காலிக ஏற்பாடே என்றும், ஒப்பீட்டளவில் குறைந்த அபாயமுடைய பகைவர்க்கக் கட்சியுடன் கூட்டணி சேர்வது தேவை என்றும் கூறி, “மாமூல்” பாதுகாப்பு முழக்கத்தை நிரந்தரமாக்கிக் கொள்வீர்களா? இந்தியப் பெருமுதலாளிய - ஏகபோக முதலாளிய சமூக அமைப்பின் மாமூல் நிலையை (Status Quo) நிரந்தரமாகக் கொள்வதுதான் உங்கள் புரட்சி முழக்கமா?
இப்போது இந்திய சமூக மாற்றத்திற்கான உங்களது மார்க்சிய - லெனினிய முழக்கமென்ன?
காரல் மார்க்சும், எங்கெல்சும் 1848-இல் எழுதி வெளியிட்ட கம்யூனிஸ்ட்டு கட்சி அறிக்கையில் (Manifesto of the Communist Party) கடைசி பத்தியில் மிக முக்கியமான வாசகம் ஒன்று உள்ளது:
“கம்யூனிஸ்ட்டுகள் தங்கள் நோக்கங்களையும் இலட்சியங்களையும் மறைத்துப் பேசுவதை இழிவாகக் கருதுகிறார்கள்”
ஃபிடல் காஸ்ட்ரோ கூறினார்: “உங்கள் இலட்சியம் என்ன என்பதை உங்கள் அணிகளுக்கும், அதேபோல் உங்கள் பகைவர்களுக்கும் தெளிவாகத் தெரிவியுங்கள்; மறைக்காதீர்கள்!”
இடதுசாரி தோழர்களே! என்ன செய்யப் போகிறீர்கள்?
===============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
=================================

Tuesday, March 25, 2025

மேக்கேதாட்டு அணையை எதிர்க்க வேண்டாம் என்கிறதா தமிழ்நாடு அரசு? பெ. மணியரசன் அறிக்கை!



மேக்கேதாட்டு அணையை எதிர்க்க வேண்டாம் என்கிறதா தமிழ்நாடு அரசு?


பெ. மணியரசன்



காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர்
பெ. மணியரசன் அறிக்கை!
==============================
இயற்கையின் நில அமைப்புப்படி காலங்காலமாக பலநாடுகளைக் கடந்து ஓடிவரும் ஆறுகளின் பயன்பாட்டை இப்போது மேலே உள்ள நாடுகள் தடுத்துத் தாங்கள் மட்டுமே பயன்படுத்திக்கொண்டு, கீழே உள்ள நாடுகளுக்குத் தண்ணீர் போவதைத் தடுக்க்கூடாது என்று பன்னாட்டு ஒப்பந்தங்களும், சட்டங்களும் கூறுகின்றன.
அதேபோல் இந்தியாவில் ஓர் ஆற்றின் மேலே உள்ள மாநிலம் அல்லது மாநிலங்கள், கீழே உள்ள மாநிலங்களுக்குத் தண்ணீர் போகாமல் தடுக்கக்கூடாது என்று 1956-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட மாநிலங்களுக்கிடையிலான தண்ணீர்த்தகராறு சட்டம் (Inter-State Water Dispute Act - 1956) கூறுகிறது.
இந்தச் சட்டங்களையும் மனித மாண்புகளையும் முரட்டுத் தனமாக மீறி, கர்நாடகம் தமிழ்நாட்டிற்குரிய காவிரி நீரைத் தடுத்து, தான் மட்டுமே ஏகபோகமாக அனுபவித்துக் கொள்கிறது. அத்தோடு நில்லாமல், மிகை மழையும் மிகை வெள்ளமும் பெருக்கெடுக்கும் காலங்களில் கர்நாடக அணைகள் நிரம்பி வெளியேறும் வெள்ள நீரையும் தடுக்க, மேக்கேதாட்டு என்ற கர்நாக எல்லையில் அணைகட்ட எல்லா ஏற்பாடுகளும் செய்துள்ளது. இதன் கொள்ளளவு 66 டிஎம்சி. இதற்கு 9 ஆயிரம் கோடி ரூபாயில் விரிவான திட்டம் தயாரித்து அடிப்படை வேலைகளில் இறங்கியுள்ளது.
அண்மையில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மேக்கேதாட்டு அணை கட்டுதற்கான அடிப்படை தொடக்க நிலைப் பணிகள் முடிந்து விட்டன என்று கூறினார். இப்பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகை ஓர் ஆயிரம் கோடி ரூபாய்!
பெருமழை பெய்துவரும் இந்த ஆண்டில் கூட, உச்ச நீதிமன்றத் தீர்ப்புப்படி மாதாமாதம் தமிழ்நாட்டிற்குத் தரவேண்டிய காவிரி நீரைக் கர்நாடகம் திறந்துவிடவில்லை.
இந்நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி, கர்நாடக முதல்வருடன் நல்ல நட்பு வைத்துள்ள தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவருடன் பேசி மேக்கேதாட்டு அணைகட்டாமல் கைவிடச் செய்தால் என்ன என்று கேட்டார். அதற்கு சட்டப்பேரவையில் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் “உஷ், ஜாக்கிரதை, கர்நாடகம், ஆந்திரம் போன்ற மாநிலங்களில் தமிழர்கள் வாழ்கிறார்கள். கடந்த காலங்களில் அந்தத் தமிழர்களுக்கு ஏற்பட்ட கதியை எண்ணிப்பார்த்து அடக்கிப் பேசுங்கள்” என்று எச்சரித்துள்ளார்.
காவிரிச் சிக்கலை முன்வைத்து கர்நாடகத்தில் இனவெறியர்கள் காலங் காலமாக அங்கு வாழ்ந்து வரும் தமிழர்கள் ஏராளமானோரை, 1991-ஆம் ஆண்டு இனப்படுகொலை செய்தார்கள். ஏராளமான தமிழர் வீடுகளை எரித்தார்கள்; தமிழர் வணிக நிறுவனங்களைக் கொள்ளை அடித்தார்கள்; இலட்சக் கணக்கான கர்நாடகத் தமிழர்கள் தமிழ்நாட்டிற்கு அகதிகளாக ஓடிவந்தார்கள். அந்த இனப்படுகொலையை துரைமுருகன் மறைமுகமாக நினைவூட்டி அச்சுறுத்தினார்.
அண்டை மாநிலங்களில் வாழும் தமிழர்கள் இனப்படுகொலை, இன ஒதுக்கல் செய்யப்படாமல் பாதுகாக்கும் பொறுப்பு தமிழ்நாடு அரசுக்கும் தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளுக்கும் இல்லையா? இல்லையென்றால் தமிழ்நாட்டில் கட்சி நடத்தாதீர்கள். அதேபோல் சட்டப்படி தமிழ்நாட்டு ஆற்று நீர் உரிமையைப் பாதுகாக்கும் பொறுப்பு தி.மு.க. போன்ற கட்சிகளுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் இல்லையா? உண்டு!
தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை கர்நாடகத்தில் நடந்ததைக் காட்டி, காவிரி உரிமையைக் கைவிடச் செய்யும் மறைமுக உள்நோக்கம் தி.மு.க. விற்கு இருக்கிறதா?
அடுத்து, மேக்கேதாட்டு அணைக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரித்து அதற்கான ஒப்புதலை இந்திய அரசுத்துறைகளிடம் இன்னும் வாங்கவில்லை. எனவே மேக்கேதாட்டு அணை கட்டமுடியாது என்று திட்டமிட்டு, துரைமுருகன் உண்மை இல்லாத செய்திகளைத் சட்டப்பேரவையில் கூறியுள்ளார்.
மேக்கேதாட்டு அணைக்கு ஏற்கெனவே விரிவான திட்ட அறிக்கை (Detailed Project Report- DPR) 9000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தயாரித்து, அதற்கு இந்திய நீராற்றல் (ஜல்சக்தி) துறையின் ஏற்பிசைவைப் பெற்றுள்ளார்கள். அந்தத் திட்டத்தை அதே நீராற்றல் துறை காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஒப்புதல் கோரி அனுப்பி வைத்தது. மேற்படி ஆணையமும் பெரும்பான்மை வாக்கு ஆதரவுடன் ஏற்றுக் கொண்டு, செயல்படுத்த வலியுறுத்தி இந்திய நீராற்றல் துறைக்கு அனுப்பிவிட்டது. இதெல்லாம் துரைமுருகனுக்குத் தெரியும். ஆனால், அதையெல்லாம் மறைத்து, விரிவான திட்டஅறிக்கை தயாரிக்கப்படவில்லை என்பது போலவும், நீராற்றல் துறை, காவிரி ஆணையம் உட்பட எதிலும் அது ஏற்கப்படவில்லை என்றும், இன்னும் பல துறைகளில் ஏற்க வேண்டியுள்ளது என்றும், எனவே, மேக்கேதாட்டு அணைகட்டப்பட மாட்டாது என்றும் துரைமுருகன் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தவறான தகவல்களைக் கூறியுள்ளார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் இந்திய அரசின் அனுமதி இல்லாமல்தான் கர்நாடகம் ஹேமாவதி, ஹேரங்கி, கபினி முதலிய சட்டவிரோத அணைகளைக் கட்டிக் காவிரி நீரைத் தேக்கி வருகிறது. எனவே, மேக்கேதாட்டில் கர்நாடகம் அணைகட்ட சட்டப்படியான அனுமதி எதையும் எதிர்பாரத்துக் காத்திருக்காது. சட்டப்படி பெறவேண்டிய அனுமதிகளைப் பெறாமல் கர்நாடகம் காவிரியில் அணைகட்டினால், இந்திய அரசு அதிகாரத்தில் பா.ச.க. இருந்தாலும் அல்லது காங்கிரசு இருந்தாலும் அதைத்தடுக்காது. கடந்த கால நம் அனுபவம் அதே!
எனவே, துரைமுருகன் சட்டப் பேரவையில் போலியாகத் தெரிவித்த உறுதிகள் தமிழர்களை ஏமாறச் செய்து, நிரந்தரமாகக் காவிரியை இழக்க மறைமுகத் தூண்டுகோலாக அமையும்.
அமைச்சர் துரைமுருகன் தவறாக சட்டப் பேரவையில் கூறிய கருத்துகளைத் திரும்பப் பெற்று, அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தி, முடிவுகள் எடுத்து மேக்கேதாட்டைத் தடுக்கவும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை கர்நாடக அரசு செயல்படுத்தச் செய்யவும் மக்கள் திரள் போராட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னெடுக்க வேண்டும் என்று காவிரி உரிமை மீட்புக்குழு சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
ஆளுங்கட்சியான தி.மு.க. அவ்வாறு காவிரி மீட்பு முயற்சிகள் எடுக்கவில்லை என்றால், தமிழ்நாட்டின் 22 மாவட்டங்களின் குடிநீராகவும், 12 மாவட்டங்களின் பாசன நீராகவும் உள்ள காவிரி நீர் உரிமையை மீட்க அனைத்துப் பகுதி மக்களும் ஒருங்கிணைந்து தமிழ்நாடு தழுவிய போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்று காவிரி உரிமை மீட்புக் குழுசார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
========================
செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
==========================
பேச: 98419 49462, 94432 74002
==========================
==========================================
செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
==========================
பேச: 98419 49462, 94432 74002
==========================


 

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT