உடனடிச்செய்திகள்

Friday, March 21, 2025

தமிழ்நாடு அரசின் “ரூ” மாற்றம்: இந்தி என்ற பேய்க்கு மாற்றாக சமற்கிருதம் என்ற பிசாசா? (முனைவர்) ம.சோ. விக்டர்

                                 


தமிழ்நாடு அரசின் “ரூ” மாற்றம்:
இந்தி என்ற பேய்க்கு மாற்றாக
சமற்கிருதம் என்ற பிசாசா?


(முனைவர்) ம.சோ. விக்டர்




===========================
தமிழிய ஆய்வறிஞர்
தக்கார் (முனைவர்) ம.சோ. விக்டர்
===========================
அண்மையில் ரூ என்ற எழுத்தை ₹ என்ற குறியீட்டுக்குப் பதிலாக தமிழ்நாட்டரசு மாற்றி வெளியிட்டது. இதன் மூலம் ₹ என்ற இந்தி எழுத்துக்கு மாற்றாக, தமிழை முதன்மைப்படுத்தியதாக அறிவித்தது.
டாலர் - பவுண்டு போன்ற நாணயங்களுக்குக் குறுக்கே இரட்டைக் கோடு குறியீடு இருப்பதைப் போல், இந்தி எழுத்தான ₹ -க்கு, இரட்டைக் கோடு போட்டு இந்திய அரசு அறிவித்த போதே, தமிழ்நாடு அரசும், திராவிடக் கட்சிகளும் எதிர்த்திருக்க வேண்டும். அப்போது எதிர்க்கவில்லை! பன்மொழிகள் பேசப்படும் இந்தியாவில், எந்த மொழியையும் சார்ந்திராத ஒரு குறியீட்டை இந்திய அரசை அறிவித்திருக்க வேண்டும்.
“ரூப்யா” என்ற சமற்கிருதச் சொல்லின் குறியீடுதான் “₹” என்றனர். அதன் தமிழ் வடிவமாக “ரூ” என்ற எழுத்தை தற்போது தமிழ்நாட்டரசு அறிவித்துள்ளது. மொழிகள் பற்றிய சிந்தனைத் தெளிவு இல்லாத தமிழ்நாட்டரசு ரூ என்ற தமிழ் எழுத்தை அறிமுகம் செய்வதற்கு முன்பாக, தமிழ்நாடு அரசு இம்மாற்றம் பற்றி, தமிழ் அறிஞர்களின் கருத்துகளைக் கேட்டு, சரியான முடிவுக்கு வந்திருக்க வேண்டும்.
மேதாவிகள் என்று கருதிக் கொல்லும் சிலர், “ரூப்யா” என்ற சமற்கிருதச் சொல்லிலிருந்துதான் ரூபாய் என்ற தமிழ்ச்சொல் வந்தது என்றும் கூறி வருகின்றனர். இது தவறு!
தொல்காப்பிய விதிப்படி ரகரம் என்ற எழுத்து, எந்தத் தமிழ்ச் சொல்லுக்கும் முதல் எழுத்தாக வருவதில்லை. ர, ரி, ரு போன்ற எழுத்துக்கள் வரும் சொற்கள் தமிழில் இல்லை. ர என்ற எழுத்தை ஒலிக்கும்போது அ என்ற ஒலி இறுதியில் வெளிப்படுகிறது. அதனால் ர என்ற எழுத்துக்கு முன், அ என்ற எழுத்து சேர்க்கப்படுகிறது.
எடுத்துக்காட்டு, ரத்தம் – அரத்தம். அரத்தம் என்பது அரி என்ற மூலச் சொல்லின் நீட்சியாகும். அரி என்றால் அரிதல், கிழித்தல், பிளத்தல் என்று பொருள். உடலின் தசை அரியப்படுவதால், வெளிப்படும் குருதி, அரத்தம் எனப்பட்டது. குருதி என்பதும் காரணப்பெயர் கொண்ட தமிழ்ச் சொல்லே. குரு - குருத்தல் என்பதற்கு வளர்தல் என்று பொருள். குருத்து, குரும்பி போன்ற சொற்களை ஒப்பு நோக்குக. அரிவதால் இழக்கப்படும் குருதி மீண்டும் தன்னிலே உடம்பில் ஊர்ந்து வளர்ந்து விடுவதால் குருதி எனப்பட்டது. குரு (kuru) என்ற தமிழ்ச்சொல், சமற்கிருதத்தில் குரு (guru) என்று மென்மையாகத் திரிந்தது. வளர்ச்சி என்ற பொருளில் அறிவை வளர்க்கும் ஆசிரியர், சமற்கிருதத்தில் குரு எனப்பட்டார். ஆசிரியர் என்பவர் உயர்ந்தவர், பெரியவர் என்பதால் பெரிய (big) என்ற பெரிய கோளான வியாழனை, பெரிய என்ற பொருளில் “குரு“ என்றனர்.
ரி என்ற எழுத்தில் இ என்ற ஒலி ஈற்றில் கிடைக்கிறது. அதனால் ரி என்ற எழுத்துக்கு முன் இ சேர்க்கப்படுகிறது. இரீ, இரீயினான் போன்ற தமிழ்ச் சொற்கள் அறியப்பட்டன. இரி, இரீ என்றவாறு இரிய என்ற சொல்லுக்கு இழிதல் என்று பொருள்.
“அரிக் கூரும் மாக்கிளை இரிய (புறநானூறு, 378:8), மேலும் இரியல் (அகம், 21:18), இரியின் (நற்றிணை, 266:6) இரியும் (குறுந்தொகை, 304:4) என்றவாறு விரியும். இறீ என்ற சொல், நடத்த, நிறைவேற்ற என்று பொருள்படும். (குறுந்தொகை, (255:6), இறையனார் அகப்பொருள் உரையில் பாண்டியனை இறீயினான் என்ற சொல் குறிப்பிடுகின்றது.
ரு என்ற எழுத்தில், உ என்ற ஒலி முடிகிறது. அதனால் ருவுக்கு முன் உ சேர்க்கப்படுகிறது. ரூபவதி, அழகிய வடிவத்தைக் கொண்ட பெண். அக்காலத்தில் தாளில் பணம் அச்சிடப்படும் முறை இல்லை. செம்பு, வெள்ளி, பொன் ஆகியவற்றில் காசுகள் உலையில் வார்த்து அச்சிடப்பட்டன. அதன் மதிப்புக்கு ஏற்றவாறு அவை பெரிய அல்லது சிறிய உருவத்தில் இருந்தன. அவற்றில் மன்னன், கடவுள் போன்ற உருவங்கள் அச்சிடப்பட்டன. உருவம் பொறித்த வழியில் காசு, உருவாய் எனப்பட்டது.
வாய் – வழி உருவத்தின் வழியில் அறியப்பட்ட காசு என்பது பொருள். உருவாய் - உரு என்ற தமிழ்ச் சொற்களே, ரூப்யா, ரூப என்று சமற்கிருதத்தில் திரிந்தன. ரூப்யா, என்பது உரு என்ற தமிழ் மூலத்தினின்றும் திரிபுபட்ட சமற்கிருதச் சொல்லாகும். அதன் வழியில் தமிழில் ரூ என்று குறிப்பிடுவதும் தவறானதாகும். அது சமற்கிருதச் சொல்லை ஏற்றுக் கொண்டதாகவே பொருள்படும். காசு என்பதும் தமிழ்ச் சொல்லே. உலையில் காய்ச்சி வடிக்கப்பட்டதால் காசு எனப்பட்டது. காசு – cash என்று ஆங்கிலத்தில் திரிந்தது.
எனவே பணத்தைக் குறிக்க ரூ என்ற சமற்கிருதச் சொல்லின் சுருக்கத்தை தமிழ் என்று தவறாகக் கருதி ரூ என்று குறிப்பிடுவதும் தவறாகும். தமிழ்வழியில் இவ்வாறு சிந்தித்திருக்க வேண்டும். திராவிட வழியில் இவ்வாறான சிந்தனை வராமல் போயிருக்கலாம்!
“ரூ” என்ற எழுத்துக்கு மாற்றாக “உரு” என்ற சொல்லைப் பயன்படுத்தியிருக்க வேண்டும்.
தமிழின் நுட்பமும் ஆழமும், திராவிடக் கட்சியினருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இது போன்ற அரைவேக்காட்டு அறிவிப்புகளை வெளியிட்டு தமிழ் மொழியை மேலும் சிதைக்க வேண்டாம். இந்தியை எதிர்ப்பதாகக் கூறிக் கொள்பவர்கள், ரூ என்ற எழுத்து மூலம் சமற்கிருதத்தை ஏற்றுக் கொண்டுள்ளனர். சமற்கிருதம் உள்ளிட்ட இந்திய மொழிகள் அனைத்தும் தமிழினின்றே பிறந்தன என்பதை இன்றைய மொழியியல் ஆய்வுகள் உறுதி செய்கின்றன. மொழி பற்றிய அறிவிப்புகளை திராவிடக் கட்சியினர், வெளியிடாதிருப்பதே தமிழுக்கு நல்லது.
ரூ என்பது ரூப்யா என்ற சமற்கிருதச் சொல்லின் சுருக்கம் என்பதை இப்போதாவது புரிந்து கொள்ளுங்கள். இந்தி வேண்டாம் என்று ஒரு பேயை மறுத்து, சமற்கிருதம் என்ற மற்றொரு பிசாசைக் கட்டிக் கொண்ட கதையாக இருக்கிறது. இனிமேலாவது தமிழ்மொழி பற்றிய அறிவிப்புகளை வெளியிடுவதில் தமிழறிஞர்களின் அறிவுரைகளைப் பெற்று வெளியிடுங்கள்! இனிமேலாவது தமிழ் விருதுகளை நல்ல திறமையான தமிழறிஞர்களுக்குக் கொடுங்கள்.
ஆரிய, திராவிட தமிழ்த் தாக்குதல்களை எதிர்கொண்டு தமிழ்மொழி, தன்னிலேயே வளரும், செம்மொழித் தகுதி கொண்டது. தமிழை அழிக்க முயன்றவர்கள் வெற்றி கண்டதாக வரலாறு இல்லை!
===============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
================================

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT