உடனடிச்செய்திகள்

Sunday, March 9, 2025

இந்திய நாடாளுமன்றத்தில் அனைத்து இனங்களுக்கும் சம எண்ணிக்கை வேண்டும்! கூட்டாட்சிக் கோட்பாடு – கோரிக்கை மாநாடு!


இந்திய நாடாளுமன்றத்தில் அனைத்து

இனங்களுக்கும் சம எண்ணிக்கை வேண்டும்!

கூட்டாட்சிக் கோட்பாடு – கோரிக்கை மாநாடு!




தமிழ்த்தேசியப் பேரியக்கத்
தலைமைச் செயற்குழு தீர்மானங்கள்!
=====================================
தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழுக் கூட்டம், இன்று (09.03.2025), தஞ்சையில் பேரியக்க அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் அவர்கள் தலைமை தாங்கினார். பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் அவர்கள் முன்னிலை வகித்தார். பேரியக்கப் பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், துணைத் தலைவர் தோழர் க. முருகன், துணைப் பொதுச் செயலாளர் தோழர் க. அருணபாரதி, தலைமைச் செயற்குழு தோழர்கள் நா. வைகறை, பழ. இராசேந்திரன், ஓசூர் கோ. மாரிமுத்து, திருச்செந்தூர் மு. தமிழ்மணி, குடந்தை க.விடுதலைச்சுடர், பூதலூர் பி. தென்னவன், திருச்சி மூ.த. கவித்துவன், புதுச்சேரி இரா. வேல்சாமி, மதுரை கதிர்நிலவன், சென்னை வெற்றித்தமிழன், பெண்ணாடம் மா. மணிமாறன், ஈரோடு வெ. இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனமாக நிறைவேற்றப்பட்டன.
தீர்மானம் – 1
============
அனைத்து இனங்களுக்கும் சம எண்ணிக்கை கொண்ட அவையாக இந்திய நாடாளுமன்றம் மாற்றியமைக்கப்பட வேண்டும்!
மக்கள் தொகை விகிதத்திற்கேற்ப இந்திய நாடாளுமன்ற மக்களவையை மறு சீரமைப்பு செய்வது என்ற இந்திய அரசின் திட்டம், இந்தி இன ஆதிக்கத்தை வலுப்படுத்தி, தமிழினத்தை வஞ்சிக்கும் சூழ்ச்சித் திட்டமாகும். இப்போதுள்ள 543 நாடாளுமன்ற உறுப்பினர்களில், தமிழினத்திற்கு புதுச்சேரியையும் சேர்த்து 40 உறுப்பினர்களே உள்ளனர். ஆனால், இந்தி மாநிலங்கள் பத்திற்கும் சற்றொப்ப 225 உறுப்பினர்கள் உள்ளனர். எனவே, இந்திக்காரர்களின் தயவோடுதான் எந்தவகை மாற்றங்களையும் நாடாளுமன்றத்தில் முன்னெடுக்க முடியும் என்ற நிலை உள்ளது.
பிரித்தானியப் பீரங்கிகளால் - ஆங்கிலேயக் காலனி வேட்டையாடிகளின் துப்பாக்கிகளால் - தூக்குக் கயிறுகளால் உருவாக்கப்பட்ட செயற்கையான நிர்வாகக் கட்டமைப்பு இந்தியா! இதற்குள் பல இனங்கள் - பல மொழிகள் - பல பண்பாடுகள் “அடக்கம்”! எனவேதான், 1956இல் மாநிலங்கள் மறு சீரமைப்புச் சட்டப்படி, மொழி இன மாநிலங்கள் அமைக்கப்பட்டன.
அதன்படி, தமிழர்களுக்கு தமிழ்நாடு. கன்னடர்களுக்கு கருநாடகம், தெலுங்கர்களுக்கு ஆந்திரம், மலையாளிகளுக்குக் கேரளம், மராட்டியர்களுக்கு மராட்டியம் என அமைக்கப்பட்டது. ஆனால், இந்தியை மாநில ஆட்சி மொழியாக – கல்வி மொழியாகக் கொண்ட பத்து மாநிலங்கள் அமைக்கப்பட்டன. இவ்வாறு எட்டுக் கோடி மக்கள் தமிழ்நாடும், தமிழினமும் செயற்கையாக சிறுபான்மை ஆக்கப்பட்டன.
1960 – 1970களில் இந்திய அரசு திணித்த மக்கள் தொகைக் குறைப்பு – குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டப் பரப்புரைகள் காரணமாக, தமிழ்நாட்டின் இயல்பான மக்கள் தொகை வளர்ச்சி குறைந்து போனது. ஆனால், வடமாநிலங்களேிலோ அப்பரப்புரை தீவிரமாக முன்னெடுக்கப்படாததால் மக்கள் தொகை வளர்ச்சி அதிகரித்து வந்தது. இந்நிலையில், மோடி அரசு இப்போது முன்வைக்கும் நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டால், மக்கள் தொகை வளர்ந்துள்ள உத்திரப் பிரதேசத்திற்கு 80ஆக உள்ள உறுப்பினர் எண்ணிக்கை 143 ஆக உயரும். பீகாருக்கு 40லிருந்து 79 ஆக உயரும்! மத்தியப்பிரதேசத்திற்கு 29லிருந்து 52 ஆக உயரும்! இராசஸ்தானுக்கு 25 லிருந்து 50ஆக உயரும்! ஆனால், மக்கள் தொகைக் குறைந்துள்ள தமிழ்நாட்டுக்கோ 39லிருந்து 49 மட்டுமே உயரும். இருக்கிற மொத்த எண்ணிக்கையை புதிய மக்கள் தொகை விகிதப்படி பிரித்தால், தமிழ்நாட்டிற்கு 31 ஆகக் குறையவும் கூடும்.
தமிழ்நாடு முதலமைச்சர் கூட்டிய அனைத்துக்கட்சிக் கூட்டத் தீர்மானப்படி, மக்களவையில் இப்போதுள்ள உறுப்பினர் எண்ணிக்கை இன்னும் 30 ஆண்டுகளுக்கு நீடித்தாலும், தமிழர்களும் தமிழ்நாடும் மக்களவையில் 100க்கு 7.18 என்ற புறக்கணிக்கத் தக்க சிறுபான்மை எண்ணிக்கை தான்! இந்தி மாநிலங்களுக்கு நாடாளுமன்ற இடங்கள் கூடுதலாவதையும், அந்த எண்ணிக்கையை விட தமிழ்நாட்டிற்கு குறைவதையும் தடுக்க முடியாது!
எனவே, ஐரோப்பியக் காலனி வேட்டையாடிகளால் உருவாக்கப்பட்ட இந்திய நிர்வாகத்தில் - நாடாளுமன்றத்தில் மக்கள் தொகை அடிப்படையில் உறுப்பினர்கள் எண்ணிக்கைகளை முடிவு செய்யக் கூடாது. தேசிய இன அடிப்படையில் ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் சம எண்ணிக்கையில் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் இருக்க வேண்டும்.
எல்லா இனங்களையும் தனித்தனி மாநிலமாக்கி அவற்றுக்கான பொது நாடாளுமன்றம் (Federal Parliament) ஒன்று அமைக்கப்பட வேண்டும். ஏனெனில் இவை ஒவ்வொன்றும் தனிநாடாக இயங்கத் தகுதியுடையவை. காந்தி அடிகள் இந்திய விடுதலைக்கு முன் கூறியபடி, இந்த இனங்கள் தனி நாடாக இருந்தால் அனுபவிக்கும் அத்தனை உரிமைகளும் விடுதலை பெற்ற இந்தியாவில் வேண்டும். ஆனால் பிரிந்து போகக் கூடாது என்றார்.
இந்திய நாடாளுமன்றத்தில் இரண்டு அவைகள் கூடாது. ஒரே அவையே போதும்! படைத்துறை, வெளியுறவுத்துறை, பண அச்சடிப்பு போன்ற முக்கியமான சில துறைகள் மட்டும் இந்தியக் கூட்டாட்சி (Federal State) வசம் இருக்க வேண்டும். மற்ற அனைத்து அதிகாரங்களும் அந்தந்த இன மாநிலங்களுக்கு இருக்க வேண்டும்.
அனைத்து வரிகளையும் விதித்து வசூலிக்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு இருக்க வேண்டும்! கூட்டாட்சி அரசுக்கு ஒவ்வொரு தேசிய இன மாநில அரசும் தரவேண்டிய வரிப்பகிர்வைக் கூட்டாட்சி நாடாளுமன்றம் முடிவு செய்ய வேண்டும். வரிவிதித்து வசூலிக்கும் உரிமை மாநில அரசிடம் மட்டுமே இருக்க வேண்டும்.
இவ்வாறான சனநாயகக் கூட்டாட்சி முறையை இந்தியாவில் செயல்படுத்து என்றும், இதற்கேற்ப இந்திய அரசமைப்புச் சட்டத்தை மாற்றுக என்றும் தமிழ்நாட்டு மக்களும், அரசியல் கட்சிகளும் ஒட்டுமொத்தமாகக் குரல் எழுப்ப வேண்டும்.
கூட்டாட்சிக் கோரிக்கைக்கான சிறப்பு மாநாடு – 2025 மே 10
இக்கோரிக்கையை மக்கள்மயப்படுத்தும் வகையில், வரும் 2025 மே மாதம் 10ஆம் நாள், தஞ்சையில் “கூட்டாட்சிக் கோபட்பாடு – கோரிக்கை மாநாடு” நடத்துவது என்றும், அதில் பல்லாயிரக்கணக்கான மக்களைப் பங்கேற்கச் செய்வது என்றும் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழு ஒருமனமாக தீர்மானிக்கிறது!
தீர்மானம் – 2
============
கல்வி மறுக்கும் தேசியக் கல்விக் கொள்கை – மும்மொழித் திட்டம் ஆகியவற்றிலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும்!
பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக கல்வி – தொழில் – வணிகம் – மருத்துவம் – பண்பாடு – வரலாறு எனப் பலவற்றிலும் உலகளாவிய அளவில் சிறந்து விளங்கிய இனம் – தமிழினம் என்பதை தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் பல்வேறு அகழாய்வுகள் உணர்த்தி வருகின்றன. தமிழினத்தின் இந்தப் பண்பாட்டுத் தொடர்ச்சியின் காரணமாக, அனைத்திந்திய அளவில் கல்வியில் தமிழ்நாடு முதன்மை பெற்று வருகின்றது.
தமிழ்நாட்டின் மீது இந்தி ஆதிக்கத்தை வலுப்படுத்தவும், சமற்கிருத மேலாண்மையை நிறுவவும், கல்வியை முற்றிலும் தனியார்மயமாக்கவும் மோடி அரசு “தேசியக் கல்விக் கொள்கை – 2020”ஐ அறிவித்தது. தமிழ்நாட்டின் பெரும்பான்மையினராக உள்ள ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களை கல்வியிலிருந்து படிப்படியாக வெளியேற்றும் வகையில், மோடி அரசு 2020ல் சூழ்ச்சியாக முன்வைத்துள்ள இக்கல்விக் கொள்கையை தமிழ்நாட்டின் மீது திணிக்க முயல்வதை எதிர்த்து, தமிழ்த்தேசியப் பேரியக்கம் தொடர்ந்து குரல் கொடுத்து வந்துள்ளது.
1ஆம் வகுப்பு – 3ஆம் வகுப்பு – 5ஆம் வகுப்பு – 8ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத் தேர்வு வைத்து மாணவர்களை அலைக்கழிப்பது, இத்தேர்வுகளில் தோல்வியுறும் மாணவர்களுக்கு “தொழில் பயிற்சி” என்ற பெயரில் குலக்கல்வியை அளித்து பள்ளிகளிலிருந்து அவர்களை வெளியேற்றுவது, பி.எம்.சிறீ (PM SHRI) பள்ளி என்ற பெயரில் ஒன்றியத்திற்கு ஒரு பள்ளியை உருவாக்கி, அருகிலுள்ள பிற பள்ளிகளை இழுத்து மூடுவது எனப் பல்வேறு ஆபத்தானக் கூறுகளை செயல்படுத்தி, கல்வியிலிருந்து மக்களை படிப்படியாக வெளியேற்றி, கல்வியை மறுக்கும் கொள்கையையே “தேசியக் கல்விக் கொள்கை - 2020” என்ற பெயரில் மோடி அரசு முன்வைத்துள்ளது.
கலை அறிவியல் கல்லூரிகள் உட்பட அனைத்திற்கும் அனைந்திந்திய நுழைவுத் தேர்வு வைத்து, இந்திக்காரர்களை தமிழ்நாட்டின் அரசுக் கல்வி நிலையங்களில் திணிக்க திட்டமிடுகிறது.
இவ்வாறான “தேசியக் கல்விக் கொள்கை”யை எதிர்க்கிறோம் என வெளியில் கூறிக் கொண்டு, அக்கொள்கையில் கூறப்பட்டுள்ள “இல்லம் தேடிக் கல்வி” - “நான் முதல்வன்” திட்டம் - “எண்ணும் எழுத்தும்” திட்டம் என பல்வேறு கூறுகளை தனித்தனித் திட்டங்களாக செயல்படுத்தி வரும் “திராவிட” மாடல் அரசின் துரோகச் செயல்பாடுகளை மக்கள் மன்றத்தில் தொடர்ந்து நாம் அம்பலப்படுத்தி வருகிறோம்.
இந்நிலையில், “தேசியக் கல்விக் கொள்கை”யை முழுமையாக ஏற்றுக் கொண்டால்தான், தமிழ்நாட்டிற்கு நிதி தர முடியும் என இந்திய அரசு ஆணவத்தோடு அறிவிப்பதும், “மூன்றாவதாக ஏதாவதொரு அயல்மொழி” என்ற பெயரில் தமிழ்நாடு - புதுச்சேரியில் இந்தியைத் திணிக்க இந்திய அரசு தீவிரம் காட்டுவதும், தமிழ்நாடு தில்லிக்காரர்களுக்கு காலனியாக உள்ள உண்மையையே அப்பட்டமாக வெளிக்காட்டுகிறது.
தமிழ்நாட்டிலிருந்து கோடிகோடியாக வரி விதித்து அள்ளிச் செல்லும் இந்திய அரசு, தமிழ்நாட்டிற்குரிய நிதிப் பங்கைத் தருவதற்கு கல்விக் கொள்கையை நிபந்தனையாக்குவது அப்பட்டமான அடாவடித்தனமாகும். இந்திய அரசு உடனடியாக எந்த நிபந்தனையுமின்றி, பள்ளிக் கல்விக்கு அளிக்க வேண்டிய நிதிப்பங்கை உடனடியாக வழங்க வேண்டும். இந்திய அரசு மாநிலங்களுக்குத் திருப்பித் தரும் நிதியை “மானியம்” என்று கூறுவது நாட்டாண்மை ஆதிக்கமாகும். பகிர்வுத் தொகை என்று மட்டுமே கூற வேண்டும்.
1976இல், அவசரநிலைக் காலத்தில் இந்திரா காங்கிரசு ஆட்சி, கல்வியை மாநில அதிகாரப் பட்டியலிலிருந்து பறித்துச் சென்றதை மாற்றி, மீண்டும் மாநில அதிகாரப் பட்டியலுக்குக் கல்வியைக் கொண்டு வருவதுதான் இதற்கான தீர்வை வழங்கும்.
இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய அரசின் இந்தி ஏகாதிபத்திய மனநிலைக்கு எதிராக தமிழ் மக்கள், போர்க்குரல் எழுப்பிப் போராட வேண்டுமென தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழு அழைக்கிறது! “தேசியக் கல்விக் கொள்கை” என்று சொல்லப்படும் இந்தி – சமற்கிருத மேலாதிக்கக் கொள்கையிலிருந்து, தமிழ்நாட்டிற்கு முழுமையாக விலக்கு அளிக்கவும், தமிழ்நாட்டுக்கென தனித்த கல்விக் கொள்கையை உருவாக்கவும் வலியுறுத்துகிறது!
தீர்மானம் – 3
============
உச்ச நீதிமன்றத்தில் வழக்கிருக்கும்போதே மேக்கேத்தாட்டு அணைக்கான ஆய்வுப் பணிகளை கர்நாடகம் மேற்கொண்டது சட்டவிரோதமானது!
கர்நாடகத்தில், காவிரியின் குறுக்கே மேக்கேத்தாட்டில் அணை கட்டுவதற்கான அடிப்படை ஆயத்தப் பணிகள் முடிவடைந்து விட்டது என்றும், விரைவில் சில துறைகளில் அனுமதி பெற்றவுடன் அணை கட்டப்படும் என்றும், கடந்த 07.03.2025 அன்று கர்நாடக சட்டப்பேரவையில் நடந்த வரவு செலவுக் கூட்டத் தொடரில், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. சில துறைகளில் அனுமதி வேண்டும் என ஒப்புக்குத்தான் கர்நாடக முதல்வர் கூறுகிறார். இந்திய அரசின் அனுமதி இல்லாமல் அணை கட்ட முடியாது என தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகனும் கூறி வருகிறார். ஆனால், கடந்த காலங்களில் கர்நாடகத்தில் சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட ஏமாவதி, ஏரங்கி, கபிணி, சுவர்ணவதி ஆகிய அணைகளைக்கு இந்திய அரசு எவ்வித அனுமதியையும் தரவில்லை.
தமிழ்நாட்டின் 22 மாவட்டங்களுக்குக் குடிநீராகவும், 12 மாவட்டங்களுக்குப் பாசன நீராகவும் பயன்பட்டு, தமிழினத்தின் செவிலித்தாயாக விளங்கும் காவிரி தடுக்கப்பட்டால், ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் பாலைவனமாகும் பேராபத்து உள்ளது. எனவேதான், தமிழ்நாட்டு உழவர்களும், தமிழ் மக்களும் மேக்கேத்தாட்டு அணைக்கு ஒருசேரக் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்.
கடந்த 2007இல் வழங்கப்பட்ட காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பிலும், 2018இல் உச்ச நீதிமன்றம் அளித்த இறுதித் தீர்ப்பிலும் காவிரியின் குறுக்கே தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் அணை கட்ட கூடாதென தெளிவாக தீர்ப்புரைத்துள்ள நிலையில், மோடி அரசின் நீராற்றல் அமைச்சகம், கடந்த 2019ஆம் ஆண்டு மேக்கேத்தாட்டு அணைக்கான விரிவானத் திட்ட அறிக்கையைத் (Detailed Project Report) தயாரிக்க கர்நாடக அரசுக்கு அனுமதி அளித்தது. அதன்பின், கர்நாடக அரசு இதற்காக சற்றொப்ப 1000 கோடி ரூபாய் அளவுக்கு செலவு செய்து, இந்த ஆயத்தப் பணிகளை இப்போது முடித்துள்ளது.
மேக்கேத்தாட்டு அணைக்கு எதிராக தமிழ்நாடு அரசின் வழக்கு நிலுவையில் இருக்கும் போது, அதற்கான ஆய்வுப் பணிகளை கர்நாடக அரசு மேற்கொண்டது சட்டவிரோதமானது. இந்திய அரசின் மறைமுக ஆதரவு இருப்பதால்தான், கர்நாடகம் இவ்வளவு திமிருடன் நடந்து கொள்கிறது. காவிரித் தீர்ப்பை செயல்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத் தொடர்களில், அத்தீர்ப்பை முடக்குவதற்கான மேக்கேத்தாட்டு திட்டம் குறித்து விவாதிக்க வேண்டுமென ஆணையத்தின் தலைவர் ஹல்தர் திரும்பத் திரும்ப வலியுறுத்துவதன் பின்னணியிலிருந்தே இதனை நாம் புரிந்து கொள்ளலாம்.
காங்கிரசு – பா.ச.க. என எந்தக் கட்சியாக இருந்தாலும், கன்னட இனவெறியர்களின் திட்டங்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டு, தமிழினத்தை வஞ்சிப்பதே இலக்கு என இந்திய அரசு தெளிவாக உள்ளது. இதனைப் புரிந்து கொண்டு செயலாற்ற வேண்டிய மு.க. ஸ்டாலின் அரசு, காங்கிரசின் கூட்டணி தயவுக்காக அமைதி காத்து நிற்பது தமிழினத் துரோகம்!
உடனடியாக, கர்நாடக அரசுக்கு எதிரான பொருளியல் தடையை அறிவித்து, தமிழர்களை ஒன்று திரட்டிப் போராட தமிழ்நாடு அரசும், கட்சிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு அழைப்பு விடுகிறது!
தீர்மானம் – 4
============
முல்லைப் பெரியாறு உச்ச நீதிமன்றத் தீர்ப்பைச் செயல்படுத்த இந்திய அரசை தலையிடச் செய்ய - தமிழ்நாடு அரசு உண்மையாகவே உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்!
தமிழ்நாட்டின் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களுக்குப் பாசன வசதி வழங்கும் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உடனடியாக 142 அடிகள் வரை உயர்த்திக் கொள்ளலாம் என்றும், சிற்றணை எனப்படும் பேபி அணையை பலப்படுத்திய பிறகு 152 அடிகளாக உயர்த்திக் கொள்ளலாம் என்றும் 2014இல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டது.
இத்தீர்ப்பு வந்து 10 ஆண்டுகள் கடந்த நிலையிலும்கூட, காங்கிரசு – சி.பி.எம். என எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், கேரள அரசு இனவெறியுடன் நடந்து கொண்டு, பேபி அணையை பலப்படுத்தும் பணிகளுக்கு தடை ஏற்படுத்தி அடாவடி செய்து வருகிறது. அணைப் பராமரிப்புப் பணிக்காக தமிழ்நாடு பொதுப்பணித்துறையினர் வல்லக்கடவு வழியே கொண்டு சென்ற சரக்குந்தை கேரள அரசு பல மாதங்களாக முடக்கி வைத்தது. அணைப் பராமரிப்புப் பணிக்காக செல்லும் தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு இவ்வாறு இடையூறுகள் ஏற்படுத்தி வரும் கேரள அரசின் அடாவடியைக் கண்டிக்காமல், தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் அவர்களுடன் இணக்கமாக இருப்பதே நடக்கிறது.
உச்ச நீதிமன்றம் அமைத்த வல்லுநர் குழுவே அணை பலமாக உள்ளது என தெளிவாக சான்றளித்துவிட்ட பிறகும், மீண்டும் மீண்டும் அணையின் பலத்தை ஐயத்திற்குட்படுத்தி, புதிய புதிய மனுக்களை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்து வருவது இந்திய அரசின் ஆதரவுடன் கேரள அரசு மேற்கொள்ளும் அப்பட்டமான தமிழர் பகை இனவெறிச் செயல்பாடாகும்!
உச்ச நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்த மறுப்பது ஏன் என கேரள அரசை நோக்கிக் கேள்வி எழுப்பாத இந்திய அரசு, கடந்த 2024இல் முல்லைப் பெரியாறு அணையை தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. இந்த ஆணையத் தலைவர் அனில் ஜெயின் தலைமையில், அணை பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்யப் போவதாக தம் பங்கிற்கு இந்திய அரசு அறிவித்துள்ளது தேவையற்றது.
எனவே, உச்ச நீதிமன்றத் தீர்ப்புப்படி உடனடியாக 142 அடிகள் வரை நீர்மட்டத்தை உயர்த்தவும், பேபி அணையை பலப்படுத்த உரிய பாதுகாப்பு வழங்கி, 152 அடிகள் வரை நீர்மட்டத்தை உயர்த்திக் கொள்ளவும் இந்திய அரசு தலையிடச் செய்ய - தமிழ்நாடு அரசு உண்மையாகவே நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது!
தீர்மானம் – 5
============
திருச்செந்தூர் முருகன் – மருதமலை முருகன் திருக்கோயில் குடமுழுக்குகளை நீதிமன்றத் தீர்ப்புப்படி செந்தமிழில் நடத்துக!
திருச்செந்தூரில் தமிழ்க்கடவுள் முருகப்பெருமானுக்கு அமைந்துள்ள திருக்கோயிலுக்கு வரும் 07.07.2025 அன்று, நடைபெறவுள்ள திருக்குடமுழுக்கு நன்னீராட்டுப் பெருவிழாவை செந்தமிழில் நடத்த வேண்டுமென தெய்வத் தமிழ்ப் பேரவை சார்பில், கடந்த 10.12.2024 அன்று சென்னையிலுள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையரிடமும், கடந்த 8.1.2025 முற்பகல், திருச்செந்தூரில் இந்து சமய அறநிலையத் துறையின் உதவி ஆணையர் அவர்களிடமும், தூத்துக்குடி இணை ஆணையரிடமும் நேரில் சென்று கோரிக்கை மனுக்கள் வழங்கி உள்ளோம். ஆனால், தமிழில் நடத்துவதற்கான முயற்சியில் தமிழ்நாடு அரசு உள்ளதா என்ற ஐயமே மீண்டும் எழுந்துள்ளது.
கடந்த 2015 டிசம்பர் 16இல், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆவது குறித்த வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், “சமற்கிருதத்தில்தான் கருவறை அர்ச்சனை நடைபெற வேண்டும் என்று எந்த ஆகமும் நிபந்தனை விதிக்கவில்லை” என்று உறுதிபடத் தெரிவித்தது. தமிழ்நாடு அரசு, கோயில் கருவறையில் தமிழ் மந்திரம் ஓதி பூசை (அர்ச்சனை) செய்வதற்கு சுற்றறிக்கையும் (சுற்றறிக்கை எண் : 73848/97/கே.1, நாள் 10.09.1997), அதன்பின் தனி அரசாணையும் (அரசாணை (நிலை) எண்: 520, 18.11.1997) வெளியிட்டது. கோயில்களின் கருவறையிலும், கலசத்திலும், வேள்வியிலும் ஓதுவதற்கான தமிழ் மந்திரங்களைத் தமிழ்நாடு அரசு (இந்து சமய அறநிலையத் துறை) அச்சிட்டு நூல்களாக வெளியிட்டுள்ளது. அதற்கென அர்ச்சகர் பயிற்சியும் அரசு கொடுக்கிறது.
தமிழ்ப் பேரரசன் இராசராசன் கட்டிய தஞ்சைப் பெருவுடையார் திருக்கோயில் குடமுழுக்கின் போது (05.02.2020), தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் மற்றும் பிறரும் தொடுத்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பிறப்பித்த ஆணையின்படி (மனு எண் W.P. (MD) No. 1644 of 2020), திருக்கோயில் திருக்குடமுழுக்கு நன்னீராட்டு விழாவில், சமற்கிருதத்திற்கு இணையாக கருவறை – வேள்விச்சாலை – கோபுரக் கலசம் ஆகியவற்றில் தமிழ் மந்திரங்கள் கூறி நடத்த வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அதே ஆண்டு திசம்பரில்(04.12.2020), கரூர் ஆநிலையப்பர் (பசுபதீசுவரர்) திருக்கோயில் குடமுழுக்கைத் தமிழில் நடத்தக் கோரி, தெய்வத் தமிழ்ப் பேரவை செயற்குழு உறுப்பினரும், பதினெண் சித்தர் பீடத்தின் தலைவருமான சித்தர் மூங்கிலடியார் அவர்கள், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடர்ந்த வழக்கில் (WP(MD)/0017750/2020), 03.12.2020 அன்று தீர்ப்பளித்த, நீதிபதிகள் சமற்கிருதத்திற்கு இணையாகத் தமிழ் மந்திரங்கள் கூறி குடமுழுக்கை நடத்த வேண்டுமென ஆணையிட்டனர். அவ்வாறு நடத்த முன்வராத கோயில்களுக்கு 10 இலட்ச ரூபாய் தண்டத்தொகை விதிக்கப்படும் என்றும் எச்சரித்தனர்.
கடந்த செப்டம்பர் (2024) மாதம், தெய்வத் தமிழ்ப் பேரவை செயற்குழு உறுப்பினரும், தமிழ் வேத ஆகமப் பாடசாலை நிறுவனருமான சத்தியபாமா அம்மையார் அவர்கள், சேலம் மாவட்டம், கஞ்சமலை - அருள்மிகு சித்தேசுவரசாமி திருக்கோயில் குடமுழுக்கைத் தமிழில் நடத்திடக் கோரி தொடர்ந்த வழக்கில் (Writ Petition No: 27340 / 2024) கடந்த 12.09.2024 அன்று தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு நீதிபதி டி. கிருஷ்ணக்குமார் மற்றும் நீதிபதி பி.பி. பாலாஜி ஆகியோர் கொண்ட அமர்வு, தமிழில் குடமுழுக்கு நடத்திட ஆணையிட்டது.
மேற்கண்ட நீதிமன்றத் தீர்ப்புகளின்படி, திருக்குடமுழுக்கில் விழாக்களில், வேள்விச்சாலையிலும், கலச நீராட்டலிலும், கருவறை வழிபாட்டிலும் சமற்கிருத அர்ச்சகர்களுக்கு இணையான எண்ணிக்கையில் தமிழ் அர்ச்சகர்களைப் பயன்படுத்தி, தமிழ் மந்திரங்கள் ஓத வேண்டும். ஆனால், தொடர்ச்சியாக பல்வேறு திருக்கோயில் குடமுழுக்குகளில் இத்தீர்ப்புகளை சுட்டிக்காட்டி கோரிக்கை மனுக்கள் வழங்கியும், போராட்டங்கள் நடத்தியும் கூட தமிழ்நாடு அரசு இத்தீர்ப்பை செயல்படுத்தாமல், கருவறைத் தீண்டாமையைக் கடைபிடிப்பது கடும் கண்டனத்திற்குரியது.
எனவே, தமிழ்நாடு அரசு தன் போக்கைத் திருத்திக் கொண்டு, தமிழ்க் கடவுள் முருகனுக்கு திருச்செந்தூரில் அமையப் பெற்றுள்ள திருக்கோயிலின் குடமுழுக்கையும், வரும் 2025 ஏப்ரல் மாதம் கோவை மருதமலையிலுள்ள முருகன் திருக்கோயில் குடமுழுக்கையும் - நீதிமன்றத் தீர்ப்புக்கு இணங்க, கருவறை – வேள்விச்சாலை – கலசம் உள்ளிட்ட அனைத்து நிலைகளிலும் - அனைத்து தெய்வச் சடங்குகளிலும் சமற்கிருத அர்ச்சகர்களுக்கு இணையான எண்ணிக்கையில் தமிழ் அர்ச்சகர்களைக் கொண்டு, தமிழில் மந்திரங்கள் ஓதி சடங்குகள் செய்து, சிறப்புற நடத்த வேண்டுமென இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையை தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது!
=====================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=====================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
=====================================


 

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT