உடனடிச்செய்திகள்

Monday, April 28, 2025

2025-2026 கல்வியாண்டில் மருத்துவம் - பொறியியல் கல்வி அனைத்துப் பிரிவுகளும் தமிழ்வழியில் வேண்டும்! சித்த மருத்துவம் தமிழில்தான் வேண்டும்! பெ. மணியரசன்


2025-2026 கல்வியாண்டில்
மருத்துவம் - பொறியியல் கல்வி அனைத்துப் பிரிவுகளும்
தமிழ்வழியில் வேண்டும்!
சித்த மருத்துவம் தமிழில்தான் வேண்டும்!


பெ. மணியரசன்


பெ. மணியரசன்
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்
==========================
தமிழ் மொழிக் கல்வி, தமிழ்வழிக் கல்வி (Thamizh Medium) என்ற இரண்டும், ஆங்கிலேயர் ஆட்சியிலும், அடுத்து காங்கிரசின் மாநில ஆட்சியிலும் பெற்றிருந்த இடத்தை, பின்னர் இழந்து விட்டன. ஒன்றாம் வகுப்பிலிருந்து பதினோராம் வகுப்பு வரை (அப்போதைய எஸ்.எஸ்.எல்.சி) அரசுப் பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளிலும் மொழிப்பாடமாகவும் மற்ற பாடங்களுக்கான பயிற்று மொழியாகவும் தமிழ் இருந்தது.
ஆனால், தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சிகளில் மழலையர் பள்ளி, தொடக்க மற்றும் மேல் நிலைப் பள்ளிகளில் 1-ஆம் வகுப்பு முதல் +2 வரை ஆங்கிலம் கட்டாய மொழிப்பாடமாகவும், முழுமையான பயிற்று மொழியாகவும் உள்ளது. அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளிலும், அதே நிலை! இவையன்றி, இந்திய அரசின் பாடத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் செயல்படும் பல்லாயிரக் கணக்கான தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் இந்தி, சமற்கிருதம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிப் பாடத்திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. இவற்றில் சமற்கிருதத்திற்கு மாற்றாக தமிழ் மொழிப்பாடம் இருக்கலாம், இல்லாமலும் சமற்கிருதம், பிரஞ்சு போன்ற வேறு மொழிப்பாடம் இருக்கலாம். தனியார் மழலையர் பள்ளிகளில் தமிழ் வாடை அடித்தால் தரக்குறைவு என்று முழுவதும் ஆங்கில - இந்தி மயமாகிவிட்ட பள்ளிகள் ஏராளம்! இப்பள்ளிகள் பலவற்றில் தமிழில் பேசினால் - ஆசிரியர் கேட்ட வினாவுக்குத் தமிழில் விடை அளித்தால், மாணர்கள் அபராதம் செலுத்த வேண்டும்.
இந்தி, சமற்கிருத ஆதிக்கங்களை எதிர்த்து, தமிழ் மொழிப் பெருமையைப் பேசி, எழுதி வளர்ந்த தி.மு.க. அதிலிருந்து பிரிந்த அ.தி.மு.க. - கட்சிகளின் மாநில ஆட்சிகளில் தமிழ் இவ்வாறு வீழ்த்தப்பட்டது - புறந்தள்ளப்பட்டது ஏன்?
அண்மையில் தமிழ்நாட்டிற்கு வந்த பா.ச.க. ஆட்சியின் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் தமிழ்நாட்டில் மருத்துவக்கல்லூரிகளில் தமிழ் வழிக் கல்வியை ஏன் செயல்படுத்தவில்லை என்று தி.மு.க. ஆட்சியைப் பார்த்து வினா எழுப்பினார்கள். தீவிர இந்தித் திணிப்பாளர்களான அவர்கள் இப்படிக் கேட்கிறார்கள்! இதற்குரிய விடையை தி.மு.க. ஆட்சி அளிக்கவில்லை.
மகாராஷ்டிரத்தின் பா.ச.க. முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், வரும் கல்வியாண்டில் இருந்து அம்மாநிலத்தில் மருத்துவக் கல்லூரிகளில் மராத்தி மொழி வகுப்புகள் தொடங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தாய்மொழிப் பற்றும் தாய் மொழிக் கல்வியும் உயர்ந்துவரும் நிலையில் தமிழ்நாட்டில் தாய்மொழியான தமிழ் சீரழிகிறது.
தமிழ்நாட்டு மக்களில் மிகப் பெரும் பாலோர்க்குத் தமிழ்நாட்டில் உரியவாறு நிரந்தர வேலைவாய்ப்புகள் பெருக்கப்படாத அவலம் தொடர்வதால், அந்தப் பீதியில் ஆங்கிலம் படித்து அயல் மாநிலங்களில், அயல் நாடுகளில், தமிழ்நாட்டுத் தனியார் துறைகளிலாவது வேலை கிடைக்க வேண்டும் என்ற பதற்றத்தில் தங்கள் பிள்ளைகளை ஆங்கில வழி வகுப்புகளில் சேர்க்கிறார்கள் பெற்றோர்கள்! அதேபோல், இந்தி கற்பித்திட சி.பி.எஸ்.இ. தனியார் பள்ளிகளில் கொள்ளைக் கட்டணம் கொடுத்து படிக்க வைக்கிறார்கள்.
இதே அயல்மொழி அடிமை மோகத்தில் தங்கள் பிள்ளைகளுக்கு - ஆண்-பெண் அனைவர்க்கும் சமற்கிருத, இந்திப் பெயர்களைச் சூட்டுகிறார்கள் பெற்றோர்கள். தமிழர் தாய்மொழியும், தமிழ் இனமும் ஒரே நேரத்தில் சீரழியும் அவலம் தொடர்கிறது.
தமிழ் அறிஞர்கள் - தமிழ்ச் சான்றோர்கள் பலர் - தமிழுக்கும் தமிழர்க்கும் ஏற்பட்டுள்ள சீரழிவுகளைக் கண்டு நெஞ்சு பொறுக்காமல் தவிக்கிறார்கள். தமிழ்நாட்டு ஆட்சியாளர்களுக்கு மீணடும்மீண்டும் அற வழியில் - அன்பு வழியில் கோரிக்கை வைக்கிறார்கள்.
அண்மையில், தஞ்சை மாவட்டம் புட்பம் கல்லூரி மேனாள் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் பா. இறையரசன் ஐயா அவர்கள் தலைமையில் தமிழறிஞர்களும், சான்றோர்களும் தமிழ்நாடு உயர்கல்வி அமைச்சர் மாண்புமிகு கோவி. செழியன் அவர்களைச் சந்தித்து, தமிழ் வழிக் கல்விக்காக கோரிக்கை விண்ணப்பம் கொடுத்துள்ளார்கள். “தமிழ் எழுச்சிப் பேரவை” என்ற பொது அமைப்பின் சார்பில் கொடுத்துள்ளார்கள்.
அக்கோரிக்கைகள்:
2025-2026 கல்வியாண்டில் தமிழ்நாடு முழுவதும் உள்ள மருத்துவ மற்றும் பொறியியல் கல்லூரிகளில் தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்ட வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும். இப்போது, ஆங்கில வழியில் இவ்விரு படிப்புகளிலும் உள்ள பிரிவுகள் அனைத்தும் தமிழ் வழியிலும் இருக்க வேண்டும்.
மேற்படி தமிழ் வழி மருத்துவ, பொறியியல் படிப்புகளுக்கு மாணவர்கள் தேர்வு செய்வதில் 50 விழுக்காடு இடங்கள் மேல் நிலைப் பள்ளி வரை, தமிழ் வழியில் படித்த மாணவ - மாணவியர்க்கு ஒதுக்கீடு செய்து வழங்க வேண்டும்.
தமிழ் வழியில் மருத்துவம், பொறியியல் படிக்க முன்வரும் மாணவ - மாணவியர்க்கு 50 விழுக்காடு கட்டணச் சலுகை வழங்கவேண்டும். தனியார் கல்லூரிகளில் இக்கட்டணச் சலுகையை அரசு தன் பொறுப்பில் ஏற்றாவது வழங்க வேண்டும்.
அரசு வேலைகளில் 50 விழுக்காடு வேலைகள் தமிழ்வழியில் மருத்துவம் பொறியியல் படித்த மாணவ - மாணவியர்க்கு ஒதுக்க வேண்டும்.
இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரீசியஸ், கனடா உள்ளிட்ட தமிழ் ஆட்சி மொழியாகவும் கல்வி மொழியாகவும் உள்ள நாடுகளில் தமிழ்நாட்டில் தமிழ்வழியில் பயின்ற மருத்தவர்களுக்கும் பொறியாளர்களுக்கும் வேலை கிடைக்கும் வாய்ப்புகளை, - அந்நாடுகளின் அரசுகளுடன் தமிழ்நாடு அரசு பேசி, இந்திய அரசின் ஒப்புதலையும் பெற்று - உருவாக்க வேண்டும்.
இந்தியாவில், தமிழ்நாட்டில் தமிழர்கள் நடத்தும் தனியார் நிறுவனங்களிலும் தமிழ்வழியில் கற்றோர்க்கு முன்னுரிமை கொடுத்து அவர்களை வேலையில் சேர்க்க வேண்டும்.
தமிழ் சித்த மருத்துவத்தை ஆங்கில வழியில் கற்பித்து ஆயுஷ் - ஆயுர் வேதம் என்ற சமற்கிருத மயமாக்கலை இந்திய அரசு கைவிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும்.
தமிழ் சித்த மருத்துவத்திற்கு தமிழ்நாடு அரசு உடனடியாக தனி பல்கலைக்கழகம் தொடங்க வேண்டும்.
தமிழ் சான்றோர்களின் மேற்கண்ட கோரிக்கைகள், தமிழ்நாட்டில் அனைத்துப் பிரிவு தமிழ்த்தேசியர்கள், தமிழ்மொழி, இன உணர்வாளர்கள், மண்ணின் மக்கள் அனைவரின் கோரிக்கைகளும் ஆகும்!
தி.மு.க. ஆட்சி தனது ஐந்தாண்டை நிறைவு செய்யும் நிலையில், 2025-26 ஆண்டில், இக்கோரிகைகளை நிறைவேற்றி, தமிழ் - தமிழர் - தமிழ்நாடு காப்புக்குத் தக்க பணிகளை நிறைவேற்றித் தருமாறு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைக் கனிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
பெ. மணியரசன்
தஞ்சாவூர்,
==============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
======================================

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT