உடனடிச்செய்திகள்

Friday, April 4, 2025

கோவை – மருதமலை முருகன் கோயில் குடமுழுக்கில் வேள்விச்சாலையில் தமிழ்மொழிப் புறக்கணிப்பு! பெ. மணியரசன் கண்டனம்!



சென்னை உயர் நீதிமன்ற ஆணையைத் தூக்கியெறிந்து
கோவை – மருதமலை முருகன் கோயில் குடமுழுக்கில்
வேள்விச்சாலையில் தமிழ்மொழிப் புறக்கணிப்பு!
நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் போடப்படும்!


பெ. மணியரசன்



தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர்
பெ. மணியரசன் கண்டனம்!
===========================================
சென்னை உயர் நீதிமன்றத்தின் ஆணையைத் துச்சமாகத் தூக்கி எறிந்துவிட்டு, தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை, கோவை மாவட்டம் மருதமலை முருகன் கோயில் திருக்குடமுழுக்கு வேள்விச்சாலை பூசையை (யாக சாலையை) முழுக்க முழுக்க சமற்கிருத மொழியிலேயே நடத்தித் தமிழ் மந்திரங்களை முற்றிலுமாகப் புறக்கணித்துள்ளது.
இன்று (04.04.2025) நடக்கவிருந்த மருதமலை முருகன் கோயில் குடமுழுக்கைத் தமிழ் வழியில் நடத்த ஆணை இடக்கோரி, 2020இல் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய இரு தீர்ப்புகளைச் சுட்டிக்காட்டி, கோவை சண்டிகேசுவரி சேவை அறக்கட்டளைத் தலைவர் டி. சுரேசுபாபு அவர்களும், நாம் தமிழர் கட்சி சார்பில், எம்.பி. விசயராகவன் அவர்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தனர். அவ்வழக்கில் (W.P. No. 9805 / 2025), மருதமலை முருகன் கோயில் செயல் அலுவலரும், இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையருமான திரு. ஆர். செந்தில்குமார், சென்னை உயர் நீதிமன்றத்தில் 28.03.2025 அன்று நேர்நின்று எழுத்து வடிவில் தாக்கல் செய்த பதில் மனுவில், மேற்படித் திருக்கோயில் குடமுழுக்கின்போது வேள்விச் சாலையில் மொத்தம் 73 வேள்விக் குண்டங்கள் வைப்போம். அவற்றில், 36 குண்டங்களில் தமிழ் மந்திரங்கள் ஓதியும், 36 குண்டங்களில் சமற்கிருத மந்திரங்கள் ஓதியும் பூசை செய்வோம் என்று உறுதி கூறி இருந்தார். அதையே, சென்னை உயர் நீதிமன்றம் ஆணையாக்கி – 28.03.2025 அன்று இடைக்காலத் தீர்ப்பு வழங்கி, அசல் வழக்கு விசாரணையை 16.04.2025க்குத் தள்ளி வைத்தது.
ஆனால், சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பை முற்றிலுமாக – 100க்கு 100 புறக்கணித்து, 30.03.2025 தொடங்கி நடந்த வேள்விச்சாலை வழிபாட்டில் சமற்கிருதத்தில் மட்டுமே மருதமலை முருகன் கோயில் குடமுழுக்கில் மந்திரங்கள் சொல்லி, தமிழ் மந்திரங்களைப் புறக்கணித்துள்ளனர்.
அங்கு நேரில் நிகழ்வுகளைப் பார்த்துக் கொண்டிருந்த, தெய்வத் தமிழ்ப் பேரவையின் செயற்குழு உறுப்பினரும், தமிழ் வேத ஆகமப் பாடசாலை நிறுவனருமான சிம்மம் சத்தியபாமா அம்மையார் அவர்களும், சித்தர் மூங்கிலடியார் அவர்களும், தமிழ்த்தேசியப் பேரியக்கக் கோவை செயலாளர் தோழர் பாலகுமரன் உள்ளிட்டோரும், 03.04.2025 அன்று மேற்படி செயல் அலுவலர் / துணை ஆணையர் செந்தில்குமாரிடம், “நீதிமன்ற ஆணையைப் புறக்கணித்து, முழுக்க சமற்கிருதத்திலேயே யாக சாலையில் மந்திரம் சொல்கிறார்கள். வேள்விச் சாலையில் 36 குண்டங்களில் தமிழ் மந்திரங்கள் ஓதப்படும் என்று நீதிமன்றத்தில் சொன்னீர்களே, அவர்கள் எங்கே?” என்று கேட்டபோது, அதற்கு எல்லா வேள்விச்சாலையிலும் தமிழ் மந்திரம் தான் ஓதப்படுகிறது என்று அப்பட்டமாகப் பொய் கூறியுள்ளார்.
நீதிமன்ற ஆணை இருந்தும்கூட, மருதமலை திருக்கோயிலில் மட்டுமின்றி, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் குடமுழுக்குகளிலும் இதே தமிழ்ப் புறக்கணிப்பைத்தான் திராவிட மாடல் அரசு செய்து வருகிறது. குடமுழுக்கின் மையச் சடங்குகள் நடைபெறும் கருவறை – வேள்விச்சாலை – கோபுரக் கலசம் ஆகிய மூன்று நிலைகளிலும் பிராமணர்களைக் கொண்டு சமற்கிருத வழிபாட்டை நடத்திவிட்டு, இவற்றுக்குத் தொடர்பில்லாமல் கோயில் பிரகாரங்களில் நின்று - தமிழ் ஓதுவார்களிடம் ஒலிப்பெருக்கியில் பாட்டுப் பாடச்சொல்லி, மக்களை ஏமாற்றும் அநீதியையே தமிழ்நாடு அரசு அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாடு அரசின் இந்தத் தமிழ்த் தீண்டாமையை தெய்வத் தமிழ்ப் பேரவை வன்மையாகக் கண்டிக்கிறது!
தமிழ் மந்திரம் ஓதி யாகசாலை நடத்த உறுதி கொடுத்துவிட்டு, உயர் நீதிமன்றத்தையும் ஏமாற்றிய இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் செந்தில்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில், நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
================================
தெய்வத் தமிழ்ப் பேரவை
================================
முகநூல்: www.fb.com/theivathamizh
சுட்டுரை: www.twitter.com/TheivigaThamizh
பேச: 98419 49462, 94439 18095
================================

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT