உடனடிச்செய்திகள்

Tuesday, April 8, 2025

ஆளுநர் இரவி தானே பதவி விலக வேண்டும் அல்லது குடியரசுத் தலைவர் அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும்! பெ. மணியரசன் கோரிக்கை!


உச்ச நீதிமன்றத் தீர்ப்பு:
ஆளுநர் இரவி தானே பதவி விலக வேண்டும்
அல்லது குடியரசுத் தலைவர் அவரைப்
பதவி நீக்கம் செய்ய வேண்டும்!

பெ. மணியரசன்



தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
பெ. மணியரசன் கோரிக்கை!
===================================
தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய பத்து சட்ட முன் வரைவுகளுக்கு (மசோதாக்களுக்கு) ஆளுநர் இரவி, ஒப்புதல் தராமல் காலவரம்பின்றி கிடப்பில் போட்டும், குடியரசுத் தலைவருக்கு அனுப்பியும் சர்வாதிகாரம் செய்ததற்கு உச்ச நீதிமன்றம் சவுக்கடி தருவது போல் இன்று (08.04.2025) கடும் கண்டனம் தெரிவித்திருப்பது, மாநிலங்களின் உரிமைகளுக்கு நிற்போர் அனைவர்க்கும் பெரு மகிழ்ச்சி தருகிறது.
சிறப்புமிக்க இத்தீர்ப்பை வழங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பர்திவாலா மற்றும் மகாதேவன் இருவரும் அரசமைப்புச் சட்ட உறுப்பு 200க்கு சிறப்பான விளக்கத்தை தந்திருப்பதும் பெரும் வரவேற்புக்குரியது.
சட்டப்பேரவை நிறைவேற்றி அனுப்பிய சட்ட முன்வரைவில் ஆளுநர் குறை கண்டால், அவற்றைச் சுட்டிக்காட்டி, அத்திருத்தங்களைச் செய்து, திரும்ப அனுப்புமாறுதான் ஆளுநர் கோர வேண்டும். ஒப்புதலும் தராமல், எந்தக் கருத்தும் கூறாமல், தன்னிடம் வந்த சட்ட முன்வரைவைக் காலவரம்பின்றி ஆளுநர் கிடப்பில் போட்டு வைக்க ஆளுநர்க்கு அதிகாரம் இல்லை. திருத்தங்களைச் சுட்டிக்காட்டி – மாநில அரசுக்குத் திருப்பி அனுப்பும் சட்ட முன்வரைவுகளை, சட்டப்பேரவை சரி செய்தோ அல்லது பழைய நிலையிலோ இரண்டாவது தடவை நிறைவேற்றி அனுப்பினால், அதற்கு ஒரு மாதத்திற்குள் ஆளுநர் ஒப்புதல் தர வேண்டும்.
முதல் தடவை அனுப்பப்பட்ட சட்ட முன்வரைவை, மூன்று மாதங்களுக்குள் ஆய்வு செய்து ஆளுநர் ஒப்புதல் வழங்க வேண்டும் அல்லது சட்டப்பேரவைக்குத் திருப்பி அனுப்ப வேண்டும் என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் உறுப்பு 200க்கு மிகச் சரியான விளக்கம் அளித்துள்ளனர்.
உறுப்பு 200-இல், சட்டப்பேரவை நிறைவேற்றி அனுப்பும் சட்ட முன்வரைவுக்கு எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக (As Early as possible) – ஒப்புதலோ அல்லது திருத்தங்களோ தெரிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு முதல் கட்டத்தில் மூன்று மாதமும், இரண்டாம் கட்டத்தில் ஒரு மாதமும் என்று நீதிபதிகள் துல்லியமான காலவரையறை செய்தது மிகமிகச் சிறப்பு; தேவையான சனநாயக நடவடிக்கை!
தமிழ்நாடு அரசு அனுப்பிய அந்த 10 சட்ட முன்வரைவுகளுக்கும், ஆளுநர் ஒப்புதல் தந்ததாகக் கருதி, அவை இன்றிலிருந்து சட்டமாக்கப்படுகின்றன என்று உச்ச நீதிமன்றம் உடனடியாக அறிவித்திருப்பது மிகமிகச் சரியானது மட்டுமின்றி, தேவையான நடவடிக்கையாகும்!
இப்பின்னணியில், இந்திய அரசமைப்புச் சட்டத்தைப் புறக்கணித்து – அவமதித்து, தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கையோடும், உரிமைகளோடும் “சர்வாதிகாரத் திருவிளையாடல்” நடத்தி, ஒப்புதல் வழங்காமல் எதேச்சாதிகாரம் செய்த ஆளுநர் இரவியை உச்ச நீதிமன்ற அமர்வு கண்டித்திருக்கிறது. உடனடியாக இரவி தமிழ்நாடு ஆளுநர் பதவியிலிருந்து விலக வேண்டும்; அவ்வாறு விலகவில்லை என்றால், இந்தியக் குடியரசுத் தலைவர் ஆளுநர் பதவியிலிருந்து இரவியை நீக்க வேண்டும் என்றும், தமிழ்நாடு அரசு இக்கோரிக்கையை முன்வைக்க வேண்டும் என்றும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
===============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
===============================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
===============================

 

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT