உடனடிச்செய்திகள்

Wednesday, April 2, 2025

கச்சத்தீவு தீர்மானம் மோடியிடம் கெஞ்சும் மு.க. ஸ்டாலின்! தோழர் கி. வெங்கட்ராமன்



கச்சத்தீவு தீர்மானம்
மோடியிடம் கெஞ்சும் மு.க. ஸ்டாலின்!

தோழர் கி. வெங்கட்ராமன்



பொதுச் செயலாளர்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
===============================
இன்று (2.04.2025) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்மொழிந்து சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் “தமிழ்நாட்டு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை நிலைநாட்டிடவும், இலங்கை கடற்படையால் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு ஏற்படும் அனைத்து இன்னல்களைப் போக்கிடவும், கச்சத்தீவை மீண்டும் பெறுவதே நிரந்தரத் தீர்வாக அமையும். இதனைக் கருத்தில் கொண்டு இந்திய இலங்கை ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்து, கச்சத்தீவைத் திரும்பப் பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்” என்று இந்திய அரசைக் கோருகிறது.
ஈயம் பூசியது போலவும் இருக்க வேண்டும், பூசாமலும் இருக்க வேண்டும் என்ற உத்தியில் வெறும் கணக்குக் காட்டுவதற்கான தீர்மானம் இது.
இதைவிட வலுவான தீர்மானங்கள் செயலலிதா ஆட்சிகாலத்தில் 1991-லும் 2013 லும் சட்டமன்றத்தில் இயற்றப்பட்டிருக்கின்றன. பலவீனமான முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் கூட, 2014 டிசம்பரில் கச்சத்தீவு மீட்பு தீர்மானம் இயற்றப்பட்டிருக்கிறது.
எல்லாவற்றையும் விட மிகவும் முனை மழுங்கிய தீர்மானம் இது.
தீர்மானத்தில் எந்த இடத்திலும் கச்சத்தீவு தமிழர் தாயகப் பகுதி என்றோ, உச்ச நீதிமன்ற வழக்கில் இந்திய அரசின் நிலைப்பாடு தமிழ்நாட்டு உரிமைக்கு எதிரானது என்றோ ஒரு வரி இல்லை.
இந்த ‘வழவழா‘ தீர்மானத்தைக்கூட, சட்டமன்றத்தில் ஆதரித்து வாக்களிக்க காங்கிரசுத் தலைவர் செல்வப்பெருந்தகை, “மீனவர் நலனுக்காக என்று சொன்னதால், இத் தீர்மானத்தை ஆதரித்தோமே தவிர, அன்றைய தலைமை அமைச்சர் இந்திராகாந்தி கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுத்தது தவறல்ல” என்று விளக்கமளித்தார்.
கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுத்தது கொடுத்ததுதான், அந்த ஒப்பந்தத்தை மாற்றி அமைக்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் மீண்டும் மீண்டும் வலியுறுத்தும் பா.ச.க. அரசின் தமிழினப் பகை வெறியை மறைத்துப் பேசிய பா.ச.க. உறுப்பினர் வானதி சீனிவாசன், ‘பா.ச.க. எப்போதுமே கச்சத்தீவு உரிமையில் உறுதியாக இருக்கிறது. கச்சத்தீவை மீட்கத் தகுதியானவர் மோடிதான்‘ என்று பேசினார்.
கச்சத்தீவு சிக்கல் எழுந்த காலத்தில், அண்ணா தி.மு.க. கட்சியைத் தொடங்கி விறுவிறுப்பாக நடத்திக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர். அதுபற்றி மௌனம் காத்தார் என்பதை மறைத்து, கச்சத்தீவு உரிமையில் என்றென்றும் உறுதியானவர்கள் தாங்கள்தான் என்பது போல் அ.தி.மு.க. உறுப்பினர்களும் பேசினார்கள்.
கச்சத்தீவு ஒப்பந்தம் குறித்த விளக்க அறிக்கையை அன்றைக்கு நாடாளுமன்றத்தில் இந்திராகாந்தி அரசு முன்வைத்தபோது வலுவாக எதிர்வாதம் செய்யாமல் வெளிநடப்பு செய்தவர்கள்தான் தி.மு.க.வினர் என்ற உண்மையை மறைத்து, அன்றைய முதலமைச்சர் கருணாநிதி கச்சத்தீவு ஒப்பந்தத்தைக் கடுமையாக எதிர்த்தார் என்று பொய்யுரைத்தார் மு.க. ஸ்டாலின். இத்தீர்மானத்தை முன்மொழிந்தபோது மு.க. ஸ்டாலினின் முயற்சி கருணாநிதி மீது படிந்துள்ள வரலாற்றுக் கறையை நீக்கும் பெருமுயற்சியாகவே இருந்தது. ஆனால் தமிழின வரலாறு கருணாநிதியின் துரோகத்தை ஒருநாளும் மன்னிக்காது.
கச்சத்தீவு ஒப்பந்த வரைவு இறுதி செய்யப்பட்ட நிலையில், ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு, 1974 சூன் 19 அன்று சென்னையில் அன்றைய முதலமைச்சர் கருணாநிதியை சந்தித்து இவ்வொப்பந்தம் குறித்து விளக்கமளித்த இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் கேவல்சிங் அச்சந்திப்பு குறித்து மிக விளக்கமான கடிதம் ஒன்றை இந்திய தலைமை அமைச்சர் இந்திராகாந்திக்கு அன்றைக்கே அனுப்பினார்.
“இந்த ஒப்பந்தத்தை இரண்டாண்டுகள் தள்ளிப்போட முடியுமா” என்று கெஞ்சியதைத்தவிர எந்தவித வலுவான எதிர்ப்பையும் கருணாநிதி காட்டவில்லை என்பதைக் கேவல் சிங்கின் கடிதமே கூறுகிறது.
கச்சத்தீவு சிக்கல் என்பது மீனவர்களின் மீன்பிடி உரிமை குறித்த சிக்கல் மட்டுமல்ல, இது அடிப்படையில் தமிழர் தாயகம் குறித்த சிக்கல்.
கச்சத்தீவு பறிபோனது தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வுரிமையை மட்டுமின்றி தமிழினத்தின் வாழ்வுரிமையையும் பறிப்பதற்கு அடிப்படையாக அமைந்தது.
தமிழினத்திற்கு எதிரான நடவடிக்கை என்று வந்துவிட்டால், இந்திய ஆரிய வல்லாதிக்கம் எந்த சட்டத்தையும் மதிக்காது, எல்லாவற்றையும் கிழித்தெறியும் என்பதற்கு கச்சத்தீவு ஒப்பந்தம் ஒரு சான்று!
இந்திய அரசமைப்புச் சட்டப்படி கச்சத்தீவு இந்திய ஆட்சிப்பரப்பில் இருந்த ஒரு பகுதி.
அரசமைப்புச் சட்டப்படி, இந்திய அரசின் கீழ் உள்ள ஆட்சிப்பரப்பில் (territory of India) மாற்றங்களோ, நீக்கங்களோ, சேர்க்கைகளோ செய்வதாக இருந்தால், உறுப்பு 368-இன்படி நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை ஆதரவில் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்தாக வேண்டும். ஏனெனில், இந்திய அரசமைப்புச் சட்டம் எந்த ஆட்சிப்பரப்பு எல்லைவரை செல்லுபடியாகும் என்பது குறித்த உயிரான சிக்கல் இது.
கச்சத்தீவு ஒப்பந்தத்தை ஒட்டி இவ்வாறான அரசமைப்புத் திருத்தம் எதுவும் செய்யப்படவில்லை. இன்றுவரை அவ்வாறான அரசமைப்புச்சட்ட திருத்தம் செய்யப்படவில்லை.
இன்னொன்று, இந்திய அரசமைப்பு உறுப்பு 1 மாநில எல்லைகள் மாற்றம் குறித்து பேசுகிறது. உறுப்பு 1-இன் படி அதுவரை தமிழ்நாடு மாநில எல்லையில் இருந்த கச்சத்தீவு இனிமேல் இல்லை என்பதைக் குறிப்பிட்டு மாநில எல்லை குறித்த சட்டத்தில் திருத்தமாவது செய்திருக்க வேண்டும். அவ்வாறு திருத்தம் செய்வதற்கு முன்னால், அந்த எல்லை மாற்றத்தைக் குறிப்பிட்டு தமிழ்நாடு அரசின் கருத்து கேட்டிருக்க வேண்டும். இவ்வாறு எதுவும் நடைபெறவில்லை.
அதைவிட, பன்னாட்டு கடல் எல்லை பிரிப்பு குறித்த விதிகளுக்கு முற்றிலும் முரணான ஒன்று கச்சத்தீவு குறித்த “இந்தியா - இலங்கைக்கு இடையிலான வரலாற்றுக் கடல் எல்லை மற்றும் அது தொடர்பான செய்திகள் குறித்த ஒப்பந்தம்” ஆகும்.
அண்டை நாடுகளின் கடல் எல்லை வரையறுப்பு குறித்து செயல்பாட்டில் உள்ள கடல் சட்டங்கள் குறித்த ஐக்கிய நாடுகள் ஒப்பந்தம் (United Nations Conventions on the law of the Sea - UNCLOS) விதி 15 வரையறுக்கிறது.
“தேசங்களிடையே உள்ள கடல் எல்லை வரையறுப்பு, நடு எல்லைக் கோடு என்ற விதியைப் பின்பற்ற வேண்டும். இரண்டு அண்டை நாடுகளுக்கு இடையில் உள்ள கடற்பரப்பு சம எல்லைக்கோட்டின் வழியாக பிரித்துக்கொள்ளப் படவேண்டும்” என அவ்விதி கூறுகிறது.
இவ்விதியின்படி, இரண்டு அண்டை நாடுகளுக்கிடையே கடல் எல்லையைப் பிரித்துக் கொள்ளும்போது, இரண்டு கரைகளுக்கும் இடையேயுள்ள கடல் தொலைவு இரண்டு சமமான பகுதிகளாகப் பிரிக்கப்பட வேண்டும்.
இராமேசுவரத்திற்கும் தலைமன்னாருக்கும் இடையில் உள்ள தொலைவு 22.6 கடல் மைல்கள் ஆகும். பன்னாட்டுச் சட்டப்படி இராமேசுவரத்திலிருந்து 11.3 ஆவது கடல் மைலில் எல்லைக் கோடு வரையப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறில்லாமல் இராமேசுவரத்திலிருந்து 8 கடல் மைலும், தலைமன்னாரிலிருந்து 14 கடல் மைலும் வரும் வகையில் வளைத்து நெளித்து இந்திரா - சிரீமாவோ ஒப்பந்தம் வரையப்பட்டது. சட்டப்படி இரண்டு கரைகளுக்கும் இடையில் நடுக்கோட்டில் கடல் எல்லை பிரிக்கப்பட்டால், கச்சத்தீவு இந்திய எல்லைக்குள்தான் வரும். இதை மீறி எப்படியாவது சிங்கள இலங்கைக்கு கச்சத்தீவைக் கொடுத்துவிட வேண்டும் என்ற தீய நோக்கத்தோடு இந்திராவின் இந்திய ஆட்சி, கடல் எல்லையை வரையறுத்தது.
மேற்கூறிய பன்னாட்டு சட்டவிதி 15, “ஏதாவது ஒரு நிலையில், வரலாற்று காரணங்கள் குறித்தோ, சிறப்புச் சூழ்நிலைகளை முன்வைத்தோ, இந்த நேர்கோட்டு விதிக்கு விதிவிலக்கு அளிக்கலாம்” என்று கூறுகிறது.
ஆனால் கச்சத்தீவு ஒப்பந்தத்தில் இவ்விதிப்படியான தனித்த வரலாற்றுக் காரணங்களோ, சிறப்புச் சூழ்நிலை எதுவுமோ குறிக்கப்படவில்லை.
கச்சத்தீவு ஒப்பந்தம் நாடாளுமன்றத்திற்கு “தகவல் அறிக்கையாக” முன்வைக்கப்பட்ட போது கூட, என்ன சிறப்புக் காரணம் குறித்து சமதொலைவு விதி மீறப்பட்டது என்பதற்கான விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை.
இவற்றைச் சுட்டிக்காட்டி, அன்றைக்கு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த மூக்கையா தேவர் எழுப்பிய ஒற்றை உரிமைக் குரல் காட்டில் கரைந்த பறவையின் ஒலியாக கவனிப்பாரற்றுப் போனது.
தமிழர் உரிமை என்று வந்துவிட்டால், அங்கே சட்டத்தின் ஆட்சியே செயலற்றுப் போகும் என்பதைத்தான் ஆரிய இந்தியா கச்சத்தீவு சிக்கலிலும் நமக்கு உணர்த்தியது. அதுபற்றி தி.மு.க. விற்குக் கவலை இல்லை.
இதற்கு முன்பு, அண்மைக்காலமாக இந்திய அரசைக் குறிக்கும்போது “ஒன்றிய அரசு” என்று பேசியதையே ஆகப்பெரிய புரட்சிக் குரல்போல பேசி வந்த மு.க. ஸ்டாலின் இந்தத் தீர்மானத்தில் ‘மத்திய அரசு‘ என்று பம்மத் தொடங்கிவிட்டார்.
பா.ச.க. வோடு அ.தி.மு.க. நெருங்கும் சூழலில், மு.க. ஸ்டாலினது குரலும் இறங்கத் தொடங்கிவிட்டது என்பதற்கான அடையாளம் இது.
கச்சத்தீவு குறித்து தங்கள் ஆட்சியிலும் தீர்மானம் இயற்றியதாகக் கணக்குக் காட்டிக் கொண்டே, இந்திய அரசிடம் கெஞ்சுகிற இன்னொரு தீர்மானமே, சட்டமன்றத்தின் இன்றைய தீர்மானம்!
===============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
==============================

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT