உடனடிச்செய்திகள்

Thursday, March 14, 2019

ஐ.நா. அவையில் இலங்கைக்கு மீண்டும் கால நீட்டிப்பு வழங்காதே! சென்னையில் இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்ட தோழர்கள் கைது!

ஐ.நா. அவையில் இலங்கைக்கு மீண்டும் கால நீட்டிப்பு வழங்காதே! சென்னையில் இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்ட தோழர்கள் கைது!
தமிழீழத்தில் இலட்சக்கணக்கான தமிழீழ மக்களை இனப்படுகொலை செய்து கொன்றொழித்த சிங்கள அரசை குற்றவாளிக் கூண்டில் நிறுத்த முற்படாமல், அவ்வரசுக்கு மீண்டுமொருமுறை வாய்ப்பு வழங்கும் நிகழ்வு ஐ.நா. மனித உரிமையில் நடைபெறவிருக்கிறது.
தற்போது நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமை அவைக் கூட்டத்தில், கடந்த 2015ஆம் ஆண்டு வட அமெரிக்காவின் முன்முயற்சியால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின்படி, சிங்கள அரசு தன்னைத் தானே விசாரித்துக் கொள்ளும் பன்னாட்டு நீதிபதிகள் பங்கேற்புடனான கலப்பு நீதிமன்றத்தை அமைக்க வேண்டுமெனக் கோரியது. 2017ஆம் ஆண்டு வரை அது அமைக்கப்படவில்லை! எனவே, இரண்டாண்டு கால அவகாசம் வழங்கப்பட்டது! இப்போதும் அது அமைக்கப்படவில்லை! இப்போது, மீண்டும் இரண்டாண்டுகள் இலங்கைக்கு கால அவகாசம் வழங்கப்படவுள்ளது.
இந்திய அரசின் செல்வாக்கில் நடைபெற்று வரும் இந்தக் கால நீட்டிப்புகள், தமிழீழத்தில் நடைபெற்று வரும் கட்டமைப்பு இன அழிப்புக்கு துணை செய்யும் நடவடிக்கையாகும்! இதற்கெதிராக தமிழ்நாட்டு மக்களை அணிதிரட்டும் வகையில், *“ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு”* சார்பில், இன்று (14.03.2019) - வியாழன் காலை சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.
சிறீலங்காவிற்கு கால நீட்டிப்பு வழங்கப்படக் கூடாது, சிறீலங்கா அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தின் பார்வைக்கு அல்லது போர்க்குற்றப் புலன் விசாரணைக்கென்று சிறீலங்காவுக்காக அமைக்கப்படும் சிறப்புப் பன்னாட்டுக் குற்றத் தீர்ப்பாயத்தின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும், போரினால் பாதிப்புற்றவர்களின் துயரம் குறித்தும், ஏனைய பன்னாட்டு மனிதவுரிமை, மனிதநேயச் சிக்கல்கள் குறித்தும் கண்காணித்து ஆறு மாதத்துக்கொரு முறை அறிக்கையளிக்கும் பொறுப்பில் சிறீலங்காவுக்கான ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் ஒருவர் அமர்த்தப்பட வேண்டும், இன அழிப்புச் சான்றுகளை அழியவிடாமல் காக்க ஒரு நடுநிலையான பன்னாட்டுப் பொறிமுறை அமைக்கப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து நடைபெற்ற இப்போராட்டத்தில் இலங்கை தூதரகத்தை நோக்கிப் பேரணியாக சென்ற நூற்றுக்கும் மேற்பட்ட பல்வேறு அமைப்புத் தோழர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
கூட்டமைப்பின் தலைவர் தோழர் கொளத்தூர் தா.செ. மணி தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் முனைவர் தொல். திருமாவளவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி துணை பொதுச் செயலாளர் திரு. வேணுகோபால், திராவிடர் விடுதலை கழகத் தலைமை நிலையச் செயலாளர் தோழர் தபசி குமரன், தமிழ்த்தேசிய விடுதலை இயக்கத் தலைமைக் குழு தோழர் தியாகு, த.பெ.தி.க. சென்னை மாவட்ட செயலாளர் தோழர் குமரன், தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் தோழர் மீ.தா. பாண்டியன், 'இளந்தமிழகம்' செந்தில் உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்கள் பங்கேற்றனர்.
தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் தலைமை செயற்குழு தோழர் க. அருணபாரதி, பொதுக்குழு தோழர்கள் பழ.நல். ஆறுமுகம், வெற்றித்தமிழன், முழுநிலவன், இளங்குமரன், வி. கோவேந்தன், தோழர்கள் மணி, தமிழரசன், கண்ணன், வடிவேலன், சந்தோஷ், புலவர் இரத்தினவேலவன் உள்ளிட்ட திரளான பேரியக்கத்தின் தோழர்கள் பங்கேற்றனர்.
கைது செய்யப்பட்டுள்ள தோழர்கள் தற்போது சூளைமேடு தனியார் மண்டபத்தில் அடைத்து வைக்கப் பட்டுள்ளனர்.

ஐ.நா. அவையே! இலங்கைக்கு மீண்டும் கால நீட்டிப்பு வழங்காதே! இனப்படுகொலை குற்றவாளிகளை கூண்டிலேற்று! தமிழீழத்துக்கான பொது வாக்கெடுப்பை நடத்து!

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT