உடனடிச்செய்திகள்

Friday, August 3, 2018

தூத்துக்குடி வழக்கில் ஆட்சியாளர்களின் சட்டவிரோத வழக்குகளுக்கு மதுரை உயர் நீதிமன்றம் சாட்டையடி! தோழர் பெ. மணியரசன் சிறப்புக்கட்டுரை!

தூத்துக்குடி வழக்கில் ஆட்சியாளர்களின் சட்டவிரோத வழக்குகளுக்கு மதுரை உயர் நீதிமன்றம் சாட்டையடி! தோழர் பெ. மணியரசன் சிறப்புக்கட்டுரை!
 
மதுரை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சி.டி. செல்வம் மற்றும் ஏ.எம். பசீர் அகமது ஆகியோர் அமர்வு நேற்று (02.08.2018) தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்துப் போராடிய மக்கள் மீது காவல்துறை போட்டுள்ள நூற்றுக்கணக்கான வழக்குகளை ஒரே வழக்கில் கொண்டு வருமாறு ஆணையிட்டது. அப்போது, நீதிபதி சி.டி. செல்வம் வெளியிட்ட “கண்டனங்கள்” பெரும் ஆறுதலாக உள்ளன.
 
தமிழ்நாடு ஆட்சியாளர்கள் காவல்துறையை தனிப்பட்ட பழிவாங்கும் செயல்களுக்குத் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார்கள். சாதாரணப் பொதுக் கூட்டம் நடத்திட, ஊர்வலம் நடத்திட, சேலம் – திருவண்ணாமலைப் பகுதிகளில் மக்களைச் சந்தித்திட என எதையும் அனுமதிக்காமல் உடனே வழக்குப்போடுவதும் சிறையில் அடைப்பதுமாக இருக்கிறார்கள்.
 
தூத்துக்குடியில் 22.05.2018 அன்று நடந்த 100ஆவது நாள் ஸ்டெர்லைட் எதிர்ப்பு அறப்போராட்டத்தில், 15 பேரைக் காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர். சற்றொப்ப 80 பேர் துப்பாக்கிச் சூடு மற்றும் இரும்புத் தடி தாக்குதலில் எலும்புகள் முறிந்தும், படுகாயமுற்றும் பாதிக்கப்பட்டனர்.
 
ஸ்டெர்லைட் ஆலையை மக்கள் விருப்பப்படி மூடிவிட்டதாக ஒரு பக்கம் சொல்லிக் கொண்டு, அப்போராட்டத்தில் ஈடுபட்ட – ஈடுபடாத வெகுமக்கள் மீது ஏராளமான வழக்குகள் போட்டு கைது செய்து வருகிறது தமிழ்நாடு அரசு! ஒருவர் மீது 80 வழக்கு – 100 வழக்கு என்று போடுகின்றனர். ஒரே நாளில் ஒரே நேரத்தில் ஒரே கோரிக்கைக்காக நடந்த அறப்போராட்டத்தில், தனித்தனி வழக்குகளாக நூற்றுக்கணக்கான வழக்குகள் பதிவு செய்துள்ளது காவல்துறை.
 
இச்சட்டவிரோதச் செயலை எதிர்த்து, மதுரை உயர் நீதிமன்றத்தில் மதுரை வழக்கறிஞர் சான் வின்சென்ட் மற்றும் வழக்கறிஞர் டி. பொன்பாண்டி ஆகியோர் போட்ட பொது நல வழக்கில் நேற்று (02.08.2018) நீதிபதி செல்வம், காவல்துறையின் அத்துமீறலுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் சாட்டை அடி கொடுத்துள்ளார். அதன் சுருக்கம் வருமாறு :
 
“தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டால் துயரத்தில் உள்ள மக்களுக்குக் கருணை காட்டுவதற்கு மாறாகக் காவல்துறையின் கட்டாந்தடியைக் காட்ட வேண்டுமா?
 
ஒரு நபர் மீது 100 வழக்குகள் – 80 வழக்குகள்! எதற்காக? ஒரு வழக்கில் பிணை பெற்றால் இன்னொரு வழக்கில் உள்ளேயே இரு என்று சொல்வதற்காகவா? இவ்வளவு ஆணவமும் இரக்கமின்மையும் அரசுக்கு எப்படி வந்தது? நள்ளிரவில் காவல்துறையினர் வீடுகளின் கதவைத் தட்டி, மக்கள் மனத்தில் பீதியை உண்டாக்குவது எதற்காக? இது பற்றி அரசுக்குக் கவலை எதுவும் இல்லையா?
 
தங்களின் உயிருக்கு உயிரானவர்களைத் துப்பாக்கிச் சூட்டில் பலி கொடுத்த குடும்பத்தினர் தாங்களும் கைது செய்யப்படுவோமோ, தங்களின் நெருங்கிய உறவினர்களும் கைது செய்யப்படுவார்களோ என்று நிரந்தரமாக அச்சப்பட வேண்டும் என்று அரசு விரும்புகிறதா? இதை அறிய நீதிமன்றம் விரும்புகிறது.
நூறாவது போராட்ட நாளன்று (22.05.2018) போட்ட வழக்குகள் அனைத்தையும் - கல்லெறிந்த வழக்கு – கடும் சொற்கள் பேசியதற்கான வழக்கு – சமூக வலைத்தளங்களில் எழுதியதற்கான வழக்குகள் அனைத்தையும் ஒரே வழக்கு ஆக்குங்கள் என்று காவல்துறைக்கு ஆணையிடுகிறோம்”.
 
மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் அரிராகவன் மீது 92 வழக்குகள்! அவை அனைத்திலும் பிணை பெற்ற நிலையில், அவர் மீது ஏவப்பட்ட தேசியப் பாதுகாப்புச் சட்ட தடுப்புக் காவலை இரத்துச் செய்தபோது, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரை உயர் நீதிமன்றத்துக்கு வரவழைத்தக் கண்டனம் தெரிவித்தது இதே சி.டி. செல்வம் – பசீர் அகமது அமர்வுதான்! அதற்கு முன்பு, சூலை 26 அன்று, ஸ்டெர்லைட் போராட்டக் குழு இளைஞர் மகேஷ் மீது போடப்பட்ட குண்டர் தடுப்புக் காவலை இரண்டே நாட்களில் திரும்பப் பெற ஆணையிட்டதும், இதே நீதிமன்ற அமர்வுதான்!
 
நீதித்துறை சட்டத்தையும் நீதியையும் பாதுகாப்பதாக இருக்க வேண்டும் என்ற சட்ட நெறிமுறையை உயர்த்திப் பிடித்துள்ளார்கள் நீதிபதி சி.டி. செல்வமும், பசீர் அகமதும்! தூத்துக்குடி போராட்டம் தொடர்பாக – கண்மூடித்தனமாகத் தேசியப் பாதுகாப்புச் சட்டம், குண்டர் சட்டம் ஆகியவற்றில் ஸ்டெர்லைட் ஆலை மூடல் போராட்டத்திற்குத் துணை நின்ற தோழர்களை சிறையில் தள்ளியது எடப்பாடி அரசு! அந்த ஆணைகளைத் தூக்கி எறிந்து அனைவரையும் விடுதலை செய்தது மதுரை உயர் நீதிமன்றம்!
 
தமிழ்த்தேசியப் பேரியக்கம் 28.07.2018 அன்று திருச்சி உறையூரில் “சனநாயகம் காத்திட – தமிழர் ஒன்றுகூடல்” என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடத்த முறைப்படி எல்லா ஏற்பாடுகளும் செய்தது. கடைசி நேரத்தில் அனுமதி மறுத்தது காவல்துறை. அதே நாளில் மாலை அந்த பொதுக்கூட்டத் திடலுக்கு அருகில் பேரியக்கத் தோழர்களும், உணர்வாளர்களும் திரளாகக் கூடி கண்டன முழக்கம் எழுப்பினோம். ஒலிபெருக்கி இல்லாமல் நான் மட்டும் சிறிது நேரம் தடை விவரங்களைப் பற்றி பேசினேன். அப்போது நான் கூறியதிலிருந்து …
 
“துச்சாதனன் திரவுபதியின் துகிலை உரியும்போது கண்ணபிரான் ஆடை கொடுத்து காப்பாற்றினான். ஆட்சியாளர்கள் சனநாயகத்தின் துகிலை உரியும்போது, கண்ணபிரான் போல் காப்பாற்ற வேண்டியது நீதித்துறை! ஆனால் சில நேரங்களில் – நீதித்துறை ஆட்சியாளர்களின் சட்டவிரோதச் செயல்களை அங்கீகரிக்கிறது. இந்நிலை மாற வேண்டும்!”.
 
நீதிபடி சி.டி. செல்வம் அவர்கள் கண்ணபிரான் போல் செயல்பட்டுள்ளார்.
 
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
 
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhdesiyam.com


போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT