உடனடிச்செய்திகள்

Friday, February 3, 2017

உச்சநீதிமன்ற நீதிபதிகள் அரசமைப்புச் சட்டக் காப்பாளர்களா? கவிழ்ப்பாளர்களா? பெ. மணியரசன் அறிக்கை!

உச்சநீதிமன்ற நீதிபதிகள் அரசமைப்புச் சட்டக் காப்பாளர்களா? கவிழ்ப்பாளர்களா? தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 23.01.2017 அன்று நிறைவேற்றப்பட்ட  “விலங்குகள் துன்புறுத்தல்  தடை -1960 தமிழ்நாடு  திருத்தச்சட்டத்திற்குக்” குடியரசுத் தலைவர் 31.01.2017 அன்று ஒப்புதல் தந்த சில மணிகளுக்குள், அந்தச் சட்டத்தைத் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி தில்லிப் பெருச்சாளி சுப்பிரமணியசாமியும் கட்டற்ற கருணைக் கடல்கள் என்று கூறிக்கொள்ளும் கழுகுகள் சிலவும் உச்சநீதிமன்றத்தில் மனுச் செய்தன.

அதற்காகவே காத்துக் கொண்டிருந்ததுபோல் உடனடியாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக்மிஸ்ராவும் ரோகிண்டன் எப் நாரிமனும்  கிட்டத்தட்ட முழு விசாரணையை நடத்தி முடித்துள்ளனர்.

வழக்கம்போல் அசட்டையாக இல்லாமல் இந்தத் தடவை தமிழ்நாடு அரசு வலுவான வழக்கறிஞர்கள் குழுவை அமைத்து அதை எதிர்கொண்டது. தமிழ்நாடு அரசுத் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் பராசரன்,  ராகேஷ் துவிவேதி, சி.எஸ். வைத்தியநாதன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வாதப் போர் நடத்தினர்.

மான வெட்கமே இல்லையா? மனச்சான்று இல்லையா?

நீதிபதி தீபக்மிஸ்ரா, தமிழ்நாடு வழக்கறிஞர் பராசரனை விளித்துப் பேசியது மிகவும் கவனிக்கத்தக்கது.

”பராசரன், உங்கள் ஆட்சியாளர்களுக்குச் சொல்லுங்கள், நாகரிகச் சமூகத்தில் சட்டம் ஒழுங்குதான் முதன்மையானது. அரசமைப்புச் சட்டத்தின் இறுதி அதிகாரம் படைத்த அமைப்பு உச்சநீதிமன்றம்! அது ஒரு செய்தியை முடிவுக்குக் கொண்டு வந்தபின் அதற்கு முழுமையாகக் கீழ்ப்படிய வேண்டும்; அம்முடிவைச் செயல்படுத்த வேண்டும். நாங்கள் காவிரி வழக்கில் இதைக் கூறினோம்!”

காவிரி வழக்கில் தீபக்மிஸ்ரா கொடுத்த தீர்ப்புகளைக் கழிவறைக் கடிதாசிக்குக் கூடப் பயன்படாது என்று குப்பைக் கூடையில் வீசினர் கர்நாடக ஆட்சியாளர்கள்.

அடுத்தடுத்து உச்சநீதிமன்றம்  தமிழ்நாட்டிற்குத் திறந்து விடச்சொன்ன காவிரி நீரைத் திறந்து விட முடியாது என்று கர்நாடக ஆட்சியாளர்கள் ஒளிவுமறைவின்றி அனைத்துக்கட்சிக் கூட்டத்திலும் சட்டப் பேரவைக் கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றி உலகறிய உச்ச நீதிமன்றத்தை இழிவுபடுத்தினர்

அதுமட்டுமல்ல தமிழர்களுக்குச் சொந்தமான 40 உலாப் பேருந்துகளையும் 150க்கும் மேற்பட்ட சரக்குந்துகள் மற்றும் மகிழ்வுந்துகளையும் கன்னட வெறியர்கள் எரித்துச் சாம்பலாக்கினர். எரிந்த தீ தானே அனையும் வரை அந்தப் பக்கமே எட்டிப்பார்க்கவில்லை கர்நாடகத் தீயணைப்புத் துறையினர்!

கர்நாடக ஆட்சியாளர்களின் உச்சநீதிமன்ற அவமதிப்புச் செயல்கள்  மீதும் வன்முறைகளுக்குத் துணைநின்ற அட்டூழியத்தின் மீதும் இதே தீபக்மிஸ்ரா அமர்வு என்ன நடவடிக்கை எடுத்தது? அவர் அமர்வு தான் காவிரி வழக்கை விசாரித்து வருகிறது.

தானே முன்வந்து தீபக்மிஸ்ரா அமர்வு கர்நாடக முதலமைச்சர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் பதிவு செய்திருக்கலாம்; ஏன் செய்யவில்லை?

இப்போது - தமிழ்நாட்டில் சல்லிக்கட்டு உரிமைக்காக நடந்த மக்கள் எழுச்சியைக் கண்டிக்கிறது தீபக்மிஸ்ரா அமர்வு. 2014-இல் சல்லிக்கட்டைத் தடை செய்ததை எதிர்த்துப் போராடலாமா என்று கேட்கும் அவர், காவிரி வழக்கு நடந்த போது மானத்தை மறந்து விட்டாரா? தமிழர்களைப் போன்ற அப்பாவிகளைப் பார்க்கும் போது தான் அவருக்கு மான உணர்வு வருமா?

காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட, உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்று மோடி அரசு வாதிட்டது. அதற்காகத் தனி விவாதம் நடத்தி, அதிகாரம் உண்டு என்று தீபக்மிஸ்ரா அமர்வு தீர்ப்பளித்தது.  பிறகு ஏன் அவர் அமர்வு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் அமைதியாகிவிட்டது? நாங்கள் தமிழர்கள் என்பதாலா? நீங்களும் மோடி அரசு போல் இனப்பாகுபாடு பார்க்கிறீர்களா?

தீபக்மிஸ்ரா அவர்களே, இறுதி அதிகாரம் மக்கள் கையில் தான் இருக்கிறது. உச்சநீதிமன்றத்திடம் இல்லை! இந்திய அரசமைப்புச் சட்டத்தைத் துச்சமாகத் தூக்கி எறிந்து வரும் கர்நாடகத்தின்மீது பரிவு காட்டி, அரசமைப்புச் சட்டத்திற்கும் நீங்கள் துரோகம் இழைத்துள்ளீர்கள். நீங்கள் அரசமைப்புச் சட்டக் காப்பாளராக இல்லை கவிழ்ப்பாளராக இருக்கிறீர்கள்.

“அமைதியாகவே சென்றாலும் சாலையில் அணிவகுத்துச் செல்ல அனுமதித்தது ஏன்” என்று தீபக்மிஸ்ரா கேட்டார். அதற்கு, “அரசமைப்புச் சட்ட உறுப்பு 19-இன் கீழ் அமைதியாக அறவழியில் போராடும் உரிமை மக்களுக்கு இருக்கிறது என்று தமிழ்நாடு வழக்கறிஞர் சி.எஸ். வைத்தியநாதன் மறுமொழி கூறினார்.

உடனே நீதிபதி ரோகிண்டன் எப் நாரிமன் ”உச்சநீதிமன்றம் சல்லிக்கட்டைத் தடை செய்து 2014 - இல் தீர்ப்பளித்துள்ளது. அத்தீர்ப்பை எதிர்த்து அமைதியாகக் கூட போராடக்கூடாது” என்றார்.

ஜூனியர் நாரிமன் அவர்களே, துள்ளிக்  குதிக்காதீர்கள்! உங்களின் தமிழின வெறுப்பு இந்திய அரசமைப்புச் சட்டத்தை அவமதிப்பதாக அமைந்து விடக் கூடாது!

தமிழ்நாட்டில் நடந்த சல்லிக்கட்டில் நான்குபேர் இறந்து விட்டார்கள்” என்று தீபக்மிஸ்ரா, தமிழர்கள் மீது கருணை காட்டுவது போல் பேசியதற்கு “ டெல்லி கிரிக்கெட்டில் கூட ஒருவர் இறந்து விட்டார். அதற்காக அதைத் தடை செய்யலாமா” என்று இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோத்தகி மிகச் சரியாக எதிர்வினா எழுப்பினார்.

அரசமைப்புச் சட்ட உறுப்பு 29(1) பண்பாட்டு நடவடிக்கைகளுக்குப் பாதுகாப்பு தருகிறது என்று முகுல் ரோத்தகி வாதிட்டதை எதிர்த்த தீபக்மிஸ்ரா “சல்லிக்கட்டு என்பது பண்பாட்டு நடவடிக்கையா என்று பார்ப்போம்” என்று உறுமிவிட்டு வழக்கை ஒத்தி வைத்துள்ளார்.

தமிழர்களே, சல்லிக்கட்டு நடத்த சட்டம் வந்துவிட்டது என்று நாம் கவனக்குறைவாக இருந்திடக்கூடாது. எச்சரிக்கை தேவை! விழிப்புணர்ச்சியும் எழுச்சியும்தான் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும்!

இன்னணம்,
பெ. மணியரசன்
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT