கோட்டை அதிகாரத்தில் மட்டும் கவனம் செலுத்தி காவிரி வழக்கில் கோட்டை விடக்கூடாது. தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை!
காவிரி வழக்கு நாளை (07.02.2017) உச்ச நீதி மன்றத்தில் வருகிறது. தமிழ்நாட்டிற்குச் சட்டப்படியுள்ள காவிரி உரிமைகளை மறுத்து வாதிடுவதற்கு கர்நாடகப் பொதுப்பணித்துறை அமைச்சரும் அதிகாரிகளும் அவர்கள் தரப்பு வழக்கறிஞர் பாலி நாரிமன் அவர்களை தில்லியில் சந்தித்து முன்தயாரிப்புகளைச் செய்துவிட்டனர். இதுபற்றி இரண்டு நாட்களுக்கு முன்பு கர்நாடகப் பொதுப்பணித்துறை அமைச்சர் செய்தியாளர்களிடமும் தெரிவித்தார். ஆனால் தமிழ்நாடு அரசு தரப்பில் நமது வழக்கறிஞர்களுக்கு முழுத்தகவல்களையும் சட்டநுணுக்கங்களையும் தெரிவித்து அவர்களை ஊக்கப்படுத்தும் முயற்சி எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை.
கடந்த காலங்களில் காவிரி வழக்கில் தமிழ்நாட்டுத் தரப்பு வாதங்களை, சட்ட ஞாயங்களைச் சரியாக எடுத்துரைக்கவில்லை என்ற குறைபாடு இருக்கிறது. மூத்த வழக்கறிஞர் நஃபாதே பொறுப்பேற்ற பிறகு அவர் திறமையாக வாதாடி வருகிறார். அவரை மேலும் ஊக்கப்படுத்துவதற்கு அவருக்குத் தேவையான தகவல்களையும் நுட்பச் செய்திகளையும் தமிழ் நாடு அரசு வழங்கினால்தான் அவருடைய ஆற்றலை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
தமிழ்நாடு அரசின் காவிரித் தொழில்நுட்பப் பிரிவுக்குத் தலைவராக உள்ள பொறியாளர் சுப்பிரமணியம் அவர்களின் செயல்பாடுகள் என்னவென்றே தெரியவில்லை. அவருக்குப் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ளனவா அல்லது ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளை அவர் சரியாக நிறைவேற்றவில்லையா என்பது கேள்விக்குறியாக உள்ளது. ஓய்வுபெற்ற தலைமைப் பொறியாளர்களும் மற்ற மூத்த பொறியாளர்களும் பொறியாளர் அ. வீரப்பன் தலைமையில் சங்கமாகச் செயல்படுகிறார்கள்.
இந்த மூத்த பொறியாளர் சங்கம் காவிரி, முல்லைப் பெரியாறு போன்ற ஆற்றுநீர்ச் சிக்கல்களில் தொழில்நுட்ப வகையிலும் சட்ட நுணுக்க வகையிலும் சிறப்பாகத் தாமே முன்வந்து தமிழ்நாட்டின் உரிமைகளை வலியுறுத்திக் கடமையாற்றி வருகிறது.
அவர்களில் காவிரிப் பகுதியில் தலைமைப் பொறியாளராகப் பணியாற்றியவர்களும் இருக்கிறார்கள். அந்த மூத்த பொறியாளர்களில் தகுதியானவர்களை தமிழ்நாடு அரசு உச்சநீதி மன்ற வழக்கில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
தமிழ்நாட்டில் தற்சமயம் அரசியல் நிலையற்ற தன்மை நிலவுவதைப் பயன்படுத்திக் கர்நாடகம் கேரளம் ஆந்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் தமிழ்நாட்டின் ஆற்று நீர் உரிமைகளைப் பறிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. எனவே செயின்ட் ஜார்ஜ் கோட்டை அதிகாரத்தைப் பற்றியே முழுக்கவனத்தையும் செலுத்தி காவிரி வழக்கில் கோட்டைவிடக் கூடாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாடு முதலமைச்சர் உடனடிக் கவனம் செலுத்தி இன்றே காவிரி வழக்கில் நம் தரப்பை வலுப்படுத்துவதற்கு தில்லியிலுள்ள நம் தரப்பு வழக்கறிஞர்களோடு உரியவர்களைக் கொண்டு கலந்தாய்வு நடத்த ஏற்பாடு செய்ய வேண்டுமென்று தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
இன்னணம்,
பெ. மணியரசன்
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
பெ. மணியரசன்
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
Post a Comment