உடனடிச்செய்திகள்

Sunday, August 18, 2013

ஈரோட்டில் நடைபெற்ற சாதி மறுப்புத் திருமணப் பாதுகாப்பு மாநாடு!

ஈரோட்டில் நடைபெற்ற சாதி மறுப்புத்
திருமணப் பாதுகாப்பு மாநாடு!

ஈரோட்டில் 18.08.2013 அன்று சாதி மறுப்பு மக்கள் கூட்டியக்கத்தின் சார்பில் சாதி மறுப்புத் திருமணப் பாதுகாப்பு மாநாடு சிறப்புற நடைபெற்றது.

முன்னதாக மாநாட்டிற்கு ஈரோடு காவல்துறை தடைவிதித்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் இது குறித்த முறையீடு செய்யப்பட்டு, அவ்வழக்கில் மாநாடு நடத்த அனுமதிக்குமாறு காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுத் தீர்ப்பளித்த நிலையிலேயே மாநாடு வ.உ.சி. பூங்கா அருகில் நடைபெற்றது.

காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற்ற முழுநாள் மாநாட்டின், மாலை அரங்கிற்கு, தமிழக மக்கள் புரட்சிக் கழகத் தலைவர் தோழர் அரங்க.குணசேகரன் தலைமையேற்றார். தமிழினப் பாதுகாப்பு இயக்கப் பொறுப்பாளர் தோழர் கி.வே.பொன்னையன் மாநாட்டுத் தீர்மானங்களை முன்மொழிந்தார்.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் த.செ.மணி, தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் தோழர் கு.இராமகிருட்டிணன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வழக்கறிஞர் ஸ்டாலின் குணசேகரன், திராவிடர் கழக வழக்கறிஞர் அருள் மொழி, ஆதித்தமிழர் பேரவைத் தலைவர் தோழர் இரா.அதியமான் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி, அமைப்புகளின் பிரதிநிதிகள் இதில் பங்கேற்றுக் கருத்துரை வழங்கினர்.

மாநாட்டில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  1. இந்திய தமிழ்ச் சமூகத்தில் பெருந்துயரமாகவும் கொடிய குற்றமாகவும் நெடுங்காலமாக நிலவி வரும் சாதிமுறையை எதிர்த்தும் அதன் ஆதிக்கத்தை எதிர்த்தும் போராடி உயிர்நீத்த சாதி ஒழிப்புப் போராளிகளுக்கு இம்மாநாடு தனது வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

  1. சாதி ஒழிப்புப் போராட்டத்தில் பண்பாட்டுப் புரட்சியில் முதன்மைப் பாத்திரம் வகிக்கும் சாதிமறுப்புத் திருமணம் செய்துகொண்டதால் உயிர்பறிக்கப்பட்ட மதுரைவீரன் முதல் தருமபுரி இளவரசன் வரை உயிரிழந்த ஈகிகளுக்கு இந்த மாநாடு வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

  1. தருமபுரி இளவரசன் கொலை செய்யபட்டிருந்தாலும் அல்லது தற்கொலைக்குத் தூண்டப்பட்டிருந்தாலும் இந்த மாநாடு அதை வன்மையாகக் கண்டிக்கிறது, இதில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுத்துக் கடுமையாகத் தண்டிக்கவேண்டுமென்று தமிழக அரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

  1. சாதிப் பெயரில் இயங்கும் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட அனைத்துக் கல்வி நிறுவனங்களின் சாதி அடையாளங்களையும் அகற்ற உடனடியாக உத்தரவிடுமாறு தமிழக அரசை இந்த மாநாடு வலியுறுத்துகிறது.

  1. தமிழகத்தின் முதன்மையான அரசியல் கட்சிகள் சாதிக் கட்சிகளோடும சாதிச் சங்கங்களோடும் தேர்தல் கூட்டணி வைப்பதை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது. அத்தகைய கூட்டணிகளைத் தவிர்க்குமாறு இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

  1. தமிழகத்தின் முதன்மையான அரசியல் கட்சிகள் தமது கட்சிகளில் சாதிய ஆதிக்கத்திற்குத் துணை போகும் நிர்வாகிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

  1. குறுகிய சுயநல அரசியல் இலாபத்திற்காகக் காதல்-சாதிமறுப்புத் திருமணங்களை எதிர்க்கும் பா.ம.க. உள்ளிட்ட சாதி அரசியல் கட்சிகளையும் சாதிச் சங்கங்களையும் புறக்கணிக்குமாறு தமிழக மக்களை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

  1. சாதி வெறியர்களின் அச்சுறுத்தல்களிலிருந்தும் கௌரவக் கொலைகளிலிருந்தும் சாதி மறுப்பு இணையர்களைப் பாதுகாக்க, குடும்ப வன்முறைச சட்டம் போன்ற வன்கொடுமைத் தடுப்புச் சட்டங்களுக்கு இணையான  சிறப்புச் சட்டம் இயற்றி, அவர்களுக்கு முழுப்பாதுகாப்பை உத்தரவாதப்படுத்துமாறு இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

  1. சாதிமறுப்புத் திருமணம் செய்துகொண்டவர்களுக்கு சட்ட, சமூக, பொருளியல் பாதுகாப்புக்கு வகை செய்யும் தனி ஆணையம் அமைக்குமாறு இம்மாநாடு வலியுறுத்துகிறது.

  1. சாதிமறுப்பு இணையர்களை சாதி மறுப்பாளர்கள் என்றும், அவர்க்ளுடைய  குழந்தைகளை ஏதாவது ஒரு சாதியில் தள்ளி இழிவுபடுத்தாமல் சாதியற்றவர் என்றும்  பதிவு செய்யுமாறு இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

  1. சாதியற்ற குழந்தைகளுக்குத் தொடக்கக் கல்வி தொடங்கி ஆராய்ச்சிக் கல்வி வரை அரசின் முழுப்பொறுப்பில் தரமான இலவசக் கல்வியை வழங்கு!மாறு தமிழக அரசை இந்த மாநாடு  கேட்டுக் கொள்கிறது.


  1. சாதிமறுப்புத் திருமணம் புரிந்தோர் சமூக அங்கீகாரம் பெறும் வகையில் அவர்களை நாட்டின் சிறப்புரிமை பெற்ற குடிமக்கள் என்று அறிவித்துச் சிறப்பிக்க வேண்டும் என்றும்,  இதை ஊடகங்கள் மூலமாக அரசுச் செலவில் பரப்புரை மேற்கொள்ள வேண்டும் என்றும் இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

  1. சாதிமறுப்புத் திருமண இணையர்க்கும் அவர்களுடைய குழந்தைகளுக்கும் கூடுதல் சிறப்பு இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று  இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

  1. சாதிமறுப்புத் திருமணம் புரிந்த ஏழைகளுக்குப் பொருளாதாரப் பாதுகாப்புக் கருதி இலவயமாக ஒரு வீடும், கிராமப் புறங்களில் இரண்டு ஏக்கர் நிலமும் வழங்கவேண்டும்.


இம்மாநாட்டில், தமிழின உணர்வாளர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் திரளாகப் பங்கேற்றனர்.










Saturday, August 17, 2013

“13ஆம் சட்டத்திருத்தத்தையும் மாகாணத் தேர்தலையும் தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும்” - தோழர் கி.வெங்கட்ராமன் பேச்சு!


“13ஆம் சட்டத்திருத்தத்தையும் மாகாணத் தேர்தலையும்
தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும்
மே பதினேழு இயக்க ஆர்ப்பாட்டத்தில்
த.தே.பொ.க. பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் பேச்சு!



“ஒன்றுபட்ட இலங்கையை வலியுறுத்தும் 13ஆவது சட்டத் திருத்தத்தையும், வடகிழக்கு மாகாண சபைத் தேர்தலையும் தமிழீழத் தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும்” என, சென்னையில் இன்று(17.08.2013), மே பதினேழு இயக்கம் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் பேசினார்.

இலங்கை அரசமைப்பின் 13ஆவது சட்டத்திருத்தம்மாகாணசபைத் தேர்தல் எனும் போலிகளைப் புறக்கணிக்கக் கோரியும், காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக் கூடாதென வலியுறுத்தியும், இலங்கையில் தொடர்ச்சியாக மசூதிகள் தாக்கப்படுவதை கண்டித்தும், தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பு ஒன்றே தமிழர் சிக்கலுக்கான இறுதித் தீர்வு என வலியுறுத்தியும், இன்று (17.08.2013) மாலை, மே பதினேழு இயக்கம் சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒருங்கிணைக்கப்பட்டது.

இனப்படுகொலைக்கு எதிரான இசுலாமியர் இளைஞர் இயக்க ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் உமர்கயான் கண்டன முழக்கங்களை எழுப்பி, ஆர்ப்பாட்டத்தைத் தொகுத்து வழங்கினார்.

.தி.மு.. துணைப் பொதுச் செயலாளர் திரு. மல்லை சத்யா, மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி, மனித நேய மக்கள் கட்சிப் பொதுச் செயலாளர் திரு. தமிமுன் அன்சாரி, விடுதலைத் தமிழ்ப்புலிகள் தலைவர் திரு. குடந்தை அரசன், தமிழக மக்கள் சனநாயகக் கட்சித் தலைவர் திரு. கே.எம்.சேரீப், எஸ்.டி.பி.ஐ(SDPI) மாநிலப் பொதுச் செயலாளர் திரு. நெல்லை முபாரக், திராவிடர் விடுதலைக் கழக சென்னை மாவட்டச் செயலாளர் தோழர் அன்பு தனசேகரன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தொழிலாளர் பாசறைச் செயலாளர் திரு. சைதை கு.சிவராமன், தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் தோழர் சிபி, தொழிலாளர் சீரமைப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் மா.சேகர், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் தியாகு ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில், கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

அவரது பேச்சு:

தமிழீழ விடுதலைக் கோரிக்கைக்கு ஒவ்வொரு கட்டத்திலும் முட்டுக் கட்டைகள் போடும் வேலையை இந்தியாத் தொடர்ந்து செய்து வருகின்றது. அதன் ஒரு பகுதியாகத்தான் இராசீவ் – செயவர்த்தனா ஒப்பந்தம் 1987-இல் ஏற்படுத்தப்பட்டது. நம்மில் பலர், அந்த இராசீவ் – செயவர்த்தனா ஒப்பந்தத்தில், வடக்கு – கிழக்குப் பகுதிகள் தமிழர்களின் ஒட்டுமொத்த தாயகமாக ஏற்கப்பட்டிருக்கிறது என நம்பிக் கொண்டிருக்கிறோம். ஆனால், உண்மை அதுவல்ல.

இலங்கைத் தீவின் வடகிழக்கு மாகாணப் பகுதிகளில் தமிழர்களும், அவர்களோடு வேறுபல சமூகத்தினரும் இருக்கின்றனர். அவர்களது தாயகமே அது என்றே குறிப்பிட்டுள்ளனர். அதாவது, அப்பகுதியில் நிலவும் இனச்சமநிலை என்பது இலங்கை முழுவதுமுள்ள இனச்சமநிலையை ஒத்திருப்பதைப் போல் குறிப்பிடப்பட்டுள்ளது. கொழும்பில், 90 விழுக்காடு சிங்களர்கள் இருக்கின்றனர் எனில், இதே இனவிகிதத்தில் வடகிழக்குப் பகுதிகளில் இனச்சமநிலையை ஏற்படுத்த வேண்டுமென அது குறிப்பிடுகிறது. இன்றைக்கு வடகிழக்குப் பகுதிகளில் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிற சிங்களமயமாக்கல் அதனடிப்படையில் செய்யப்படுவது தான்.

இவ்வாறான இராசீவ் – செயவர்த்தனா ஒப்பந்தத்தின்படி இலங்கை அரசமைப்பில் ஏற்படுத்தப்பட்ட 13ஆவது சட்டத்திருத்தம் தமிழர்களுக்கு எவ்வித அதிகாரத்தையும் வழங்கப் போவதில்லை. இதை நாம் மட்டும் சொல்லவில்லை. இராசீவ் – செயவர்த்தனா ஒப்பந்தத்தையொட்டி, இந்திய அமைதிப்படையின் இராணுவ உதவியோடு 1987இல் வடகிழக்கு மாகாண சபைத் தேர்தல் நடைபெற்றது. யாழ்ப்பாணத்தில் வெறும் 20 ஓட்டுகளே பதியப்பட்டன, அதில் 2 ஓட்டுகள் செல்லாதவை. அதில், 10 ஓட்டு பெற்று ‘வெற்றி’ பெற்றவர், இந்தியாவின் கையாளாக நிறுத்தப்பட்ட வரதராஜபெருமாள் இதைச் சொன்னார்.

“நான் முதலமைச்சராக இருந்தாலும்கூட, என்னுடைய அலுவலகத்திற்காக ஒரு கதிரை (நாற்காலி) வாங்குவதற்காகக்கூட, நான் இலங்கையின் ஜனாதிபதியிடம் கோரிக்கை மனு போட வேண்டியிருக்கிறது. இந்தப் பதவிக்கு எவ்வித அதிகாரமும் இல்லை” என இந்தியாவால் நியமிக்கப்பட்ட கையாளான வரதராஜபெருமாளே சொன்னார். சொல்லிவிட்டு, இந்திய இராணுவத்தின் உதவியுடன் தப்பி பெங்களுரில் தஞ்சம் புகுந்தார்.

இதைத்தாண்டி, இந்த சட்டத்திருத்தம் மோசடியானது என்பதற்கு என்ன சான்று வேண்டும்?

இங்குள்ள காங்கிரசுக் கட்சியினரும், ‘இந்து’ ராம் போன்றவர்களும், இராசீவ் – செயவர்த்தனா ஒப்பந்தத்தை பிரபாகரன் நிராகரித்தது தவறு என்றும், அதை ஏற்றுக் கொண்டிருந்தால் இவ்வளவு பெரிய இழப்பை சந்திருக்கத் தேவையில்லை என்றும் பேசுகிறார்கள். காசுமீரின் சிங்கமெனப் போற்றப்பட்ட சேக் அப்துல்லா, மிசோரம் விடுதலைப் போராளி லால் டெங்கா ஆகியோரைப் போல், பிரபாகரன் தவறு செய்யவில்லை. பெங்களுரில் எம்.ஜி.ஆரை வைத்துக் கொண்டு பிரபாகரனிடம் பேசிப் பார்த்தார்கள். பிரபாகரன் முதலமைச்சர் பதவி எனது இலக்கில்லை என்றார். லால் டெங்கா இலண்டனில், “என்னை விட வயதில் இளையவராக இருந்தாலும் பிரபாகரன் அறிவுக்கூர்மையுடன் இருக்கிறார்” எனப் பாராட்டிப் பேசினார். ஏனெனில், சேக் அப்துல்லா, லால் டெங்கா போன்ற மிகப்பெரும் போராளிகள் இடறி விழுந்த இடம் அது.

அண்மையில், ஐ.நா. மனித உரிமை அவையில் முன்வைக்கப்பட்ட அமெரிக்கத் தீர்மானத்தை நிராகரித்து இங்கு போராட்டங்கள் வெடித்த நிலையில், இங்கு சிலர் பேசினார்கள். அமெரிக்கத் தீாமானத்தை நிராகரித்துவிட்டால் நமக்கு வேறு என்ன இருக்கிறது என்று கேட்டார்கள். நிராகரிப்பு தான் வெற்றிடத்தை ஏற்படுத்தும். அந்த வெற்றிடம்தான் சரியான கோரிக்கையை வைப்பதற்கான இடமாகும். எனவே, இலங்கை அரசமைப்பின் 13ஆவது சட்டத் திருத்தத்தைத் தமிழர்கள் நிராகரித்து, தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்புக் கோரிக்கையையே நாம் உயர்த்திப் பிடிக்க வேண்டும்.

இலங்கை அரசின் இந்தச் சதிகளின் பின்னணியில் இருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முதன்மையான செய்தி, இந்தியா தமிழினப் பகை நாடு. இந்தியாவிடம் வாதாடிப் புரிய வைக்க முடியாது. இந்தியாவைப் போராடிப் பணிய வைக்கத்தான் முடியும். ஏனென்றால், உலகத் தமிழர்களின் முதன்மைப்பகை இந்திய அரசுதான்.

ஒரு நாட்டின் உள்நாட்டுக் கொள்கை என்னவோ, அதன் நீட்சிதான் அதன் வெளியுறவுக் கொள்கை. உலகமயமாக்கலை, உள்நாட்டுக் கொள்கையாக ஏற்றுக் கொண்டதால்தான், தனது வெளிநாட்டுக் கொள்கையை அமெரிக்காவுக்கு ஆதரவாக இந்தியா வடிவமைக்கிறது. அதே போல, உள்நாட்டில் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு எதிராக, பல்வேறு சிக்கல்களில் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டுள்ள இந்தியா தான், தனது வெளியுறவுக் கொள்கை மட்டுமோ, அல்லது சோனியாகாந்தி மட்டுமோ தான் தமிழர் சிக்கலுக்குக் காரணம் என்பதல்ல. ஒட்டுமொத்த இந்தியக் கட்டமைப்பே, தமிழர்களுக்கு எதிரானப் பகைக் கட்டமைப்புதான் என்ற உண்மையை நாம் இதிலிருந்து புரிந்து கொள்ள வேண்டும்”.

இவ்வாறு தோழர் கி.வெங்கட்ராமன் பேசினார்.

பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தோழர்களும், உணர்வாளர்களும் பெருந்திரளாகப் பங்கேற்ற இவ்வார்ப்பாட்டத்தில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் தமிழக இளைஞர் முன்னணிப் பொதுச் செயலாளர் தோழர் க.அருணபாரதி, சென்னை த.தே.பொ.க. செயலாளர் தோழர் தமிழ்ச்சமரன், தமிழக இளைஞர் முன்னணி சென்னை தலைவர் தோழர் கோவேந்தன், செயலாளர் தோழர் வினோத், தாம்பரம் செயலாளர் தோழர் வெற்றித்தமிழன், பல்லாவரம் செயலாளர் தோழர் கோ.நல்லன் உள்ளிட்ட த.தே.பொ.க. தோழர்கள் பங்கேற்றனர்.







Wednesday, August 7, 2013

தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கப் பேரணி 1000க்கு மேற்பட்டோர் கைது

தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கப் பேரணி 1000க்கு மேற்பட்டோர் கைது

தமிழக அரசு தமிழகம் எங்கும் உள்ள அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் +2 வரை ஆங்கிலத்தைப் பயிற்று மொழியாகக் கொண்ட வகுப்புகளைத் தொடங்குகிறது. இத்திட்டம் முழுமையாக நிறைவேறினால் பள்ளிக் கல்வியிலிருந்து தமிழை மெல்ல மெல்ல வெளியேற்றி விடும் நிலை ஏற்படும்.

இந்த ஆங்கிலத் திணிப்புத் திட்டத்தைத் தமிழக அரசு கைவிட வலியுறுத்தி தமிழக முதல்வருக்கு கோரிக்கை விண்ணப்பம் அளிக்க சென்னை மன்றோ சிலையிலிருந்து கோட்டையை நோக்கிப் பேரணி இன்று (07.08.2013) காலை 10.00 க்கு நடைபெற்றது.

இப்பேரணியை தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்க ஒருகிணைப்பாளரும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவருமான தோழர் பெ.மணியரசன் தலைமையேற்றார். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் துணைத் தலைவர் குணங்குடி அனிபா அவர்கள் துவக்கிவைத்து பேசினார்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனத் தலைவர் திரு வேல்முருகன்,  .தி.மு.. துணைப் பொதுச் செயலாளர் திரு மல்லை சத்திய, திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச் செயலாளர் தோழர் விடுதலை இராசேந்திரன், தந்தைப் பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் தோழர் கு.இராமகிருட்டிணன், தமிழ்த் தேச விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் தியாகு, தமிழர் தேசிய இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் கா.பரந்தாமன், விடுதலைத் தமிழ்ப் புலிகள்த் தலைவர் தோழர் குடந்தை அரசன், புதுக்கோட்டை பாவாணன், தமிழர் நீதிக் கட்சி சு.பா.இளவரசன், தமிழ்த் தேச மக்கள் கட்சிப் பொதுச் செயலாளர் தோழர் தமிழ்நேயன், தமிழக மக்கள் புரட்சிக் கழகப் பொதுச் செயலாளர் தோழர் அரங்க குணசேகரன், மே பதினேழு இயக்கம் ஒருங்கிணைபாளர் தோழர் திருமுருகன் காந்தி, தமிழ்நாடு மக்கள் கட்சி செய்தி தொடர்பாளர் தோழர் அருண்சோரி, உலகத் தமிழர் கழக நெறியாளர் பேரா..இலெ.தங்கப்பா, தலைநகர்த் தமிழ்ச்சங்கத் தலைவர் புலவர் . சுந்தரராசன், தமிழ் உரிமைக் கூட்டமைப்புத் தலைவர் புலவர் கி..பச்சையப்பானார், மக்கள் கல்வி இயக்கம் பேரா.பிரபா கல்விமணி, மக்கள் நல்வாழ்வு இயக்கம் தோழர் கண.குறிஞ்சி, தமிழ்த் தேசக் குடியரசு இயக்கம் மையக்குழு சிவ.காளிதாசன், சேவ் தமிழ் இயக்கம் செந்தில், தமிழக இளைஞர் எழுச்சி இயக்கம் காஞ்சி அமுதன், தமிழக முன்னேற்றக் கழகத் தலைவர் அதியமான், தாளாண்மை உழவர் இயக்கம் பொறி. கோ.திருநாவுக்கரசு, தமிழர் குடியரசு முன்னணி வழக். செயப்பிரகாசநாராயணன், தொழிலாளர் சீரமைப்பு இயக்கம் தோழர் மா.சேகர், தமிழ் மீட்புக் கூட்டியக்கம் .சி.சின்னப்பத்தமிழர், தமிழ்க் களம் புலவர் அரங்கநாடன், மக்கள் மாநாட்டுத் கட்சித் தலைவர் வழக்..சக்திவேல், செந்தமிழர் இயக்கம் .மு.தமிழ்மணி, திருவள்ளுவர் அறக்கட்டளை மா.செ.தமிழ்மணி, அன்றில் பா.இறையெழிலன் உள்ளிட்ட தமிழ் உணர்வாளர்கள் 1000க்கு மேற்பட்டோர் கலந்துக் கொண்டு கைதாயினர்.

தோழர் பெ.மணியரசன் தலைமையில் போராட்ட குழுவினர் தமிழக முதல்வரின் தனிச் செயலாளரின் அலுவலகத்தில் கோரிக்கை அடங்கிய மனுவை நேரில் சென்று கையளித்தனர்.

பல்வேறு கட்சித் தலைவர்களும் தோழர்களும் 1000த்திற்கு மேற்பட்டோர் கைதாகி அண்ணா கலை அரங்கத்தில் சிறைபடுத்தப் பட்டனர்.


தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர் நா.வைகறை, தோழர் குழ.பால்ராசு, தோழர் பழ.இராசேந்திரன், தோழர் அ.ஆனந்தன், தோழர் உதயன், தோழர் க.முருகன். பொதுக் குழு உறுப்பினர்கள் தோழர் கவித்துவன், தோழர் தமிழ்மணி, தோழர் பழ.நல்.ஆறுமுகம், தோழர் இராசு, தோழர் இரா.சு.முணியாண்டி, தோழர்ஆரோக்கியசாமி, தோழர் விடுதலைச் சுடர், தோழர் கு.சிவபிரகாசம். தமிழக இளைஞர் முன்னணித் தலைவர் தோழர் கோ.மாரிமுத்து, பொதுச் செயலாளர் தோழர் க.அருணபாரதி, துணைப் பொதுச் செயலாளர் தோழர் ஆ.குபேரன். மகளிர் ஆயம் தோழர்கள் மீனா, மேரி, இலட்சுமி, செராபீனா உள்ளிட்ட திரளான தோழர்கள் கலந்துக் கொண்டு கைதாயினர்.











(செய்தி : த.தே.பொ.க.செய்திப் பிரிவு)

Monday, August 5, 2013

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரிய தமிழக அரசின் வழக்கு உச்சநீதி மன்றத்தில் தள்ளுபடி! அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி காவிரி உரிமை மீட்புக் குழு முடிவு செய்யும். - தோழர் பெ.மணியரசன் அறிக்கை

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரிய
தமிழக அரசின் வழக்கு உச்சநீதி மன்றத்தில் தள்ளுபடி!
அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி
காவிரி உரிமை மீட்புக் குழு முடிவு செய்யும்!
காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ.மணியரசன் அறிக்கை

 
காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பை 19.02.2013 அன்று தனது அரசிதழில் வெளியிட்டஇந்திய அரசு. அத்தீர்ப்பை செயல்படுத்தும் அதிகாரம் படைத்தகாவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் ஒதுங்கிக் கொண்டது இந்நிலையில், காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பில் கூறியுள்ளபடிஉடனடியாகக் காவிரி மேலாண்மை வாரியத்தையும், காவிரி ஒழுங்கு முறைக் குழுவையும் அமைத்திடுமாறு இந்திய அரசுக்கு ஆணையிட கேட்டுக்கொண்டு தமிழக அரசு உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தது.
 

இவ்வழக்கு விசாரணை பல முறை நடந்தும் உச்சநீதி மன்றம், கர்நாடக அரசு எதிப்பு தெரிவித்ததாலும், நடுவண் அரசு நழுவிக் கொண்டதாலும் உச்சநீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல். இடைக்கால ஏற்பாடாக அதிகாரமற்ற மேற்பார்வைக் குழுவை அமைத்தது இக்குழு நடப்பு சாகுபடிஆண்டில் கர்நாடக அணைகளில் போதிய தண்ணீர் இருந்த காலத்தில் கூட சூன், சூலை மாதங்களுக்கு உரிய பங்கு நீரை தமிழகத்திற்கு திறந்து விடுமாறுஆணையிடவில்லை, ஆணையிடும் அதிகாரமும் அதற்கு இல்லை.
 
இந்நிலையில் தென்மேற்குப் பருவமழை கர்நாடக, கேரள காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில்மிக அதிகமாக பெய்து கர்நாடக அணைகள் நிரம்பிவிட்டன.தனது மாநில அணைகள் உடையாமல் பாதுகாக்கப்படவும் தனது மாநில கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுக்காக்கபடவும் தேவைப்பட்ட தற்காப்புநடவடிக்கையாகக் கர்நாடக அரசு மிகை நீரை தமிழகத்திற்குத் திறந்துவிட்டுள்ளது.
 
காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வலியுறுத்தி தமிழ அரசு தொடுத்துள்ள 
வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது உச்சநீதி மன்றம்,இப்போது காவிரிப் படுகையில் நிறைய மழைப்பெய்து தண்ணீர் அதிகமாக உள்ளதால் இந்த வழக்கை அவசரமாக விசாரிக்கத் தேவையில்லை. காவிரிதீர்ப்பாயத்தின் இறுதி தீர்ப்பு பற்றி நிலுவையில் உள்ள அசல் வழக்கு 2014 சனவரி மாதம் விசாரணைக்கு வரவுள்ளது, அப்பொழுது காவிரி மேலாண்மைவாரியம் அமைப்பது குறித்து விசாரிக்கலாம் என்று கூறி, தமிழக அரசு தொடுத்த வழக்கை இன்று (05.08.2013) தள்ளுபடி செய்துவிட்டது. உச்சநீதிமன்றத்தின் இத்தீர்ப்பு, தமிழகத்தில் உள்ள காவிரிப் பாசன உழவர்களுக்கும், குடிநீருக்குக் காவிரியை நம்பியுள்ள தமிழக மக்களுக்கும் மிகுந்தஏமாற்றத்தை அளித்துள்ளது.
 
1990இல் இருந்து உச்சநீதி மன்றத்தில் காவிரி வழக்குகள் தொடர்ந்து நடந்துவருகின்றன. அவ்வபோது பல தீர்ப்புகளை உச்சநீதி மன்றம் வழங்கியுள்ளது.இவற்றில் எந்தத் தீர்ப்பையும் கர்நாடகம் செயல்படுத்தியது இல்லை. தண்ணீர்ப் பற்றாகுறை காலத்தில் ஒரு முடிவெடுப்பதைவிட, தண்ணீர் நிரம்பியுள்ள இக்காலத்தில் சட்டப்படி ஒரு முடிவெடுத்து அறிவிப்பது எளிதாக இருக்கும். 1970களில் இருந்து தொடர்ந்து வரும் காவிரிச் சிக்கலுக்கு அரசிதழில் வெளியிடப் பட்ட தீர்ப்பாயத்தின் முடிவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டியது உச்சநீதி மன்றத்தின் சட்டப்படியான கடமை.இக்கடமையை உச்சநீதி மன்றம் நிறைவேற்றவில்லை. தமிழக அரசு தொடுத்துள்ள வழக்கைத் தள்ளுபடி செய்துள்ளது.
 
ஏற்கனவே இந்திய அரசு காவிரிப் பிரச்சனையில் நடுநிலையோடு செயல்படாமல் தனது சட்டக் கடமையிலிருந்து தவறி தமிழகத்தை வஞ்சித்து விட்டது.இப்பொழுது உச்சநீதி மன்றமும் இன்றைய பாசனத்திற்கு தண்ணீர் இருக்கிறது என்று கூறி தமிழக அரசு தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்திருப்பது தமிழக உழவர்கள் மீது விழுந்த மற்றும் ஒர் அடியாகும் இது பற்றி விவாதிக்க காவிரி உரிமை மீட்புக் குழு விரைவில் கூடி அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி  முடிவெடுக்கும் என்று தெரிவித்துக் கொள்கிறேன். 


பெ.மணியரசன்
ஒருங்கிணைப்பாளர்
காவிரி உரிமை மீட்புக் குழு 

Friday, August 2, 2013

இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு கருப்புக் கொடி திருச்சியில் நூற்றுக்கணக்கான உணர்வாளர்களை கைது செய்தது தமிழகக் காவல்துறை!

ng Services

DSCN0399

தமிழீழத் தமிழர்களை சிங்கள பேரினவாத அரசு கொன்று குவிக்கவும், காவிரி – முல்லைப் பெரியாறு – கூடங்குளம் – தமிழக மீனவர் சிக்கல் என தமிழகத் தமிழர்களின் உரிமைப் பறிப்புகளைக் கண்டுகொள்ளாமலும் உள்ள இந்திய பிரதமர் மன்மோகன் சிங், தமிழகம் வருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து திருச்சி விமான நிலைய சாலையில் கறுப்புக் கொடி காட்ட முயன்ற, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் திரு. வைகோ, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோரை காவல்துறை கைது செய்தது.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள ஓலைக்குடிப்பட்டியில், பெல் பவர் பிளாண்ட் பைப்பிங் யூனிட் என்ற பாய்லர் ஆலையை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலையை தொடக்க விழாவில் கலந்துகொள்வதற்காக இந்திய பிரதமர் மன்மோகன் சிங் இன்று காலையில் திருச்சி வந்தார். மன்மோகன் சிங்கின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி போராட்டம் நடத்த, ம.தி.மு.க. சார்பில் அனைத்துக் கட்சியினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

இதன்படி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் திரு. வைகோ தலைமையில் இன்று காலை நடைபெற்ற போராட்டத்தில், தமிழ்த் தேசயப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன், தமிழர் வாழ்வுரிமை கட்சி நிறுவனத் தலைவர் திரு. தி.வேல்முருகன், தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் தோழர் கு. ராமகிருஷ்ணன், மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் உள்ளிட்ட பல்வேறு இயக்கத் தலைவர்கள் மற்றும் தோழர்கள் நூற்றுக்கணக்கானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொண்டனர்.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில், தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு, தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பழ.இராசேந்திரன், தோழர் நா.வைகறை, திருச்சி மாநகரச் செயலாளர் தோழர் த.கவித்துவன், மகளிர் ஆயம் தோழர் ம.லெட்சுமி, தஞ்சை நகரச் செயலாலர் தோழர் இரா.சு.முனியாண்டி, தஞ்சை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் தோழர் ரெ.கருணாநிதி, பூதலூர் ஒன்றியச் செயலாளர் தோழர் காமராசு, தோழர்கள் ஆத்மநாதன், ஆரோக்கியசாமி, தமிழக மாணவர் முன்னணி தோழர் மணிகண்டன் உள்ளிட்ட திரளான த.தே.பொ.க. தோழர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொண்டு கைதாகியுள்ளனர்.
DSCN0407
DSCN0409
DSCN0411
DSCN0414
DSCN0428
DSCN0429
(செய்தி : த.தே.பொ.க.செய்திப் பிரிவு)

பா.ம.க.வின் போராட்டத்தால் மதுக்கடைகளுக்கு ஏற்பட்ட இழப்புத் தொகை இருபது கோடி ரூபாயை பா.ம.க. தர வேண்டும் என்று தமிழக அரசு தொடுத்துள்ள வழக்கைத் திரும்பப் பெற வேண்டும்! - தோழர் பெ.மணியரசன் அறிக்கை!

பா.ம.க.வின் போராட்டத்தால் மதுக்கடைகளுக்கு ஏற்பட்ட இழப்புத் தொகை இருபது கோடி ரூபாயை பா.ம.க. தர வேண்டும் என்று தமிழக அரசு தொடுத்துள்ள வழக்கைத் திரும்பப் பெற வேண்டும்! 

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் அறிக்கை!

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாசு அவர்களும், அன்புமணி இராமதாசு அவர்களும் கைது செய்யப்பட்டதை ஒட்டி பா.ம.க.வினரும் வன்னியர் சங்கத்தினரும் நடத்திய போராட்டத்தால் – தமிழக அரசின் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு இருபது கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் அத்தொகையைப் பா.ம.க.வும் வன்னியர் சங்கமும் அரசுக்கு செலுத்த வேண்டும் என்று தமிழக அரசு வழக்குத் தொடுத்துள்ளது.

பா.ம.க.வினரின் போராட்டத்தினால், விற்பனையாளர்கள் முழுநேரம் மதுக்கடைகளைத் திறந்து வைக்க முடியவில்லை, குடிக்க வருவோரின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது என்று தமிழக அரசு காரணம் கூறுகிறது.

தமிழக அரசின் இந்த நடவடிக்கை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையும், சனநாயக உரிமைகளைப் பறிக்கும் நடவடிக்கையும் ஆகும்.

பா.ம.க.வுக்குத்தானே இந்தப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று மற்ற கட்சிகளும் சனநாயக சக்திகளும் இதில் ஒதுங்கி இருக்க முடியாது. இதில் தமிழக அரசின் சனநாயக மறுப்பு நிலைநாட்டப்பட்டு விட்டால், இதே பழிவாங்கல் நடவடிக்கை மற்ற அமைப்புகள் மீதும் பாயும்.

பொதுச் சொத்துகள் சேதச் சட்டம்கூட, சேதமாக்கப்பட்ட பொருட்களுக்குத்தான் நட்ட ஈடு கொடுக்க வேண்டுமென சொல்கிறதே தவிர, விற்பனையாகாத பொருட்களுக்கெல்லாம் அச்சட்டத்தின்படி இழப்பீடு கோர முடியாது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

முழு அடைப்புப் போராட்டம் நடத்தினால், தனியார் நிறுவனங்களுக்கும் அரசு நிறுவனங்களுக்கும் ஏற்பட்ட இழப்பு என்று கூறி தமிழக அரசு நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் இழப்பீடு கோரும் நிலை உருவாகும். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத சனநாயகப் பறிப்பாக இச்செயல் உள்ளது. தமிழக அரசின் இந்த அணுகுமுறை தவறானது; கண்டிக்கத்தக்கது.

எனவே, தமிழக முதல்வர் அவர்கள், தமிழக அரசின் இந்த முடிவை மறு ஆய்வு செய்து, மதுக்கடைகளுக்கு பா.ம.க. இழப்பீடு வழங்க வேண்டும் என்று தொடுத்துள்ள வழக்கைத் திரும்பப் பெற வேண்டும் என்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

இங்ஙனம்,
பெ.மணியரசன்,
தலைவர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி

இடம்: சென்னை,
நாள்: 01.08.2013

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT