உடனடிச்செய்திகள்

Friday, December 6, 2013

தலைவர் நெல்சன் மண்டேலாவுக்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி வீரவணக்கம்!


தலைவர் நெல்சன் மண்டேலாவுக்கு
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி வீரவணக்கம்!

சமத்துவம், மனித உரிமை காக்கும் போராட்டங்களின் உலக தழுவியக் குறியீடாக வாழ்ந்த மாபெரும் தலைவர் நெல்சன் மண்டேலா, தனது 95 ஆவது வயதில் நேற்று (05.12.2013) இரவு காலமானார் என்ற செய்தியை தென்னாப்பிரிக்கக் குடியரசுத் தலைவர் சுமா அறிவித்த போது, தமிழர்கள் உள்ளிட்ட மனித நேய உலகமே சோகத்தில் ஆழ்ந்தது.

மாமனிதர் - தலைசிறந்த மகத்துவப் போராளி மண்டேலா அவர்களுக்கு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி வீரவணக்கம் செலுத்துகிறது.

கற்பனையிலும் கருதிப்பார்க்க முடியாத நிறவெறி ஒடுக்குமுறையின் கீழ், தென்னாப்பிரிக்கக் கருப்பின மக்கள் சிக்கி நசுக்குண்டு இருந்த போது, இளம் வயதிலேயே மண்டேலா நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் குதித்தார்.

வால்டர் சிசிலு, ஆலிவர் டேம்போ ஆகியோரோடு இணைந்து, ஆப்ரிக்க தேசியக் காங்கிரசின் இளைஞரணியின் தலைமைக்குழுவுக்கு வந்ததிலிருந்து, அவரது போராட்ட வாழ்வு தீவிரம் பெற்றது.

வெள்ளை நிறவெறிக்கு எதிரான, கருப்பின மக்களின் சம உரிமைப் போராட்டத்தை அமைதி வழியில் நடத்தி வந்த மண்டேலா, வெள்ளை நிறவெறி ஆட்சியின் அடக்குமுறைகள், கண்மண் தெரியாத கைதுகள், சித்திரவதைகள் ஆகியவற்றை எதிர் கொண்டு, ஆயுதப் போராட்டத்திற்குத் தள்ளப்பட்டது.

1961இல், ”தேசத்தின் ஈட்டிஎன்ற பெயரில் மண்டேலா தலைமையிலான தோழர்கள், சிசுலு, தென்னாப்பிரிக்கக் கம்யுனிஸ்ட் கட்சித் தோழர் ஜோஸ் லோவா ஆகியோர் உருவாக்கிய விடுதலைப்படை வீரஞ்செறிந்த கருப்பின மக்களின் போராட்டத்தை வழிநடத்தியது.

இன சமத்துவத்திற்கானப் போராட்டத்தில், தொழிலாளிகளை ஈடுபடுத்தி, வேலை நிறுத்தப் போராட்டத்தை வழிநடத்தியதால், 1961-இல் ஐந்தாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நெல்சன் மண்டேலா, சிறையிலிருந்தபடியே 1963இல் ரிவோனியா சதி வழக்கில் விசாரிக்கப்பட்டு வாழ்நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டார்.

அச்சதி வழக்கு விசாரணையையே கருப்பின மக்களின் சமத்துவத்திற்கான விவாதக் களமாக மண்டேலா மாற்றினார். ஜவனர்பெர்த் நீதிமன்றத்தில் நெல்சன் மண்டேலா ஆற்றிய உரை, தென்னாப்பிரிக்க நிறவெறி அரசின் தணிக்கைக் கெடுபிடியைத் தாண்டி தென்னாப்பிரிக்கா எங்கும் பரவியது. உலகம் முழுவதும் செய்தித்தாள்களில் அவருடைய உரை இடம்பெற்றது. அது, மேற்குலகம் உள்ளிட்ட உலக நாடுகள் எங்குமுள்ள மனித நேயர்களை வீதிக்கு அழைத்தது. ”மண்டெலாவை விடுதலை செய்! நிறவெறி அரசு ஒழிக!” என்ற முழக்கம் உலக நாடுகள் எங்கும் எதிரொலித்தது.

ரோபன் தீவு தனிமைச் சிறையில் கொடுமையான சூழலில் அடைபட்டிருந்த போதும், கருப்பின மக்களின் விடியலுக்கானப் போராட்டத்திற்கு சிறையிலிருந்தபடியே தலைமை தாங்கினார் மண்டேலா.

நெடிய போராட்டத்தின் விளைவாகவும், உலகம் முழுவதும் அப்போராட்டத்திற்கு ஏற்பட்ட வலுவான ஆதரவினாலும் 1993 - இறுதியில் தென்னாப்பிரிக்காவில் நிறவெறி முடிவுக்கு வந்தது.

தென்னாப்பிரிக்க கருப்பின மக்களுக்கு முதல் முறையாக வாக்குரிமை அளிக்கப்பட்டு நடைபெற்றத் தேர்தலில், ஆப்ரிக்க தேசியக் காங்கிரஸ் மாபெரும் வெற்றி பெற்றது. 1994 தொடங்கி 1999 வரை, நெல்சன் மண்டெலா தென்னாப்பிரிக்காவின் குடியரசுத் தலைவராகச் செயல்பட்டார்.

மிக நீண்ட காலம் ஒடுக்குண்டு இருந்த  கருப்பின மக்களிடம் பொங்கி வந்த பழிவாங்கும் உணர்ச்சி, தென்னாப்பிரிக்க வெள்ளையர்களுக்கு எதிராக திரும்பி விடாமல் பாதுகாக்கும் அரணாகவும் மண்டேலா திகழ்ந்தார். நிறவெறி ஆட்சியில் கொடுங்கோன்மை புரிந்த அதிகாரிகள் மற்றும் உயர்மட்டத் தலைவர்களை தண்டித்து, அதே நேரம் வெள்ளையின மக்களுடன் கருப்பின மக்களுக்கு நல்லிணக்கம் ஏற்படுத்திய செயலிலும் மண்டேலா வெற்றி பெற்றார்.

1999க்குப் பிறகு, அரசு மற்றும் கட்சிப் பொறுப்புகளிலிருந்து விலகி, எய்ட்ஸ் ஒழிப்புப் பணியி்ல் முழுக்கவனம் செலுத்தினார்.

அமைதிக்கான நோபல் பரிசு, ஆர்தர் ஆப் லெனின், பாரத ரத்னா உள்ளிட்ட 205க்கும் மேற்பட்ட உயர் விருதுகளை மண்டேலா பெற்றார்.

கடந்த ஓராண்டாக மூச்சுத் திணறல் நோயில் பாதிக்கப்பட்ட நெல்சன் மண்டேலா, 05.12.2013 இரவு தனது கடைசி மூச்சை நிறுத்தினார்.

உலகில் எங்கு இன சமத்துவத்திற்கு, ஒடுக்குண்ட இனங்களின் விடுதலைக்கு போராட்டங்கள் நடைபெற்றாலும், அவற்றுக்கு ஒரு மாபெரும் உந்து விசையாக நெல்சன் மண்டேலா திகழ்வார்.

தலைவர் நெல்சன் மண்டேலா அவர்களுக்கு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி வீரவணக்கம் செலுத்துகிறது. அவருடைய பிரிவால் துயரமடைந்திருக்கும், ஆப்ரிக்க மக்களோடும், உலகெங்குமுள்ள ஒடுக்குண்ட மக்களோடும் துயரத்தைப் பகிர்ந்து கொள்கிறது.

இங்ஙனம்,
                                      கி.வெங்கட்ராமன்
பொதுச் செயலாளர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி.


இடம் : சென்னை

Wednesday, December 4, 2013

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் டெல்டா மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி
காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில்
டெல்டா மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம்


இந்திய அரசேகாவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமை!  அரசமைப்புச் சட்டவிதி 355-ன் கீழ் கர்நாடகத்திடமிருந்து தமிழகத்திற்குரிய 26 ஆ.மி.க (டி.எம்.சி) பாக்கித் தண்ணீரை திறந்துவிட கட்டளை இடு!

உழவர்களின் பயிர்க் காப்பீடுத் திட்டத்தை தனியாருக்கு தாரை வார்க்கும் நடவடிக்கையை கைவிடு!

தமிழக அரசே, கர்நாடகத்திடமிருந்து தமிழகத்திற்குரிய பாக்கித் தண்ணீரைக் கேட்டுப் பெற உறுதியான நடவடிக்கை எடு!

உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி  காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில்  3.12.2013  அன்று தமிழக டெல்டா மாவட்டங்களில் அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

தஞ்சை




தஞ்சை தொடர்வண்டி நிலையம் அருகில் காலை 11.00 மணியளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப் பாளாரும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவருமான தோழர் பெ.மணியரசன் தலைமையேற்றார்.

இந்திய அரசே! இந்திய அரசே! காவிரி தீர்ப்பாயத் தீர்ப்பை  ஏட்டு சுறைக்கா யாக்காதே! மேலாண்மை வாரியம் உடனே அமைத்திடு! உடனே அமைத்திடு!  இந்திய அரசே! தமிழர்களை வஞ்சிக்காதே! எஞ்சியுள்ள 26 டி.எம்.சி தண்ணீரை  கர்நாடகத்திட மிருந்து உடனே பெற்று கொடு! தமிழக அரசே! கடிதம் போட்டது போதும், காவிரி நீர் வந்திடுமா? வழக்குப் போட்டால் போதுமா? வாய்க்காலில் தண்ணீர் வந்திடுமாதமிழக முதல்வரே!  அனைத்துக் கட்சி குழுவை அழைத்துக் கொண்டு பிரதமரை சந்தித்து வலியுறுத்துஉள்ளிட்ட முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் திரு துரை. பாலகிருட்டிணன், மாவட்டச் செயலாளர் திரு உதயகுமார், தமிழ்நாடு விவசாய சங்கம் மாவட்டத் தலைவர் திரு. மணிமொழியன், தமிழர் தேசிய இயக்கப் பொதுச் செயலாளர் திரு. அய்யனாபுரம் சி.முருகேசன், விடுதலைத் தமிழ்ப் புலிகள் பொறுப்பாளர் புலவர் தங்கராசு, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் அ.நல்லதுரை, மனித நேய மக்கள் கட்சி மாவட்டச் தலைவர் திரு. ஜலந்தர், தமிழக உழவர் முன்னணிப் பொதுச் செயலாளர் தோழர் தெ.காசிநாதன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்.

இவ் ஆர்ப்பாட்டத்தில், 500க்கும் மேற்பட்ட திரளான உழவர்களும், தமிழின உணர்வாளர்களும் கலந்து கொண்டனர்.

சிதம்பரம்




சிதம்பரத்தில் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில், காலை 10.30 மணியளவில், வடக்கு வீதி தலைமை அஞ்சலக வாயிலில் நடைபெற்ற அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டத்தில், ”இந்திய அரசே, காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமை! அரசமைப்புச் சட்டவிதி 355-ன் கீழ் கர்நாடகத்திட மிருந்து தமிழகத்திற் குரிய 26 ஆ.மி.க (டி.எம்.சி) பாக்கித் தண்ணீரை திறந்துவிட கட்டளை இடு!  தமிழக அரசேகர்நாடகத்திடமிருந்து தமிழகத்திற்குரிய பாக்கித் தண்ணீரைக் கேட்டுப் பெற உறுதியான நடவடிக்கை எடு!’’ என்பன உள்ளிட்ட முழக்கங்கள் விண்ணதிர எழுப்பப் பட்டன.
 
தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்டச் செயலாளர் திரு முடிவண்ணன்ம.தி.மு.க. குமராட்சி ஒன்றியச் செயலாளர் திரு பா.இராசாராமன், தமிழக உழவர் முன்னணி செயற்குழு உறுப்பினர் திரு. தங்க.கென்னடி, மனித நேய மக்கள் கட்சி நகரப் பொறுப்பாளர் திரு ஜமால் உசேன், நாம் தமிழர் கட்சி நகர பொறுப்பாளர் திரு இராமதாசு, தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்க செயற்குழு உறுப்பினர் திரு விடுதலைச்செல்வன், மக்கள் உரிமைக் கூட்ட மைப்பு மாவட்டத் தலைவர் திரு கீ.செ.பழமலை, முற்போக்கு சிந்தனையாளர் இயக்க நகரத் தலைவர் திரு.இரா.ராகவேந்திரன்,தமிழக இளைஞர் முன்னணி தமிழக துணைப் பொதுச்செயலாளர் தோழர் ஆ.குபேரன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.

நிறைவாக தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச் செயலாளரும்தமிழக உழவர் முன்னணி ஆலோசகருமான தோழர் கி.வெங்கட்ராமன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் கர்நாடகத்தின் அடாவடிக்குத் துணைப் போகும் இந்திய அரசைக் கண்டித்தும், காவிரி உரிமையில் தமிழக அரசின் மெத்தனப் போக்கைக் கண்டித்தும் , இந்திய அரசு கைவிடுவதாக அறிவித்துள்ள உழவர் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை தொடரக் கோரியும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் திரளான உழவர்கள், மாணவர்கள், இன உணர்வாளர்கள் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தின் நிறைவில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சிதம்பரம் நகரச் செயலாளர் தோழர் கு.சிவப்பிரகாசம் நன்றி தெரிவித்தார்.

திருச்சி:


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க இந்திய அரசை வலியுறித்தியும் ,கர்நாடகத் திடமிருந்து பாக்கி தண்ணீரை பெற்றுத்தர தமிழக அரசை  வலியுறுத்தியும்  காவிரி உரிமை மீட்பு குழு சார்பில்  திருச்சியில் இன்று காலை 10 மணியளவில் நடைபெற்ற ஆர்ப்பட்டத்திற்கு ம.தி.மு.க. மாவட்டச்  செயலாளர் மலர் மன்னன் தலைமையேற்றார்.  தமிழ்த் தேசப் பொதுவுடை மைக் கட்சி  திருச்சி மாநகரச் செயலாளர் தோழர் த.கவித்துவன், இந்தியப் பொதுவுடைமைக் கட்சி மாவட்டச் செயலாளர் தோழர் இந்தரஜித்ம.தி.மு.க. சார்பில் திரு. சேரன், புலவர் க.முருகேசன், தந்தைப் பெரியார் திராவிடர் கழகத் தோழர் சீனி.விடுதலை அரசு, த.ஒ.வி.இ. செயற்குழு உறுப்பினர் தோழர் நிலவழகன், பெரியார் பாசறை - தோழர் அன்பழகன், விவசாயிகள் சங்கம் திரு. அய்யா. ம.ப.சின்னத்துரை, தோழர் ரெ.சு.மணி (தமிழ்க் கலை இலக்கியப் பேரவை), தோழர் இராசா ரகுநாதன் (த.க.இ.பே.) உள்ளிட்ட திரளான உணர்வாளர்களும், உழவர்களும், இதில் கலந்துக் கொண்டனர்.

நாகப்பட்டினம்:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க இந்திய அரசை வலியுறுத்தியும், கர்நாடகத் திடமிருந்து பாக்கி தண்ணீரை பெற்றுத்தர தமிழக அரசை வலியுறுத்தியும்  காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில்  நாகப்பட்டினத்தில் காலை 11.00 மணியளவில் நாகப்பட்டினம் கோட்டை வாசலிருந்து பேரணியாக  புறப்பட்டு  தொடர்வண்டி நிலையம் வழியாக சென்று தலைமை அஞ்சலக முன்பு பேரணியை முடிந்தனர்

பேரணிக்கு  திரு காவிரி தனபால் தலைமையேற்றார். பின்பு தலைமை அஞ்சலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் சங்கத் தலைவர் திரு வலிவளம் சேரன், காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கம் திரு இறை.திருவரசமூர்த்தி, விடுதலைத் தமிழ்ப் புலிகள் தலைவர் தோழர் குடந்தை அரசன், தமிழர் உரிமை மீட்பு இயக்கம் திரு பேர.முரளிதரன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தோழர் கு.பெரியசாமி, தமிழ்நாடு உழைப்போர் இயக்கம் திரு இடங்குடி பாண்டுரங்கம், திரு ஆறுபாதி. கல்யாணம், குறள் அரசு கழகம் திரு சுகுமாரன், திரு பேர.த.செய ராமன், நல்லாசிரியர் திரு ஜெகன்நாதன் உள்ளிட்ட பொறுப்பாளர் கள் கண்டன உரையாற்றி னர்.

சுமார் 1500க்கும் மேற்பட்ட விவசாயிகளும் தமிழின உணர்வாளர்களும் பேரணியிலும் ஆர்ப்பாட்டத்திலும் கலந்து கொண்டனர்.

திருவாரூர்:

காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைக்கக் கோரியும், கர்நாடகத் திடமிருந்து தமிழ்நாடிற்கு வரவேண்டிய 26 டி.எம்.சி.பாக்கி தண்ணீரை பெற்றுத்தர தமிழக அரசை வலியுறுத்தியும், காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் திருவாரூரில் காலை 11.00 மணியளவில் அஞ்சல் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு காவிரி பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் மு.சேரன் தலைமையேற்றார்.

திருவாரூர் நகர மன்ற உறுப்பினர் திரு வரதராஜன், பாரம்பரிய நெல் பாதுகாப்பு சங்கத் தலைவர் திரு செயராமன், விடுதலை தமிழ்ப் புலிகள் தலைவர் தோழர் குடந்தை அரசன், நீடாமங்கலம் விவசாயிகள் மன்றத் தலைவர் துரைராஜன், பாரதிதாசன் சங்க திருவாரூர் மாவட்டத் தலைவர் திரு பழனிவேல், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி திருவாரூர் ஒன்றியச் செயலாளர் தோழர் தனபாலன் உள்ளிட்ட உள்ளிட்ட திரளான உணர்வாளர்களும், உழவர்களும், கலந்துக் கொண்டனர்.


 (செய்தி : த.தே.பொ.க.செய்திப் பிரிவு)

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT