உடனடிச்செய்திகள்

Friday, September 13, 2019

இளம்பெண் சுபஸ்ரீ பதாகை மரணம் : தி.மு.க – அ.தி.மு.க. தலைமைகள் பாவமன்னிப்புக் கேட்க வேண்டும்! பெ. மணியரசன் அறிக்கை!


இளம்பெண் சுபஸ்ரீ பதாகை மரணம்:தி.மு.க–அ.தி.மு.க. தலைமைகள் பாவமன்னிப்புக் கேட்க வேண்டும்!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை!


இளம் பெண் சுபஸ்ரீ, நேற்று (12.09.2019) பள்ளிக்கரணையில் தனியார் வைத்திருந்த பதாகை விழுந்து, அதனால் ஏற்பட்ட சரக்குந்து விபத்தில் அந்த இடத்திலேயே இறந்துபோன கொடும் செய்தி மனிதநேயமுள்ள அனைத்து நெஞ்சங்களையும் வாட்டி வதைக்கிறது. தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் சுபஸ்ரீ இறப்புக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய பெற்றோருக்கு ஆறுதலைக் கூறிக் கொள்கிறேன்.

அ.இ.அ.தி.மு.க. பிரமுகர் ஜெயகோபால் என்பவர், தன் இல்லத் திருமணத்திற்கு வரும் கட்சித் தலைவர்களை வரவேற்க அந்தப் பதாகை வைக்கப்பட்டிருந்தது. ஏற்கெனவே ஐயா டிராபிக் இராமசாமி அவர்களின் கடும் முயற்சியில் பல தடவை சென்னை உயர் நீதிமன்றமும் அதன் மதுரைக் கிளையும் சாலையோரங்களில் பதாகைகள் வைப்பதைத் தடை செய்து ஆணைகள் பிறப்பித்துள்ளன. ஆனால், அந்த ஆணைகளை முதலில் மீறுகின்ற கட்சியாக ஆளுங்கட்சி இருக்கும். அதையடுத்து, எல்லா கட்சிகளும் மீறும்!

இந்தியாவில் எங்கும் இல்லாத அளவுக்கு திரைப்படக் கவர்ச்சியை அரசியலில் புகுத்தி கற்பனை உலகத்தில் மக்களை முதன் முதலாக மயக்கிய கட்சி தி.மு.க. அதன்பிறகு, அதிலிருந்து பிரிந்த அ.இ.அ.தி.மு.க., தி.மு.க. செய்த கவர்ச்சி வேலைகளைப் பலமடங்கு பெருக்கிச் செய்தது. கட்சித் தலைவர்களை பண்டைக்காலப் பேரரசர்களோடு ஒப்பிட்டு, அவர்களுக்கு பொது நிகழ்ச்சிகளில் முடிசூட்டியும், தெய்வங்களோடு ஒப்பிட்டும் புகழ்கின்ற சீரழிவுப் பண்பாடு தமிழ்நாட்டைப் போல் இந்தியாவில் வேறெங்கும் கிடையாது!

தலைவர்களுடைய பெயரைச் சொல்லிப் பேசுவதே அவர்களை இழிவுபடுத்துவது என்ற நிலைக்கு தமிழ்நாட்டில் சனநாயக எதேச்சாதிகாரம் வளர்க்கப்பட்டுள்ளது. அந்தத் தலைவர்களுக்குக் கீழ் உள்ள பிரமுகர்கள் அந்தந்த வட்டார அரசியல் “ஜமீன்தார்களாக” வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்தக் கவர்ச்சி வேலைகள் காலப்போக்கில், எல்லாக் கட்சிகளையும் தொற்றிக் கொண்டது; எல்லாத் தரப்புத் தனி மனிதர்களையும் தொற்றிக் கொண்டது. தலைவர்களுக்குத் தன்னுடைய விசுவாசத்தைக் காட்டுவதற்காக அடுத்த நிலையில் உள்ளவர்கள் போட்டி போட்டுக் கொண்டு செய்யும் பதாகை விளம்பரங்கள், வரவேற்பு வளைவுகள் பெருகின. தனி மனிதர்கள் தங்களுடைய செல்வாக்கையும் பணத் திமிரையும் காட்டுவதற்காக குடும்ப நிகழ்ச்சிகளுக்கு பொது இடங்களில் பதாகைகள் – வளைவுகள் – சர விளக்குகள் போடுவது பெருகின.

இன்று (13.09.2019) சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன், சேசசாயி ஆகியோர் இச்சிக்கல் குறித்து கடுமையாக ஆட்சியாளர்களையும், அதிகாரிகளையும் கண்டித்து திறந்த நீதிமன்றத்தில் பேசியிருக்கிறார்கள். ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் கண்டனக் குரல் எழுப்பிக் கொண்டிருக்கிறது. இந்தப் பின்னணியில் தி.மு.க. - அ.இ.அ.தி.மு.க. கட்சித் தலைவர்கள் தங்கள் கட்சி சார்பில் வரவேற்புப் பதாகைகள் வைக்கக் கூடாதென்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள். சில மாதங்கள் போனால் பழைய காட்சிகள் மீளும்!

இவ்வளவு கண்டனங்கள் வந்த பிறகும்கூட, பதாகை வைத்த அ.தி.மு.க. பிரமுகர் ஜெயகோபால் இன்று மாலை 4 மணி வரை கைது செய்யப்படவில்லை. அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்கிறார்கள். ஆனால், அந்தப் பதாகையை அச்சிட்ட அச்சகத்தை மூடி முத்திரை (சீல்) வைத்துள்ளார்கள்.

இந்தக் கொடுமைகள் தொடராமல் தடுப்பதற்கு முதல் தேவை தமிழ்நாட்டு மக்களிடம் மனமாற்றம்! அரசியல் தலைவர்கள் மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக செய்யும் சர்க்கஸ் வேலைகளைக் கண்டு, அருவருக்கும் மனநிலை தமிழர்களிடம் உருவானால்தான் கட்சிகள் திருந்தும். அடுத்து, தி.மு.க. – அ.தி.மு.க. தலைமைகள் தங்களுடைய மலிவான கவர்ச்சி அரசியலுக்காக விலை மதிக்க முடியாத உயிர்களை பலி வாங்கிக் கொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்து, போலிப் புனைவுகள் மீது நாட்டம் செலுத்துவதைக் கைவிட வேண்டும். மிகைப் போலிப் புனைவு அரசியலை தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தியதற்காக தி.மு.க.வும், அதைப் பரப்பியதற்காக அ.தி.மு.க.வும் தமிழ்நாட்டு மக்களிடம் பாவ மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்


பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

நடராசர் ஆலயத்தை தனியார் திருமண மண்டபமாக மாற்றிய தீட்சிதர்களைக் கைது செய்ய வேண்டும்! கி. வெங்கட்ராமன் கோரிக்கை!


நடராசர் ஆலயத்தை தனியார் திருமண
மண்டபமாக மாற்றிய தீட்சிதர்களைக்
கைது செய்ய வேண்டும்!

தமிழ்நாடு அரசுக்கு தமிழ்த்தேசியப்
பேரியக்கப் பொதுச்செயலாளர்
தோழர் கி. வெங்கட்ராமன் கோரிக்கை!

“கோயில் என்றால் தில்லை நடராசர் ஆலயம்தான்” என்று உலகம் முழுவதும் பரவி வாழும் சைவப் பெருமக்கள் போற்றும் சிதம்பரம் ஆலயத்தை, பொது தீட்சிதர்கள் மிகத் தவறாக வணிக நோக்கத்திற்குப் பயன்படுத்தி தனியார் திருமண நிகழ்ச்சிக்கு நேற்று (12.03.2019) அளித்திருப்பது பேரதிர்ச்சியாக இருக்கிறது.


கோயிலை வழிபாட்டு இடமாக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பது ஆன்மிக நெறி மட்டுமின்றி, ஆகம விதியும் இந்திய சட்ட முறைமையும் ஆகும்.


இவை அனைத்தையும் துச்சமாக மதித்து தில்லை நடராசர் ஆலய வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு ஆகம விதிகளுக்குப் புறம்பாக ஆயிரம்கால் மண்டபத்தில் ஆடம்பரத் திருமணம் நிகழ்த்த தனியாருக்கு காசுக்காக வழங்கியிருப்பது ஆன்மிக அன்பர்களுக்கும் சிவனடியார்களுக்கும் வரலாற்று உணர்வாளர் களுக்கும் நெஞ்சில் நெருப்பை அள்ளிப் போட்டதாக அமைகிறது.


பக்தர்கள் மற்றும் பொது மக்களின் மத உணர்வைப் புண்படுத்தி, மக்களிடையே அமைதிக் குலைவை ஏற்படுத்தியக் குற்றத்திற்காக சிதம்பரம் நடராசர் ஆலய பொது தீட்சிதர்கள் மீது தமிழ்நாடு காவல்துறை உடனடியாக குற்ற வழக்குப் பதிவு செய்து, கைது செய்ய வேண்டுமென்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.


ஏற்கெனவே தில்லைக் கோயில் தீட்சிதர்கள் நடராசர் ஆலய வளாகத்திற்குள் சாராயம் குடிப்பது, சூதாட்டம் நடத்துவது, பாலியல் சீண்டல்களில் ஈடுபடுவது போன்ற பல குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதை அவ்வப்போது ஊடகங்களும் வெளிப்படுத்தி வருகின்றன. ஆயிரங்கால் மண்டபத்திற்கு அருகில் வணிக வளாகம் கட்ட தீட்சிதர்கள் முயன்றதை அண்மையில்தான் பக்தர்கள் தலையிட்டுத் தடுத்திருக்கிறார்கள். இவை அனைத்தையும் தாண்டிய பெரும் குற்றச் செயலில் தீட்சிதர்கள் இப்போது ஈடுபட்டு உள்ளார்கள்.


தொடர்ந்து தில்லை நடராசர் ஆலயம் தீட்சிதர்களின் நிர்வாகத்தின் கீழ் இருந்தால் அது அனைவருக்கும் பொதுவான ஆன்மிகத் தளமாக இல்லாமல் தனியார் மண்டபம் போல் தவறாகப் பயன்படுத்தப்படும் ஆபத்து உள்ளது. நடராசர் ஆலயத்தின் நிர்வாகத்தை தீட்சிதர்கள் நடத்திக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, தீட்சிதர்களின் தனி உடைமை அக்கோயில் எனச் சொல்வதாகாது!


எனவே, வரலாற்றுப் புகழ் வாய்ந்த ஆன்மிகர்களின் நெஞ்சில் நிறைந்த சிதம்பரம் நடராசர் ஆலயத்தை புனிதமான வழிபாட்டிடமாக தொடர்ந்து பாதுகாக்க வேண்டுமென்றால், தமிழ்நாடு அரசு சிதம்பரம் நடராசர் ஆலய நிர்வாகத்தை இந்து அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வர உடனடியாக சிறப்புத் தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என தமிழ்நாடு அரசை தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

தலைமைச் செயலகம்,

தமிழ்த்தேசியப் பேரியக்கம்


பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Tuesday, September 3, 2019

உயர்நீதிமன்ற – உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் வழிகாட்டுவது அரசமைப்பு சட்டமா? வர்ணாசிரம தர்மமா? பெ. மணியரசன் அறிக்கை!


உயர்நீதிமன்ற – உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 

நியமனத்தில் வழிகாட்டுவது
அரசமைப்பு சட்டமா? வர்ணாசிரம தர்மமா?

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் 
தோழர் பெ. மணியரசன் அறிக்கை!

உயர் நீதிமன்றங்களில் பணியாற்றும் திறமையான வழக்கறிஞர்களை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக தேர்வு செய்யும் பணியை “உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தேர்வுக் குழு” (கொலீஜியம்) செய்து வருகிறது. அவ்வாறு இப்போது சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞராக உள்ள கல்யாண் ஜபக் என்பவரை உச்ச நீதிமன்றத் தேர்வுக் குழு, உயர் நீதிமன்ற நீதிபதியாக தேர்வு செய்துள்ளது. இவர் இராசஸ்தானைச் சேர்ந்தவர். இவருக்குத் தமிழ்ப் பேசத் தெரியுமே தவிர, தமிழ்ப் படிக்கத் தெரியாது என்கிறார்கள். 

மாநில வாரியாக உள்ள உயர் நீதிமன்றங்களின் பரிந்துரையைப் பெற்று நீதிபதிகளைத் தேர்ந் தெடுக்கும் குழு, அந்தந்த மாநில மண்ணின் மக்களுக்கும், அவர்களில் பிற்படுத்தப்பட்ட - ஒடுக்கப் பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கும் போதிய பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும். எனவே, தமிழ் நாட்டின் சென்னை உயர் நீதிமன்றத்தின் வழியாக தமிழர்களே நீதிபதிகளாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். 

இராசஸ்தானைச் சேர்ந்த வழக்கறிஞர் கல்யாண் ஜபக்கை நீதிபதியாக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உச்ச நீதிமன்றத்திற்குப் பரிந்துரை செய்தது சரியல்ல. வெளியிலிருந்து வந்த அரசியல் அழுத்தம் காரணமாக இத்தேர்வு நடந்திருக்கலாம். 

சென்னை உயர் நீதிமன்றத்தில் கேரளத்தைச் சேர்ந்தவர்கள் கணிசமாக நீதிபதிகளாக இருக்கிறார்கள். மண்ணின் மக்களுக்கான இட ஒதுக்கீடு எதுவும் இல்லாததால் மண்ணின் மொழி தெரியாத பிற மாநிலத்தவர்கள் கணிசமான எண்ணிக்கையில் நீதிபதிகளாக இருப்பது சரியல்ல. 

எனவே, வழக்கறிஞர் கல்யாண் ஜபக்கை நீதிபதியாக்கும் முடிவை உச்ச நீதிமன்றத் தேர்வுக் குழு (கொலீஜியம்) கைவிட வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். தமிழ்நாட்டைச் சேர்ந்த திறனுள்ள - ஆற்றலுள்ள தமிழர்களை நீதிபதிகளாகத் தேர்வு செய்ய வேண்டும். 

உச்ச நீதிமன்றத்தில் பிராமணர் ஆதிக்கம்

கடந்த 10.05.2019 அன்று சென்னை உயர் நீதிமன்றத்திலிருந்து நீதிபதி வெ. இராமசுப்பிரமணியம் அவர்கள் தேர்வு செய்யப்பட்டு, இமாச்சலப்பிரதேச தலைமை நீதிபதியாக பணியமர்த்தப்பட்டார். கடந்த 28.08.2019 அன்று, அதாவது மூன்று மாதத்தில் அவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும் பணி உயர்த்தப்பட்டுள்ளார். 

ஆனால், நீதிபதி வெ. இராமசுப்பிரமணியம் அவர்களுக்கு மூத்தவராக - அவருக்கு முன்பே -காசுமீர் உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாகவும், இப்போது மணிப்பூர் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாகவும் கடந்த 2017 மார்ச் முதல் பணியாற்றி வரும், இதே சென்னை உயர் நீதிமன்றத்தைச் சேர்ந்த நீதிபதி சுதாகர் அவர்களுக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதியாகும் வாய்ப்பு வழங்கப்படவில்லை! 

மூன்றே மாதத்தில் பிராமணரான நீதிபதி இராமசுப்பிரமணியம் அவர்களுக்கு வழங்கப்படும் பணி உயர்வு, பிராமணரல்லாத பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மூத்த நீதிபதி சுதாகருக்கு வழங்கப்படாததற்குக் காரணம் என்ன? உச்ச நீதிமன்றம் பின்பற்றுவது அரசமைப்புச் சட்டமா? வர்ணாசிரம தர்மமா? 

உச்ச நீதிமன்றத்திலுள்ள 34 நீதிபதிகளில் நீதிபதி பானுமதி மட்டுமே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் அங்கு நீதிபதிகளாக இருக்கும்போது, தமிழ்நாட்டிலிருந்து மட்டும் ஒரே ஒருவர் மட்டும்தான் அங்கு உள்ளார். ஏன் நீதிபதி சுதாகரை உச்ச நீதிமன்ற நீதிபதியாக பணியமர்த்தவில்லை? 

நீதிபதி இராமசுப்பிரமணியம் அவர்கள் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாகத் தேர்வு செய்த அதே நாளில் (10.05.2019) இதேபோல், மும்பை உயர் நீதிமன்றத்தில் பணியாற்றும் குசராத்தைச் சேர்ந்த நீதிபதி அகில் அப்துல்அமீது குரேஷி என்பவரை கொலீஜியம் மத்தியப்பிரதேசத்திற்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக தேர்வு செய்தது. இந்திய அரசின் சட்ட அமைச்சகம் அதை ஏற்றுக் கொள்ள மறுத்து இப்போது வரை அந்தப் பணி அமர்த்தலை நிறுத்தி வைத்துள்ளது. இதனை எதிர்த்து, குசராத் உயர் நீதிமன்ற பார் கவுன்சில் வழக்குத் தொடர்ந்துள்ளது. மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி குரேசி, குசராத்தில் போலி மோதலில் கொல்லப்பட்ட இஷ்ரத் ஜகான் வழக்கில் அமீத்சாவை சிறையில் அடைக்க ஆணையிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றும் நீதிபதிகள் 34 பேரில் ஒரே ஒருவர்தான் ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். மக்கள் தொகையில் 25 விழுக்காட்டினராக உள்ள ஒடுக்கப்பட்ட - பழங்குடியின மக்களிலிருந்து ஒரே ஒருவர்தான், அதுவும் பத்தாண்டுகளுக்குப் பிறகு அண்மையில் அமர்த்தப்பட்டுள்ளார். 14 விழுக்காட்டினராக உள்ள முசுலிம்களில் ஒருவர் மட்டுமே இப்போது உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருக்கிறார். எண்ணிக்கையில் மிகக்குறைவாக உள்ள பிராமண வகுப்பைச் சேர்ந்த நீதிபதிகள் உச்ச நீதிமன்றத்தில் நிறைந்துள்ளனர். சென்னை உயர் நீதிமன்ற மேனாள் நீதிபதி து. அரிபரந்தாமன் அவர்கள், இதுகுறித்து தனது ஆதங்கத்தை கருத்தாகப் பதிவு செய்துள்ளார். 

உச்ச நீதிமன்றத்தில் - உயர் நீதிமன்றத்தில் ஆரிய பிராமண ஆதிக்கம் கோலோச்ச இந்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவது கடுமையான கண்டனத்திற்குரியது. உயர் நீதிமன்ற - உச்ச நீதிமன்ற நீதிபதி நியமனங்களில் இட ஒதுக்கீடு இல்லை என்றாலும், சமூகப் பிரிவுகளுக்குப் போதுமான பிரதிநிதித்துவம் (Adequate Representation) அளிக்க வேண்டியது சட்டக் கடமையாகும். 

இதனை எதிர்த்து அனைத்துத் தமிழ் மக்களும், அமைப்புகளும் சனநாயகக் குரல் கொடுக்க வேண்டும். இது நீதித்துறை சிக்கல் மட்டுமல்ல, சமூகநீதிச் சிக்கல் - தமிழினச் சிக்கல் என்று உணர வேண்டும்!

எனவே, வழக்கறிஞர் கல்யாண் ஜபக் என்பவரை தேர்வு செய்துள்ளதை உச்ச நீதிமன்றக் கொலீஜியம் உடனடியாக இரத்து செய்ய வேண்டுமென்றும், தமிழ்நாட்டிலிருந்து தகுதியுள்ள தமிழர்கள் பலரை நீதிபதிகளாக்க வேண்டுமென்றும், இந்திய அரசையும் உச்ச நீதிமன்றத்தையும் கேட்டுக் கொள்கிறேன்.


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்



பேச: 7667077075, 9443918095 

முகநூல் : www.fb.com/tamizhdesiyam 

ஊடகம் : www.kannottam.com 
இணையம் : www.tamizhdesiyam.com 
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam 
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Wednesday, August 28, 2019

முற்றிவரும் பொருளியல் தேக்கம் மீள்வதற் குவழி என்ன? கி. வெங்கட்ராமன்



முற்றிவரும் பொருளியல் தேக்கம்
மீள்வதற்கு வழி என்ன?

தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர்

தோழர் கி. வெங்கட்ராமன் சிறப்புக் கட்டுரை!

அறிவிக்கப்படாத நிதித்துறை அவசர நிலையில் (Economic Emergency) இந்தியா சிக்கியுள்ளது! 

வேளாண்மை நெருக்கடி, தொழில் மந்தம், நிதி முடக்கம், வேலையின்மை என்று திரும்பிய பக்கமெல்லாம் இந்தியப் பொருளியல் மிகப்பெரிய நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. 

எல்லாம் சரியாக இருப்பதுபோல் தலைமையமைச்சர் நரேந்திர மோடி செங்கோட்டையில் கொடியேற்றிவிட்டு வாய்வீரம் பேசினாலும், இந்திய அரசின் நிதி ஆயோக் துணைத் தலைவர் இராசீவ்குமார் “கடந்த 70 ஆண்டில் சந்திக்காத பொருளியல் மந்தத்தில் நாடு சிக்கியிருக்கிறது. இதய நோய்க்கு பாராசிட்டமால் மாத்திரை பயன்படாது” என அபாய அறிவிப்பு கொடுத்து விட்டார். 

வங்கிக் கொள்ளை போல் இந்திய சேம (ரிசர்வ்) வங்கியின் நிதியிலிருந்து வரலாறு காணாத அளவில் 1 இலட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாயை “எடுத்துக் கொண்டாலும்” கொள்கை மாறாமல் மீள முடியுமா என்ற பெரும் சிக்கலில் மோடி அரசு சிக்கியிருக்கிறது. 

சேம வங்கியின் உபரி நிதி என்பது அரசு வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத அரசு நிதி நிறுவனங்கள் நெருக்கடியில் சிக்கும்போது அவற்றை மீட்பதற்கான நிதி சேமிப்பாகும். 

கடந்த முறை மோடி ஆட்சியில் பெரும் நிறுவனங்களிடமிருந்து வாராக்கடனை வசூலிக்க வேண்டும் என்று கூறிய காரணத்திற்காக அன்றைய சேம வங்கி ஆளுநர் இரகுராம்ராஜன் வெளியேற நிர்பந்திக்கப்பட்டார். மோடிக்கு வேண்டிய கையடக்கமான உர்சித் பட்டேல் சேம வங்கி ஆளுநராக அமர்த்தப்பட்டார். 

ஆனால், மோடி விரும்பியபடி சேம வங்கியின் நிதியை அப்படியே அள்ளித்தர உர்சித் பட்டேலும் சம்மதிக்கவில்லை. மோடி ஆட்சியின் அழுத்தம் தாங்காமல் அவரும் வெளியேறினார். 

இந்தச் சிக்கலின் ஆழத்தை வெளிப்படையாக தெரிவித்துவிட்டு சேம வங்கியின் அன்றைய துணை ஆளுநர் விரால் ஆச்சார்யாவும் பதவி விலகினார். விரால் ஆச்சார்யா இடத்தில் தனக்கு வேண்டிய என்.எஸ். விசுவநாதனுக்கு பதவி நீட்டிப்பு வழங்கினார் மோடி.

சேம வங்கியின் உபரி நிதி குறித்து முடிவு செய்யும் அதிகாரம் சட்டப்படி, அவ்வங்கியின் நிர்வாக வாரியத்திற்கே உரியது என்றாலும், சட்டத்தை வளைக்கும் நோக்கில் உபரி நிதியைப் பற்றி முடிவு செய்வதற்கு சேம வங்கியின் முன்னாள் ஆளுநர் பிமல் ஜலான் தலைமையில் ஒரு குழுவை அமர்த்தினார் நரேந்திர மோடி. அக்குழுவில் தன் விருப்பத்தை நிறைவேற்றும் நபர்களான எஸ்.சி. கார்க், என்.எஸ். விசுவநாதன், பாரத் தோசி போன்றவர்களை உறுப்பினர்களாக போட்டார். 

மோடி ஆட்சி விரும்பிய முடிவை பிமல் ஜலான் குழு அறிவித்துவிட்டது. வாயிற்காவலரின் சம்மதத்தோடு வங்கிக் கொள்ளை நடந்து விட்டது! 

ஆயினும், வந்திருக்கிற பொருளியல் நெருக்கடியை இந்த நடவடிக்கை தீர்த்துவிடுமா என்பது மிகவும் ஐயத்திற்குரியது! 

ஏனெனில், பொருளியலின் அனைத்துத் துறை சார்ந்தும், வரலாறு காணாத மந்த நிலை ஏற்பட்டுள்ளது. 

இதற்கு முன்னர் அமெரிக்க நாட்டில் திடீரென்று பெரும் பெரும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் ஓட்டாண்டிகளாக மாறிய 2008 - 2009 நிதி நெருக்கடி மேற்குலக நாடுகளையும் அவற்றைச் சார்ந்த உலக நாடுகள் பலவற்றையும் பாதித்தன. இந்தியாவிலும் அதன் பாதிப்பு இருந்தபோதிலும், பெரிய சேதம் எதுவும் ஏற்படவில்லை! 

இதற்கு முதன்மைக் காரணம் இந்தியா பெரிதும் சிறு நடுத்தர தொழில்களையும் சிறு வணிகத்தையும் வேளாண்மையையும் சார்ந்து இயங்கியதே ஆகும்! 

மேற்குலக நாடுகளில் ஏற்பட்டதைப் போலவே அப்போது இந்தியாவில் பெரிய நிறுவனங்களிடமிருந்து திரும்ப வர வேண்டிய வங்கிக் கடன்கள், வாராக் கடன்களாக பெருமளவு மாறின. அரசு நிதியை வங்கிகளுக்கு மீட்பு நிதியாக மோடி ஆட்சி அப்போது வாரி வழங்கியது. 

அதற்குப் பிறகும் வாராக் கடன்கள் அதிகரித்தன. மல்லையாக்கள், நீரவ் மோடிகள் என்று அடுத்தடுத்து நரேந்திர மோடிக்கு வேண்டியவர்கள் நாட்டைவிட்டுப் பறந்தார்கள். 

இந்த நிலையில்தான், 2016 நவம்பரில் ரூபாய் நோட்டு செல்லாது என்ற அடாவடி அறிவிப்பை மோடி வெளியிட்டார். கருப்புப் பணத்தை வெளியில் கொணர்வது என்று ஊடகங்களில் அறிவித்தாலும், மோடியின் உண்மையான நோக்கம் நொடித்து வீழ இருந்த வங்கிகளுக்கு மக்களிடமிருந்து பணத்தைப் பறித்து வழங்குவதுதான்! 

இந்தியப் பொருளியல் வரலாறு காணாத கொடுஞ்செயலாக அது அமைந்தது! வேளாண்மையும், சிறு தொழில்களும், சிறு வணிகமும் அதல பாதாளத்தில் விழுந்தன. இது நிகழ்ந்து இரண்டரை ஆண்டுகளுக்குப் பின்னும் பெரும்பாலான சிறு தொழில்கள் இன்னும் மீள முடியவில்லை. வேளாண்மை தலைதூக்க முடியவில்லை. 

மக்களிடமிருந்து பணத்தைப் பிடுங்கி கட்டாயமாக மக்களை வங்கிகளோடு பிணைத்து, அந்த நிதியை எடுத்து பெரும் நிறுவனங்களுக்கு கடனாக அளித்தபோது சிறிதளவு தொழில்துறை முன்னேற்றம் ஏற்பட்டாலும் மீண்டும் வாராக்கடன்கள் அதிகரித்தன. 

கடந்த 2018 - 19 -இல் ஏறத்தாழ 2 இலட்சம் கோடி ரூபாய் வாராக் கடன்களை மோடி அரசு தள்ளுபடி செய்த பின்னும், 2019 - 20 -நிதி ஆண்டில் இதுவரை 1 இலட்சத்து 23 ஆயிரம் கோடி ரூபாய் வாராக்கடன்கள் பெருத்துவிட்டன. மொத்தத்தில், இந்திய அரசு வங்கிகளின் வாராக் கடன்கள் எட்டு இலட்சம் கோடியாக உயர்ந்துவிட்டன. 

இச்சூழலில், நிறுவனங்களுக்கு வங்கிகள் கடன் கொடுப்பது பெருமளவு நின்று போனது. 

இன்னொருபுறம், செல்லா நோட்டு அறிவிப்பால் சிறு தொழில்கள் வீழ்ந்து, வெளிப்படையான வேலையின்மை அதிகரித்ததோடு வேளாண்மையும் வரலாறு காணாத நெருக்கடியில் சிக்கிவிட்டதால் உள்நாட்டுச் சந்தை பெருமளவு சுருங்கி விட்டது. 

இவை பெரும் தொழில் நிறுவனங்களை பாதித்தது. “எல்லோரும் வாருங்கள், இந்தியாவில் தொழில் தொடங்குங்கள்! எங்கு வேண்டுமானாலும் விற்றுக் கொள்ளுங்கள்!” என்ற மோடியின் “மேக் இன் இந்தியா” அறிவிப்பு பலன் தரவில்லை. ஏனெனில், வெளிநாட்டுச் சந்தையும் விரிவடையவில்லை. அங்கேயும் ஆயிரம் சிக்கல்கள்! 

இதனால் ஏற்பட்ட கொலைக்களப் போட்டியில் அம்பானி, அதானி போன்ற மோடிக்கு நெருக்கமான புள்ளிகள் மட்டுமே வெற்றிகரமாக தொழில் செய்ய முடிந்தது. அதற்கான விலையாக மோடி பல்லாயிரம் கோடி ரூபாய் பெற்றுக் கொண்டு, பா.ச.க.வையும் தன்னையும் மக்களிடம் சந்தைப்படுத்திக் கொண்டார். 

இந்திய சேம வங்கி ஒரே ஆண்டில் நான்கு முறை வட்டி விகிதத்தை குறைத்து அறிவித்தாலும், அந்தக் குறைந்த வட்டியில் கடன் பெற்று தொழில் செய்வதற்கு பெரு நிறுவனங்கள் தயங்கின. ஏனெனில், மிகப்பெரும் தேக்கத்தில் உள்நாட்டுச் சந்தையும், வெளிநாட்டுச் சந்தையும் ஆழ்ந்துவிட்டதை இந்நிறுவனங்கள் உணர்ந்தன. 

வட்டி விகிதக் குறைப்பு தொழில் கடன்களை அதிகப்படுத்துவதற்கு மாறாக, வங்கிகளில் சேமிப்போரை தங்கத்தை நோக்கி விரட்டியது. வங்கிகள் நெருக்கடியில் சிக்கின. இதிலிருந்து மீள்வதற்கு அரசு வங்கிகள் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டன. அதுவும், எதிர்பார்த்த பலன் அளிக்கவில்லை! 

இரு சக்கர ஊர்திகள், மகிழுந்துகள், சுமையுந்துகள், உழவு உந்துகள் தயாரிக்கும் தானியங்கி ஊர்தித் தொழில் மட்டுமின்றி, மனை வணிகம், கட்டட வணிகம் போன்றவையும் மக்களின் அன்றாட தேவையைத் தயாரிக்கும் நிறுவனங்களும் நெருக்கடியில் ஆழ்ந்தன. 

ஒரு ஐந்து ரூபாய் பிஸ்கட் பொட்டலத்தை வாங்குவதற்கு மக்கள் பலமுறை சிந்திக்கிறார்கள் என்று பிரித்தானியா நிறுவனம் அறிவித்திருப்பதும், ஜட்டி, பனியன் போன்ற உள்ளாடைகள் வாங்குவதை வாடிக்கையாளர்கள் தள்ளிப் போடுகிறார்கள் என்று திருப்பூர் உற்பத்தியாளர்கள் புலம்புவதும் தொழில் தேக்கத்தின் ஆழத்தை வெளிப்படுத்தும். 

இச்சூழலில், அரசு நிதியை வங்கிகளுக்கு வழங்கி கடன் நிதிப் புழக்கத்தை அதிகப்படுத்துவதற்கும் வழியில்லை. ஏனெனில், அன்றாடச் செலவுக்கே இந்திய அரசு கடன் வாங்கிக் கழித்துக் கொண்டிருக்கிறது. 

கடந்த மாதம் மோடி அரசு முன்வைத்த வரவு செலவுக் கணக்கில், மொத்த வரவு செலவு 24 இலட்சம் கோடி ரூபாய் என்றால், அதில் கடன் வரவு மட்டுமே 12 இலட்சம் கோடி ரூபாய்! ஏற்கெனவே வாங்கிய கடனுக்கு வட்டியே 6 இலட்சம் கோடி ரூபாய். 

இப்போது, சேம வங்கியிடமிருந்து பறித்த 1 இலட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் அரசின் அன்றாடச் செலவுக்கு மூச்சுவிட பயன்படுமே தவிர பொருளியல் மந்தத்திலிருந்து மீட்பதற்கு உதவாது. 

பெரு நிறுவனங்களையும் வெளிநாட்டுச் சந்தையையும் சார்ந்திருக்கும் இப்போதைய கொள்கையிலிருந்து முற்றிலும் மாறுபட்டு, சிறு நடுத்தர தொழில்களையும், வேளாண்மையையும் உள்நாட்டுச் சந்தையையும் பெரிதும் சார்ந்திருக்கும் மாற்றுக் கொள்கைக்கு மாறினாலே தவிர நிரந்தரத் தீர்வு ஏதுமில்லை! 

உழவர்களுக்கும் சிறுதொழில் முனைவோருக்கும் கடன் தள்ளுபடி அளித்து, குறைந்த வட்டியில் புதிய கடன்களை வழங்கி இவற்றின் சந்தையை உறுதிப்படுத்தினால் மீள முடியும்! வேளாண்மையை இலாபகரமான தொழிலாக மாற்றும் வகையில் வேளாண் விளை பொருட்களுக்கு இலாப விலை தீர்மானித்து அந்தந்த மாநிலத்தையும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக மாற்றுவது மிகப்பெருமளவுக்கு சந்தை மீட்சியைக் கொடுக்கும். 

பொருளியல் வகையில் இந்திய மற்றும் வெளிநாட்டு பெருமுதலாளிகளின் ஒற்றைச் சந்தையால் கட்டமைக்கப்பட்டிருக்கும் இந்தியத்தை வைத்துக் கொண்டு, இவற்றிற்கு நிரந்தரத் தீர்வு காண முடியாது. 

இந்தியத்தை வைத்துக் கொண்டே, இப்போது ஏற்பட்டுள்ள மிக ஆழமான தொழில் மந்தத்திலிருந்து மீள்வதற்குத்தான் மோடி ஆட்சி முயலும். அதற்காக மக்களையும், தேசிய இன மாநிலங்களையும் சுரண்டும் அதே பழைய பாதையிலேயே சிந்திக்கும். 

இதில் சிக்கியிருக்கும் தமிழ்நாட்டு மக்கள் இந்த இந்திய ஒற்றைச் சந்தைப் பார்வையிலிருந்து முதலில் விடுபட வேண்டும். தமிழ்த்தேசியச் சந்தையை பாதுகாத்துக் கொள்ளும், தற்காப்புப் பாதைக்குத் திரும்ப வேண்டும்!

(இக்கட்டுரை, தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் - தமிழ்த்தேசிய மாத இதழின் 2019 செப்டம்பர் இதழின் தலையங்கம்).


தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095 
முகநூல் : www.fb.com/tamizhdesiyam 
ஊடகம் : www.kannottam.com 
இணையம் : www.tamizhdesiyam.com 
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam 
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Monday, August 26, 2019

தமிழர்களை சூத்திரர்கள் - பஞ்சமர்கள் என்று இழிவுபடுத்தியவர்கள் சாதி வேண்டும் என்கிறார்கள்! பெ. மணியரசன்


தமிழர்களை சூத்திரர்கள் - பஞ்சமர்கள்
என்று இழிவுபடுத்தியவர்கள்
சாதி வேண்டும் என்கிறார்கள்!


தோழர் பெ. மணியரசன்,
தலைவர் - தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

கேரளத்தின் கொச்சியில் 2019 சூலை 19 - 21 வரை நடந்த “உலகத் தமிழ் பிராமணர்கள்” மாநாட்டில் கேரள உயர் நீதிமன்ற நீதிபதி சிதம்பரேஷ் என்பவர், “பிராமணர்கள் இரு பிறப்பாளர்கள்; அவர்கள் தலைமைப் பொறுப்பில்தான் இருக்க வேண்டும்” என்று பேசியுள்ளார்.

இதுதான் வர்ணாசிரம தர்ம நீதி!

பிராமணர்களில் மிகப்பெரும்பாலோர் சமூக சமத்துவத்தை ஏற்க மாட்டார்கள். அதை அவர்கள் வெளிப்படையாகக் காட்டிக் கொள்ள மாட்டார்கள். எது எதை எங்கெங்கு, எவ்வெப்போது செய்ய வேண்டுமோ - அவ்வாறு செய்து, தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்வார்கள். அதற்காக கடவுள், கட்சி, இந்து மதம், இந்தியத்தேசியம் எல்லா வற்றையும் பயன் படுத்திக் கொள்வார்கள். இடதுசாரிக் கொள்கை, வலதுசாரிக் கொள்கை எல்லாவற்றையும் பயன்படுத்திக் கொள்வார்கள்.

நீதித்துறையை எந்த அளவு பயன்படுத்திக் கொள்வார்கள் என்பதைப் புரிந்து கொள்ளலாம். அண்மையில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன், “கிறித்துவக் கல்வி நிறுவனங்களில் பெண் குழந்தைகளுக்குப் பாதுகாப்பில்லை” என நீதிமன்றத்திலேயே ஆர்.எஸ்.எஸ். குரலை வெளிப்படுத்தினார். இதற்குக் கடும் கண்டனங்கள் எழுந்த பின் அக்கருத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்டார்.

இந்தியத் தலைமையில் வர்ணாசிரமவாத பா.ச.க.வின் அதிரடி ஆட்சி! தமிழ்நாட்டில் தில்லிக்குக் கங்காணி வேலை பார்த்து பதவி - பண அரசியல் நடத்திக் கொண்டிருக்கும் தி.மு.க., அ.தி.மு.க. போன்ற கட்சிகள்! பம்மிக் கொண்டு, மறைமுகச் செயல்பாடுகள் மூலம் பிராமணிய வர்ணாசிரம வேலைகளை செய்து வந்த பலர் இப்போது துணிச்சல் பெற்று வெளிப்படையாக தங்களின் “சாதி ஆதிக்க உரிமையைப்” பேசுகிறார்கள்.

பதுங்கியவர்கள் பாய்கிறார்கள்
------------------------------------------------ 
அதே கொச்சி பிராமணர்கள் மாநாட்டில் பேசிய தமிழ்நாட்டு வல்லம் சாஸ்திரா பல்கலைக்கழகப் பேராசிரியர் எம்.ஏ. வெங்கடகிருட்டிணன் எல்லா உயிரினத்திலும் சாதி உண்டு, உயர்வு தாழ்வு உண்டு, மனிதர்களிலும் பிறப்பால் உயர்வு தாழ்வு உண்டு, பிராமணர்களுக்கு மட்டுமே தலைமை தாங்கும் தகுதி உண்டென்றார். மனிதர்கள் பிறப்பு அடிப் படையில் உயர்ந்த சாதி - தாழ்ந்த சாதி என்று பிரிக்கப்பட வேண்டும் என்றார்.

வெங்கடகிருட்டிணன் பேச்சை அப்படியே ஆதரித்து ஒய்.ஜி. மகேந்திரன் மகள் மதுவந்தி, “நக்கீரன்” இணையத் தொலைக்காட்சியில் பேசினார்.
முற்போக்காளர்கள் போல் காட்டிக் கொண்ட மாலன், பத்ரி போன்றோர் இப்போது தங்கள் உண்மை முகம் காட்டத் துணிந்து விட்டார்கள். காசுமீர் உரிமைப் பறிப்பை மாலன் ஆதரித்து தொலைக்காட்சி விவாதத்தில் பேசுகிறார். ஆரிய பிராமணிய தத்துவ சாரத்தை உள்ளடக்கிய கத்தூரிரங்கனின் புதிய கல்விக் கொள்கை வரைவை ஆதரித்து பத்ரி முழங்குகிறார்!

புதிய புதிய எச். இராசாக்கள் இப்போது தலைநீட்டுகிறார்கள்!

பிராமணரல்லாதார் தலைமையின் கீழ் பிராமணர்கள் 
----------------------------------------------------------------------------------- 
மனிதர்கள் அனைவரும் சமம்; தமிழர்கள் அனைவரும் சமம்; ஆணும் பெண்ணும் சமம் என்பதே தமிழர் அறம்! தமிழர் மரபு சமத்துவ மரபு!

பிராமணர்களால் மிலேச்சர்கள் என்று வசை பாடப்பட்ட ஐரோப்பியர்கள் இந்தியப் பிராமணர்களின் அறிவாற்றலை விட அதிக அறிவாற்றல் பெற்றிருப்பதால் புதிய புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கினார்கள்; சனநாயகக் கோட்பாடுகளையும் நிறுவனங்களையும் நிறுவினார்கள். அவர்களிடம் போய் இந்தியப் பிராமணர்கள் வேலை பார்த்துக் கொண்டுள்ளார்கள்.
தமிழ் இனத்தில் பிறந்த திருவள்ளுவப் பேராசான் யாத்துத்தந்த திருக்குறளுக்கு நிகரான நூல் ஆரிய சமற்கிருதத்தில் இல்லை!
அல்லாடி கிருஷ்ணசாமி ஐயரும், என். கோபாலசாமி ஐயங்காரும் உறுப்பு வகித்த இந்திய அரசமைப்புச் சட்ட வரைவுக் குழுவிற்கு ஒடுக்கப்பட்ட வகுப்பில் பிறந்த அம்பேத்கர்தாம் தலைமை தாங்கினார்.
மனிதர்கள் – விலங்குகள் வேறுபாடு
--------------------------------------------------------- 
மனிதர்கள் உழைத்து உற்பத்தி செய்து உண்டு, உடுத்தி, உறைந்து வாழ்பவர்கள். மற்ற உயிரினங்கள் இருப்பவற்றை உண்டு வாழ்பவை! மனிதர்கள் சிந்திக்கும் ஆற்றல் பெற்றவர்கள். எனவே, சிந்திக்காத - சிந்தனை வளர்ச்சிக்கு வாய்ப்பில்லாத மற்ற உயிரினங்களைப் போல் மனிதர்கள் தலைமுறை தலைமுறையாக ஒரே மாதிரியில் இருப்பதில்லை.

மனிதர்களை அஃறிணையோடு ஒப்பிடும்போதே வெங்கடகிருட்டிணன் “அறிவாற்றலின் ஆழம்” வெட்ட வெளிச்சமாகி விட்டது! ஆரியத்துவாவின் “அறம்” புரிந்து விட்டது!

விலங்குகளின் பாலுறவுக்கு தாய், மகள், அக்காள், தங்கை - தந்தை, அண்ணன், தம்பி என்ற வேறுபாடுகள் கிடையாது. மனிதர்களும் இன்று அவ்வாறு இருக்க வேண்டுமென்று வெங்கடகிருட்டிணன் அறிவுரை வழங்குவாரா?

மற்ற மதங்களில் சாதி இருக்கிறதா?
---------------------------------------------------------
இந்து மதத்தைத் தவிர மற்ற மதங்களில் பிறப்பு அடிப்படையில் சாதி இருக்கிறதா? இல்லை! ஆரிய பிராமண சூழ்ச்சிக்காரர்கள்தாம் இந்தியத் துணைக் கண்டத்தில் மனிதர்களிடையே வர்ணாசிரம சாதிப் பிளவை பிறப்பு அடிப்படையில் உருவாக்கி, நிலைநாட்டி, ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். 
பிறப்பைக் காரணம் சொல்லி, சம்பூகனைக் கொன்றவர்கள் - ஏகலைவன் கட்டை விரலை வெட்டியவர்கள் - நந்தனை எரித்தவர்கள் ஆரிய - பிராமண வர்ணாசிரமவாதிகளே!

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் உருவாக்கிய வர்ணசாதி அநீதியை - இவர்களின் ஆதிக்கத்தை 21ஆம் நூற்றாண்டிலும் நிலைநாட்ட ஆர்.எஸ்.எஸ். - பா.ச.க. ஆட்சி பாதை போட்டிருக்கிறது என்பதை தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
ஒட்டுமொத்தத் தமிழர்களையும் சூத்திரர்கள் மற்றும் பஞ்சமர்கள் என்று அடையாளப்படுத்தியவர்கள்தாம் பிராமணர்கள் என்பதை இளம் தலைமுறையினர் புரிந்து கொள்ள வேண்டும்!

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : 
www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : 
www.kannottam.com
இணையம் : 
www.tamizhdesiyam.com
சுட்டுரை : 
www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : 
youtube.com/Tamizhdesiyam

Sunday, August 25, 2019

படமெடுக்கும் பிராமண மேலாதிக்கவாதம்! ஆரல்கதிர்மருகன்





படமெடுக்கும் பிராமண மேலாதிக்கவாதம்!


தோழர் ஆரல்கதிர்மருகன்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்.


"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா 
செய்தொழில் வேற்றுமை யான்"

தமிழ்ப் பேராசான் வள்ளுவப் பெருந்தகையின் வாக்கு இது!

”பறைச்சியாவ தேதடா பனத்தியாவ தேதடா 
இறைச்சிதோ லெலும்பினுல் இலக்கமிட் டிருக்குதோ 
பறைச்சி போகம் வேறதோ பனத்தி போகம் வேறதோ 
பறைச்சியும் பனத்தியும் பகுத்துபாரும் உம்முளே”
(பனத்தி என்பது பார்ப்பனத்தி என்பதன் சுருக்கம்)

இது தமிழ்நாட்டில் பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த சிவவாக்கியார் பாடிய பாடல்!

“நால்வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா
நவின்றகலைச் சரிதம்எலாம் பிள்ளைவிளை யாட்டே
மேல்வருணம் தோல்வருணம் கண்டறிவார் இலைநீ 
விழித்துப்பார் என்றெனக்கு விளம்பிய சற்குருவே”

இந்த வரிகளை உதிர்த்தவர் தமிழர் மறுமலர்ச்சியின் தொடக்கமாகப் போற்றப்படும் வள்ளலார் அவர்கள். இதுதான் தமிழரின் அறக்கோட்பாடு! 

பிறப்பால் உயர்வு தாழ்வு பார்க்கக் கூடாது. செய்யும் தொழில் கொண்டு உயர்வு தாழ்வு கற்பிக்கக் கூடாது. நால்வருணம், தோல்வருணம் எதுவும் நமக்கில்லை என்பது தமிழரின் செம்மாந்த அற வாழ்வியல்!

பிறப்பால் உயர்வு தாழ்வு கற்பிப்பதும் வருணங்கள் பிரித்து இன்னின்ன சாதிகள் இன்னின்ன தொழில் மட்டுமே செய்ய வேண்டும் என்பதுவும் அதுவே அவர்களது பிறவிப் பயன் என்று சொல்வதும் ஆரியக் கோட்பாடுகள். ஆமாம் தமிழரின் வாழ்வியலுக்கு முற்றும் எதிரான தமிழரின் பண்பாட்டோடு அறவே ஒத்து வராத ஆரியத்தின் கோட்பாடுகள் அவை.

தமிழியத்திற்கும் ஆரியத்திற்குமான போராட்டம் என்பது ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு கொண்டது. ஆரியத்தால் எப்போதும் விழுங்கிச் செறிக்க முடியாதது தமிழியமே! அதனால்தான் இன்றளவும் ஆரியத்தின் அரசமைப்பு வடிவமான இந்தியம் தமிழரை வஞ்சம் கொண்டு பழிவாங்கி வருகிறது. 

அதிலும் மோடி தலைமையிலான பா.ச.க. அரசு ஆட்சியமைத்தவுடன் தமிழை - தமிழரை இல்லா தொழிக்கும் வேலைகள் படுவேகமாக நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. தமிழர்களால் ஓட ஓட விரட்டியடிக்கப்பட்ட ஆரியம் தனது வேதகால செருக்கோடு தமிழர் நிலத்தில் மீண்டும் தலைதூக்கத் தொடங்கியிருக்கிறது. தமிழ்நாட்டில் ஆரியத்துவவாதிகளின் அண்மைக்காலப் பேச்சுகளும் செயல்பாடுகளும் தமிழுக்கு எதிரான - தமிழருக்கு எதிரான ஆரிய வன்மத்தைக் கக்குவதாகவே உள்ளன. 

கேரளாவின் கொச்சியில் உலகளாவிய தமிழ் பிராமணர்கள் சந்திப்பு (Tamil Brahmins Global Meet) என்ற பெயரில் 2019 சூலை மாதம் 19, 20, 21 ஆகிய மூன்று நாட்கள் ஒரு கூட்டம் நடைபெற்றது. அதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றிய கேரள உயர்நீதிமன்ற நீதியரசர் வி.சிதம்பரேசு பேசியதாவது, "பிராமணர்கள் நாம் முற்பிறப்பில் செய்த நன்மைகளால் இப்பிறவியில் இரு பிறப்பாளர்களாகப் பிறந்துள்ளோம். பிராமணர்களுக்கே உண்டான சிறப்பு பண்பு நலன்களால் நாம் அறிவுசார் தளங்களில் முகாமையான ஆட்களாக உள்ளோம். மேலும் பிறப்பினால் உயர்ந்த நல்லொழுக்கங்களைப் பெற்ற பிராமணர்களே அனைத்து உயர் பொறுப்புகளிலும் இருக்க தகுதியானவர்கள். பிராமணர்கள் பிரிவினைவாதிகளல்ல. அகிம்சாவாதிகள். அக்கிரகாரம் போன்ற நமது தனித்துவ அடையாளங்களை நாம் பாதுகாக்க வேண்டும்” என்றார். 

மேலும் உயர்சாதியினரில் பொருளியல் அளவுகோலில் பின்தங்கியோருக்கு பத்து விழுக்காடு இடவொதுக்கீடு அளிப்பதைப் பற்றி பேசுகையில், “அழுத பிள்ளை பசியாறும். நாம் இதுபோன்ற விடயங்களில் அமைதியாக இருந்து விடக் கூடாது” என்கிறார். 

அதே கூட்டத்தில் பேசிய சென்னைப் பல்கலைக் கழகத்தின் வைணவத் துறை முன்னாள் தலைவரும், தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழகப் பேராசிரியருமான எம்.ஏ. வெங்கடகிருட்டிணன் என்பவரின் பேச்சிலோ ஆரியத்துவம் வருணாசிரம சலங்கை கட்டி தாண்டவம் ஆடியது. அவர் சொல்கிறார், “பிறப்பால் உயர்ந்தவன் தாழ்ந்தவன் இல்லை, பிறப்பால் அனைவரும் சமம் என்பது பொய்யான கூற்று. ஒருவரது பண்பு நலன்களை பிறப்புதான் தீர்மானிக்கிறது”. இவர் மனிதர்களை நாய்களுடன் ஒப்பிட்டு நாயிலும் கூட பிறப்பின் அடிப்படையில் பண்பு நலன்களை வைத்து சாதிப் பிரிவுகள் இருக்கும்போது மனிதர்களிலும் அவ்வாறு இருப்பதில் என்ன தவறு என்று கேட்கிறார். 

எந்த நாயும் தான் உயர்ந்த சாதி நாய் என்ற பெருமிதத்தோடு இருப்பதில்லை. பாவம் நாய்களுக்குத் தெரியாதே நம்மை மனிதர்கள் சாதிப் பார்த்து உயர்வு தாழ்வு கற்பிப்பார்கள் என்று!

வைணவத்தைப் போற்றி வளர்த்த ஆழ்வார்கள் பிறப்பில் உயர்வு தாழ்வு கற்பிப்பதையும் நால்வருணம் பார்ப்பதையும் ஏற்றுக் கொண்டவர்களா? அல்லது கடவுளின் முன் உயிர்கள் அனைத்தும் சமம் என்று கற்பித் தார்களா என்பது வைணவத் துறையில் பேராசிரியராக இருந்த வெங்கடகிருட்டிணனுக்கே வெளிச்சம்!

காலிபர் கல்வி அறக்கட்டளையின் அறங்காவலர் குழு உறுப்பினராக உள்ளவர் ஒய்.ஜி. மதுவந்தி. இவர் தமிழ்த் திரைப்பட நடிகர் ஒய்.ஜி. மகேந்திரனின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. கல்வியாளர் என்பதோடு திரைப்பட நடிகை எனும் முகமும் இவருக்கு உண்டு. 

‘நக்கீரன்’ இணைய ஊடகத்திற்கு அண்மையில் இவர் அளித்த செவ்வியில் கேரளாவில் நடந்த பிராமணர்கள் கூட்டத்தில் பேசிய எம்.ஏ. வெங்கடகிருட்டிணன் பேச்சு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, அவர் பேசியதில் தவறொன்றுமில்லை, அவர் வருணாசிரம தர்மத்தைப் பற்றிதான் பேசியுள்ளார் என்று கூறுகிறார்.

மேலும் பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள் ஆகியோருக்கு பிறப்பின் அடிப்படையிலேயே பண்பு நலன்கள் இருப்பதாகவும், ஒருவர் செய்யும் தொழிலை இன்னொருவர் செய்ய முடியாது என்றும் கூறுகிறார். தான் ஒரு பிராமணப் பெண் என்பதைப் பெருமையாக கருதுவதாகவும் அதைப் பெருமிதத்தோடு வெளிப்படுத்து வேன் என்றும் கூறுகிறார். 

மேலும் பொருளியல் அளவுகோலில் பின்தங்கிய உயர் சாதியினருக்கு இட ஒதுக்கீடு தேவையானது என்றும் அதை மறுப்பதற்கு நீங்கள் யார் என்றும் கேள்வி எழுப்புகிறார். காசுமீரின் சிறப்புத் தகுதியை உறுதி செய்த அரசமைப்புச் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதை தாம் வரவேற்பதாகவும், அதுகுறித்த ரசினிகாந்தின் கருத்து சரியானது என்றும் குறிப்பிடுகிறார். பல கேள்விகளுக்கு மழுப்பலாகவும் மேலோட்டமாகவும் பதில் அளித்தாலும் அவர் பேசியது ஆரியத்துவ வருணாசிரம வாதமே என்பது அவரது செவ்வியில் அப்பட்டமாக தெரிந்தது. 

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஆரியத்துவ அமைப்பு “வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையம்”. அவ்வமைப்பின் சார்பில் ஆண்டுதோறும் “சபதமேற்பு நாள்” என்ற பெயரில் ஒரு நிகழ்வு ஒருங்கிணைக்கப்படுகிறது. பதினெட்டு ஆண்டுகளாக நிகழ்ந்து வரும் இந்நிகழ்வு இவ்வாண்டு ஆகத்து மாதம் 14 ஆம் நாளன்று சென்னையில் நடந்தது. அதில் அவ்வமைப்பின் இயக்குநர் பால கவுதமன் பின் வருமாறு பேசுகிறார் - 

“காசுமீர் பிரச்சினையில் மோடி எடுத்துள்ள நடவடிக்கை பாதிக்கப்பட்ட நோயாளிக்கு தலைப் பகுதியில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சை போன்றது. மோடி அதை திறம்பட செய்து முடித்துள்ளார். தலையில் வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்ட அறுவை சிகிச்சை அடுத்து கால் பகுதியிலும் செய்யப்படும். ஆமாம் அடுத்த அறுவை சிகிச்சை தமிழ்நாட்டுக்குதான். மோடி அதை செய்து முடிப்பார். அமித்சா துணை நிற்பார். நம்மைப் போன்ற எண்ணற்ற தேசபக்தர்கள் அவர்களுக்குப் பின்னால் உறுதுணையாக நிற்க வேண்டும். அகண்ட இந்து தேசத்தை உருவாக்குவதே நமது இலட்சியமாக இருக்க வேண்டும். அதை நோக்கி நாம் வேகமாக நகர்கிறோம்” என்கிறார். 

வருணாசிரமத்தை வெளிப்படையாக ஊடகங்களில் ஆதரித்துப் பேசுவது, காசுமீரைப் போல தமிழ்நாட்டை யும் எது வேண்டுமானாலும் செய்வோம் என மிரட்டுவது என்று ஆரியத்துவவாதிகள் தமிழுக்கும் தமிழருக்கும் எதிராக நஞ்சை உமிழத் தொடங்கியிருக்கிறார்கள். இவ்வளவு துணிச்சலாகவும் திமிராகவும் இவர்கள் எப்படி பேசுகிறார்கள்? ஆரியத்துவவாதிகள் என்ற ஆணவத்தில் பேசுகிறார்கள். இந்தியாவை ஆள்வது ஆரியம் என்கிற திமிரில் பேசுகிறார்கள். தமிழினத்தை வேரோடு வீழ்த்த நினைக்கும் ஆரியத்தின் தளபதிகளாக தம்மை எண்ணிக் கொண்டு பேசுகிறார்கள். 

தேசியப் புலனாய்வு முக வாண்மை சட்ட திருத்த தீர்மானம் குறித்து அமித்சா பேசினாரே “இச்சட்டம் இசுலாமிய பயங்கரவாதிகளுக் கானது மட்டுமல்ல தமிழ் அமைப்புகளுக்குமானது” என்று. அந்தப் பேச்சின் தொடர்ச்சியாகத்தான் இவர்களது பேச்சுகளையும் நாம் நோக்க வேண்டியுள்ளது. 

ஆரியம் தமிழை, தமிழரை, தமிழர் தாயகத்தை அழித்தொழிக்க முழுவேகத்தோடு களமிறங்கியுள்ளது. தமிழரின் நிலங்களில் நஞ்சை விதைத்து எரிவளி எடுக்க எக்காளமிடும் ஆரியத்துவ வல்லாதிக்கம், தமிழரின் மனங்களில் ஆரிய வருணாசிரம நஞ்சை விதைத்து தமிழினத்தை விழுங்கிச் செறிக்க “அகண்ட பாரதம்” என்ற கனவோடு தன் வாயை அகலத் திறந்து காத்திருக்கிறது. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நடந்து வரும் தமிழர் - ஆரியர் போர் இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது. ஈழத்தில் நம் இனத்தை கருவறுத்த ஆரியம் தமிழ் நாட்டைக் குறிவைத்து வல்லூறாக வட்டமிட்டுக் கொண்டிருக்கிறது. 

தமிழர்கள் நாம் இந்த ஆரியப் பகையைத் தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும். ஆரியத்துவக் கருத்துகளோ, வருணாசிரமக் கோட்பாடுகளோ தமிழ்நாட்டில் வேரூன்ற எக்காலத்திலும் நாம் அனுமதிக்கக் கூடாது. ஆன்மிகமானாலும் அறம் சார்ந்த மரபு வாழ்வியலானாலும் நமது தமிழினம் தனித்துவமானது. அது ஒன்று மட்டுமே ஆரியத்தால் ஆட்கொள்ள முடியாதது. 

திருவள்ளுவரும், திருமூலரும், சிவவாக்கியாரும், வள்ளலாரும் எனப் பல நூறு ஆண்டுகளாக அறம் பாடி ஆரியத்தை எதிர்த்த மரபு நம்முடையது. அந்த மரபை நாம் மறந்துவிடக் கூடாது. தமிழினம் கடும் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கும் இந்த வேளையில் நமது செம்மாந்த அந்த தனித்துவ மரபு ஒன்றே நம்மை காக்க வல்ல பெருங்கருவி!

திராவிடம், தலித்தியம் என முற்போக்கு முகமூடிகள் அணிந்து கொண்டு ஆரியத்தையும் சனாதனத்தையும் அழித்தொழிப்போம் என எக்காளமிடும் கட்சிகளால் அதை ஒருபோதும் செய்ய முடியாது. ஏனெனில் ஆரியத்தை தலையில் சுமந்து அரசு கட்டிலில் அமர வைத்தவர்கள் அவர்கள். அவர்கள் ஆரியத்தோடு இரண்டறக் கலந்து விட்டார்கள். ஆரியத்துவத்திற்கு எதிரான இப்போரில் தமிழினத்தை தோள் கொடுத்து தூக்கி நிறுத்தும் ஆற்றல் அவர்களுக்கு இல்லை. 

பண்பாடு, ஆன்மிகம், தற்சார்பு வாழ்வியல் என அனைத்திலும் தனித்துவம் கொண்ட தமிழர்களுக்குப் பூட்டப்பட்டுள்ள அடிமைத்தளையை உடைக்கவல்ல விடுதலை முழக்கம் ‘தமிழ்த்தேசியம்’ ஆகும். வருணாசிரமத்திற்கு எதிரான - ஆரியத்துவ இனவாதத் திற்கு எதிரான ‘தமிழர் அறம்’ என்னும் மெய்யியல் கோட்பாடே நாம் முன் வைக்கும் தமிழ்த்தேசியத்தின் ஆணிவேர் ஆகும். 

”தமிழர் அறமென்னும் தழலை ஏந்துவோம்!
தலை தூக்கும் ஆரியத்தை வீழ்த்துவோம்!”


தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095 
முகநூல் : www.fb.com/tamizhdesiyam 
ஊடகம் : www.kannottam.com 
இணையம் : www.tamizhdesiyam.com 
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam 
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT