உடனடிச்செய்திகள்

Thursday, April 9, 2009

”இந்திய அரசை தமிழகத்தில் செயல்பட விடாமல் முடக்குங்கள்” - பெ.மணியரசன

"போரை நிறுத்து" : தமிழகமெங்கும் நடந்த ஆர்ப்பாட்டங்கள்
 
"இந்திய அரசை தமிழகத்தில் செயல்பட விடாமல் முடக்குங்கள்"
 
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர்
பெ.மணியரசன் சென்னை ஆர்ப்பாட்டத்தில் உரைவீச்சு
 
ஈழத்தமிழர் மீதான இனவெறிப் போரை சிங்கள இனவெறி அரசு தீவிரப்படுத்தியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தியா அளித்த நச்சு வாயுக்களைக் கொண்டு தமிழர்களை அழித்தது சிங்கள இராணுவம். இந்தியாவின் முழு ஆதரவோடும் உதவியோடும் நடக்கும் இப்போரை இனியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என உலகெங்கும் வாழும் தமிழர்கள் பெரும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். லண்டன் பாராளுமன்றம் தமிழர்களால் முடக்கப்பட்டது. நார்வே, டென்மார்க் உள்ளிட்ட பல நாடுகளில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர் தமிழர்கள். பிரிட்டனில் இருவர் சாகும் வரை உண்ணாப் போரில் ஈடுபட்டுள்ளனர்.
 
இந்நிலையில் தமிழகத்திலும் போராட்டங்கள் வெடித்துள்ளன. ஓசூரில் தமிழர் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி மேற்கு மண்டலச் செயலாளர் கோ.மாரிமுத்து தலைமை தாங்கினார்.
சேலம், கோவை போன்ற நகரங்களில் பெ.தி.க.வினர் ஆர்ப்பாட்டங்கள் நிகழ்த்தினர்.
 
நேற்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தினர் தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர். சென்னையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தலைமை தாங்கினார். தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளது தியாகு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் பெ.மணியரசன், ம.தி.மு.க. பொதுச் செயலாளது வைகோ, பா.ம.க. தலைவர் மருத்துவர் இராமதாசு, இந்தியக் கம்யுனிஸ்ட் கட்சி தமிழ் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், நல்லக்கண்ணு, பா.ச.க. தலைவர் திருநாவுக்கரசு உள்ளிட்ட பல தலைவர்கள் இதில் கலந்து கொண்டு உரையாற்றினர்.
 
"தமிழகத்தில் இந்திய அரசின் அலுவலகங்கள் செயல்பட முடியாத வகையில் முடக்குங்கள்!" என்பதை முழக்கமாக வைத்து உடனடியாக செயல்பட வேண்டும் என அறைகூவல் விடுத்து த.தே.பொ.க. பொதுச் செயலாளர் பெ.மணியரசன் பேசினார். "பிரபாகரன் மீது ஒரு துரும்புப் பட்டால் கூட தமிழகத்தில் இரத்த ஆறு ஓடும். இந்தியா என்றொரு தேசமெ இருக்காது" என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வை.கோ. பேசினார். "தமிழின துரோகத்தில் ஈடுபட்டதற்காக கருணாநிதி உலகத் தமிழர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்" என மருத்துவது இராமதாசு பேசினார்.
 
ஆர்ப்பாட்டத்தில், த.தே.பொ.க., த.தே.விஇ., ம.தி.மு.க., இந்தியக் கம்யுனிஸ்ட் கட்சி, பா.ம.க., இளந்தமிழர் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தோழர்களும் திரளான தமிழ் உணர்வாளர்களும் கலந்து கொண்டனர்.
 
தஞ்சை : தஞ்சை ரயிலடி அருகில் காலை 11.00 மணியளவில் நடந்த ஆர்ப்பட்டத்தில் தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் நா.வைகறை, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தஞ்சை மாவட்ட அமைப்பாளர் பழ.இராசேந்திரன், செங்கிப்பட்டி பகுதி அமைப்பாளர் குழு.பால்ராசு,  தஞ்சை வழக்கறிஞர் சங்கச் செயலாளரும் இளந்தமிழர் இயக்க நிர்வாகக் குழு உறுப்பினருமான வழக்கறிஞர் நல்லதுரை உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினர்.
 
கடலூர் : கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு உறுப்பினர் கி.வெங்கட்ராமன், சிதம்பரம் நகர அமைப்பாளர் க.சிவப்பிரகாசம், தமிழக உழவர் முன்னணி, தமிழக மாணவர் முன்னணி தோழர்கள் உட்பட பல்வேறு அமைப்புத் தலைவர்களும் தமிழ் உணர்வாளர்களும் கலந்து கொண்டனர்.
 
மேலும் பல்வேறு மாவட்டங்களிலும் த.தே.பொ.க., த.தே.வி.இ., பெ.தி.க., தோழர்கள் ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டனர்.

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT