உடனடிச்செய்திகள்

Saturday, April 25, 2009

இந்திய இலங்கை கொடி எரிப்பு : த.தே.பொ.க. - த.தே.வி.இ. தோழர்கள் கைது

இந்திய இலங்கை கொடி எரிப்புப் போராட்டம்
தமிழகம் முழுவதும் தோழர்கள் கைது
 
    ஈழத்தமிழர்களை ஈவிரக்கிமின்றி நாள் தோறும் கொன்று குவிக்கும் இந்திய சிங்களக்  கூட்டுப்படையின் அட்டூழியத்தை கண்டிக்கும் வகையில் இந்திய இலங்கைக் கொடிகளை எரிக்கும் போராட்டத்தை நடத்தப்படும் என கடந்த 23.04.09 அன்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் பெ.மணியரசன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்க பொதுச் செயலாளர் தியாகு ஆகியோர் விடுத்த கூட்டறிக்கையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இப்போராட்டம் இன்று நடத்தப்பட்டது.

சென்னை

    சென்னையில் இந்திய அரசின் வருமானவரித் துறை அலுவலகமான சாஸ்திரி பவனில் காலை  10.45 மணியளவில் நடந்த போராட்டத்தில் த.தே.பொ.க., த.தே.வி.இ. தோழர்கள் கலந்து   கொண்டனர். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுக்குழு உறுப்பினர் க.முருகன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த சிவ.காளிதாசன் ஆகியோர் போராட்டத்திற்கு தலைமை தாங்கினார். இந்திய - இலங்கைப் படைகளின் கொடுங்கோன்மைக்கு எதிரான முழக்கங்களை எழுப்பியவாறு இந்திய - இலங்கைக் கொடிகளை எரிக்க முயன்ற தோழர்கள் 14 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட தோழர்கள் ஏ.பி.சி. திருமண மண்டபத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.
 
தஞ்சை
 
   தஞ்சை நகரப் பகுதியில் இன்று காலை 10.00 மணியளவில் நடந்த போராட்டத்திற்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தஞ்சை மாவட்டச் செயலாளர் பழ.இராசேந்திரன் தலைமை தாங்கினார். இந்திய இலங்கைக் கொடிகளை எரித்தத் தோழர்கள் 9 பேரை காவல்துறையினர் கைத செய்தனர். கைது செய்யப்பட்ட தோழர்கள் இரு குழுவினராக பிரித்து கீழவாசல் காவல்நிலையத்திலும், அரண்மனை காவல் நிலையத்திலும் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.    

கோவை

    கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இந்திய இலங்கைக் கொடி எரிப்புப் போராட்டம் காலை 10.30 மணியளவில் நடந்தது. இந்திய இலங்கை அரசுகளுக்கு எதிரான முழக்கங்கள் எழுப்பியபடி கொடிகளை எரிக்க முயன்ற தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கோவை மாநகர அமைப்பாளர் தமிழரசன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் வே.பாரதி, தமிழர் தேசிய இயக்கம் திருவள்ளுவன், சீனிவாசன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு ரேஸ் கோர்ஸ் காவல்நிலையத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.
ஈரோடு
 
       ஈரோடு நகரத்தின் காளைமாடுச் சிலை அருகில் நடந்த போராட்டத்திற்கு தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் தலைமை தாங்கினார். இந்திய இலங்கை அரசுகளைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பியவாறு இந்திய இலங்கைக் கொடிகளை எரித்த தோழர்கள் 4 பேரை காவல்துறையினர் கைது செய்து ஈரோடு நகரக் காவல்நிலையத்திற்கு கொண்டுச் சென்றுள்ளனர்.
   
ஓசூர்
 
    ஓசூர் தாலுக்கா அலுவலகம்  முன்பு இன்று காலை 10.45 மணியளவில் நடந்த போராட்டத்திற்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி மேற்க மண்டலச் செயலாளர் கோ.மாரிமுத்து தலைமை தாங்கினார். இந்திய இலங்கை அரசுகளை அம்பலப்படுத்தி முழக்கங்கள் எழுப்பி தோழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய இலங்கைக் கொடிகளை எரித்த தோழர்கள் இருவரை காவல்துறையினர் கைது செய்து ஓசூர் நகரக் காவல்நிலையத்திற்கு கொண்டுச் சென்றுள்ளனர்.
 

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT