உடனடிச்செய்திகள்

Thursday, April 23, 2009

இந்திய - இலங்கைக் கொடி எரிப்புப் போராட்டம் :: பெ.மணியரசன் - தியாகு கூட்டறிக்கை

இந்திய - இலங்கைக் கொடி எரிப்புப் போராட்டம்  
பெ.மணியரசன் - தியாகு கூட்டறிக்கை
 
    வருகிற 25.04.09 அன்று தமிழகமெங்கும் இந்திய - இலங்கைக் கொடி எரிப்புப் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்து  தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தியாகு ஆகியோர் இன்று விடுத்துள்ள கூட்டறிக்கை:
 
    இந்திய - இலங்கைக் கூட்டுப் படையினர் ஈழத்தமிழினத்தைக் கொன்று குவிக்கின்றனர். தாங்கள் வாழ்ந்த தாயக மண்ணில் நாதியற்ற பிணங்களாகத் தமிழர்களின் உடல்கள் அங்கங்கே சிதறிக் கிடக்கின்றன. ஒரு நாளைக்கு சராசரியாக நூறு, இருநூறு பேர் என கொல்லப்பட்ட நிலை மாறி, இப்பொழுது ஆயிரம் இரண்டாயிரம் பேர் என்று கொல்லப்படுகிறார்கள். பாதுகாப்பு வலையம் நோக்கி வந்த 46,000 தமிழர்களைக் காணவில்லை என்ற செய்தி நம் நெஞ்சத்தை ஈட்டி போல் குத்துகிறது. ஈழத்தமிழர்களை இவ்வாறு கொன்றழிப்பதற்கும், பல்லாயிரக்கணக்கானோரின் உடல் உறுப்புகளைத் துண்டித்து ஊனப்படுத்தியதற்கும் இந்தியா மூல காரணமாக உள்ளது. இராணுவ உதவியும் நிதி உதவியும் செய்ததற்காக இந்திய ஆட்சியாளர்களுக்கு இராசபட்சேயும், சிங்களப் படைத் தலைவன் பொன்சேகாவும் நன்றி கூறி இருக்கிறார்கள்.

    22.04.09 இரவு புதுதில்லியில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் கூடிய அமைச்சரவைக் குழுவினர், 'அப்பாவி மக்களைப் பணயக் கைதிகளாக பிடித்து வைத்திருக்கும் விடுதலைப் புலிகளின் காட்டுமிராண்டித் தனத்தைக் கண்டிக்கிறோம்' என்று தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள்.
 
    இலங்கை அரசு அப்பாவித் தமிழர்களை கேடயமாக பயன்படுத்தி ஒரே நாளில் மூவாயிரம் தமிழர்களைக் கொன்றதையும், நிவாரண முகாம்கள் என்ற பெயரில் சிறை முகாம்களில் இலட்சக்கணக்காண தமிழர்களை அடைத்து வைத்திருப்பதையும் இவர்கள் மூடி மறைக்கின்றார்கள். இலங்கையில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்று இலங்கை அரசை நோக்கி மென்மையாக ஒப்புக்குக் கூறியிருக்கிறார்கள்.
   
    பதினாறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தமிழ்நாட்டுத் தமிழர்கள் இந்திய அரசிடம் கடந்த ஏழு மாதங்களாக போர் நிறுத்தம் கோரி எத்தனையோ வழிகளில் போராடி வருகிறோம். ஆனால் இந்திய அரசு மேலும் மேலும் கூடுதலாக இராணுவ உதவியும் நிதி உதவியும் சிங்கள அரசிற்கு செய்து தமிழின அழிப்புப் போரை தீவிரப்படுத்தி வருகின்றது.

    இந்திய - இலங்கை அரசுகளின் இந்த இனப்படுகொலையைக் கண்டித்து இந்திய - இலங்கைக் கொடிகளை எரிக்கும் போராட்டம் நடைபெறுகிறது. தற்காப்பு உணர்ச்சியும் தமிழின உணர்வும் மனித நேயமும் கொண்ட அனைவரும் அங்கங்கே கொடி எரிப்புப் போராட்டத்தை நடத்துமாறு உரிமையுடன் கேட்டுக் கொள்கிறோம்.
 
என்று அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT