இந்தியத் தேசியக் கொடி எரித்தத் தோழர்கள்
பிணையில் விடுதலை - உச்சநீதிமன்றம் உத்தரவு
நாளை சிறை வாசலில் வரவேற்பு
சிங்கள இனவெறி அரசுக்கு உதவிய இந்திய அரசைக் கண்டிக்கும் விதத்தில், இந்திய இலங்கை தேசியக் கொடிகளை எரித்தத் தோழர்களை உச்சநீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. மேலும், கொடி எரித்த தோழர்கள் அக்கொடியை தம் வீட்டில் ஏற்ற வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றம் விதித்த நிபந்தனையை தள்ளுபடி செய்தும், இது போன்ற நிபந்தனையை இனி எந்த வழக்கிற்கும் விதிக்கக் கூடாது என்றும் உச்சநீதிமன்றத் தீர்ப்பு சுட்டிக் காட்டியுள்ளது.
இலங்கை அரசு ஈழத்தமிழர்களை பல்லாயிரக்கணக்கில் கூட்டம் கூட்டமாக இனப்படுகொலை செய்வதற்கு இந்திய அரசு ஆயுத உதவி, நிதி உதவி மற்றும் பன்னாட்டு அரசியல் உதவி ஆகியவற்றை வழங்கி அந்த இனப்படுகொலையில் பங்கு வகித்தது. இதற்கு சனநாயக வழியில் கண்டனம் தெரிவிக்கும் வகையில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி மற்றும் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் ஆகியவை கடந்த 25.04.09 அன்று தமிழகமெங்கும் இந்திய அரசுக் கொடியையும் இலங்கை அரசுக் கொடியையும் எரிக்கும் போராட்டம் அறிவித்தது. கோயம்புத்தூரில் இப்போராட்டத்தில் கலந்து கொண்ட இரண்டு இயக்கங்களையும் சேர்ந்த 8 தோழர்கள் கைது செய்யப்பட்டு கோவைச் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களுக்கு பிணை விடுதலை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது. கடந்த 9.06.09 அன்று அப்பிணை மனு மீது ஆணை வழங்கிய நீதிபதி திரு. ஆர். இரகுபதி அவர்கள் மேற்கண்ட 8 பேரும் இந்திய அரசுக் கொடியை எரிக்கவில்லை, அதற்கு முன்பாக அவர்களைத் தடுத்துக் காவல்துறையினர் கைது செய்து விட்டார்கள் என்ற போதிலும் அவர்களின் நோக்கம் குறித்து கடுமையாகக் கருத வேண்டியுள்ளது. எனவே அவர்கள் தங்கள் வீட்டு வாசலில் ஒரு வாரத்திற்கு காலை 6.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை இந்திய அரசுக் கொடியை ஏற்ற வேண்டும் என்றும், ஏதாவது ஒரு அநாதை இல்லத்தில் ஒரு வாரத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தார். இந்நிபந்தனையை மறுபரீசீலனை செய்யக்கோரி தொடுக்கப்பட்ட மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கோவை மாநகரப் பொறுப்பாளர் பா.தமிழரசன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுக் குழு உறுப்பினர் வே.பாரதி ஆகிய இருவரும் இந்நிபந்தனைகளை ஏற்க இயலாது என தில்லி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இம்மனுவிற்காக பிரபல வழக்கறிஞரும் முன்னாள் நடுவண் சட்ட அமைச்சருமான திர. இராம் ஜெத்மலானி அவர்கள் தில்லி உச்சநீதிமன்றத்தில் வாதாடினார். வாதங்களுக்குப் பிறகு நீதிபதிகள் பி.சுதர்சன் ரெட்டி, தீபக் வர்மா ஆகியோர் அளித்தத் தீர்ப்பில் மனுதாரர்களை விடுதலை செய்யக் கோரி உத்தரவிட்டனர்.
அத்தீர்ப்பில், எரித்த கொடியை ஏற்றச் சொல்வதும், அநாதை ஆசிரமத்தில் பணியாற்றச் சொல்வதுமான நிபந்தனைகள் சட்டப்படி ஏற்பதற்குரியதல்ல என்றும் இது போன்ற நிபந்தனைகளை இனி யாரும் விதிக்கக் கூடாது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
பிணை உத்தரவு சிறையை வந்தடைந்ததை ஒட்டி, நாளை(செவ்வாய் - 10.11.09) மாலை கோவை நடுவண் சிறையிலிருந்து தோழர்கள் விடுதலை செய்யப்படுகிறார்கள். ஈழத்தமிழர்களுக்காக, கடந்த 6 மாதங்களாக சிறையில் இருந்து, ஈகம் செய்த அத்தோழர்களை, உணர்வாளர்கள், தமிழ் ஆர்வலர்கள் என அனைவரும் திரண்டு வரவேற்போம்! வாருங்கள்!
முழுத் தீர்ப்புக்கு:
தொடர்புக்கு:
தோழர் பா.சங்கர் 9865555275
ath tholarkalukum avarkalin kudumpathirkum emaathu nandri.
Post a Comment