உடனடிச்செய்திகள்

Friday, March 2, 2012

இராசபக்சே போர்க்குற்றவாளியாக அறிவிக்கக் கோரும் மார்ச் 6 உண்ணாப்போரில் த.தே.பொ.க. பங்கேற்பு!

இராசபக்சே கும்பலை போர்க்குற்றவாளியாக அறிவி எனக் கோரி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் உண்ணாப்போராட்டத்தில் த.தே.பொ.க. பங்கேற்கிறது!

 

ஈழத்தமிழரை இனப்படுகொலை செய்த இராசபக்சே கும்பலை போர்க்குற்றவாளியாக இந்திய அரசு அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி இந்தியக் கம்யூனிஸ்ட்டு கட்சி வருகிற 06.03.2012 செவ்வாய் அன்று சென்னையிலும், மாவட்டத் தலை நகரங்களிலும் உண்ணாப்போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளது. இப்போராட்டத்தில் பங்கேற்குமாறு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி உள்ளிட்டு அனைத்து அமைப்பினரையும் அக்கட்சி அழைத்துள்ளது.

 

இந்தியக் கம்யூனிஸ்ட்டுக் கட்சியின் அழைப்பை ஏற்று, மார்ச் 6 அன்று நடக்கும் உண்ணாப் போராட்டத்தில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பங்கேற்பதாக முடிவு செய்துள்ளது.

 

ஏற்கெனவே, பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் இராசபக்சே உள்ளிட்ட இலங்கை ஆட்சியாளர்களையும் படைத் தளபதிகளையும் நிறுத்தி விசாரணை நடத்தி தண்டிக்க வேண்டும் என தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியும் பல்வேறு தமிழின அமைப்புகளும் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகின்றன.

 

வடகிழக்குத் தமிழர் தாயகப் பகுதிகளில் இருந்து சிங்கள இராணுவம் முற்றிலும் அகற்ற வேண்டும், தமிழர்களின் அரசியல் நிலைப்பாட்டைத் தெரிந்து கொள்வதற்காக வடகிழக்கிலும், புலம் பெயர்ந்த தமிழர்களிடத்தும் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும், அரசியல் கைதிகளாக இலங்கைத் தீவில் அடைக்கப்பட்டுள்ளோருக்கு நிவாரணம் அளித்து விடுதலை செய்ய வேண்டும், இலங்கைத் தீவின் வடகிழக்குப் பகுதிகளை தமிழர்களின் தாயகப் பகுதி எனவும், அங்கு தமிழர்களுக்குத் தனிஅரசு உரிமை உண்டெனவும் அனைத்துலக சமூகம் அங்கீகரிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து கையெழுத்து இயக்கம் நடத்துகிற அதே நேரத்தில், இந்த உண்ணாப்போராட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட்டுக் கட்சியின் அழைப்பை ஏற்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியும் கலந்து கொள்ளும் எனத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

தங்கள் உண்மையுள்ள,

கி.வெங்கட்ராமன்

பொதுச் செயலாளர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி


போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT