உடனடிச்செய்திகள்

Tuesday, March 20, 2012

கூடங்குளம் மக்கள் மீது அடக்குமுறை - த.தே.பொ.க. கடும் கண்டனம்!

கூடங்குளம் மக்கள் மீது அடக்குமுறை


தமிழ்த் தேசப்பொதுவுடைமைக் கட்சி கண்டனம்

  

தமிழினப்பேரழிவுத் திட்டமான கூடங்குளம் அணு உலையைத் திறக்க அனுமதிப்ப தென்று முதலமைச்சர் செயலலிதா தலைமையில் 19.3.2012 அன்று கூடிய தமிழக அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இந்த அணு உலைக்கெதிராக மக்களைத் திரட்டி அமைதி வழிப் போராட்டம் நடத்தி வரும் அணு சக்திக்கெதிரான போராட்டக் குழு உறுப்பினர் வழக்கறிஞர் சிவசுப்பிரமணியன் உள்ளிட்ட 9 பேரை காவல்துறை கைது செய்துள்ளது. கூடங்குளம் பகுதியில் 5000 க்கும் மேற்பட்ட காவல் துறையினரும் அதிரடிப்படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

 

தமிழக அரசின் இந்த மக்கள் பகை, அடக்கு முறை நடவடிக்கைகளைத் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

 

கூடங்குளம் அணு உலை பாதுகாப்புக் குறித்து போராட்டக் குழுவின் சார்பில் முன் வைக்கப்பட்ட வினாக்கள் எதற்கும்  இந்திய அரசின் வல்லுநர் குழுவோ, தமிழக அரசு நியமித்த வல்லுநர் குழுவோ போதுமான விளக்கம் அளிக்கவில்லை. முனைவர் இனியன் தலைமையில் அணு சக்திக் கழக முன்னாள் தலைவர் எம்.ஆர். சீனிவாசன் உள்ளிட்டோரைக்கொண்டு தமிழக அரசு நியமித்த வல்லுநர்குழு போராட்டக்குழுவின் சார்பிலான அறிவியலாளர்களையோ, உயிர் அச்சத்தில் போராடிக்கொண்டிருக்கிற பொதுமக்களையோ சந்திக்க மறுத்து விட்டது. ஓரிரு மணி நேரம் அணு உலையை பார்வையிட்டப்பிறகு எல்லாம் சிறப்பாக இருக்கிறது. பாதுகாப்பாக இருக்கிறது. என்று அறிக்கை அளித்து விட்டது.

 

       அமெரிக்கா, சப்பான், செர்மனி, இத்தாலி ஆஸ்திரேலியா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் அணு உலைகளை மூட முடிவு செய்துள்ள நிலையில், உலகின் சிறந்த அறிவியலாளர்கள் பலரும் அணு உலைகள் பாதுகாப்பற்றவை என்று கருத்து தெரிவித்துள்ள நிலையில் இந்திய அரசின் விருப்பத்திற்கு இசைய கூடங்குளம் அணு உலையை திறக்க அணுமதிப்பது என தமிழக அரசு எடுத்துள்ள முடிவு ஒரு தலைச் சார்பானது. மக்களுக்கு எதிரானது.

 

அமைதி வழியில் போராட்டத்தை நடத்தி வரும் போராட்டக் குழுவினரைப் பொய் வழக்குகளில் கைது செய்வதும் காவல் துறையினரைக் குவித்து அப்பகுதியில் உள்ள ஏழை எளிய மக்களை அச்சுறுத்துவதும் அப்பட்டமான சனநாயக விரோத நடவடிக்கையாகும். தமிழக அரசின் இச்செயல்களை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

 

கூடங்குளம் அணு உலையை திறப்பது என்ற தனது முடிவைத் திரும்பப் பெற வேண்டுமென்றும், கைது செய்யப்பட்டுள்ள போராட்டக்குழுவினரை விடுதலை செய்ய வேண்டுமென்றும், அப்பகுதியில் பெரும் எண்ணிக்கையில் குவிக்கப்பட்டுள்ள காவல்துறையினரை திரும்பப் பெற வேண்டு மென்றும் தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.


தோழமையுடன்,

கி.வெங்கட்ராமன்

பொதுச் செயலாளர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி


| நாள் 20.03.2012 | இடம் சென்னை | ErodePeraatral Subramanian said...

நீங்களும் நானும் இது போன்று எழுதி படித்து கொண்டு இருக்க வேண்டியதுதான்.......களமிறங்கிப் போராடுவோம்

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT