"அமெரிக்கத் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க முன் வந்திருப்பதில் வரவேற்க ஒன்றுமில்லை"
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி அறிவிப்பு
இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐ.நா மனித உரிமை மன்றத்தில் அமெரிக்கா முன்வைத்துள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் என்ற பிரதமர் மன்மோகன்சிங் அறிவிப்பில் மகிழ்வதற்கு ஒன்றுமில்லை.
இந்திய நாடாளுமன்ற மக்கள் அவையில் 19.03.2012 அன்று உரையாற்றிய மன்மோகன்சிங் "அமெரிக்கா முன்வைத்துள்ள வரைவுத் தீர்மான அறிக்கை நமக்கு இன்னும் கிடைக்கவில்லை. இருந்த போதிலும் அத்தீர்மானத்தை ஆதரிக்க விரும்புகிறோம்" என்றார்.
நடந்துள்ளப் போர்குற்றங்கள் மீது விசாரணை நடத்த சார்பற்ற சர்வதேச விசாரணைக் குழுவை ஐ.நா. நியமிக்க வேண்டும் என்ற திருத்தத்தோடு அமெரிக்கத் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் என பிரதமர் அறிவித்திருந்தால் நாம் வரவேற்றிருக்கலாம். அமெரிக்கத் தீர்மானம் என்ன கோருகிறது?
ஈழத்தமிழர்க்கு எதிராக நடைபெற்ற போர்க்குற்றங்கள் குறித்து இராசபட்சே குழுவினர் மீது பன்னாட்டுக் குற்றவியல் விசாரணை எதையும் அமெரிக்கத்தீர்மானம் கோரவில்லை. இராசபட்சே நியமித்த 'பெற்றப் படிப்பினைகள் மற்றும் இணக்கத்திற்கான ஆணையம்' கொடுத்துள்ள அறிக்கை மீது இலங்கை அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோருகிறது. அதாவது ஈழத்தமிழருக்கு எதிரான இன அழிப்புப் போர்க்குற்றம் செய்த இலங்கை ஆட்சியாளர்களே தமக்கெதிராக விசாரணை நடத்தி, தங்களையே தண்டித்துக் கொள்ள வேண்டும். என்று கோருகிற தீர்மானம் அது. பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் இராசபட்சே குழுவினரை நிறுத்துவதற்கான எந்த வாய்ப்பும் அதில் இல்லை. தமிழர் இனப்பிரச்சனையை தீர்ப்பதற்கான தொடக்க நிலை முயற்சி எதையும் அத்தீர்மானம் கோடிட்டுக்காட்டக் கூட இல்லை.
ஆயினும், மனித உரிமை விசாரணை மற்றும் நடவடிக்கைகளில் ஐ.நா. மனித உரிமை ஆணையரின் அறிவுரையையும், நுட்ப உதவிகளையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று இலங்கை அரசையும், அந்நடவடிக்கைகள் குறித்து தகவல் அறிக்கையை ஐ.நா. மனித உரிமை மன்றத்தின் 22 ஆவது அமர்வில் அளிக்க வேண்டுமென்று மனித உரிமை ஆணையரையும் கேட்டுக்கொள்ளும் பகுதி அவ்வரைவுத் தீர்மானத்தில் முதலில் இடம்பெற்றது.
ஐ.நா. மனித உரிமை மன்றத்தின் அடுத்தக் கட்ட விசாரணைக்கு இது முதல் படியாக அமையும் என்று மிகையாக மதிப்பிட்ட சிலர் இத்தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டுமென்று கோரினர். ஐ.நா. மனித உரிமை ஆணையரின் மேற்பார்வையில் இலங்கை அரசின் நடவடிக்கைகள் அமைய வேண்டுமென்ற அந்த பலவீனமான நிபந்தனையும் கூட இப்போது அமெரிக்க வரைவிலிருந்து நீக்கப்பட்டு விட்டதாக அறிகிறோம்.
அதாவது ஏற்கெனவே அமெரிக்கா முன்வைத்த சொத்தையான தீர்மானத்தை இன்னும் பலவீனப் படுத்தியதற்குப் பிறகே அத்தீர்மானத்தை ஆதரிக்கப் போவதாக இந்தியா முடிவுவெடுத்துள்ளது. இதனால் தொகை தொகையாகக் கொல்லப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு ஒரு சிறு ஞாயமும் கிடைத்துவிடப் போவதில்லை. கொடும் போர்க் குற்றவாளியான, இனக்கொலையாளி இராசபட்சே சர்வதேச சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிப்பதற்கே வழி கோலப்பட்டுள்ளது.
'ஐ.நா. மனித உரிமை ஆணையர் மேற்பார்வை' என்ற நிபந்தனை நீக்கப்பட்டு விட்டப் பிறகு முன்னர் இருந்ததாக நம்பப்பட்ட சிறிய சர்வதேச தலையீட்டு வாய்ப்பும் கைநழுவிவிட்டது.
இனப்படுகொலைக்குத் தலைமை தாங்கி வழி நடத்திய இராசபட்சே உள்ளிட்ட முதன்மைக் குற்றவாளிகள் தப்பிப்பதற்கு வாய்ப்பளிக்கும் தீர்மானம் என்பதாலேயே இந்தியா அத்தீர்மானத்தை ஆதரிக்க முன் வந்துள்ளது. இதன் வழியாக தனது தமிழினப் பகைத் திட்டத்தை திறமையான சூழ்ச்சியின் மூலம் இந்திய அரசு மறைத்துக் கொண்டுள்ளது.
எனவே அமெரிக்கத் தீர்மானத்தை ஆதரிக்க முடிவெடுத்துள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங் வெளியிட்டுள்ள அறிவிப்பில் வரவேற்பதற்கு ஒன்றுமில்லை என தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கருதுகிறது. இந்திய அரசின் இந்த இனப்பகை சூழ்ச்சித் திட்டத்தை புரிந்து கொண்டு இந்திய அரசுக்கு எதிராக தொடர்ந்து விழிப்புடன் போராட முன் வருமாறு தமிழர்களைத் த.தே.பொ.க. அழைக்கிறது.
நாள் : 19.03.2012 . இடம்: சென்னை
தோழமையுடன்,
பெ.மணியரசன்,
தலைவர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி
கி.வெங்கட்ராமன்
பொதுச் செயலாளர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி
Post a Comment