கூடங்குளம் அணு உலையை மூடக்கோரி அமைதி வழி
போராட்டம் நடத்திய மக்கள் மீது
தமிழக காவல்துறை காட்டுமிராண்டி தாக்குதல்
அனைத்துக் கட்சி கண்டன மறியல்
தோழர் பெ.மணியரசன் மீது காவல்துறை தாக்குதல்
தமிழினத்தை அழிக்கும் கூடங்குளம் அணு உலையை மூடக்கோரி கடந்த 1
ஆண்டுக்கு மேலாக கூடங்குளம், இடிந்தகரை பகுதி மக்கள் அமைதி
போராட்டம் நடத்தி வருகிறார்கள். மக்களின் உணர்வுகளை புறந்தள்ளிவிட்டு அணு உலையில்
யுரேனியம் எரிபொருள் நிரப்ப இந்திய அரசு நாள் குறித்தது.
இதனை எதிர்க்கும் வகையில் அப்பகுதி மக்கள் ஏறத்தாழ 10,000 பேர் அணு உலை முற்றுகை போராட்டம் என அறிவித்து பேரணியாக சென்று
வைராவிக்கிணறு கடற்கரையில் கூடினர்.அமைதியாக போராடிய மக்கள் மீது 10/09/2012 அன்று
தமிழக காவல்துறை தடியடி, கண்ணீர்ப்புகை வீச்சு, கல்லடி, தேவாலயங்கள், குடியிருப்புகளில் தேடுதல் வேட்டை என கண்மூடித் தாக்குதல் நாள்முழுவதும்
கட்டவிழ்த்துவிட்டது.
உயிருக்கு பயந்து கடல் நீரில் குதித்த பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்கள் கடுமையாக தாக்கப்பட்டனர். செய்தி
சேகரிக்கச் சென்ற ஊடகத்தினரும் தாக்கப்பட்டனர்.
தமிழக அரசின் இந்த காட்டுமிராண்டித் தாக்குதலைக் கண்டித்து
11/09/2012 இன்று தமிழகமெங்கும் அனைத்துக் கட்சிகளின் சார்பில் மறியல் போராட்டம்
நடைபெற்றது.
சென்னை:
சென்னையில் அண்ணாசாலை, அண்ணா சிலை அருகில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைவர்
பெ.மணியரசன், ம.தி.மு.க துணைப் பொதுச்செயலாளர்
மல்லை சத்யா, திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர்
கொளத்தூர் மணி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர்
த.வேல்முருகன், காஞ்சி மக்கள் மன்றத் தலைவர் மகேசு, சேவ் தமிழ்ஸ் செந்தில், இளைஞர் எழுச்சி பாசறை அருண்சோரி, தமிழர் முன்னேற்ற கழக ஒருங்கிணைப்பாளர் அதியமான், உலகத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் ஸ்டாலின், தந்தைப் பெரியார் திராவிடர் கழகம் கேசவன். சம்ர்ப்பா குமரன், பூவுலகின் நண்பர்கள் அமைப்பினர் உள்ளிட்ட தமிழின உணர்வாளர்கள்
ஏறத்தாழ 500 பேர் மறியல் போராட்டம் நடத்தினர்.
இப்போராட்டத்தில் எல்லீஸ் சாலை சந்திப்பில் தரையில் படுத்து மறியல் செய்த த.தே.பொ.க தலைவர் தோழர் பெ.மணியரசன்
அவர்களை காவல்துறையினர் பிடித்து, தாக்கி, தரதர வென தரையில் இழுத்து சென்று காவல் வாகனத்தில் ஏற்றினர்.
த.தே.பொ.க தலைமை செயற்குழு உறுப்பினர் க.அருணபாரதி, பொதுக்குழு உறுப்பினர்கள் ஆ.குபேரன், பழ.நல்.ஆறுமுகம், க.முருகன், தலைமை நிலைய செயலாளர் கோபிநாத், தமிழக இளைஞர் முன்னணி மையக்குழு உறுப்பினர் செந்திறல்,மகளிர் ஆயம் மையக்குழு உறுப்பினர் ம.லெட்சுமி, கட்சியின் தாம்பரம் செயலாளர் தமிழ்க்கனல், தோழர் தமிழ்ச்சமரன் ஆகியோர் காவல்துறையினரால் கடுமையாக
தாக்கப்பட்டனர் அனைவரும் கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்டனர்.
போராட்டத்தின் போது இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், அமைச்சர் நாராயணசாமி, தமிழக முதலமைச்சர் செயலலிதா, கூடங்குள அணு உலை ஆகிய படங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன.
போராட்டத்தின் போது சென்னை மாநாகர பேருந்துக் கண்ணாடிகள் உடைந்ததாக
கூறி தோழர் நாத்திகன் என்பவரை காவல்துறையினர் தனியே அழைத்துச் சென்றனர். இதனைக்
கண்டித்தும் அத்தோழரை தங்களிடம் ஒப்படைக்குமாறு வலியுறுத்தியும் கைதான அனைவரும்
இராயப்பேட்டை சமூக கூடத்திற்குள் செல்லமாட்டோம் எனக்கூறி வெளியில் அமர்ந்து
ஆர்ப்பாட்டம் செய்தனர். அதன்பிறகு தலைவர்களுடன் காவல்துறை அதிகாரிகள்
பேச்சுவார்த்தை நடத்தி தோழர் நாத்திகனை அரங்கத்தில் ஒப்படைத்தனர்.
தஞ்சை:
தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகில் சாலை மறியலில் ஈடுபட்ட
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி த்லைமை செயற்குழு உறுப்பினர் நா.வைகறை, குழ.பால்ராசு, பழ.இராசேந்திரன், இராசு.முனியாண்டி,தமிழக உழவர் முன்னணி பொதுச் செயலாளர்
காசிநாதன், ரெ.கருணாநிதி, நாம் தமிழர் கட்சியின் முத்துக்கிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், பா.ம.கவினர் உடபட 100 பேர் கைது செய்யப்பட்டனர்.
இப்போராட்டத்திற்கு தமிழர் தேசிய இயக்கப் பொதுசெயலாளர் அய்யனாபுரம்
முருகேசன் தலைமை தாங்கினார்.
மதுரை:
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி த்லைமை செயற்குழு உறுப்பினர்
அ.ஆனந்தன், மதுரைச் செயலாளர் ரெ.இராசு, மகளிர் ஆயம் செரபீனா, தானி தொழிலாளர் சங்கம் கணேசன், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட், சட்டக்கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட 50 பேர் சாலை மறியலில் ஈடுபட்டு
கைதாயினர்.
மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர்
நி.த.பாண்டியன் தலைமை தாங்கினார்.
ஈரோடு:
------
ஈரோடு பி.எஸ்.என்.எல் அலுவலகத்தை இழுத்து பூட்டும் போராட்டம்
நடைபெற்றது. இதில் பங்கேற்ற இரத்தினசாமி (திராவிடர் விடுதலைக் கழகம்), வெ.இளங்கோ (த.தே.பொ.க), க.மோகன் (தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்) , கண.குறிஞ்சி(பி.யு.சி.எல்), தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத் தோழர்கள் உள்ளிட்ட 50பேர்
கைது செய்யப்பட்டனர்.
கிருஷ்ணகிரி:
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி த்லைமை செயற்குழு உறுப்பினர்
தோழர் .கோ.மாரிமுத்து தலைமையில் கிருஷ்ணகிரியில் சாலைமறியலில் ஈடுபட்ட தோழர்கள், தமிழர் தேசிய இயக்கத் மாவட்டத் தலைவர் முருகேசன், திராவிடர் விடுதலைக்கழக குமார், தமிழக இளைஞர் முன்னணி கிருஷ்ணகிரி அமைப்பாளர் குணசேகரன் உள்ளிட்ட
30 பேர் கைது செய்யப்பட்டனர்.
செய்திப்பிரிவு: த.தே.பொ.க. தலைமையகம், சென்னை
படங்கள்: கவிபாஸ்கர்
Post a Comment