மாணவர்களைத் தாக்கிய காங்கிரசுக் குண்டர்களைக்
கைது செய்!
தஞ்சையில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக்
கட்சி கண்டன ஆர்ப்பாட்டத்தில் தோழர்
பெ.மணியரசன் எழுச்சி உரை.
கண்டன ஆர்ப்பாட்டம்:
திருச்சியில்
27.03.2013 அன்று மாணவர்களைத் தாக்கிய காங்கிரசுக் குண்டர்களைக் கைது செய்ய வலியுறுத்திக்
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் 28.03.2013 அன்று தஞ்சை பனகல் கட்டடம் அருகில்
கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்குத் த.தே.பொ.க.வின் தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு தலைமை
தாங்கினார்.
தமிழர்
தேசிய இயக்கப் பொதுச் செயலாளர் திரு.அய்யனாபுரம் சி.முருகேசன், அரசுப் போக்குவரத்துக்
குடந்தைக் கோட்டச் செயலாளர் தோழர் துரை.மதிவாணன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். த.தே.பொ.க.தலைமைச்
செயற்குழு உறுப்பினர் தோழர் நா.வைகறை முழக்கங்கள் எழுப்பினார். த.தே.பொ.க. தலைமைச்
செயற்குழு உறுப்பினர் தோழர் பழ.இராசேந்திரன், பூதலூர் ஒன்றியச் செயலாளர் தோழர் க.காமராசு,
தஞ்சை நகரத் துணைச் செயலாளர் தோழர் தமிழ்ச்செல்வன், தமிழக இளைஞர் முன்னணியின் தமிழகத்
துணைத் தலைவர் தோழர் கெ.செந்தில்குமரன், மகளிர் ஆயத்தின் தோழர் கவுசல்யா, தமிழக மாணவர்
முன்னணித் தோழர் பிரபாகரன் உள்ளிட்ட திரளான தோழர்கள் , மாணவர்களும் பொதுமக்களும் கலந்துக்
கொண்டனர்.
தோழர் பெ.மணியரசன் பேச்சு
கண்டன
ஆர்ப்பாட்டத்தின் நிறைவில் தமிழ்த் தேசப் பொதுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன்
பேசியதிலிருந்து:
காங்கிரசுக்
குண்டர்களால் தாக்கப்பட்டு திருச்சி அரசினர் பொதுமருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று
வரும் மாண்வர்களை இன்று காலை நானும் தோழர் குழ.பால்ராசு, திருச்சி செயலாளர் தோழர் கவித்துவன்
மற்ற திருச்சி தோழர்களும் பார்த்து வந்தோம்.
காங்கிரசுத் தலைவருக்குக்
கருப்புக் கொடி
காங்கிரசுகாரர்கள்
திருச்சி திண்டுக்கல் சாலையில் உள்ள எல்.கே.எஸ்.மகால் என்ற மண்டபத்தில் நாடாளுமன்றத்
தொகுதிகளின் நிர்வாகிகள் கூட்டம் போட்டிருக்கி றார்கள். அக்கூட்டத்தில் கலந்து கொள்ள
வரும் தமிழ்நாடு காங்கிரசுக் கமிட்டியின் தலைவர் ஞானதேசிகனுக்குத் கருப்புக்கொடி காட்டுவதற்காக
முப்பத்தைந்து மாணவர்கள், மண்டபத்திற்கு வெளியே சற்றுத் தள்ளி உள்ள அரிஸ்டோ ரவுண்டானாவில்
நின்றுள்ளார்கள்.
அப்போது
அங்கு காங்கிரசார் கட்டியுள்ள ஒரு பதாகையில் “மாணவப்
பொறுக்கிகளை அடக்க வந்துள்ள ஞானதேசிகன் அவர்களே வருக வருக” என்று எழுதப்படுள்ளதை
மாணவர்கள் பார்த்துள்ளார்கள். தங்களைப் பொறுக்கி என்று எழுதியுள்ளதைத் கண்டு ஆத்திரப்பட்ட
மாணவர்கள் அந்தப் பதாகையைக் இன்னொரு பதாகையையும் கிழித்துள்ளனர். இதை அறிந்த காங்கிரசுகாரர்களும்
அவர்கள் அழைத்து வந்திருந்த குண்டர்களும் ஏற்கெனவே மண்டபத்தில் வைத்திருந்து உருட்டுத்
தடிகளை எடுத்துக் கொண்டு வந்த மாணவர்களைச் சரமாரியாக அடித்திருக்கிறார்கள்.
காங்கிரசு
குண்டர்கள் மாணவர்களை அடித்து நொறுக்குவதைத் தமிழ் நாளேடுகள் அப்படியே பாடம் பிடித்துப்
போட்டுள்ளன. தொலைக்காட்சியிலூம் காட்டினார்கள். ஒரு பெண்மணி ரவுடியைப் போல் தடியைச்
சுழற்றிக் கொண்டு வரும் படத்தையும் போட்டுள்ளார்கள். தொட்டியம் தொகுதியின் முன்னாள்
சட்டப்பேரவை உறுப்பினர் ராசசேகரன், இராமகிருட்டிணன் ஆகியோர் இந்த வெறியாட்டத்திற்குத்
தலைமை தாங்கியுள்ளார்கள். மாணவர்கள் சந்தியகுமார், சரவணன், வெங்கடேசன், முகமதுபிஜ்ரி
ஆகியோர் கடுமையாகப் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இன்னொரு மாணவர்க்கு முதுகில் அறிவாள் வெட்டு விழுந்துள்ளது. அவர் மருத்துவமனையில் சிகிச்சை
பெறாமல் தனியார் மருத்துவமனைக்கு அவர் தந்தையாரால் அழைத்துச் செல்லப் பட்டுள்ளார்.
மாணவர்களைத்
தாக்குவதற்காகவோ அல்லது வழக்கம் போல் தங்களுக்குள் நடைபெறும் கோஷ்டிச் சண்டையால் பயன்படுத்துவதற்காகவோ
காங்கிரசார் முன் கூட்டியே அறுபது குண்டர்களையும் குண்டாந்தடிகளையும் தயாராக மண்டபத்திற்குள்
வைத்திருக்கிறார்கள்.
காங்கிரசார்
கமிட்டி கூட்டம் நடத்தினால் தங்களுக்குள் ஒருவரை, ஒருவர் தாக்கிக் கொள்வது சட்டையைக்
கிழிந்துக் கொள்வது வழக்கம். என்ன நோக்கத்திற்காகவோ ரவுடிகளையும் குண்டர்களையும் முன்கூட்டியே
மண்டபத்திற்குள் வைத்திருந்திருக் கிறார்கள்.
அறவழிப்போராட்டத்தில் –
காங்கிரசார் வன்முறை
மார்ச்சு
மாதம் 8 ஆம் தேதியிலிருந்து 20 நாள்களாகத் மாணவர் போராட்டம் தமிழகம் தழுவியதாக நடந்துவருகிறது.
ஈழத்தில் இனப்படுகொலைக் குற்றம் புரிந்த இராசபட்சே கும்பலை விசாரிக்கப் பன்னாட்டு புலனாய்வு
வேண்டும், இனிமேலும் சிங்களர்களோடு சேர்ந்து வாழ்வதா பிரிந்து தனிநாடு அமைத்துக் கொள்வதா
என்பதை முடிவு செய்ய ஈழத்தமிழர்களிடம் கருத்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட
முழக்கங்களை முன்வைத்து மாணவர்கள் அறவழியில் போராடிவருகிறார்கள். இப்போராட்டத்தில்
வன்முறை எதுவும் இடம் பெறவில்லை. இப்போழுது திருச்சியில் மாணவர் போராட்டத்தில் காங்கிரசு
வன்முறையை ஏவியுள்ளார்கள்.
1965 இல் இதேதான் நடந்தது
1965 சனவரி 25 இல் இந்தித் திணிப்பை எதிர்த்து மாணவர்கள்
தமிழகம் முழுவதும் பேரணிகள்தான் நடத்தினார்கள். தஞ்சாவூரில் நடந்த பேரணியில் அப்போது
மாணவனாக இருந்த நான் கலந்து கொண்டேன். மாணவர் பேரணிகள் தமிழகம் எங்கும் வன்முறையின்றி
நடந்தது. ஆனால் மதுரையில் காங்கிரசுக்காரர்கள் மாணவர் பேரணிக்குள் புகுந்து மாணவர்களை
அரிவாளால் வெட்டி, கட்டைகளால் தாக்கி படுகாயப்படுத்தினார்கள். இந்த செய்தி அன்று மாலை
வானொலிச்செய்தியில், “மாணவர்களுக்கும் காங்கிரசுக்காரர்களுக்கும் மோதல் என்றும் “மாணவர்கள் படுகாய மடைந்தனர்” என்றும் சொல்லப்பட்டது.
மதுரையில்
காங்கிரஸ் நடத்திய வன்முறையைக் கண்டித்து மறுநாள் 26.01.1965 அன்று கண்டன ஊர்வலங்கள்
நடத்த மாணவர்கள் முற்பட்டனர். அந்த ஊர்வலங் களுக்கு காவல்துறை அனுமதி மறுத்தது. சிதம்பரத்தில்
அண்ணாமலை பல்கலைக் கழக மாணவர்கள் பல்லாயிரக்காணக்கில் திரண்டு ஊர்வலமாக முழக்கங்கள்
எழுப்பி வந்த போது காவல்துறை அதிகாரிகளும் வருவாய்த்துறை அதிகாரிகளும் குறுக்கே மறித்து,
“இன்று குடியரசு நாள் எனவே கண்டன ஊர்வலத்திற்கு அனுமதி இல்லை” என்றார்கள். மாணவர்கள்
ஊர்வலம் போவோம் என்று பிடிவாதம் செய்தபோது, ‘’நாளைக்கு (27.01.1965) ஊர்வலம் போங்கள்
அனுமதிக்கிறோம். இன்று அனுமதி இல்லை” என்றார்கள்.
மாணவர்கள்
கலைந்து சென்றனர். மறுநாள் ஊர்வலமாக வந்த போது, ரயில்வே கேட் அருகே மாணவர்களை தடுத்தார்கள்;
அதே அதிகாரிகள் தடைச் சட்டம் இருக்கிறது, ஊர்வலத்திற்கு அனுமதி இல்லை என்றார்கள்.
“நேற்று வாக்குறுதி கொடுத்தீர்கள், இன்று மீறி விட்டீர்களே” என்று மாணவர்கள் வாதாடினார்கள்;
மீறி ஊர்வலம் போக முயன்றார்கள்.
முதல் துப்பாக்கிச்சூடு;
முதல் பலி
அப்போதுதான்
காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் முதல்
துப்பாக்கிச்சூடு நடந்தது. முதல் களப்பலியானான் மாணவன் இராசேந்திரன். இந்த செய்தி அறிந்ததும்
தமிழ்நாடே கொந்தளித்தது. மாணவர்கள் போர்க்கோலம் பூண்டார்கள். இரண்டு மாதங்களுக்கு போராட்டம்
நீண்டதும் அடுத்தடுத்து துப்பாக்கிச்சூடுகள். 300-க்கும் மேற்பட்ட மாணவர்களையும் பொது
மக்களையும் சுட்டுக் கொன்றது காங்கிரசு ஆட்சி. காங்கிரசு என்றாலே வன்முறை என்றானது.
அந்த வரலாற்றுத் தொடர்ச்சியாகத்தான் இப்போது திருச்சியில் காங்கிரசு வன்முறை வெறியாட்டம்
நடத்தி மாணவர்களை – இளம்பிஞ்சுகளை தாக்கியுள் ளார்கள்.
திருச்சி காவல்துறைக்கு
ஞானதேசிகன் முதல்வரா?
இந்த
சம்பவங்களில் திருச்சி காவல்துறை ஒருதலைச் சார்பாக நடந்து கொண்ட விதம் கடும் கண்டனத்துக்குரியது.
காவல்துறையினர் ஏற்கெனவே அங்கு குவிக்கப் பட்டுள்ளனர். அவர்கள் முன்னால் காங்கிரசுக்
குண்டர்கள் மாணவர்களைத் தடி கொண்டு தாக்குகிறார்கள். காவல்துறையினர் தடுக்கவில்லை.
தடியர்களைக் கைது செய்யவில்லை. மாறாக அடிபட்ட மாணவர்களைக் கைது செய்கிறார்கள். காவல்
துறையினர் கைது செய்து வைத்திருந்த மாணவர்களையும் காங்கிரசுக் காரர்கள் தாக்கினர். இன்று பகல்
வரை காங்கிரசார் மீது வழக்கு கூட பதியவில்லை. திருச்சியில் காவல்துறை உயர் அதிகாரிகள்
இருக்கி்றார்கள் ஏன்? காங்கிரசின் வன்முறைக்கு காவலர்கள் போல காவல்துறை திருச்சியில்
செயல்படுகிறது?
தமிழகம்
முழுவதும் மாணவர்கள் போராட்டத்தைத் தமிழக அரசு நிதானமாகக் கையாள்கிறது. தமிழ்த் தேசப்
பொதுவுடைமைக் கட்சிக்கு அ.இ.அதி.மு.க.விற்கும், முதல்வர் செயலலிதா அவர்களுக்கும் எத்தனையோ
கருத்து மாறுபாடுகள் முரண்பாடுகள் இருக்கின்றன, ஆனால் இப்பொழுது நடைபெறும் மாணவர் போராட்டத்தை
நிதானமாக அணுகுகிறது என்பதை நாங்கள் கவனிக்கத்த தவறவில்லை.
மாணவர்
போராட்டமும் அறவழியில் நடக்கிறது திருச்சியில் மட்டும் முதலமைச் சராக ஞானதேசிகன் இருக்கிறாரா?
அவர் ஆணைப்படிதான் திருச்சி காவல்துறை அதிகாரிகள் செயல்படுகிறார்கள்.
மாணவர்களைத்
தாக்கியக் காங்கிரசு குண்டர்களைக் கைது செய்ய வேண்டும் என்பது தான் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தின்
முக்கிய கோரிக்கையாகும்.
சொந்தமாக சூனியம் வைத்துக்
கொண்டார்கள்
1965-இல்
மாணவர்களை சுட்டுத் தள்ளி படுகொலைபுரிந்த காங்கிரசுக் கட்சி ஆட்சி 1967-இல் படுதோல்வி
அடைந்தது. அதன் பிறகு தமிழ்நாட்டில் அது எழவே இல்லை இப்பொழுது மீண்டும் மாணவர்களைத்
தாக்கி தனக்குத் தானே சவக்குழி தோண்டிக் கொண்டுள்ளது காங்கிரசு, இப்பொழுது ஒரு சொலவடை
சொல்கிறார்களே, “ சொந்தச் செலவில் சூனியம் வைத்துக் கொள்வது” என்று அப்படித்தான் காங்கிரசுக்
கட்சி, திருச்சியில் சொந்தச் செலவில் சூனியம் வைத்துக் கொண்டுள்ளது.
வரக்கூட்டிய
தேர்தல்களில், காலம் காலமாகக் காங்கிரசுக்கு வாக்களித்த மக்கள் கூட, இனி காங்கிரசுக்கு
வாக்களிக்க மாட்டார்கள் தம்பி பாலச்சந்திரன் படம் ஒன்று போதும் காங்கிரசைத் துடைத்தெறிய!.
காங்கிரசு ஒழிப்பும் மட்டுமே
இலட்சியமா?
காங்கிரசை
ஒழிக்க வேண்டும் என்ற முழக்கம் மாணவர்களிடையே பெரிதாக எழுந்துள்ளது. அதுதான் ஞானதேசிகனுக்கு
ஆத்திர மூட்டியுள்ளது. காங்கிரசை ஒழிப்பது இன்றியாமைத் தேவைதான். ஆனால் மாற்று அமைப்பு
எது என்பதில் மாணவர்களுக்குத் தெளிவு வேண்டும்.
1965
மாணவர் எழுச்சி 67- இல் காங்கிரசு ஆட்சியை ஒழித்தது தி.மு.க.வைக் கொண்டு வந்தது கடைசியில்
என்ன ஆயிற்று?. தி.மு.க. ஒரு குட்டிக் காங்கிரசு என்பதுதான் வரலாறானது. இந்தி ஆதிக்கம்
ஒழிக்கப்பட்டதா? ஆங்கில ஆதிக்கம் நீங்கியதா?
தமிழ் முழுமையான கல்வி மொழி ஆனதா? ஆட்சி மொழி ஆனதா? இல்லை. தமிழன், திராவிடன்
என்று பேசி வந்த கருணாநிதி ஆட்சி பீடம் ஏறிய பிறகு நான் மொழியால் தமிழன், இனத்தால்
திராவிடன், நாட்டால் இந்தியன் என்று கூறி, முழு இந்தியனாக மாறிவிட்டார். இந்திய ஏகாதிபத்தியத்தின்
கங்காணியாக மாறினார். தி.மு.க. ஒரு குட்டி காங்கிரசு ஆனாது.
அனைத்திந்தியக்
கம்யூனிஸ்டுக் கட்சிகள் காங்கிரசின் இடது சாரிப் பிரிவாகச் செயல்படுகின்றன. தி.மு.க.
போன்ற திராவிடக் கட்சிகள் காங்கிரசின் திராவிடப் பிரிவுகளாக செயல் படுகின்றன.
எனவே
சரியான மாற்றுக் கொள்கைதான் தமிழர்களுக்கு விடிவைத் தருமே தவிர, காங்கிரசை ஒழிப்பது
என்ற நிலையோடு நம் வேலைத் திட்டத்தை நிறுத்திக் கொள்ளக்கூடாது. சரியான மாற்றுக் கொளகையை
கண்டறிய வேண்டும். ஆளை மாற்றுவது, கட்சியை மாற்றுவது மாற்று அரசியல் ஆகாது. மாற்றுக்
கொள்கையுடையதுதான் மாற்று அரசியல்.
மாற்று அரசியலுக்கான முதல்படி
இன்று
தமிழ்நாட்டுத் தமிழர்களுக்குத் தேவையான அரசியல் எது? இதைத் தேடுவதற்கான முதல் படி இந்தியாவை
மறுப்பதுதான்! நான் இந்தியன் என்பதை மறுப்பதுதான்! இந்தியக் கட்டமைப்புக்குள் தன்னை
வைத்துக் கொண்டு சிந்திக்கும் எந்தக் கட்சியும் தமிழின அழிவுக்குத் தான் துணை போகும்.
தி,மு.க. அப்படித்தான் தமிழினத் துரோகக் கட்சி ஆனது.
ஏன்,
இந்தியாவை மறுக்கச் சொல்கிறேன்? இந்தியாவில் நம்மை, தமிழர்களை - சமக் குடிமக்களாக-
சகோதரர்களாக ஏற்றுக் கொள்வோர் யாரும் இல்லை.
2008-2009
இல் ஈழத் தமிழர்கள் ஒன்றரை இலட்சம் பேரை இனப்படுகொலை செய்தது சிங்கள இனவெறி அரசு. நமக்காக
இந்தியாவில் பிற மாநிலங்களில் ஒரு சொட்டு கண்ணீர் விட ஒரு கட்சியும் இல்லை. உண்ணாவிரதம்
நடத்த ஒரு இனமே இல்லை.
கடைசியாக
இனத்துரோகக் கறைகளைக் கழுவிக் கொள்ளலாம் என்ற நப்பாசையில் கழுவாய் தேடிக் கொண்டு தமிழர்
வாக்குகளை வாங்கலாம் என்ற தந்திரத்தில் நாடாளுமன்றத்தில் ஒரு தீர்மானம் கொண்டுவர வேண்டும்
என்று காங்கிரசிடம் நிபந்தனை போட்டார் கருணாநிதி. இலங்கையில் நடந்தது “இனப்படுகொலை”
என்று குறிப்பிட்டுத் தீர்மானம் போடுங்கள் என்றார் கருணாநிதி.
“நடந்தது
இனப்படுகொலை” என்று ஏற்றுக்கொள்ள முடியாது என்று எல்லாக் கட்சிகளும் மறந்துவிட்டன.
காங்கிரசு, பா.ச.க., ஐக்கிய சனதா தளம், சமாஜ் வாதி கட்சி, பகுசன் சமாஜ் கட்சி திரிணமூல்
காங்கிரசு, சி.பி. எம், சி.பி.ஐ, தேசிய வாதக் காங்கிரசு என எல்லாக் கட்சிகளும் இனப்படுகொலை”
என்ற சொல்லை ஏற்க முடியாது என்று கூறிவிட்டன. அக்கட்சிகளுக்குத் தலைமை தாங்குவோரின்
இனத்தைச் சேர்ந்தவர்கள் எங்காவது 1000 பேர், அல்ல, 100 பேர் கொல்லப்பட்டிருந்தால் கூட
அது இனப்படுகொலை என்று கூறியிருப்பார்கள். அந்த நாடு நட்பு நாடு என்று கூறுவார்களா?
கூறமாட்டார்கள். எதிரிநாடு என்று கூறுவார்கள்.
தமிழர்களை இந்தியர்களாக
ஏற்கவில்லை
தமிழர்களே,
மாணவர்களே, காங்கிரசு மட்டும்தான் நமக்கு எதிரி, சோனியகந்தியின் சூழ்ச்சி மட்டுமே நமக்குப்
பாதகமானது என்று எதிரிகளை சுருக்கிக் கணக்குப் போடாதீர்கள். இந்தியாவினால் உள்ள இதர
மாநிலத்துக் கட்சிகளும் இதர அனைத்திந்தியக் கட்சிகளும் தமிழர்களுக்கேற்பட்ட அவலங்களுக்குப்
பரிகாரம் காண முன் வரவில்லை. தமிழர்களைப் புறக்கணிக்கின்றன. தமிழர்களும் இந்தியக் குடிமக்கள்
தாம் என்று சகோதர மனப்பான்மையுடன் கருதவில்லை.
இந்தியாவில்
உள்ள இலைங்கைத் தூதுவர் கரியவாசம் சொல்வதை பாருங்கள் இந்தியர்களும் சிங்களர்களும் ஒரே
இனம் என்கிறார். ஒரிசாவிலிருந்தும் வங்காளத்திலிருந்தும் இலங்கையில் குடியேறியவர்கள்தாம்
சிங்களர்கள்; எனவே சிங்களர்களும் இந்தியர்களும் ஒரே இனத்தவர்தான்; தமிழர்கள் வேறுபட்டவர்கள்
என்கிறார் கரியவாசம். இதில் கரியவாசத்தைக் கண்டனம் செய்ய ஒன்றுமில்லை. அவர் ஓர் உண்மையைச்
சொல்கிறார். இந்தியாவில் தமிழர்களைத் தவிர மற்ற இனத்தார் ஆரியர்கள் அல்லது ஆரியக் கலப்பில்
உருவானவர்கள். இலங்கைச் சிங்களர்களும் ஆரியர்களை மூலவர்களாகக் கொண்டவர்கள். இந்த வரலாற்று
உண்மையைத் தான் கரியவாசம் சொல்கிறார்.
மேலும்
சொல்கிறார் கரியவாசம்; “எங்களது சிங்கள மொழி சமஸ்கிருதம், இந்தி மொழிகளின் வழி வந்தது”
என்கிறார். தமிழ் மொழி அவ்வாறு சமஸ்கிருதம்; இந்தி வழி வந்தது என்று நாம் சொல்வோமா?
சொல்லமாட்டோம் எனவே சிங்களர்கள் ஆரியர்கள்.
அதனால்
இந்திய ஆளும் வர்க்கம் சிங்களரைப் பங்காளியாகக் கருதுகின்றது; தமிழர்களைப் பகையாளியாக
கருதுகிறது. இதர மாநிலங்களில் உள்ள கட்சிகளும் நம்மை அவர்களின் உடன் பிறப்புக்களாகக்
கருதவில்லை. அதே வேளை சிங்களர்களோடு உளவியல் உறவு கொண்டுள்ளன.
சிங்கள
விளையாட்டு வீரர்களைக் கொண்ட ஐ.பி.எல் கிரிக்கெட் அணியைச் சென்னையில் விளையாட அனுமதிக்க
மாட்டோம் என்றார்கள் மாணவர்கள். நம்முடைய தமிழக இளைஞர் முன்னணித் தோழர்கள் “ஈழம் சிங்களன் கொலைக்களம்; தமிழகம் சிங்களன் விளையாட்டுக்களமா?
சிங்களர் விளையாட அனுமதியாம்” என்று சென்னை நகரெங்கும் சுவரொட்டி ஒட்டினர்.
தமிழக
முதலமைச்சர் “சிங்களர் இடம் பெறும் அணிகள் விளையாடத் தமிழ்நாட்டில் அனுமதி இல்லை” என்று
அறிவித்தார்.
உடனே
கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டி “சிங்களர் உள்ள அணிகள் கேரளத் தில் விளையாட எல்லா வசிதளும்
செய்து தருகிறோம்” என்கிறார். மலையாளிகள் எங்காவது ஒரு நாட்டில் கொல்லப்பட்டிருந்தால்
அந்த நாட்டுக் கிரிக்கெட் அணி கேரளத்தில் விளையாட அனைத்து வசதியும் செய்து தருவோம்
என்று அம்மாநில முதல்வர் உம்மன் சாண்டி கூறியிருப்பார்களா? கூறியிருக்க மாட்டார்.
இதன்
பொருள் என்ன? தமிழர்களைத் தங்கள் சகோதரர்களாக மலையாளிகள் ஏற்கவில்லை என்பதுதான்? மலையாளிகளை
இந்தியா அரவணைத்துக் கொள்ளும் ஆனால் தமிழர்களை இந்தியா பழிவாங்கும் கேரள மீனவர் இருவரைச்
சுட்டுக் கொன்ற இத்தாலி கப்பல் படையினர் மீது கொலை வழக்கு தில்லியில் நடைபெறுகிறது.
வாக்களிக்க இத்தாலி சென்றவர்கள் திரும்பவில்லை என்றவுடன், இத்தாலியுடன் தூதர உறவைத்
துண்டித்துக் கொள்ளத் தயார் ஆனது. ஆனால் தமிழக மீனவர்கள் 600 பேரை சிங்களக் கப்பற்படை
அடுத்தடுத்துக் கொன்றது. ஒரு வழக்கு உண்டா? இல்லை. சிங்களர்களின் தாக்குதலால் உறுப்புகளை
இழந்து ஊனமாகியயோர் 2000 பேர் ஒரு வழக்குண்டா? இல்லை.
இனி என்ன செய்வோம்
இத்தனைக்குப்
பிறகும் தமிழர்கள் தங்களை இந்தியர் என்று கருதலாமா? இந்தியக் கட்டமைப்பை ஏற்றுக் கொண்டு,
தமிழ்நாட்டில் பதவி அரசியல் நடத்தும் கட்சிகளை நம்பலாமா? அது எந்தக் கட்சியாக இருந்தாலும்,
இந்திய மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்டு, இந்தியா வழங்கும் சில பதவிகளுக்காக தமிழகத்தில்
அரசியல் நடத்தினால் அது கங்காணிக் கட்சியே! தமிழினத்திற்கு நேர்முகமாகவோ அல்லது மறைமுகமாகவோ
துரோகம் செய்யும் கட்சிதான்.
இறையாண்மையுள்ள
தமிழ்த் தேசக் குடியரசை இலக்காகக் கொண்டுள்ள புரட்சிக்கர தமிழ்த் தேசிய அமைப்புதான்
தமிழ்நாட்டுத் தமிழர்களின் உரிமைகளையும் ஈழத் தமிழர்களையும் மீட்கும். ஏழுகோடித் தமிழர்கள்
வாழும் தமிழகம் தலை நிமிர்ந்தால்தான் ஈழம் உள்ளிட்டு உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு
நிரந்தரமான பாதுகாப்புக் கிடைக்கும்.
புரட்சிகரத்
தமிழ்த் தேசிய அமைப்பை அடையாளம் கண்டு அதை மாணவ்ர்கள் ஆதரிக்க வேண்டும். அவர்களே அவ்வாறான
அமைப்பாக மாறவேண்டும். இது ஒன்றுதான் மாணவர்கள் இனி பயனிக்க வேண்டிய திசை வழி.
இவ்வாறு
தோழர் பெ.மணியரசன் பேசினார்.
(செய்தி : த.தே.பொ.க.செய்திப் பிரிவு)
Post a Comment