உடனடிச்செய்திகள்

Friday, July 26, 2013

சென்னையில் நடைபெறும் அறப்போர் ஆவணப்பட வெளியீட்டு விழா!

சென்னையில் நடைபெறும் அறப்போர் ஆவணப்பட வெளியீட்டு விழா!



தமிழீழ இனப்படுகொலைக்கு எதிராக கொந்தளித்து, கடந்த மார்ச் – ஏப்ரல் மாதங்களில் தமிழகக் கல்லூரி மாணவர்கள் எழுச்சியுடன் நடத்திய போராட்டங்களைப் பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள அறப்போர்ஆவணப்படம் வரும் ஜூலை 28 – ஞாயிறு அன்று சென்னையில் வெளியிடப்படுகின்றது.

2013 மார்ச் மாதத்தில் நடைபெற்ற ஐ.நா. மன்ற மனித உரிமைகள் ஆணைய அமர்வில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டு வருகிறது என்றவுடன்அந்தத் தீர்மானம் ஒரு ஏமாற்றுத்  தீர்மானம்; அதை இந்தியா ஆதரிக்கக் கூடாதுஎன்று கிளம்பியது மாணவர்கள் போர்க்குரல். இக்கோரிக்கையை வலியுறுத்தி சென்னை இலயோலாக் கல்லூரி மாணவர்கள் எட்டுப் பேர், கடந்த மார்ச் 8ம் தேதி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர். இது தமிழகம் முழுவதும் பற்றிப் பரவத் தொடங்கியது.

மாணவர்களின் போராட்டம், டெசோவுக்கு ஆதரவானது, மாணவர் போராட்டம் அமெரிக்கத் தீர்மானத்தை ஆதரிக்கிறதுஎன்று தி.மு.கவும், தி.மு. ஆதரவு ஊடகங்களும் உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிட்டு, மாணவர்கள் மத்தியில் குழப்பத்தை விளைவிக்க முயன்றது. இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் அமெரிக்கத் தீர்மான நகலை எதிர்த்தனர். ஒரு கட்டத்தில்அந்தத் தீர்மானமே இந்தியாவின் ஒப்புதலோடுதான் தயாரிக்கப்பட்டதுஎன்று அமெரிக்கா பின்வாங்கியது. இது மாணவர் போராட்டத்துக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தமிழினப் படுகொலைக்கு நேரடியாக உதவி செய்து வந்த காங்கிரஸ் கட்சியுடன் கலைஞர் கருணாநிதியின் தி.மு.. கூட்டணி வைத்திருந்தது. இந்த மாணவர் போராட்டத்தின் வீச்சைக் கண்டு அஞ்சிய தி.மு. தமிழகத்தில் அரசியல் செய்ய முடியாத நிலை வந்துவிடுமோ என்று அஞ்சி காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேறியது.

இந்த மாணவர் போராட்டம் அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியான முறையில் நடந்தது. மாணவர்கள் பேருந்துகள் மீது கல்லெறியவில்லை. அரசு சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கவில்லை. தமிழக வரலாற்றில் முதல் முதலாக தனியார் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் குதித்தனர். வரலாறு காணாத இந்த மாணவர் போராட்டத்தினை அதன் போக்கில்அறப்போர்ஆவணப்படம் பதிவு செய்திருக்கிறது.

இப்படத்தை, செங்கொடி மீடியா ஓர்க்ஸ் நிறுவனத்தின் சார்பில் திரு. சி.கபிலன் தயாரித்துள்ளார். மூன்று தமிழர் உயிர்காக்க தீக்குளித்த காஞ்சிபுரம் தோழர் செங்கொடியின் வாழ்வைப் படம்பிடித்த ‘இப்படிக்கு தோழர் செங்கொடி’ ஆவணப்பட இயக்குநரும், பத்திரிக்கையாளருமான திரு. வே.வெற்றிவேல் சந்திரசேகர் இப்படத்தை இயக்கியுள்ளார்.

உலகம் முழுவதும் தமிழர் அல்லாதவர்களிடம் தமிழீழக் கோரிக்கையின் தேவையை உணர்த்தும் நோக்கில் இந்த ஆவணப்படம் ஆங்கிலம், பிரெஞ்ச், ஜெர்மன், ஸ்பானீஷ், இத்தாலி மொழி சப் டைட்டில்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளது.

இவ் ஆவணப்படத்தின் வெளியீட்டு விழா, சென்னை - அண்ணாசாலையில் உள்ள புக் பாயிண்ட் அரங்கில் 28.07.2013 ஞாயிறு அன்று மாலை 4.30 மணியளவில் நடைபெறுகின்றது. இயக்குநர் அமீர் இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் நிகழ்வுக்குத் தலைமையேற்க, உணர்ச்சிப்பாவலர்  காசி ஆனந்தன் ஆவணப்படத்தை வெளியிட, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி முதல் பிரதியைப் பெற்றுக் கொள்கிறார். இயக்குநர் .செந்தமிழன் கருத்துரை வழங்குகிறார்.

ஏற்கெனவே, இந்த ஆவணப்படம் தமிழீழத் தமிழர்கள் அதிகம் வாழும் சுவிசர்லாந்தில் இரண்டு முறை திரையிடப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.

சென்னையில் நடக்கவுள்ள, இவ் ஆவணப்பட வெளியீட்டு விழாவில், தமிழீழ ஆதரவாளர்களும், மாணவர்களும் திரளாகப் பங்கேற்க வேண்டுமென ஆவணப்பட வெளியீட்டு விழாக்குழுவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

செய்தியாளர் அழைப்பு:
அச்சுப் பத்திரிகை, தொலைக்காட்சி, இணைய தள செய்தி ஊடகங்களின் செய்தியாளர்கள் ஆவணப்பட வெளியீட்டு விழாவுக்கு வந்திருந்து செய்தி சேகரித்து வெளியிடும்படி விழாக்குழுவினர் அன்புடன் அழைப்பு விடுத்துள்ளனர். (தொடர்புக்கு: 99444 46787, 99941 55339)


 (செய்தி : த.தே.பொ.க.செய்திப் பிரிவு)

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT