உடனடிச்செய்திகள்

Tuesday, July 30, 2013

கூடங்குளம் போராட்டக்குழு உறுப்பினர் மை.பா.சேசுராசன் மீது புதிய பொய் வழக்கு: போராட்டக்காரர்கள் மீதான அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும்! தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி வலியுறுத்தல்


கூடங்குளம் போராட்டக்குழு உறுப்பினர் மை.பா.சேசுராசன் மீது புதிய பொய் வழக்கு:
போராட்டக்காரர்கள் மீதான அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும்!
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி வலியுறுத்தல்

கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக, கடந்த இரண்டாண்டிற்கும் மேலாக அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தினர், அமைதிவழிப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தை, வன்முறை போராட்டமாகவும் தேச விரோதச் செயலாகவும் சித்தரித்து, ஞாயமான போராட்டத்தை நசுக்குவதற்கு வரலாறு காணாத வகையில் தமிழகக் காவல்துறை அடுத்தடுத்து பொய் வழக்குகளை புனைந்து வருகிறது.

இவ்வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்திய பிறகும், தமிழக அரசின் நிலையில் மாற்றம் எதுவும் வரவில்லை.

இந்நிலையில், பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் திரு. சுந்தரராசன் மற்றும் மனித உரிமை வழக்கறிஞர் புகழேந்தி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்குகளில் இன்று (29.07.2013) தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம், இவ்வழக்குகளைத் திரும்பப் பெறுமாறு தமிழக அரசை வலியுறுத்தியது.

.இவ்வழக்கு விசாரணையின் போது, தமிழக அரசின் வழக்குரைஞர் கூடங்குளம் போராட்டக் குழுவினர் அணுஉலையைத் தகர்க்க சதி செய்தி கொண்டிருப்பதாக முற்றிலும் பொய்யான வாதத்தை முன்வைத்தார்.

இந்த நிலையில், உயர்நீதிமன்றத்தில் இவ்வாறான அறிவுரை வரும் என எதிர்பார்த்த தமிழகக் காவல்துறை, இன்னொரு அப்பட்டமான பொய் வழக்கை தொடுத்துள்ளது. போராட்டக்குழு உறுப்பினர் அருட்தந்தை. மை.பா.சேசுராசன் மற்றும் 18 பேர் இணைந்து, கூத்தன்குழியில் நாட்டு வெடிகுண்டு வீசியதாக சோடிக்கப்பட்ட பச்சைப் பொய் வழக்கை தொடுத்திருக்கிறது. மை.பா.சேசுராசன் தொடர்ந்து இடிந்தகரையில் தான் வசித்து வருகிறார் என்பது காவல்துறைக்கு தெரியாததல்ல. வேண்டுமென்றே இப்பொய் வழக்குப் புனையப்பட்டுள்ளது.

தமிழகக் காவல்துறையின் தொடர்ச்சியான இந்த அடக்குமுறைப் போக்கை, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

இந்த வழக்கு உள்ளிட்டு கூடங்குளம் போராட்டக்குழுவினர் மீதும் பகுதி மக்கள் மீதும் தொடரப்பட்டுள்ள, அனைத்து வழக்குகளையும் கைவிடுமாறும் அம்மக்களோடு பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் அச்சத்தின் உண்மைத்தன்மையைப் புரிந்து கொண்டு அணுஉலை இயங்குவதை நிறுத்துவதற்கு ஆவணஞ்செய்ய முன்வருமாறும் தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

தங்கள் உண்மையுள்ள,
(கி.வெங்கட்ராமன்)
பொதுச் செயலாளர்,
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி
இடம்: சிதம்பரம்
 
 

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT